தெய்வானை-சிறுகதை-கோமகன்

நான்கு புறமும் அமைந்திருந்த சுற்று மதிலின் பின்னே நிரை கட்டியிருந்த கமுகம் பிள்ளைகளும் பாளை தள்ளிய தென்னை மரங்களும் ஆங்காங்கே இருந்த பப்பா மரங்களும் முற்றத்தின் மத்தியிலே சடைத்து நின்ற அம்பலவி மரமும் அதிலே  துள்ளி விளையாடிய அணில் பிள்ளைகளும் என்று  ஐந்து பரப்பில் அமைந்திருந்த  அந்த நாற்சாரவீட்டில் சிங்கராயர் குடும்பத்தின் பவிசுகளைச் சொல்லி நின்றன. அந்தக்காலத்தில்  ஊரில் நாற்சார வீடுகள் வைத்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வீட்டின் தென்கிழக்கு மூலையில்  மால் ஒன்று இருந்தது. அந்த மாலின் அகன்ற சுவர்கள் மண்ணினால் கட்டப்பட்டு, இடையில் வெளிச்சமும் காற்றும் வருவதற்காகப் பனை மட்டை வரிச்சுக்களால் கிராதி அடித்துப் பின்னர் மேலே எழும்பிய சுவர்  பனையோலையினால் நன்கு வேயப்பட்டிருந்த கூரையைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது.

மாலின் உட்புறமாக இருந்த பாரிய வட்டத்தின் குறுக்குப்பாடாக சாமான்களை போட்டு வைப்பதற்கான களஞ்சிய அறை இருந்தது. அதற்கு நேர் எதிராக அமைக்கப்பட்டிருந்த புகட்டில் மூன்று கண்களைக் கொண்டு சுட்ட களிமண்ணினால் வனையப்பட்டிருந்த நான்கு சூட்டடுப்புகள் இருந்தன. அதில் ஒன்றின் மீது இருந்த தண்ணீர் பானையைக் காய்ந்த பனைஞ்சிராய்கள் விளாசி எரிந்து சூடேற்றிக் கொண்டிருந்தன.

புகட்டிற்குக்  கீழே மாட்டுச் சாணகத்தினால்  நன்கு மெழுகப்பட்டிருந்த தரையில் ஒரு காலை மடக்கி மறுகாலை குத்துக்காலிட்டவாறு  அமர்ந்திருந்த ‘தெய்வானைப்பிள்ளை’ என்கின்ற தெய்வானை தனது கோபத்தை எல்லாம் அன்று காலை உணவிற்காகத் தயாரித்துக்கொண்டிருக்கும் கோதம்பை மாப்புட்டைக் கொத்துவதில் காட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய கோபம் ஒன்றும் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஷனும் சோவியத் யூனியன் பிரெஷ்னேவ்-க்கும் இடையிலானது போன்றதல்ல, மிகவும் சாதாரணமானதுதான். ஆனாலும் அந்த நேரத்தில் அது நிக்ஷன்-பிரெஷ்னேவ்-ஐ விட மூர்க்கமாக இருந்தது. விடியக்காத்தாலையே அதுவும் இருபத்தைஞ்சாவது கலியாணநாளிலை “வெளியாலை போட்டு வாறன்” என்று மொட்டையாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிய அவளுடைய புருஷன் காசிநாதர்  மதியமாகியும் திரும்பாததால் அவளுக்கு வந்த கோபத்தில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது.

காசிநாதரும் தெய்வானையும் கலியாணம் செய்து இருபத்தைந்து வருடங்களைக் கடந்திருந்தாலும் சிங்கராயர் குடும்பத்தின் வாரிசுக்கான பிரசன்னம் இதுவரையில் இல்லாது போயிற்று. ஆனாலும் அங்கே அமைதியும் அன்பும் மெத்தவே நிரம்பியிருந்தன. ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதிக்கின்ற தோழர்களாகவும் பிறத்தியார்கள் பாத்துப் பொறாமைப்படுகின்ற இணையர்களாகவே அவர்கள் இதுவரையில் இருந்து வந்திருக்கின்றார்கள். காசிநாதர் மலாயாவில் பெரும் உத்தியோகத்தில் இருந்த பொழுதே தெய்வானையை ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ என்ற பவிசுவுடன் புத்தூரில் கலியாணம் செய்திருந்தார். அந்தக்காலத்தில் புத்தூரிலேயே முதல் தடவையாக காசிநாதரைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வைத்துத் தனது கலியாண வீட்டிற்கு ‘மாப்பிள்ளை அழைப்பாக’ அழைத்துவந்ததை இப்பொழுதும் தெய்வானை எல்லோருக்கும் பெருமையாக சொல்லிக்கொள்வாள்.

000000000000000000000000

புத்தூரில் சிங்கராயர் குடும்பத்தில் வந்த நான்காவது தலைமுறையான பூரணம்பிள்ளைக்கும் பார்வதிப்பிள்ளைக்கும் மூத்த மகளாக அவள் பிறந்தாள். தனது பூட்டியின் நினைவாக ‘தெய்வானைப்பிள்ளை’ என்று தனது மகளுக்குப் பெயர் வைத்தாள் பார்வதிப்பிள்ளை. அன்றய காலத்தில் பத்தாம் வகுப்பிற்கு மேல் அவளைப் படிக்க விடாது  ஊரெங்கும் சல்லடை போட்டுத்தேடி கொழுத்த சம்பளக்காரரான ‘மலாயா மாப்பிள்ளை’ காசிநாதருக்குத் தெய்வானையைக் கலியாணம் செய்துவைத்தார் பூரணம் பிள்ளை. அந்தக்ககாலத்தில்  பெரும் கியாதியான கலியாணமாகப் புத்தூர் சனங்களால் அது பார்க்கப்பட்டத்தில் வியப்பில்லை. கலியாணம் கட்டிய கையுடன் தெய்வானையுடன் மலாயாவுக்கு திரும்பிய காசிநாதர் சிறிது காலம் அங்கே வேலை  பார்த்து விட்டு  விருப்பு ஓய்வில் மீண்டும் புத்தூருக்கு ‘மலாயன் பெஞ்சனியர்’ என்ற புதிய பட்டத்துடன் திரும்பினார்.

தெய்வானை இப்பொழுது உள்ளவர்கள் போல ‘நவீனமானவள்’ என்றோ இல்லை ‘அரத்தல் பழசு’ என்றோ இலகுவில் மட்டுக்கட்டிவிட முடியாது. மலாயாவில் இருந்த வாழ்க்கைமுறை தந்த பவிசும் சிங்கராயர்  குடும்பத்துப் பாரம்பரியமும் கலந்த கலவையாகவே அவள் இருந்தாள். அவள் ட்றெசிங் கவுன், சாறி  என்று தினத்துக்கொன்றாகத் தனது உடைகளைத் தெரிவு செய்து  அணிவாள். அதிலும் அவள் சாறி கட்டும்பொழுது கொசுவத்தை முன் புறமாகச் செருகி , வளைந்திருக்கும் நெற்றியில் பெரிய வட்ட வடிவிலான குங்குமப் பொட்டை வைத்திருப்பாள். அவள் தோற்றத்தில் நெடுநெடு என்ற உயரமாகவும் பேரழகிக்கும் அழகிக்கும் இடைப்பட்டவளாகவும் இருந்ததில் காசிநாதருக்கு தலைகால் தெரியாத புளுகமாக இருந்தது. அத்துடன் அவளது குணவியல்புகள் சிங்கராயர்  குடும்பத்தின் பெயரையும் புகழையும் கட்டிக்க காப்பதாகவே அமைந்திருந்தன.

அதிகாலை வேளையிலேயே வெளியே போன காசிநாதர் வீட்டுக்குத்  திரும்ப நேரமானதால் வல்லிபுரக் கோயில், வசந்தமாளிகை படம் என்று, ஏலவே தான் தீட்டியிருந்த திட்டங்களுக்கு விக்கினம் வந்து விடுமோ என்ற பதகளிப்புதான் புட்டுக்கு மாக்கொத்துவதில் அவளது கோபமாக வெளிப்பட்டது. கொத்திய கொத்தலில் தூள் தூளான மென்மையான கோதம்பை மாவில் வளவில் பிடுங்கிய தேங்காயை உடைத்து துருவிய தேங்காய் பூவும் பருத்தித்துறை பனங்கட்டியும் மெல்லிதாகப் பொடியாக்கிக் கலந்த கலவையை  மூங்கில் புட்டுக் அவள்குழாயில்  புட்டு மாவை  படைபடையாக அடைந்து கொண்டிருந்த பொழுதுதான் வீட்டின் முன் வாசலில் வாகனச் சத்தம் கேட்டது.

“மெய்யே ………..மெய்யே …….” என்ற காசிநாதரின் குரல் கேட்டதும் தாமதம் அவர் மேல் இருந்த கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போக வீட்டின் கேற்ரடிக்கு நகர்ந்த தெய்வானையின் கண்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரியமுடியுமோ அவ்வளவுக்கு விரிந்து கொண்டன. அவள் தன்நிலைக்கு வருவதற்கு சில செக்கன்கள் எடுத்தன.

வீட்டுக் கேற்ருக்கு முன்னால் புத்தம் புதிய பளபளப்பான ஒஸ்ரின் சோமர்செற் ( Summerset ) காடி ஒன்று நின்றிருந்ததது.  காடியின் ட்ரைவர் சீற்ரில் இருந்து முகம் முழுக்கச் சிரிப்புடன் இறங்கிய காசிநாதர்,

“மெய்யே ……….. உமக்கெண்டு ஒரு சோக்கான சாமான் எல்லோ வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன். உமக்குத்தான் இந்த காடி. கொழும்பாலை இறக்கினது. எப்பிடி இருக்கெண்டு வந்து பாருமென்…..?”

புத்தூரிலேயே இல்லாத ஒஸ்ரின் சோமர்செற் காடியை, அதுவும் கொழும்பாலை இறக்கித்  தமது கலியாண நாள் பரிசாக கொண்டு வந்த விண்ணாதி விண்ணனான காசிநாதர், உண்மையிலேயே அவளுக்குத் தான் பார்க்கப்போகும் ‘வசந்தமாளிகை’ படத்தின் நாயகனான சிவாஜி கணேசனை விட மேலான ஒரு ஹீரோவாகத் தான்  தெரிந்தார்.

அந்த ஒஸ்ரின் சோமர்செற் காடி கன்னங்கரிய நிறத்தில் கொள்ளை அழகில் கம்பீரமாக இருந்தது. முன்பக்கத்தில் நீள் வாக்காக ஒரு புள்ளியில் இருந்து புடைத்தவாறே மேல் எழுந்து சரிந்து விழுந்த வட்ட வடிவிலான இரண்டு ஹெட் லைட்டுகளும், அதே போல் மேல் எழுந்து சரிந்து விழுந்த பெரிய மட்கார்டுகளும் இரு பக்கத்துக் கதவுகளுக்கு இடையில் காடி திரும்பும் பொழுது குறுக்குப்பாடாக மேல் எழுந்து காட்டவென   சுட்டுவிரல் வடிவில் அமைந்திருந்த சிக்னல் லைட்டுகளும், உள்ளே சின்னஞ்சிறிதாக வட்ட வடிவில் அமைந்திருந்த ஸ்டியரிங்-உம், மண்ணிற நிறத்தில் தோலினால் செய்யப்பட்ட புசுபுசுவென்ற அகலமான இருக்கைகளும், மறுதலையாகப் பின்புறமாக நல்ல தவாளிப்புடன் சரிந்து சென்ற டிக்கியுமாக அந்தக் கன்னங்கரிய ஒஸ்ரின் சோமர்செற் காடி அட்டாகாசமாகவே இருந்தது.

காசிநாதருக்கு மிகவும் பிடித்தமான கத்தரிக்காய் பொரியலுடன், முட்டைப்பொரியலும் சேர்த்துக் கணக்காக வெந்திருந்த கோதம்பை மா குழாய் புட்டை குருத்து வாழை இலையில் வைத்த தெய்வானை,

“இஞ்சை………… இப்ப என்னத்துக்கு உந்தக் காடி? உது எக்கச்செக்க விலையல்லோ வந்திருக்கும் ..? காசைக் கண்டால் கண்மண் தெரியாமல் நடக்கிறது………”

“காசென்ன காசு…… ? மண்ணாங்கட்டி காசு. எங்களிட்டை இல்லாத காசே…? இருக்கும்வரை ஆண்டு அனுபவிக்க வேணும் கண்டீரோ……….அதெல்லாங் கிடக்க இந்தக் காடி உமக்கு புடிச்சுதோ இல்லையோ….. ? அதைச்சொல்லும். உமக்குச் செய்யாமல் வேறை ஆருக்கு செய்யப் போறன்….. கதையோடை கதையாய் கொழும்பிலை எனக்கு தெரிஞ்ச கூட்டாளி  ஒருத்தனிட்டை சொல்லி வைச்சனான்…… அவன் தான் லண்டனாலை இருந்து வந்த ஒருத்தரிட்டை வாங்கி அனுப்பி விட்டவன். இண்டைக்குத்தான் எல்லா அலுவலும்  சுளுவாய் முடிஞ்சுது”.

கோதம்பை மாப்புட்டை நிதானமாக ரசித்து ருசித்துக் கொண்டிருந்த காசிநாதரை அவள் பார்த்த பொழுது அவர் மீது கொண்ட அன்பும் பெருமையும் அவளது முகத்தில் அப்படியே பரந்திருந்தன.

“அப்ப நாங்கள் ஒருக்கா வல்லிபுரக்கோயிலுக்கு போட்டு வருவமே……? அதோடை ஒரு படமும் பாத்திட்டு வருவம்.”

“பாத்தீரே …..காடியை முதலிலை உமக்கு காட்ட வேணும் எண்ட பிராக்கிலை கோயிலுக்கு கொண்டு போக அயத்துப் போனன். அதுசரி……. உமக்கு என்ன படம் பிடிக்கும்? சாப்பிட்டிட்டு வெளிக்கிடுவம். ”

“வசந்தமாளிகை.”

“பிஞ்சைபாரன்….. அட்ராசக்கையெண்டானாம்.”

தெய்வானை சாப்பிட்டு வெளிக்கிடும் வரை முற்றத்து வாசலில் நின்றிருந்த காடியைப் பளபளப்பாக்க மீண்டும் துடைக்கத் தொடங்கினார் காசிநாதர். அன்றில் இருந்து அவருக்கும் அந்தக் காடிக்குமான பந்தம் ஆழமாக வேரோட தொடங்கியது. அதனைத் தனது குழந்தைப் பிள்ளை போலவே கவனிக்கத்தொடங்கினார். தினமும் அதிகாலை வேளையிலேயே சவர்க்காரம் போட்ட தண்ணியில் காடியைக்  குளிப்பாட்டி காய்ந்த துணியால் அதனைப் பளபளப்பாக்குவது அவரது கடமைகளில் ஒன்றாயிற்று.

மலாயாவில் இருந்து வாங்கி வைத்திருந்த அரக்கு நிறத்து சாறிக்குப் பொருத்தமான சிவப்பு நிறத்தில் எடுப்பான பிளவுஸ் அணிந்து, சாறியின் கொசுவத்தை முன்புறமாக செருகி நெற்றியில் பெரிய வட்டவடிவில் ஒரு குங்குமப் பொட்டுடன் வந்த தெய்வானையை பார்க்கும்பொழுது, தான் முதன் முதலில் எப்படி அவளை பார்த்தாரோ அப்படியே பார்ப்பது போன்ற உணர்வைக் காசிநாதர் அடைந்தார். அவர் காடியை செலுத்த தெய்வானை முன்னிருக்கையில் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வல்லிபுரக்கோயிலுக்குச் சென்றது அக்கம் பக்கத்து கிடுகு வேலிகளில் அமைந்திருந்த பொட்டு கண்களுக்கு விருந்தாயிற்று. சில நாட்களுக்கு அங்கே இந்தக் கதைதான் ‘குய்யோ’ என்றிருந்திருக்கும்.

பருத்தித்துறை வீதியில்  ஓடிக்கொண்டிருந்த  காடியின் இருபக்க கதவுகளுக்கும் இடையே அமைந்திருந்த சமிக்ஞைக் கைகாட்டிகள் வீதியின் வளைவுகளுக்கு ஏற்றாற் போல் மேல் எழுந்து ஒளிர்ந்தது அவளுக்கு வியப்பாக இருந்தது. முன்னே செல்லும் வாகனங்களை விலத்துவதற்கு காசிநாதர் தனக்கு அருகே வெளிப்பக்கமாக இருந்த பெரிய ரப்பர் குமிழை அமுக்க, அது பெரிதாக சத்தம் போட, அவள் திடுக்கிட வேண்டியதாயிற்று. அத்துடன் அவர் அடிக்கடி அந்தப்பெரிய ரப்பர் குமிழை பிசைந்து பிசைந்து அமுக்கும் பொழுது அவள் தனக்குள் பெரிதும் வெட்கப்பட்டுக் கொண்டாள். வசந்த மாளிகை படம் பார்க்கும் பொழுது அவள் அடிக்கடி பல்வேறு உணர்ச்சிகளில் இருந்து காசிநாதரையும் இடைக்கிடை பார்த்துக்கொண்டாள். அந்தப்படம் தங்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல் பிரமை கொண்டாள். படம் பார்த்து விட்டு  யாழ்ப்பாணத்தில் இருந்த  ‘தாமோதர விலாஸில்’ அவளுக்குப் பிடித்த மாசால் தோசையை இருவருமாக சாப்பிட்டு விட்டு மீண்டும் புத்தூருக்கு காடியில் ஆரோகணித்தார் காசிநாதர். அன்று பூரணை நிலவும் நட்சத்திரப் படுக்கையும் கட்டவிழ்த்து விட்ட குளிர்ந்த மென்மையான ஒளியில் வீட்டு முற்றத்தில் அவர்கள் மீண்டும் புதிதாகச் சந்தித்துக்கொண்டார்கள். அந்தப் பூரணை நிலவும் நட்சத்திரப் படுக்கையும் அவர்களுக்காகவே படைப்பட்டிருந்தன. இந்தக் கூத்துகளை எதிரே நின்றிருந்த காடி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

000000000000000000000

இப்போதெல்லாம் முன்னையைப் போல தெய்வானைக்குத் துடியாட்டமாக இருக்க முடிவதில்லை. அத்துடன்  வீட்டில் வைத்த பொருட்களை அவளால் நினைவில் கொண்டுவர முடிவதில்லை. அவள் தான் செய்ய வேண்டிய வேலைகளை அடிக்கடி மறக்க ஆரம்பித்தாள். இதனால் சிலவேளைகளில் ஒரே வேலையை இரண்டு தடைவைகள் அவள் செய்ய வேண்டி வந்தது. இந்த நிலையில் அவள் காசிநாதரையும் வீட்டையும் கவனிக்க கஷ்டப்பட்டாள். இந்த மறதி என்பதே ஒரு அற்புதமான மருந்து தானே? ஒருவன் தான் பிறக்கும் பொழுது தனது முன்னைய பிறப்பில் தான் எப்படியாக இருந்தேன் என்று நினைவில் வைத்திருந்தால் அது நன்றாகவா இருக்கும்? இல்லை தான் இறக்கும் நாளை முன்கூட்டியே நினைவில் வைத்திருந்தால் அவன் சந்தோசமாகத் தான் இருப்பானா? வீட்டு வேலிச்சண்டை ,கிணைத்துப் பங்கு சண்டை, பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் நன்றாக இருந்தால் அவர்களை பார்த்துப்  பொறாமை படுதலில் இருந்து தனது பிள்ளைகள் வளர்ந்து தமக்கு விரும்பிய இணையை தேடினால் அதற்குவேறு ஜென்மத்துச் சண்டை என்று தினமும் சண்டை சச்சரவுகளுடன் வாழுகின்ற ஒரு சாதாரண தமிழ்க்குடிமகன் இவைகளையெல்லாம் தனது நினைவில் அழியாது வைத்திருந்தால் அவனது வாழ்வில் நின்மதிதான் இருக்குமா? ஆனால் இந்த மறதியே அவனுக்கு நிரந்தரமானால் அதுவே அவனை ஒரு மூலையில் இயங்க முடியாதவாறு முடக்குகின்றது. அதன் ஆரம்பக் கட்டமே தெய்வானைக்கும் நடக்க ஆரம்பித்தது.

ஒருநாள் காலை நித்திரையால் எழும்பும் பொழுது அவளால் கையை  ஊன்றி எழுந்திருக்க முடியவில்லை. அவள் கையில் பலமில்லாது போல் உணர்ந்தாள். அருகே நல்ல நித்திரையில் இருந்த காசிநாதரை எழுப்ப மனமில்லாது மீண்டும் மீண்டும் எழுந்திருக்க முயற்சி செய்தாள். ஒரு கட்டத்தில் தெய்வானையின் அசுகைகளினால் விழிப்பு நிலைக்கு வந்த காசிநாதர் தெய்வானையின் கோலத்தைப் பார்த்து விட்டு பதறிவிட்டார். அவள் மிகவும் பயந்திருந்தாள். கைகள் ஏன் இயங்க மறுத்து ஆடம் பிடிக்கின்றன என்பது அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது. பருத்தித்துறையில் இருக்கும் அவர்களது குடும்பவைத்தியரான டொக்ரர் ஏகாம்பரத்திடம் காசிநாதர் அவளை அழைத்துவந்த பொழுது, டொக்ரர் ஏகாம்பரம் அவளுக்கு வந்திருந்த வியாதியை விபரிக்கும்பொழுது அவர் ஆடித்தான் போய்விட்டார்.  அல்ஸ்ஹைமர்-ம் பாரிசவாதமும் அவளை ஒன்றாகத் தாக்கியிருந்தன. அவ்வப்பொழுது எல்லாவற்றையும்  குடைந்து குடைந்து கேட்ட தெய்வானைக்கு, அவரால் ‘பயப்பிட ஒன்றும் இல்லை’ என்று மட்டுமே  சொல்ல முடிந்தது.

ஆரம்பத்தில்  சிறிதுசிறிதாக மறக்க ஆரம்பித்த தெய்வானைக்கு இப்பொழுதெல்லாம் காசிநாதரையே அடையாளம் காணமுடியாத நிலை வந்தது. இதனால் வீட்டில் அவளை தனியாக விட்டு விட்டு காசிநாதரால் வெளியே செல்ல முடிவதில்லை. அவளையுமொரு குழந்தைப்பிள்ளை போல் அவர் பராமரிக்க வேண்டியிருந்தது. இப்பொழுதெல்லாம் தனது இயலாமையினால் வருகின்ற கோபத்தையெல்லாம் காசிநாதர் மீது  காட்ட ஆரம்பித்து விட்டாள் தெய்வானை. அதிர்ந்து பேசியறியாத காசிநாதர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது அவளை முடக்கிய வியாதியைப் பற்றியே கவலைப்பட்டார். தமது முன்னோர்கள் செய்த பாவம் பழியெல்லாம் தம்மை படுத்துகின்றதோ என்றுகூட  யோசித்தார்.

சிங்கராயர் குடும்பம் காசுகழஞ்சு சொத்துப்பத்துக்கள் இருந்தாலும் ‘ஒழுக்க’விடயத்தில் நேர்எதிரானவர்கள். இவர்கள் செல்லும் இடமெல்லாம் காமக்கிழத்திகழும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளும் இருந்ததாகக் அவர் கேள்விப்பட்டிருக்கின்றார். அது மட்டுமா சாதித்தடிப்பிலும் இவர்களை மிஞ்ச யாருமில்லை. தமது சாதிக்கு குறைவானவர்கள் யாராவது சைக்கிள் எடுத்து றோட்டில் ஓடினால் தமது அடிபொடிகளை ஏவிவிட்டு சைக்கிள் ஓடியவரை அடித்து காயப்படுத்தி விட்டு சைக்கிளை கொண்டு போய் கிணற்றினுள் வீசிய கதைகளையும் செவிவழியாகக் கேட்டிருக்கின்றார். ஆனாலும் ‘குப்பையில் குண்டுமணி’ என்பது போல தெய்வானையின் கொள்ளுப் பாட்டனார் ஒருவர் தனது முன்னோர்கள் செய்த பாவம் பழிகளுக்குப்  பிராயச்சித்தமாக புத்தூரில் ஒரு பெரிய பள்ளிக்கூடத்தை கட்டி விட்டார்.

பயம் என்பதையே அறியாத காசிநாதர் இப்பொழுதெல்லாம் எதிர்காலத்தையிட்டு அதிகம் யோசிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் அவளைக் குளிப்பாட்டி வல்லிபுரக்கோயிலுக்கு காடியில் கூட்டிச்செல்லமட்டும் அவர் தவறுவதில்லை. இந்த வேளையில் இருவர் பக்கத்திலும் யாருமே இவர்களை எட்டியும் பார்க்கவில்லை. மலாயாவில் வாழ்ந்த வாழ்வும் அதனால் வந்த குறையாத செல்வமும் அவர் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. அது காலம் அவர்மீது சுமத்திய சுமையாகும். உறவுகளின் உதாசீனம் அவருக்கு நம்பமுடியாத மனவலியாக இருந்தது. ஒருமுறை தெய்வானையின் பக்கத்தில் இருந்த இறுதி உறவான ‘பார்வதிப்பிள்ளையின்’ செத்த வீட்டிற்கு இருவரும் போய் வந்ததின் பின்பு அவள் பக்கத்து உறவுகளும் படிப்படியாக அவர்களிடம் இருந்து விலகிக் கொண்டன. உறவுகளின் நல்ல நிகழ்வுகளுக்கெல்லாம் இவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. ஒருவேளை தங்களுக்கு ஒரு மகனோ மகளோ பிறந்திருந்தால் தங்களிடம் குவிந்திருக்கும் சொத்துக்களை பட்டயம் போடுவதற்கு, ‘நன்கு பழுத்த பழத்தில் இலையான்கள் மொய்ப்பது போல் இந்த உறவுகளும் சுற்றங்களும்  தங்களை மொய்த்திருப்பார்களோ’ என்றெல்லாம் இப்பொழுது காசிநாதர் எண்ணத் தொடங்கினார். தங்களது இருப்பில் மாற்றங்கள் வந்தபொழுது  கூட இருந்தவர்களும் அயல் அட்டைகளும் அவரையம் தெய்வானையையும் ஒரு சக உயிரியாக மதிக்கத்தவறியதை அவர் எண்ணியெண்ணி மருகினார். கடவுளுக்கும் மனிதர்க்கும் இருக்கின்ற உறவுநிலை எப்பொழுதும் இலைமேல் தண்ணீர் போலத்தான். இந்த பூமியில் வாழ்வதற்கு காரணமான அந்த ஆதிமூலத்தை இவர்கள் அடிக்கடி மறந்து போகின்றமையாலேதான் கடவுளும் இவர்களுக்கு அவ்வப்பொழுது வாதையைக் கொடுக்கின்றார் போலும். இப்பொழுது அவருக்கும் அவளுக்கும் இருக்கின்ற ஒரேயொரு உறவு அந்த வல்லிபுரத்தாழ்வார்தான்.

இப்பொழுதெல்லாம் தெய்வானை தனது இயலாமையினால் வருகின்ற கோபத்தை அடக்க மாட்டாது வன்முறையில் இறங்க ஆரம்பித்தாள். அன்றும் அப்படித்தான் அவர் செய்திருந்த மத்தியானச் சாப்பாட்டை சோறு கறிகளுடன் சேர்த்துக் குழைத்து சிறிய சிறிய உருண்டைகளாக தெய்வானைக்கு ஊட்டிவிட வரும்பொழுது அவளோ கோபத்தில் சாப்பாட்டுக் கோப்பையை அவருக்கு நேராகத் தட்டி விட்டாள். காசிநாதர்மீதும் தரையிலும் அவள் தட்டிவிட்ட குழைசாதம் பரவியது. காசிநாதர் எதுவித சலனத்தையும் வெளிக்காட்டாது பொறுமையாக தன்னையும் அவளையும் சுத்தம் செய்து விட்டார். என்னதான் இருந்தாலும் அவள் அப்படிச்செய்தது அவர் மனதின் ஓரத்தில் வலிக்கத்தான் செய்தது. ஒருவேளையில் அது அவரின் ‘ஆண்’ என்ற மரபுவாதசிந்தனையை சீண்டியிருக்கலாம். அதன் எதிர்வினை அன்று மாலை டொக்ரர் ஏகாம்பரத்திடம் தெய்வானையின் வழமையான செக்அப்-க்கு கூட்டிச் செல்கையில் வெளிப்பட்டது.

டொக்ரர் ஏகாம்பரத்திடம் அன்று  நடந்தவைகளை ஒன்றும்விடாது அவர் சொல்லிக் கொண்டிருக்கையில்,  டொக்ரரின் வற்புறுத்தலின் பெயரில் ஏலவே காசிநாதர் கொடுத்திருந்த அவரது இரத்தப் பரிசோதனை அறிக்கைகள் மீது ஏகாம்பரத்தின் கண்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அவர் அறிக்கைகளை எல்லாம் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு,

“காசிநாதர்…… உங்கடை மனுசி இனி இப்பிடித்தான் இருப்பா. அவாக்கு வயசு போகப் போக இந்த மறதி வருத்தம் கூடுமே ஒளியக்  குறையாது. அப்ப இப்பிடியான கோபங்கள், ஏன் கையை காலை விசுக்கிற பழக்கங்கள்  எல்லாம் வரத்தான் செய்யும். அவாவின்ரை வாதையைப் பொறுத்து அது சிலநேரம் கூடவாய் இருக்கும். ஒரு கட்டத்திலை மலசலம் போறதே அவருக்கு தெரியவராது எண்டால் பாருங்கோவன்.  படுக்கையிலை வைத்துத்தான் எல்லாம் பார்க்க வேண்டிவரும். ஏனெண்டால் அவருக்கு வந்திருக்கிற அல்ஸ்ஹைமர் வருத்தம் அப்பிடியானது. நீங்கள் தான் அவாவோடை அனுசரிச்சு போகவேணும். அதெல்லாம் கிடக்க கஷ்டத்தோடைகஷ்டமாய் நீங்கள் தந்திருந்த  பிளட் ரெஸ்ற் றிப்போர்ட் எல்லாம் வந்து கிடக்கு. உங்களுக்கும்  ரத்தத்திலை கான்ஸர் இருக்கிறதாய் றிப்போர்ட் சொல்லுது. இது ஆரம்பகட்டமாய் இருக்கிறதால இப்பவே வைத்தியம் பார்க்க வேணும். கவலையீனமாய் இருக்கப்படாது. மகரகமவிலை இருக்கிற என்ரை கூட்டாளி ஒருத்தருக்கு கடிதம் எழுதி தாறன். நீங்கள் அங்கை போங்கோ, அவர் எல்லா உதவியளையும் செய்து விடுவார். ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ. எல்லாத்துக்கும் வைத்தியம் இருக்கு.” என்று ஏகாம்பரம் சொல்லச் சொல்லக் காசிநாதர் இடிந்தே போய் விட்டார்.

ஏகாம்பரத்தின் கிளினிக்கில் இருந்து இருவரும் காடியில் வீடு திரும்பும் பொழுது காசிநாதரது முகத்தில் பலவித உணர்ச்சிக்கலவைகள் விரவியிருந்தன. அவரது கண்கள் லேசாகச்சிவந்து கலங்கி இருந்தன. இவை பற்றி எதுவுமே தெரியாது அவருக்குப்பக்கத்திலே அவர் தோள் மீது தலை சாய்த்து இருந்த தெய்வானை புதினம் பார்த்துக் கொண்டு வந்தாள். இருந்தால் போல் நினைவு வந்தவளாக, “ஏகாம்பரத்தார் என்ன சொல்லுறார்”? என்று மட்டும் கேட்டாள். அவர் ஒற்றைக்கையால் ஸ்ட்டயரிங்க்-ஐ பிடித்தவாறே அவளை ஆதரவாகத் தடவி விட்டார். அவள் அமைதியாகி விட்டாள்.

காசிநாதருக்கு கான்ஸர் வந்ததை அவரால் நம்பவே முடியவில்லை. தனது பரம்பரையில் இல்லாத வருத்தம் தனக்கு எப்படி வந்தது என்று அவருக்கு ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருந்தது. இரண்டாவதாக தனது காலத்துக்குப் பிறகு யார் தெய்வானையைப் பார்ப்பார்கள்? என்ற கேள்வியே அவரைத் திணறடித்தது. ஒரு வேளையில் தான் செத்தால், அதுகூட அவளிற்கு நினைவில் நிற்குமா என்பது அவருக்குச் சந்தேகமாகவே  இருந்தது. அவரைப்பொறுத்தவரையில் தெய்வானை ஒருவயதுக் குழந்தை நிலைக்குச் சென்று விட்டாள். ஆம்….. இப்பொழுது அவள் உடல் அளவில் வளர்ந்துவிட்ட அழகானதொரு குழந்தைதான். கலியாணம் கட்டிய நாளில் இருந்து அவளது விருப்பங்கள் தானே அவரது விருப்பங்களாயின. ஒரு நாளாவது அவர் அவளைக் கோபித்தது கிடையாது. சிங்கராயர் குடும்பத்தில் பிறந்து கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாது செல்வச்செழிப்பிலே வளர்ந்த தெய்வானை தன்னையே தான் தெரியாமலா போகவேண்டும்? அவரது கண்கள் அவரையறியாது கலங்கி கண்ணீர் வழிந்தோடியது.  ஒருவர் விடுகின்ற அறமில்லாத தவறுகழும் பழிகளும்  பரம்பரைகளைக் கடந்தும் அறுக்கும் என்பது இதுதானா? அவரது தோள்மீது தலைசாய்ந்து வெளியே புதினம் பாத்துக்கொண்டுவரும் தெய்வானைக்கு அவரது மனவோட்டங்களைத் தெரியவோ இல்லைப் புரிந்துகொள்ளவோ முடியுமென்று அவர் எண்ணுவதில் நியாமில்லைத்தான். தனது நாடி நரம்புகளிலும் இதயத்தின்  மூலைமுடுக்குகளிலும் பரவியிருந்த  தெய்வானையையிட்டே அதீத  யோசனையோடு  காடியை ஓட்டிக்கொண்டிருந்த காசிநாதர் மிகவும் தெளிவான சிந்தனையுடன் எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த ‘மொக்கன்’  லொறிக்கு நேர் எதிராகக் காடியைத்  திருப்பினார்.

கோமகன்- பிரான்ஸ்    

13 தை 2020

ஜீவநதி

(Visited 6 times, 1 visits today)