உயர்தர பரீட்சை முடிவுகள் சொல்கின்ற சங்கதிகள் -ஒரு கதையாடல்

உலகமயமாதல் கல்வியை அறிவு வளர்ச்சிக்கல்லாது அந்தஸ்துகளையும் நிதிகளை உருவாக்குகின்ற சந்ததிகளை வழங்குகின்ற ஒரு பொறிமுறையை உருவாக்கிப் பல காலமாகின்றது. கடந்த இரவு வெளியாகிய உயர்தரப்பரீட்சை முடிவுகளும் இதையே சுட்டி நிற்கின்றன.பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவதும் தோற்றவர்கள் மனமொடிந்து போய் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்தக்கதையாடல் தோற்றவர் பக்கமே சார்ந்து செல்கின்றது.ஏனெனில் தோல்விகளே எந்த இடத்தில் நாம் தவறுகளை செய்தோம்? அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற பல இன்னோரன்ன கேள்விகளை எமக்குள் எழுப்பி அடுத்த கட்ட நகர்வுக்கு எம்மைப் பக்குவப்படுத்த வல்லது.பரீட்சையில் தோற்றவர்கள் மனமொடிந்து போகாது தங்களை சுற்றி இருப்பவர்களின் எதிர்மறை கருத்துக்களை கேட்காது தங்களுக்கு எது முடியகூடியதோ அதனைத் தேர்வு செய்வதே வினைகளை அதிகரிக்கும் செயலாகும்.பரப்பளவிலும் குடிப்பரம்பலிலும் கொண்ட ஒரு சிறிய நாட்டில்

எல்லோருமே மருத்துவராகவும் பொறியியலாளராகவும் வரவேண்டுமானால் அந்த நாடு அது தொடர்பான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்குவது? இரண்டாவதாக இந்த இரு துறைகளை முடிப்பதற்கு எடுக்கின்ற காலம். அதற்கு செலவாகின்ற நிதி. சமகாலத்தில் மருத்துவத்துறையில் படிக்கின்ற மாணவர் ஒருவருக்கு மாதாந்தம் 20000 ரூபாய்கள் தேவைப்படுவதாக அறிய முடிகின்றது. இதை ஒரு அடிப்படை சம்பளம் எடுக்கின்ற தாய் தந்தையரால் ஈடு கட்ட முடியுமா? ஆக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை தவறவிடாது தொடர்கின்ற மாணவரே வாழ்வில் வெற்றிக்கொடி நாட்டுகின்றார்.ஏனையோர் இல்லாததிற்குப் பாலம் கட்டுபவர்களாகவே இருக்கின்றார்கள்.ஆகவே தோல்விகளை கண்டு மனமுடையாது கிடைக்கின்ற குறுக்குத் தெருவில் புகுந்து நடந்தால் நீங்கள் வெற்றிகரமான வாழ்க்கை என்ற பிரதான விதிக்குக் குறுகிய காலத்தில் வந்தடையலாம்.

நான் மேலே சொன்ன பந்திக்கு உதாரணமாக எனது சங்கதிகளை சொல்கின்றேன்.

நான் 1983 ல் வர்த்தகத்துறையில் உயர்தரம் எடுத்தேன். அப்பொழுது தேசவிடுதலைக்காக இளையவர்கள் இணைந்து கொண்டிருந்த காலம். என்னுடன் படித்தவர்களில் இறுதியாக 10 பேரே பரீட்சைக்கு தோற்றினோம். எனக்கு 2 B 2 C கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு உரிய புள்ளிகள் கிடைக்கவில்லை.எல்லோருமே திரும்பவும் படிக்கச் சொல்லி ஒற்றைக்காலில் நின்றார்கள்.நான் முடியாது என்று சொல்லி இந்தியாவிற்கு சென்று கணனி மென்பொருள் துறையில் இரண்டு வருடங்கள் படித்து விட்டு எனது 23 ஆவது வயதில் இங்கு வந்துவிட்டேன்.

ஆகவே மாணவர்களே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள்.செய்கின்ற வேலை எதுவுமே கேவலமானது அல்ல.இந்த மனப்பான்மையை வளர்த்து எடுங்கள். போரினால் பல இழப்புகளை சந்தித்த எமது சமூகத்துக்கு குறுகிய காலத்து உழைப்பாளிகளே தேவை. வசதி உள்ளவர்கள் மருத்துவராகவோ பொறியியலாளராகவோ வரலாம்.உழைப்பே மூலதனம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

கோமகன்

(Visited 4 times, 1 visits today)