வாடாமல்லிகை பாகம் 06

கோட்டே தொடரூந்து  நிலையம் தேன் வதையை மொய்த்துக் கொண்டிருக்கும் தேனீக்களைப்போல  இருந்தது. மக்கள் தொடரூந்து நிலையத்தில் உள்ளே போவதும் வருவதுமாக எனக்கு தேன் கூட்டையே நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். தனது காரை நிறுத்துவதற்கு எனது மனைவியின் தோழி சிரமப்படுவதை பார்த்து புகையிரத நிலயத்தின் முன்பாகவே நாங்கள் இறங்கிக்கொண்டோம். நாங்கள் சன வெள்ளத்தில் நீந்திக்கொண்டே உள்ளே சென்றோம். உள்ளே காதைப்பிளக்கும் சந்தைக்கடை இரைச்சலாக  தொடரூந்து மேடை இருந்தது. நாங்கள் செல்ல வேண்டிய யாழ் தேவி தொடரூந்து மேடையில் நீண்டு வளைந்து நின்று இருந்தது. தொடரூந்தில்  இடம் பிடிப்பதற்காகப்  பல் முனைதாக்குதல்கள் சனங்களால் தொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஓர் இடத்தைப் பிடிப்பதில் எம்மவர்கள் என்றுமே பல விதமான உத்திகளை பிரயோகிப்பதை கண்டு வியந்திருக்கின்றேன். நாங்கள் எமது இருக்கையின் இலக்கத்தை தேடி பிடித்து அமர்ந்து கொண்டோம். எமக்கு முன்பாக இருந்த இருக்கைகள் யாருக்குகாகவோ காத்துகொண்டு இருந்தன. வெளியே தேநீர் வடை விற்பவர்களது குரல்கள் பலவேறு அலைவரிசையில் எனது காதுகளை அடைத்துக்கொண்டு இருந்தன.
இந்த தொடரூந்துப்  பயணம் என்றாலே அலாதியானதுதான். அதில் பயணம் செய்யும் பயணிகள் எமக்கு சொந்தமாக இல்லாவிட்டாலும். தேவைகள் கருதி எம்முடன் வைக்கும் உறவுகளும், அது தெரிந்தும் நாமும் அவர்களுடன் ஒன்றிப் போவதும், பின்பு இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஆளுக்கு ஒருவராகப் பிரிவதும், அப்பொழுது ஏற்படும் வெறுமை உணர்ச்சி பயணத்தை அனுபவித்தவர்களுக்கே புரியக்கூடியது. சில வேளைகளில் இந்தப்பயணங்கள் கூட வருபவர்களால் நரகமாக மாறுவதும் உண்டு. தொடரூந்துப்பெட்டியின் உள்ளே இருந்த குளிரூட்டியினால் வந்த குளிர்மை அந்த கொடும் வெக்கைக்கு மிகவும் இதமாகவே இருந்தது. எனது கண்களோ சுற்றுச் சூழலை அளவெடுத்தன. அங்கு இருந்த பயணிகளில் தொண்ணூறு வீதமானோரின் கைகளில் கைதொலைபேசி படாதபாடு பட்டுக் கொண்டு இருந்தது. அங்கு ஒரு பொழுது போக்கு சாதனமாக மட்டுமே கைத்தொலைபேசி அதிகளவில் பாவிக்கப்பட்டது. இதற்கு அதிக அளவு புலத்துப் பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். மணியடித்து, கொடி காட்டி, வளையம் பரிமாறி, என்று இம்மியளவும் பாரம்பரியத்தைப் பிசகவிடாது  யாழ் தேவி தனது சடங்குகளை முடித்துக்கொண்டு வவுனியாவை நோக்கி கோட்டே தொடரூந்து நிலயத்தில் இருந்து நகரத் தொடங்கியது.
எங்கள் எதிரே இருந்த இருக்கைகளுக்கு ஒரு வயதான தம்பதிகள் இறுதி நேரத்தில் அல்லாடிக்கொண்டு வந்தார்கள். கணவனுக்கு ஒரு எழுபத்தி ஐந்து வயது இருக்கலாம். மனைவிக்கு ஒரு எழுபது வயது இருக்கலாம். அவர்களை ரெயில்வே கார்ட் தான் அழைத்துவந்து அவர்களது இருக்ககை இலக்கத்தைச் சரி பார்த்து எமக்கு முன்னே இருத்தி விட்டார். கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்த எனக்கு ரெயில் பெட்டியை முற்றுமுழுவதுமாக சுதந்திரமாகவே நோட்டம் விட முடிந்தது. எனது கண்கள் வெளியிலயே அலைபாய்ந்தன.  யாழ்தேவி அழகிய சிறிய சிங்களக் கிராமங்களின் ஊடாக வேகம் எடுத்துக்கொண்டிருந்தது. இரு புறமும் அடர்த்தியான தென்னை மரங்களும் கமுக மரங்களும் வரிசை கட்டி எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தன. தென்னை ஓலைகளால் வேயப்படிருந்த ஒலைகுடிசைகளில் ஆண்களும் பெண்களும் வெளியே இருந்து தென்னம் ஓலையினால் கிடுகு பின்னிக் கொண்டு இருந்தார்கள். அங்கு இருந்த சிறுவர்கள் ஓடிய யாழ் தேவிக்கு கை அசைத்தார்கள். அவர்கள் முகத்தில் கள்ளம் கபடம் எதுவும் காணப்படவில்லை. இதே போல் நாங்களும் சிறுவயதில் யாழ் தேவிக்கு வீதி ஓரத்தில் நின்று கைகளைக் காட்டி இருக்கின்றோம். அந்த சிறு வயதிலேயே இரண்டு பக்கமும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எனது மனம் ஏங்கியது.
நகர் புறங்களைக் கடந்து சிறிய கிராமங்கள் ஊடாகவும் பசுமை போர்த்திய வயல் வெளிப் பரப்புகள் ஊடாகவும் யாழ் தேவி வேகமெடுத்தது. நான் இருக்கும் பாதுகாப்பில் எனது மனைவி எனது தோளில் நித்திரையாகி விட்டாள். எனக்கு முன்பு இருந்த வயோதிக தம்பதிகள் இருவரும் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அதில் மூழ்கி இருந்தார்கள். மற்றயவர்கள் போல் ” விடுப்பு ” அறியும் ஆவல் அவர்களிடம் இல்லாமல் இருந்தது எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் அடங்கா பசியுடன் உள்ள குழந்தை தன் தாயில் பால் குடிப்பதைப்போல இரண்டு பக்கத்திலும் உள்ள இயற்கை காட்சிகளை அள்ளிப் பருகி கொண்டு வந்தேன். அப்பொழுது வெய்யில் குறைந்து இருள் கவியத் தொடங்கியது. இரண்டு பக்கமும் வெளிச்சப் பொட்டுகள் மின்னின. ஒரு சில இடங்களில் பயிர் செய்கைக்காக எரிக்கப்பட்ட சிறு பற்றைக் காடுகளில் இருந்து விறகு எரிந்த மணம் என் மூக்கைத் துளைத்தது. நீண்டகாலத்துக்குப் பின்பு வந்த மணத்தை ஆசையுடன் நுகர்ந்தேன். இதமான காற்று என் முகத்தில் அடித்தது. இந்த அருமையான பொழுதில் ஒரு தேநீர் குடித்து சிகரட் அடித்தால் எப்படி இருக்கும் என்று எனது மனம் நெட்டுரு போடத்தொடங்கியது. அப்பொழுது யாழ் தேவி அனுராத புரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. இன்னும் ஓரிரு மணித்தியாலத்தில் வவுனியாவை அடைந்து விடுவேன் என்ற நினைப்பே என்மனதை கிளர்ச்சி அடையப்பண்ணியது.
எனது அம்மாவின் இழப்புக்குப் பின்பு அக்காவே எனக்கு எல்லாம். நான் வரும் தகவலை முதலே நான் சொல்லி இருந்தேன். ஒரு இருள் கவிந்த இரவில் நாங்கள் வந்து கொண்டிருந்த யாழ் தேவி வவுனியா தொடரூந்து நிலையத்தில் கிரீச்சிட்டு நின்றது.
 
25 சித்திரை 2014
(Visited 6 times, 1 visits today)