மிருகமொழி – மூன்று கதைகளை வைத்து ஓர் கதையாடல்

முதன்முதலாக ஐந்தறிவு மிருகங்கள் பேசுவதை விலங்குப்பண்ணை என்கின்ற நாவல் வடிவில் தந்தவர் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஆங்கிலேயரான எரிக் ஆர்தர் பிளேயர்(Eric Arthur Blair) என்ற ஜோர்ஜ் ஆர்வெல் (George Orwell) ஆகவே இருக்கமுடியும். அதில் ‘அதிகாரபோதையானது ‘ காலப்போக்கில் நல்ல நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற புரட்சிகளை எப்படியெல்லாம் நீர்த்துப்போகச்செய்கின்றது என்பதை ஓர் பண்ணையில் ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் என்ற பன்றிகளை பிரதான கதை சொல்லிகளாகவும் ஏனைய மிருகங்களையும் ஒன்று சேரவைத்துப் பேச வைப்பதன் ஊடாக கம்யூனிசத்தின் மீதான விமர்சனமாகவும் எப்படி ஓர் விலங்குப்பண்ணை அதிகார போதை கொண்ட பன்றிகளின் பண்ணையாக மாறுகிறது என்பதனையும் எல்லாவிதமான அதிகாரங்களையும் நோக்கி நகருகின்ற புரட்சிகள் எப்படியாக முடியும் என்பதனையும் அதில் ஜோர்ஜ் ஆர்வெல் விபரித்திருப்பார்.

இந்த வருடம் விலங்குப்பண்ணையை ஆதர்சமாகக் கொண்டு மூன்றுசிறுகதைகள் பொதுவெளியில் வெளியாகி இருந்தன.

01 ஏறுதழுவல்-கோமகன்

02 ஒரு தனி ஆட்டின் கதை-உமையாழ் பெரிந்தேவி.

03 நல்லாயனின் ஆடு- கிஷோகர் ஸ்ரனிஸ்லஸ்.

கோமகன் எழுதிய ‘ஏறுதழுவல்’ கதையானது இந்த வருட ஆரம்பத்தில் தமிழகத்தில் நடைபெற்ற ஏறுதழுவல் போட்டி மற்றும் பீட்டா சட்டம் ஆகியவற்றை பின்னணியாக கொண்டு ‘ஏறு சொல்லிய கதை , ‘ ஆ சொல்லிய கதை ‘மற்றும் ‘எழுச்சி’ என்ற பகுப்புகளில் கதை நகர்கின்றது. ஓர் பட்டியில் இருக்கின்ற மாடுகள் மனிதர்கள் தங்களை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தி வைத்து தங்களை கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று தங்களுக்குள் பேசி விவாதித்து தமது எதிர்ப்பை மனிதர்களுக்கு தெரிவிப்பதற்காக ‘கறுப்பன்’ என்ற நாம்பன் மாடு அந்த ஊரில் நடக்கும் ஏறுதழுவல் போட்டியில் கலந்து கொண்டு பட்டியின் முதலாளியான சாமிக்கண்ணுவை முட்டி மோதி கொலை செய்து விட்டு சுதந்திரமான வாழ்க்கையைத்தேடி அருகில் இருக்கும் காட்டிற்குள் ஓடி மறைகின்றது.

உமையாழ் பெரிந்தேவி எழுதிய ‘ஒரு தனி ஆட்டின் கதை ‘ பட்டியில் இருக்கின்ற ஓர் ஆட்டைக் கதைசொல்லியாக வைத்து தமிழ் எழுத்துப்பரப்பில் இருக்கின்ற இலக்கியப்பெருந்தகைகளை நையாண்டி செய்கின்ற விதமாக அங்கத இலக்கியத்தினுடாக நகருகின்றது.தலைக்கனம் மிகுந்த ஆடு தான் எப்படியெல்லாம் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்றும் அதற்கான வழிகளையும் தேடுகின்றது. அப்பொழுது அது தனது இனம் சந்திக்கின்ற அகச்சிக்கல்களை கேள்விக்கு உட்படுத்துகின்றது. இறுதியில் தான் சுதந்திரமாக இருக்க விரும்பி ஒவ்வொரு பட்டியாக மாறிக்கொண்டிருந்தது.நையாண்டி எழுத்துக்களுக்கு இந்த கதையை ஓர் உரைகல்லாக நாம் பார்கமுடியும்.

கிஷோகர் ஸ்ரனிஸ்லஸ் ஆல் எழுதப்பட்டு கடந்த கிழமை வெளியாகிய ‘நல்லாயனின் ஆடு ‘ வேறு ஓர் தளத்தில் குறுக்கறுத்துச் செல்கின்றது.தனது இனத்தின் அடிமைத்தனமான வாழ்வையும் எதையுமே கேள்வி கேட்காது அதன்வழி செல்கின்ற ஆடுகளது மந்த புத்தியையும் அது கேள்விக்கு உட்படுத்துகின்றது.தனது இனத்தில் எல்லாவிதத்திலும் அது தனியனாக சுய அடையாளத்தை காட்ட விரும்புகின்ற ‘புரட்சி ஆடாக’ இருக்க விளைகின்றது. அதிகாரங்களுக்கு அடிபணிய விரும்பாத ஆடு சுதந்திரத்தை தேடி ஆயன் மலைஉச்சிக்குத் தப்பிச்செல்கின்றது.ஆயன் மலைக்குச் சென்ற ஆட்டை அங்கு வந்த புதிய இடையராகிய ‘கடவுள்’ மீட்டெடுத்து மீண்டும் பட்டியில் இணைப்பதனுடாக மனித குலத்துக்கு கடவுளார் புதிய செய்தியை சொல்ல முனைவதாக கதை முடிகின்றது. இந்த கதையின் பேசுபொருளானது ,”மனிதர்களுக்கு, ஏன் கடவுளர்களுக்கும் ஆடுகளைப் புரியமுடிவதே இல்லை. அவர்கள் ஆடுகளுக்கும் சேர்த்து தாங்களே யோசிக்கிறார்கள்” என்று ஆட்டை ஓர் குறியீடாக வைத்து மிருகங்களை பொதுமைப்படுத்தி, மிருகங்கள் மனிதர்களுக்கு என்ன செய்தியை சொல்ல விளைகின்றன என்பதை கதை எடுத்துச்சொல்கின்றது. அத்துடன் ஆரம்பத்தில் பட்டியில் உள்ள ஆடுகளினது இழிநிலைகளையும் அவைகளது அருவருக்கத்தக்க செயற்பாடுகளையும் கேள்விக்குட்படுத்திய கதையானது போகப்போக விவிலியத்துடன் இணைத்து மீட்பராகிய கிறிஸ்துவையே விமர்சித்து தான் சொல்ல வந்த சங்கதிக்கு கடவுளும் விதிவிலக்கானவர் இல்லை என்றவோர் புதிய கோணத்துடனும் உத்தியுடனும் கதை நிறைவுக்கு வந்திருப்பது கிஷோகர் ஈழத்து எழுத்துப் பரப்பில் மிக இளம்வயதில் இருக்கின்ற படைப்பாளிகளில் கவனிக்கப்பட வேண்டியவர் என்பதையே சுட்டிநிற்கின்றது.

இறுதியாக இந்த மூன்று கதைகளுமே சுதந்திரத்தை வேண்டி புரட்சி செய்த மிருகங்களின் சுதந்திரமானது இறுதியில் அவைகளுக்கு கிடைத்ததா என்ற கேள்விக்கான விடை என்பது தொங்குபறியிலேயே இருப்பதைக் காண முடிகின்றது.

கோமகன்

தினகரன்- பிரதிபிம்பம் -இலங்கை.

24 புரட்டாசி 2017.

(Visited 8 times, 1 visits today)