அம்மா குஞ்சியும் சொலவடையும்-பத்தி

எமது வாழ்கையில் தொடர்பாடலில் எமது பெரிசுகள் தாங்கள் சொல்லவந்த செய்தியை நேரடியாகச் சொல்லாது மறைமுகமுகமாக உறைக்கத்தக்க விதத்திலும் , புத்திமதி சொல்வது போலவும் உரையாடுவார்கள் . இதைச் சொல்லடை அல்லது சொலவடை என்று சொல்லுவோம் . ஆனால் , துர்ரதிஸ்டவசமாக இந்த சொல்லடைகள் எம்மிடமிருந்து நாகரீகம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு போகின்றன . இவை மீண்டும் புதியவேகம் பெற்று எம்மைப் போன்ற இளயவர்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்திலேயே இந்தப் பதிவைத் தொடங்குகின்றேன் . 
கோமகன் 
000000000000000000000000000000
கூத்தாடி கிழக்கே பார்த்தானாம், கூலிக்காரன் மேற்கே பார்த்தானாம். 
விளக்கம் :
மேடையில் இரவு இரவாக நடிப்பவனுக்கு விடியக்காலையில் தான் ( சூரிய உதயத்தில் ) சம்பளம் கொடுப்பார்கள் . அதேபோல் கூலி வேலை செய்பவர்களுக்கு மாலை வேளையிலேயே ( சூரியன் மறையும் பொழுது ) சம்பளம் கொடுப்பார்கள் .
பாம்பாடிக்குப் பாம்பிலே சாவாம் , கள்ளனுக்கு களவிலே சாவாம்.
விளக்கம் :
ஒருவர் ஒரு வேலையை எடுத்துச் செய்யும்பொழுது அவரால் அதிலிருந்து மீளமுடியாது . அந்த வேலையில் அவருக்குள்ள பலவீனங்களே , அவரின் வேலைக்கான முடிவுகளையும் தீர்மானிக்கின்றன .
கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் 
விளக்கம் :
ஒன்றை அடையும் வரைதான் அதில் சுவாரசியம் இருக்கும் . அதன்பின் அதனால் ஏற்படுகின்ற நடைமுறைப் பிரைச்சனைகளால் அவதியுறுவர் .
திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
விளக்கம் :
நேர்மையான நல்வர்கள் சொல்கின்ற சொற்களுக்கு எதிர்கருத்துகள் இருக்க மாட்டாது.
ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்குமாம்.
விளக்கம் : 
மனிதவாழ்வில் எதுவும் பிரையோசனமற்றது என்று இல்லை . ஒரு விடையம் பிரையோசனமில்லை என்று தோன்றினாலும் ,அதிலும் ஏதாவது நன்மையளிக்கும் விடையம் உண்டு
அறுப்புக்காலத்திலையும் எலிக்கு ஐந்து பெண்சாதி வேணுமாம் .
விளக்கம் :
ஒருவருக்கு அதிக அளவில் பணம் கிடைக்கும் பொழுது அதை ஆடம்பரமாக ஊதாரித்தனமாக செலவளித்தல் .
கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?
விளக்கம்:
தப்பானவழியில வாற காசுகள் ( நட்புகளால் கூட ) எப்பவுமே ஆபத்தானது .

புருசன் செத்து அவதி படும் போது, அடுத்த வீட்டுக்காரன் கமக்கட்டில இடிக்கிறானாம்!
விளக்கம்:
பாதுகாப்பில்லாத பெண்களிடம் , ஆண்கள் பாதுகாப்பில்லாத நிலையை அனுகூலமாக்கிப் பழகுவதைக் குறிக்கும் .
ஆனான பூனைக்கெல்லாம் ஓட்டங்காட்டிய எலியார்,வீணான தேங்காய்ச்சொட்டில பொறியுண்டாராம்!
விளக்கம்:
பல பூனைகளிடம் இருந்து தப்பிய எலி, பொறியில் வைக்கப்பட்ட தேங்காய்ச்சொட்டை கடிக்க ஆசைப்பட்டு மாட்டுற மாதிரி…
எவ்வளவு பேருக்கோ போக்குக்காட்டின முதுபெரும் வித்துவான்கள் எல்லாரும் சின்ன வித்துக்களினை நோண்டப்போய் தங்களையே நொந்துகொள்ளுவினம்!
உடையவன் இல்லாட்டி முழங் கட்டையாம்.
விளக்கம் :
உரிமையாளர் இல்லாத இடத்தில் அங்கு நடைபெறும் செயல்பாடுகள் யாவும் ஏனோதானோ என்று நடைபெறுவதைக் குறிக்கும் .
எல்லாமாடும் ஓடுது எண்டு பாத்தால் சுப்பற்ரை பட்டியிலை நிண்ட பேத்தை மாடும் ஓடீச்சிதாம்.
விளக்கம் :
திறமையானவர்களுடன் சேர்ந்து திறமையில்லாதவர்களும் தாங்கள் திறமையானவர்கள் என்று காட்டிக் கொள்வதைக் குறிக்கும்
பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
விளக்கம்:
திரைமறைவு வேலைகள் எப்பொழுதோ ஓரிடத்தில் அம்பலத்திற்கு வருவதைக் குறிக்கும் .
அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரனாம் .
விளக்கம்:
அறிவிலிகள் உள்ள இடத்தில் அறிவுள்ளவனின் பேச்சுக்கள் சபையேறாததைக் குறிக்கச் சொல்லப்படுவது .
தாய் முகம் காணாத பிள்ளையும் , மழை முகம் காணாத பயிரும் உருபடாதாம்.
விளக்கம் :
சரியான பராமரிப்பில்லாத எந்தச்செயலும் வெற்றியளிக்காது என்பதைச் சொல்லக் குறிக்கும்
அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறானாம், குடிகிறவன் ஒன்று நினைத்துக் குடிக்கிறானாம் .
விளக்கம் :
சொல்லாடல்களில் தப்பான மொழிபெயர்ப்புகளை எடுப்பதிற்குக் குறிக்கச் சொல்லப் படும்
அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரியாம் சோறு அள்ளிப் போட்டுக் குழம்பு ஊற்றியது பூசாரியாம் .
 
விளக்கம் :
ஒரு செயலை செய்தவர் இருக்க அந்தச் செயலுக்கு வேறு ஒருவர் உரிமை கொண்டாடிப் புகழ் பெறுவதைக் குறிக்கச் சொல்வது.
அகன்று இருந்தால் நீண்ட உறவாம் கிட்ட இருந்தால் முட்டப் பகையாம் .
விளக்கம் :
உறவுகளின் பாசப்பிணைப்பைத் தீர்மானிக்கக் குறிக்கச் சொல்வது .
அங்கே பார்த்தால் ஆடம்பரமாம் இங்கே பார்த்தால் கஞ்சிக்குச் சாவாம் .
விளக்கம் : 
மனித வாழ்வில் உள்ள ஏற்றத் தாள்வினைசொல்லச் சொல்லப்படும்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாதாம் .
விளக்கம் : 
கொள்கைகள் திட்டங்கள் இல்லாத எந்த வேலையும் பயன் தராது என்பதைச் சொல்லப் பயன்படும் .
அஞ்சு அடிச்சால் சோருமாம் ஆறு அடித்தால் பாயுமாம்.
விளக்கம் :
ஒன்று சேர்ந்த செயல்களின் பயனைச் சொல்லும்பொழுது பாவிக்கலாம்

அடிக்க அடிக்கப் படுகிறவனும் முட்டாள் படப்பட அடிக்கிறவனும் முட்டாள் .
விளக்கம் :
ஒருவரின் நல்லகுணங்களைத் தமக்குச் சாதகமாக்கி காரியங்களைச் செய்பவர்களைச்சொல்லக் குறிக்கும்
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்குமாம் .
விளக்கம்:
ஒருவர் வாழ்க்கையில் உள்ள ஒழுக்கத்தை அளப்பதற்குச் சொல்ல இதனைப் பாவிக்கலாம் .
அதிர்ந்து வராத புருசனும் மிதந்து வராத அரிசியும் பிரையோசனமில்லையாம் .
விளக்கம்: 
ஒருவரின் இயல்பான குணாம்சங்கள் குறைந்து வழமைக்கு மாறாக நடக்கும்பொழுது இதனைப் பாவிக்கலாம் .
அறுகங் காட்டை விட்டானும் கெட்டானாம் ஆன மாட்டை வித்தவனும் கெட்டானாம்.
விளக்கம் :
தன்னிடம் உள்ள பலன் தரத்தக்க பொருட்களை விற்றால் இறுதியில் ஏழ்மையே மிஞ்சும் என்பதைச் சொல்லச் சொல்லலாம்.
அறுபது அடிக் கம்பம் ஏறினாலும் கீழே வந்துதன் பிச்சை எடுக்கவேணும் .
விளக்கம் :
ஒருத்தர் எவ்வளவுதான் போனாலும் அடக்கமாய் இருக்கவேணும் என்பதைச் சொல்ல சொல்லபடும் .
மேலை போற சனியனை ஏணிவைத்து இறக்கின மாதிரி . 
விளக்கம் :
தேள்வையில்லாத விடையங்களைத் தலையில் போட்டு அதனால் அவதிப்படுபவர்களைக் குறிக்க சொல்லலாம் .
ஆகிறவன் ஐஞ்சு சதத்திலையும் ஆவான் , ஆகாதவனுக்கு ஆயிரம் குடுத்தாலும் ஆகமாட்டான் .
விளக்கம் :
முயற்சியும் கடின உளைப்பாளிகளும் ஒருபோதும் தோற்க மாட்டார்கள் .
ஆட்டுக்குட்டியை தோளிலை வைச்சுக்கொண்டு ஊரல்லாம் தேடினானாம் .
விளக்கம் :
பிரைச்சனைகளுக்கு தீர்வுகளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கான ஆலோசனைகளப் பலரிடம் கேட்பது .
ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு , மாட்டைத் தூக்கி மந்தையில போட்டானாம் .
விளக்கம் :
பிரச்சனைகளை திரித்துக் கூறி விகாரப்படுத்தி இன்பமடைவதைச் சொல்லச் சொல்லப்படும் .
ஆளை ஏய்க்குமாம் நரி அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு .
விளக்கம் :
ஒருவருடைய திறமையை மற்றவர் மதிக்கவேண்டும் . மதிக்காதவர்களை சொல்லப் பயன்படும் .
ஆத்திலை போனாலும் போவனே ஒழிய தெப்பக்காறனுக்கு காசு குடுக்கமாட்டன் எண்டானாம் .
விளக்கம் :
இலகுவாக காசு கொடுத்து செய்யவேண்டிய வேலையை இலவசமாக செய்ய எதிர்பார்ப்பவர்களை சொல்லச் சொல்லப்டும் .
யானைக்கு கோபம் வந்தால் வீட்டைப் பிளக்குமாம் , பூனைக்கு கோபம் வந்தால் புல்லுப் பாயை விறாண்டுமாம் .
விளக்கம் :
ஆத்திரத்தின் விளைவு வலியவருக்கும் மெலியவருக்கும் ஒன்றானது .
யானைக்குட்டி கொழுக்கவில்லையே எண்டு உட்கார்ந்து அழுதிதாம் சிங்கக்குட்டி .
விளக்கம் :
போலிக்கு ஒருவரின் வீழ்ச்சியை பார்த்து கவலைப்படுகிறவரைக் குறிக்கும் .
யானை கலக்கின குட்டையில கொக்கு மீன் பிடிக்கப் போச்சுதாம் .
விளக்கம் :
திறமையானவர்களின் வெற்றியில் திமையற்றவர்கள் பலன் அடைவதைக் குறிக்கும் .
யானை தம்பட்டம் அடிக்க ஓனாய் ஒத்து ஊதீச்சுதாம் .
விளக்கம் : 
தமது திறமை மேல் சந்தேகம் கொள்ளம் ஒரு சிலர் திறமையானவர்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பதைக் குறிக்கும் .
இறைக்கிறவன் இளிச்சவாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடுமாம் .
விளக்கம் :
இரக்க குணமும் இளகியமனமும் உள்ளவர்களிடம் பலர் பலன்களை எதிர்பார்பதைக் குறிக்கும் .
உள்ளங்கை பால்சோறைவிட்டுப் புறங்கையை நக்கினது போலையாம் .
விளக்கம் :
எது முக்கியமோ அதைச் செய்யாமல் விட்டு முக்கியமில்லாததைச் செய்வதைக் குறிக்கும் .
யானையும் யானையும் தேய்க்க கொசுவுக்குப் பிடிச்சிதாம் சனி .
விளக்கம் :
வலிமையானவர்கள் மோதிக்கொள்ளும் பொழுது இடையில் இருக்கும்மெலியவர்கள் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் .
உழுகிற காலத்திலை ஊர் சுத்திப்போட்டு அறுக்குற நேரத்திலை அரிவாளோடை போனானாம் .
விளக்கம் :
செய்யவேண்டிய நேரத்தில் வேலைகளைச் செய்யாது பின்பு ஒப்புக்காக நடிப்பதைக் குறிக்கும்.
இடுப்பில ரெண்டு காசு இருந்தால் சுருக்கெண்டு ரெண்டு கதை வருமாம் .
விளக்கம் :
பணம் தருகின்ற ஆணவத்தால் தாறுமாறாக கதைப்பவர்களைக் குறிக்கும் .
எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவாம் மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவாம் .
விளக்கம் :
ஏழைக்கு ஏழையே துணையிருப்பான் என்பதைக் குறிக்கும் .
இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவனும் செவ்வாயாய்ச் சிரைப்பானாம் .
விளக்கம் :
ஒருவர் ஒழுக்கம் கடமை தவறாது இருந்தால் தவறுகள் ஏற்பட வழி இல்லை .
உயிரோடை இருக்கேக்கை ஒரு முத்தத்துக்கு வக்கில்லை செத்தாப்பிறகு கட்டிக்கட்டி முத்தம் கொடுத்தாளாம் .
விளக்கம் :
ஒருவரின் அருமை தெரியாது தூற்றி விட்டு இல்லாதபோது ஒப்புக்குப் புகழ்பாடுபவர்களைக் குறிக்கும் .
இரும்பு பிடிச்ச கையும் சிரங்கு பிடிச்ச கையும் சும்மா இருக்காதாம்.
விளக்கம் :
ஒரு சில பழக்கங்களை மனதில் கொண்டவர்கள் வாழ்நாள் முழுக்க அதை மறக்கமாட்டார்கள் .
உடையார் புக்கைக்கு அழுகிறாராம் லிங்கம் பஞ்சாமிர்தம் கேக்கிதாம் .
விளக்கம் :
முக்கியமான தேவைகள் இருக்கும்பொழுது முக்கியமில்லாத தேவைகளை முன்னிலைப் படுத்துவதைக் குறிக்கும் .
இலை அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் முள்ளு அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் .
விளக்கம் :
ஒரு விடையத்தில் பலவீனமானவர் எச்சரிக்கையாக நடக்கவேண்டும் என்பதைச் சொல்லக் குறிக்கும் .
உழுகிற மாடு எங்கை போனாலும் ஏரும் கலப்பையும் முன்னுக்கு வருமாம் .
விளக்கம் :
முயற்சியும் திறமையும் ஆர்வமும் உடையவர்கள் எந்த இடத்திலும் எங்கு போனாலும் முன்னேறுவார்கள் .
ஒண்ட வந்த எலி எழும்பி நிண்டுதாம் அண்டியிருந்த பூனை அவதியாப் பறந்திதாம் .
விளக்கம்:
இரக்கம் காட்டி உதவி செய்ய வெளிக்கிட்டால் , உதவி செய்தவரையே தூக்கிச் சாப்பிடுபவர்களைக் குறிக்கும் .
கஞ்சி வாக்க ஆள் இல்லாட்டிலும் கச்சை கட்ட ஆள் இருக்கு .
விளக்கம் :
உருப்படியாக உதவி எதுவும் செய்யாமல் , உதவி செய்பவர்களிடையே கலகத்தை உருவாக்குபவர்களைச் சொல்லக் குறிக்கும்.
வயிலிலை உழுது பருத்தி போடப்போறன் எண்டானாம் அப்பன் அதக்குள்ளை பெடி அந்த நூலிலை தனக்கு வேட்டி நெய்து தா எண்டானாம் . 
விளக்கம் :
ஒரு முயற்சியின் பலனை அடைய முன்பு அந்தப் பலனைப் பற்றி கற்பனைகளில் மிதப்பதைக் குறிக்கும் .
ஒரு குருவி தீனி தேடுமாம் ஒன்பது குருவி வாய் திறக்குமாம் .
விளக்கம் :
ஒருவரின் வருமானத்தில் பலர் பயனடைவதைக் குறிக்கும் .
சனிபிடிச்ச நாரை கெளுத்தி மீனைப் பிடிச்சு விழுங்கீச்சுதாம் .
விளக்கம் :
பிரச்சனைகளில் இருப்பவர் மேலும் பிரச்சனைகளில் தானாக விழுவதைக் குறிக்கும்
கொதி தண்ணியில விழுந்த பூனை பச்சைத் தண்ணியைக்கண்டாலும் பயப்பிடுமாம் .
விளக்கம்:
ஒருபிரச்சனையில் பிழையான அனுபவத்தை எடுத்தவர் எல்லா பிரச்சனைகளுக்குமே அதே பார்வையைப் பார்ப்பார்
செத்துப்போன மாடு உயிரோடு இருந்திது எண்டால் , ஓட்டைச் செம்பாலை ஒம்பது செம்பு பால் கறப்பன் எண்டானாம் .
விளக்கம் : 
பிரையோசனம் இல்லாத வீண் வெட்டிப் பேச்சுகள் கதைப்பவர்களைக் குறிக்கும்.
சோத்திலை கிடக்கிற கல்லைப் பொறுக்காதவன் , சொக்கநாதர் கோயில் அத்திவாரக்கல்லை பேர்ப்பன் எண்டானாம் .
விளக்கம் :
முயற்சியே இல்லாமல் சோம்பேறியாக இருந்துகொண்டு பெரும் எடுப்பில் கதைப்பவர்களைக் குறிக்கும் .
சோற்றுக்கே திண்டாடும் நாய் சிங்கத்துக்கு சிம்மாசனம் போட்டிச்சிதாம் .
விளக்கம்:
கஸ்ரமான நிலையில் இருந்துகொண்டு வெறும் பட்டிற்காக தகுதிக்கு மீறி மற்றவர்களுக்கு உதவிசெய்ய முயலுவதைக் குறிக்கும்
தடவிப் பிடிக்க மயிர் இல்லையாம் அவள்பேர் கூந்தல் அழகியாம் .
விளக்கம்:
திறமைகள் இல்லது புலுடா விட்டுப் பெயர் எடுப்பதைக் குறிக்கும்.
தென்னை மரத்தில ஏன்ரா ஏறினாய் என்றால் ,கண்டுக்குட்டிக்கு புல்லு புடுங்க எண்டானாம் . தென்ன மரத்திலை எங்கை புல்லு எண்டால் , அதுதான் கீழை இறங்கிறன் எண்டானாம் .
விளக்கம் :
அத்தியாவசிமான விடையங்களில் தேவையற்ற நேரவிரையங்களிச் செய்வதைக்குறிக்கும் .
தொடாத தொழிலை தொட்டவனும் கெட்டானாம் தொட்ட தொழிலை விட்டவனும் கெட்டானாம் .
விளக்கம் :
எதுவித அனுபவமும் இல்லாத வேலையும் , முயற்சியும் இல்லாமல் பேருக்கு செய்கின்ற வேலையும் , தோல்வியிலேயே முடிவதைக் குறிக்கும் .
கோமகன் 
23 மார்கழி 2014
(Visited 9 times, 1 visits today)