மகிழடி வைரவரும் அப்பாகுட்டியரும்

வைரவர் உக்கிர மூர்த்தி. முந்தி வைரவருக்கு ஒரு தகர கொட்டகையும் இடைக்கிடை மடையும் விளக்கும் ஏத்தினால் காணும்.உப்பிடித்தான் கோப்பாயிலை மகிழடி வைரவர் எண்டு இருந்தார் .அவற்றை அட்ரஸ் வந்து குறிப்பாய் சொல்லுறதெண்டால் கோப்பாய் ஏ ஜி ஏ ஒபிசுக்கு பக்கத்தில் ஒழுங்கையிலை இருக்கிறார் .முந்தி ஆள் வலு சிம்பிளான ஆள். நான் ஊருக்கு போகேக்கை ஒருக்கால் மகிழடி வைரவரை ஒரு எட்டு பாத்திட்டு போவம் எண்டு போனன். இப்பத்தையான் மகிழடி வைரவர் றிச்மான். கோபுரம் என்ன. இப்பீக்கர் என்ன. டெய்லி அய்யர் என்ன. எண்டு சொல்லி வேலையில்லை .
அந்த நேரம் ஊரிலை அப்பாக்குட்டியர் எண்டு ஒருத்தர் இருந்தவர் அவர் கொஞ்சம் கைவைத்தியமும் பாப்பார். அதோடை என்னமொருத்தர் குளறி சின்னத்தம்பியர் எண்டும் ஒருத்தர் இருந்தவர்; ஆள் கொஞ்சம் கைப்பார்ட் பார்ட்டி .இவரை ஏன் குளறி எண்டு சொல்லுறதெண்டால் செத்தவீடு, நல்லது கெட்டதுகளுக்கு எல்லாம் முன்னுக்கு நிக்கிற அருமையான சீவன் .என்ன எந்தநேரமும் மெல்லமாய் கதைச்சு நான் பாக்கேலை . கதைக்க தொடங்கினால் காதுகன்னம் எல்லாம் வெடிக்கும் அனால் கருட்டு சுருட்டு இல்லாத சீவன் . இவை தண்ணியிலைதான் கூட்டாளிமார். மத்தும்படி ரெண்டுபேரும் கீரியும் பாம்புத்தான் .
அப்பாக்குட்டியருக்கு மகிழடி வைரவர் கடைசி திருவிழா நேரத்திலை கலை வரும். அப்ப பெரிசுகள் சொல்லுவினம் அவருக்கு வைரவர் வாலாயம் இருக்கெண்டு எங்களுக்கு அந்த நேரத்திலை உதுகள் விளங்கேலை. எண்டாலும் அதுக்கு முதலே அப்பாக்குட்டியர் சுதியும் ஏத்திபோடுவார் . கலை முத்தி காலிலை சலங்கை கட்டி சன்னதம் ஆடி கடைசியிலை அப்பாக்குட்டியர் வைரவருக்கு பக்கத்திலை இருக்கிற மகிழமரத்திலை ஏறிப்போய் இருத்திண்டுவர். இந்த நேரம் பாத்து நம்ம குளறி சின்னத்தம்பியர் வந்து, ஆ …….ஆ … சரி ……….சரி …………..அப்பாக்குட்டி காணும் காணும் இறங்கு எண்டு சொல்ல, மச்சான் தன்ரை அலப்பலை குறைச்சு பம்மிக் கொண்டு இறங்குவர். அந்த நேரம் அப்பாக்குடியரை பாக்கவேணும் பாவமாய் இருக்கும். அப்பாக்குட்டியரும் சரி குளறியரும் சரி இப்ப உயிரோடை இல்லை .ஆனால் இவையின்ர காலத்திலை நான் சீவிச்சு இருக்கிறன் எண்டதே எனக்கு சந்தோசமாய் இருக்கு .ஏனெண்டால் அவையள் பம்பலாய் நாலு பேரை சிரிக்க வைச்சு தங்களாலை நாலு பேருக்கு உதவி ஒத்தாசை செய்து போய் சேர்ந்த சீவனுகள். இப்பத்தையானுகளை பாத்தால் அவையள் சிரிக்கிறதே பெரிய விசயமாய் கிடக்கு .
யாவும் உண்மையே
கோமகன்
(Visited 5 times, 1 visits today)