வேங்கையின் மைந்தன் -புதினம் பாகம் 2 -12

ரோகிணி அனைவரும் புறப்படும் சமயத்தில் அவர்களுடன் இருந்து அனுப்பி வைத்தாள். அவளுடைய முகத்தில் களை இல்லை; நடையில் உற்சாகம் இல்லை; தன்னை விரும்புவதாக அவள் கூறாததால் இளங்கோவும் ஓரளவு அலட்சியப்படுத்தி வருவது அவளுக்கு நன்றாகப் புலப்பட வேண்டும் என்பதும் அவனுடைய எண்ணம்.

இளங்கோ மட்டிலும் தனியாகப் பழையாறைக்குக் கிளம்பியிருந்தால் ரோகிணி அதை எப்படி எடுத்துக் கொண்டிப்பாளோ தெரியாது. பெரியவர்களும் தனியே செல்லும் அதே இடத்துக்கு அருள்மொழி நங்கையும் அம்மங்கை தேவியும் உடன் செல்லுகிறார்கள்.

வீரமல்லன் தன்னிடம் கூறிய செய்திகளையும் இந்தப் பிரயாணத்தையும் இணைத்து வைத்துப் பார்த்தாள் ரோகிணி. அவளை அறியாமலே அவள் மனம் கலக்கமுற்றது என்றாலும் அதை மறைத்துக்கொண்டு அம்மங்கையோடு சிரித்துச் சிரித்துப் பேசினாள். அருள்மொழிக்கு ஆடை அணிகள் எடுத்துக்கொடுத்து அவள் அலங்கரித்துக் கொள்வதற்குச் சிறு உதவிகள் செய்தாள்.

அவளுடைய முகவாட்டத்தைக் கண்டவுடன் தனக்குள் சிரித்துக் கொண்டான் இளங்கோ. கிளம்புகிற அவசரத்தில் அங்குமிங்கும் செல்வது போல் அவன் அலைந்து கொண்டிருந்தானே தவிர ரோகிணியுடன் பேசவில்லை.

கடைசியில் அவளாக அவனை நெருங்கி வந்து, “எப்போது திரும்பி வருவீர்கள்?’’ என்று மெல்லக் கேட்டாள்.

“தெரியாது.’’

“சொல்லக் கூடாதா? என்னிடம் சொல்லக் கூடாத ரகசியமா அது?’’

அழாக்குறையாக அவனிடம் வினவினாள் ரோகிணி.

“எனக்கு மிகவும் விருப்பமான இடம் பழையாறை, சக்கரவர்த்திகளும் என்னை விரும்பி அழைக்கிறார்கள். அதனால் அங்கு போகிறேன். அங்கிருந்து நேரே போர்க்களத்துக்குச் சென்றாலும் செல்வேன்.’’

“போர்க்களத்துக்கா, நீங்களா?’’

“ஆமாம்!’’

எந்தப் போர்க்களத்துக்கென்று அவளும் கேட்கவில்லை, அவனும் கூறவில்லை.

“இந்தக் கையுடனா போர்க்களத்துக்குச் செல்வீர்கள்?’’

“ஏன், இந்தக் கை இருக்கிறதே!’’ என்று இடது கரத்தை உயர்த்திக் காட்டினான் இளங்கோ.

நீண்ட பெருமூச்சு ரோகிணியிடமிருந்து வெளிவந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டே “விரைவில் திரும்பி வாருங்கள்’’ என்றாள்.

“நான் விரைந்து வந்தால் உனக்கு என்ன? வராவிட்டால் என்ன?’’ என்றான் இளங்கோ.

“அப்படிச் சொல்லாதீர்கள், வந்துவிடுங்கள்’’ என்றாள் மீண்டும். இதற்குள் யாரோ அந்தப் பக்கம் வரவே, அவர்கள் பேச்சு பாதியில் நின்று விட்டது. ஓடிப்போய் ரதத்தில் ஏறிக்கொண்டான். அவன் மனத்தையே ஊடுருவித் துளைப்பது போல் ஒருகணம் நோக்கிவிட்டு இளவரசிகள் ஏறியிருந்த ரதத்துக்குச் சென்று அவர்களை

வழியனுப்பத் தொடங்கினாள் ரோகிணி.

“விரைந்து திரும்பி வாருங்கள்’’ என்று அவர்கள் அருகில் நின்று அவள் எழுப்பிய குரல் யாருக்காக என்பது அவனுக்கு விளங்காமல் இல்லை. “விரும்புகிறேன்’’ என்று அவள் வாய்மொழியால் கூறவில்லைதான். என்றாலும் விருப்பமில்லாத பெண்ணின் சொற்களா அவள் சற்றுமுன் கூறிய சொற்கள்?

வழிநெடுகிலும் தென்பட்ட காட்சிகள் இன்பமாக இளங்கோவுக்குத் தோன்றியதற்கு இதுவே காரணம். பழையாறைச் சிவன் கோயில் கோபுரம் வானுற ஓங்கி நின்று அவர்களுக்கு வரவேற்புக் கூறியது. பழையாறை மாநகரின் சரித்திரம் பழம் பெருமை வாய்ந்த சரித்திரம். வாழையடி வாழையாகத் தழைத்தோங்கி வளர்ந்துவந்த பிற்காலச் சோழ மரபினருக்கு நெஞ்சில் உரமூட்டி, சாம்ராஜ்யக் கனவுகளை அவர்களிடம் மலர்வித்த பொன்னகரம் அது.

பிற்காலச் சோழ சாம்ராஜ்யத்தின் முதல் மன்னரான விஜயாலய சோழர் தஞ்சை நகரில் ஆட்சி செலுத்தும்முன் இடைக்காலத்துச் சோழ மன்னர்கள் பழையாறையையே தங்கள் கோநகராகக் கொண்டிருந்தார்கள். பல்லவப் பேரரசின் கீழ் சோழர்கள் சிற்றரசர்களாக ஒன்றியிருந்த காலம் அது. அவர்களைப் போலவே, சந்திரலேகை (செந்தலை) முத்தரையர்களும், கொடும்பாளூர் இருக்குவேளிரும் பல்லவர்களிடம் சிற்றரசாகக் கட்டுப்பட்டிருந்தார்கள். முத்தரையர்களும் இருக்குவேளிரும் என்றுமே சிற்றரசர்களாக வாழ்ந்தவர்கள். பேரரசர்களாக மலரவேண்டும் என்ற விருப்பம் அவர்களிடம் எழாததில் வியப்பொன்றுமில்லை. ஆனால் வேங்கைக்கொடி தாங்கியவர்களின் வீரவரலாறு அப்படிப்பட்டதல்லவே!

உறையூரில் உறைந்து உலகம் வியக்க ஆட்சி செய்தவர்கள் சோழர்கள். காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து கப்பல் கப்பலாக வீரர்களை அனுப்பி, கடல் கடந்த நாடுகளில் புலிக்கொடி நாட்டியவர்கள் அவர்கள். தங்களது பழமையை அவர்கள் மறக்கவுமில்லை; பழையாறை மண் அவர்களை மறக்கவிடவும் இல்லை.

சிற்றரசர்கள் என்ற சிறுபழியைத் துடைத்துக் கொள்வதற்காக அவர்கள் சீறி எழுந்தார்கள். விஜயாலயசோழர் காலத்திலிருந்து தஞ்சைமாநகர் தலைநகரமாகியது. பழையாறைப் பெருநகர் இரண்டாவது தலைநகரமாக ஒதுங்கிக் கொண்டது. இளைஞர்களுக்கு வழிவிட்டு முதியோர் ஒதுங்கிக் கொள்வதுபோல, மாமன்னர் இராஜேந்திரர் காலத்தில்கூட அது இரண்டாவது தலைநகரந்தான். சோழப் பெருங்குடியின் வழி வந்த பலர் அங்கு உற்றார் உறவினர்களாகச் சோழ மாளிகைகளில் வாழ்ந்து வந்தார்கள். சாம்ராஜ்யத்தின் முதுகெலும்புத் தொடரான பெரும்படை வீடுகள் பல அந்த நகரத்தைச் சூழ்ந்து கொண்டிருந்தன.

ஆரியப்படை வீடு, பம்பைப்படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு ஆகிய நான்கு வீடுகள் மிகமிகப் பழமையானவை. மாமன்னர் இராஜேந்திரரோ நான்கு படை வீடுகள் போதாதென்று நாற்பது படை வீடுகளைப் புதிதாக எழுப்பியிருந்தார். பழையாறைக்கு வடக்கே காத தூரத்திலிருந்து வட வள்ளாற்றின் தென்கரை வரையிலும் அந்த வீரர்களின் குடியிருப்புக்கள் பரவிக் கிடந்தன.

தஞ்சையிலிருந்து புறப்பட்ட ரதங்கள் அனைத்தும் பழையாறைப் பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தவுடன் இராஜேந்திரர் சிறுபொழுதுகூட ஓய்வெடுத்துக் கொள்ளவில்லை. வல்லவரையரை உடன் அழைத்துக் கொண்டு சுற்றிப் பார்த்துவிட்டு வந்தார். கூட்டத்தினரின் அன்புப் பிரவாகத்திலிருந்து மீண்டு மாளிகைக்குத் திரும்பி வருவதற்குள் பொழுது நன்றாக இருட்டிவிட்டது.

மறுநாளைக்கு மறுநாள்தான் வெற்றித் திருவிழா. அதற்குள் மற்ற படை வீடுகளையும் நேரில் சென்று பார்வையிட வேண்டுமென்று வல்லவரையரிடம் கூறியிருந்தார் மாமன்னர். ஈழ நாட்டிலிருந்து திரும்பிய வீரர்களில் சரிபாதிப் படையினருக்குமேல் அங்குதான் குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து வந்தனர்.

உணவு முடிந்தது. மாளிகையின் அறையொன்றில் தனியே அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்த மாமன்னர் வல்லவரையரை அழைத்துவரச் சொல்லிவிட்டு, காஞ்சியிலிருந்த மாதண்ட நாயகர் அரையன் இராஜராஜன் அனுப்பியிருந்த ஓலையைக் கையிலெடுத்தார். பத்தாவது முறையாக விளக்கொலியில் படித்துப் பார்த்தார்.

இளவரசன் இராஜாதிராஜன் தஞ்சைக்குத் திரும்பியவுடன் அவரிடம் கொண்டுவந்து கொடுத்த ரகசிய ஓலை அது. அதில் இருந்த செய்திகள் அவனுக்கே இதுவரையில் தெரியாதவை. கொடும்பாளூர்ப் பெரியவேளாரிடம் கூடச் சக்கரவர்த்திகள் அதுபற்றிக் கலந்தாலோசிக்கவில்லை.

வல்லவரையர் வந்தவுடன் அறைக்கதவுகளைக் சாத்திவிட்டுக் காவலர்களை வெளியே நிற்குமாறு பணித்தார் சக்கரவர்த்தி. ஓலையைச் சோழ சாம்ராஜ்யத்தின் சாமந்த நாயகரிடம் நீட்டினார்.

படித்துப் பார்த்த வல்லவரையரின் முகம் இரும்புச் சிலையின் முகமென மாறியது.

“நாம் எதிர்பார்த்த செய்திதான்; ஆனால் இவ்வளவு விரைவில் எதிர்பார்க்கவில்லை. அரையன் இராஜராஜன் மிகவும் ராஜ தந்திரத்துடன் நடந்து கொண்டிருக்கிறார்.’’

நீண்ட பெருமூச்சு விட்டார் இராஜேந்திரர். வேதனை கலந்த புன்னகை ஒன்று அவர் இதழ்க் கோணத்தில் நிழலாடியது.

வடக்கு எல்லையில் மேலைச் சளுக்கர்கள் கடந்த சில மாதங்களாகச் செய்து வந்த அட்டூழியங்களைப் பற்றி அதில் எழுதியிருந்தது, ஈழ நாட்டின் தென்பகுதிக்கு மாமன்னர் சென்றிருந்த வேளையில் வடக்கு எல்லையைத் துளைத்துக் கொண்டு அவர்கள் முன்னேறச் செய்த முயற்சிகளை வெளியிட்டிருந்தார் அரையன் இராஜராஜன்.

நாட்டு மக்களின் மனத்தில் பீதியை எழுப்பக் கூடாதென்பதற்காகவும்; ஒரே சமயத்தில் இருமுனைப் போர் வேண்டாமென்பதற்காகவும் அவர் இந்தச் செய்திகளைப் பெரிய வேளாருக்குக்கூடத் தெளிவாக அறிவிக்கவில்லையாம். ஓரளவுக்கு அவருக்கு எச்சரிக்கை மட்டும் செய்திருந்தாராம்.

எல்லையைக் காத்து நின்ற காவற்படை வீரர்களில் சிலர் கொல்லப்பட்டார்களென்றும் இன்னும் சிலர் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்களென்றும் தெரிய வந்தன.

கண்டோர் நடுங்கும் காலனும் பகைவர்களைப் பதற வைக்கும் பலபீமனுமான அரையன் இராஜராஜன், மாமன்னர் ஈழத்துக்குச் சென்றிருந்ததால் தம்முடைய கைகள் கட்டப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டுவிட்டு மேலே எழுதியிருந்தார்.

“நமது படைகளை எல்லையில் பெருக்கியிருப்பதால் இப்போதைக்குப் பகைவர்கள் பதுங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் பதுங்கலையெல்லாம் நாம் நம்புவதற்கில்லை. நம்முடைய வளர்ச்சியில் பொறாமை கொண்டுள்ள அவர்களை அதே பொறாமை உணர்ச்சியால் பாண்டியர்கள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“மக்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. அவர்களுக்கு மக்களை அரைப்பட்டினி போட்டு அடிமைகளாக உழைக்கச் செய்கிறார்கள் அங்கு. அந்த அடிமைகளின் ஆத்திரம் தங்கள் மீதே திரும்பிவிடக் கூடாதென்பதற்காக நமக்கு எதிராகப் போர் வெறியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடல் கடந்த நாடுகளில் நமக்குள்ள செல்வாக்கு அவர்களைப் புழுங்கச் செய்கிறது. நமது பரந்த மனப்பான்மையை அவர்கள் பலவீனமென்று நினைக்கிறார்கள். பகை நாட்டு ஒற்றர்கள் பலர் நமது நாட்டில் நடமாடி வருகிறார்கள் ஒற்றர்களை ஒழிக்க வேண்டாம். பாண்டியர்களை முதலில் அழிக்கவேண்டும், அப்போது தான் மேலைச் சளுக்கர்கள் அடங்குவார்கள்.’’

ஓலையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட சக்கரவர்த்தி “சாமந்த நாயகர் அவர்களே! மாதண்ட நாயகரின் ஓலையைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?’’ என்றார்.

“காலந் தாழ்த்தாது பெரிய வேளாருக்குச் செய்தி அனுப்பியிருந்தால் இதற்குள் சளுக்கநாட்டுக்குள் நமது படைகள் குவிந்திருக்கும். பெரிய வேளார் தாமே தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பார்.’’

“நான்தான் ரகசியமாக இப்போதைக்குப் போர் வேண்டாமென்று அரையன் இராஜராஜனுக்குக் கட்டளை இட்டிருந்தேன். தமது கைகள் கட்டப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டதற்குக் காரணம் அதுதான்.’’

“இனியும் தாமதம் கூடாது சக்கரவர்த்திகளே!’’ என்று பதறிக்கொண்டு ஆசனத்திலிருந்து எழுந்தார் வல்லவரையர். விளக்கொளி படிந்த அவரது நெடிய உருவத்தின் நிழல் பயங்கரமாக அண்டைச் சுவரில் படர்ந்தது.

“தாமதம் கூடாது, அவசரமும் கூடாது. முப்பது லட்சம் வீரர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள். நாமும் அவர்களைவிட மும்மடங்கு வீரர்களைத் திரட்டிவிடலாம். போதிய போர்க்கருவிகள் வேண்டும்; நம்முடைய வெற்றி விழாவின் நோக்கமே அதுதானே?’’

“வெற்றிவிழாவிலேயே போர் முரசு கொட்டிவிட வேண்டியதுதான்!’’

என்றார் வல்லவரையர்.

“ஆமாம். நாம் அமைதியை விரும்பினாலும் உலகம் நம்மை அமைதியாக வாழவிடுவதில்லை. நம்முடைய நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு சிசுவின் இதயத் துடிப்பும் போர்முரசாகப் பிறக்க வேண்டும். இப்போது துடிக்கும் கோடிக்கணக்கான நெஞ்சுகளும் போர் முரசுகளாக மாறினால் தவிர நாம் வாழ வழியில்லை.’’

உறங்கச் சென்றார்கள் இருவரும். மலைபோன்ற மாமன்னர் மகாராணி வீரமாதேவியின் அன்பு அணைப்பில் சிறுகுழந்தைபோல் உறங்கி எழுந்தார். வல்லவரையரும் பெரிய குந்தவையாரும் உறங்கவேயில்லை. வடக்கு எல்லையில் நடந்த அட்டூழியங்களைத் தமது மனைவியாரிடம் கூறிக் குமுறிக் கொண்டிருந்தார் சாமந்த நாயகர்.

இளங்கோவும் அருள்மொழியும் தனித்தனியே கனவுகள் கண்டு இன்புற்றிருந்தனர். இளங்கோவின் கனவுகளில் ஈழத்து இளவரசி நடமாடினாள்.

அருள்மொழியின் கனவில் அன்றைக்குப் பிற்பகலில் சாலையோரம் நடந்த சிறு நிகழ்ச்சி தோன்றியது. ரதத்திலிருந்து ஓடிவந்த இளங்கோ அம்மங்கைத் தேவியின் பரிகாசத்துக்கு ஆளாகிக்கொண்டிருந்தான்! பாவம், அவன் முகம் வெட்கத்தால் வாட்டமுறுகிறதே!

மறுநாள் காலையில் மாமன்னரின் ரதம் பழையாறைக்கு வடக்கே இரண்டு காத தூரத்திலிருந்த சோழபுரம் என்ற படை வீட்டுக் குடியிருப்பை நோக்கி விரைந்தது. வல்லவரையரும் உடன் இருந்தார். எதிரில் திரள் திரளான மக்கள் பழையாறை விழாவைக் காண்பதற்கு ஆவலுடன் வந்து கொண்டிருந்தார்கள்.

சோழபுரம் குடியிருப்பு அரைக் காதச் சதுரத்துக்குப் பரந்து கிடந்தது. பொன்னிவள நாட்டை ஒட்டியிருந்தாலும் பொன்னி நதியின் வளம் அந்த மண்ணுக்கு எட்டவில்லை. கருவேலங்காடுகளும், புஞ்சை வயல்களும், முட்புதர்களும் சூழ்ந்த இடத்தில் இங்குமங்கும் திட்டுத்திட்டாகப் பயிற்சிக்

களங்கள் காட்சியளித்தன.

நஞ்சை விளைநிலங்களைத் தனியே விட்டுவிட்டு, வேண்டுமென்றே அந்த இடத்தில் வீரப் பயிர்களை ஊன்றியிருந்தார் போலும் மாமன்னர்.

ஈழத்துப் போர்க்களத்தில் தங்கள் மக்களைப் பறிகொடுத்தவர்களும், குடும்பத் தலைவர்களைப் பறிகொடுத்தவர்களும், காதலர்களைப் பறி கொடுத்தவர்களுமாகப் பெண்களின் கூட்டம் மாமன்னரைச் சூழ்ந்து கொண்டது. அவர்களுக்குப் பின்னால் உயிரோடு திரும்பியவர்களும்; உயிரைத் திரும்பக் கொடுக்கச் சித்தமாக இருந்தவர்களுமாக ஆண்கள் கூடி நின்றார்கள்.

பெண்கள் தங்கள் துன்பங்களை மறந்து வாழ்த்தொலி எழுப்பியபோது அவர்களது முகமலர்ச்சியைக் கண்டு திடுக்கிட்டார் மாமன்னர். அவர்களுக்காகப் பிறந்த இரண்டு கண்ணீர்த் துளிகள் அவரது நெஞ்சில் உறைந்துவிட்டன.

“என்ன அருமை மக்களே!’’ என்று பேசத் தொடங்கியவர் ஒரு கணம் நா எழாமல் தடுமாறிவிட்டு, “உங்களை… உங்களை… நேரில் விழாவுக்கு அழைப்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். உங்களுக்காகத்தான் விழாவை பழையாறையில் வைத்துக்கொண்டிருக்கிறேன். விழாவின் போது உங்களிடம் சொல்ல வேண்டிய செய்தியும் ஒன்றிருக்கிறது’’ என்று கூறினார்.

தொடரும்

(Visited 1 times, 1 visits today)