வேட்டை………….பத்தி

வேட்டை.1977 ல் ஒருநாள் காலைமை எங்கடை வீட்டு கோலிலை இருந்து படிக்கிறன் எண்டு அப்பாவுக்கு படம் காட்டிக்கொண்டிருந்தன் . எனக்கு அப்பாவிலை செரியான கோபம் . நான் தமிழிலை 85 மாக்ஸ் எடுத்தனான் . அவருக்கு நான் 98 மாக்ஸ் எடுக்கேலையெண்டு தென்னம்பாழையாலை தன்ரை கோபத்தை என்னிலை தீத்து போட்டார். நான்தான் வகுப்பிலை கெட்டிக்காறன்.எல்லாப்பாடத்திலையும் 80க்கு மேலை எடுப்பன் . நல்லாய் விளையாடுவன் . நான்தான் உயரம் பாயிறதிலையும் சரி , குண்டு எறியிறதிலையும் சரி , உதைபந்து அடிக்கிறதிலையும் சரி முதல் ஆள் . இதாலை பெட்டையளிட்டை போட்டி ஆர் என்னோடை கூடப் பழகிறதெண்டு . இந்த குவாலிபிக்கேசன் எல்லாம் என்ரை அப்பரை குளித்திப்படுத்தேலை.என்னை தென்னம்பாழையாலை வகுந்து போட்டார்.

அப்பர் அடிச்ச காயம் எனக்கு செரியான கோபத்தை கிளறி போட்டுது . நான் சாப்பிடாமல் அடம் பிடிச்சன் . அம்மாச்சி வேப்பண்ணை பூசி சமாதானத்துக்கு வந்திது . நான் அம்மாச்சியோடையும் கதைக்கேலை . இண்டைக்கு காலமை எழும்பி தமிழ் புத்தகத்தை துறந்து வைச்சுக்கொண்டு சும்மா படம் காட்டிக்கொண்டிருந்தன் . சந்திரனும் முயலும் பாட்டும் எனக்கு மண்டையிலை ஏறேலை . எங்கடை கறுவல் நாய் காலடியிலை கிடந்து என்னைப் பாத்து கொண்டிருந்திது .

தூரத்திலை நாயள் குலைச்சு கேட்டிது . அதோடை விசில் சத்தங்களும் கேட்டிது . எனக்கு ஒண்டுமாய் விளங்கேலை . நாயள் குலைச்ச சத்தம் வரவர கிட்டீச்சுது என்ரை காலடியியைலை கிடந்த கறுவல் காதை நிமித்தி எழும்பி நிண்டு எதிர்பாட்டு பாட ஆயுத்தப்படுத்தீச்சிது . நான் மெதுவாய் ஒழுங்கையை எட்டிப் பாத்தன் . ஒழுக்கையில ஐஞ்சாறு மண்ணிற வேட்டை நாயள் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு வந்திதுகள் . அவைக்கு பின்னாலை கறுவல் நிறத்திலை கோமணம் கட்டிக்கொண்டு ஒரு ஏழு எட்டு பேர் வந்து கொண்டிருந்தினம் . அவையளுக்கு பின்னாலை வைத்தியும் புண்ணாக்கும் ஓடிக்கொண்டு வந்தாங்கள்.எங்கடை கேற்றடியிலை நிண்டு என்னை பாத்து சொன்னாங்கள் ,

“டேய் பத்து இடியப்பம் வேட்டைக்காறங்கள் வந்திருக்கிறாங்கள் . வாடா பம்பல் பாப்பம் “

நான் ஒருக்கா வீட்டை பாத்துப் போட்டு நானும் அவங்களோடை சேந்து ஓடினன் . எங்களோடை சேந்து சின்னன் பொன்னன் எல்லாம் எங்களுக்குப் பின்னாலை ஓடியந்திதுகள் . வேட்டை காறர் கேணியடிக்கு பக்கத்திலை இருந்த சிறாப்பற்ரை பத்தை காணியிலை நிண்டாங்கள் . சிறப்பற்றை காணிக்குள்ளை நாயுண்ணி பத்தையளும் கொஞ்சம் பெரிய மரங்களும்தான் கிடக்கு . நாங்கள் நாயளுக்கு பின்னாலை நிண்டம் . எங்களுக்கு கிட்ட போக பயமாய் கிடந்திது.அதுகள் இடுப்புக்கு கிட்ட உயரமாய் நிண்டுதுகள்.

நாங்கள் நாயளை பாத்துக்கொண்டு நிக்க , சிறாப்பற்றை நாயுண்ணிபத்தைக்கை ஒரு அசுமாத்தத்தை கண்ட வேட்டைகாறன் தன்ரை பீப்பீ குழலை ஊதி கொண்டு , நாயளை பாத்து “சூய்…………… ” எண்டான் . பத்தைக்குள்ளை ரெண்டு காட்டு முயலுகள் பிச்சுக்கொண்டு ஒட , நாயள் விட்டு கலைச்சுதுகள் . நாங்கள் நாயளைப் பாத்து ஓடு…….. ஓடு………. எண்டு கத்தினம் . வேட்டைக்காறர் பீப்பீயை ஊதிறிதை நிப்பாட்டாமல் ஊதீச்சினம் . ஓடின நாயள் தூரத்திலை போய் காட்டுமுயலை கழுத்தான் குத்தியிலை பிடிச்சு கொண்டு திரும்பி எங்கடை பக்கம் ஓடியந்திதுகள் . முயலுகளின்ரை கழுத்திலை ரத்தம் வந்திது . ஒரு வேட்டைக்காறன் முயலுகளை நாயளின்ரை வாயிலை இருந்து எடுத்து , தன்ரை இடுப்பிலை இருந்த வில்லுக்கத்தியாலை முயலின்ரை தோலை உரிச்சான் . மற்றவன் பக்கத்திலை நிண்ட பனை வடலியிலை பனை ஓலையை வெட்டி தொன்னை செஞ்சு அதிலை முயலுகளை போட்டு கட்டினான் .

பக்கத்திலை நிண்ட இலுப்பை மரத்திலை நிண்டு விளையாடிக்கொண்டு இருந்த அணிலுக்கு அண்டைக்கு பாத்து சனி வக்கிரிச்சு போட்டுது . வைத்தியோடை நிண்ட வேட்டைக்காறன் தன்ரை கையில இருந்த கெற்றம் போலாலிலை கல்லை வைச்சு ஒரு கண்ணை மூடிக்கொண்டு இழுத்து அணிலின்ரை தலைக்கு அடிச்சான் . குறி தப்பேலை அணில் சுறுண்டு விழுந்திது . புண்ணாக்கு அணில் விழுந்ததை வாயை பிளந்து கொண்டு பாத்தான் . அணிலும் பனை ஓலை தொன்னைக்குள்ளை போச்சுது . நாயள் பேந்தும் ஒரு முயலை கலைச்சு கொண்டு ஓடீச்சிதுகள் . இந்தமுறை முயல் நாயளை உச்சிப்போட்டுது . ஆனால் நாயள் முயல் ஒழிச்ச பத்தையை சுத்தி ரவுண்டப் பண்ணீட்டுதுகள் . கடைசியில முயலை ஒரு நாய் பத்தைக்குள்ளை பூந்து கழுத்திலை பிடிச்சு கொண்டு வர , மற்ற நாயளும் ஆரவாரப்பட்டு எல்லாம் ஓடி வந்தீச்சிதுகள் . அந்தமுயலும் பனை ஓலைக்குள்ளை போச்சுது .

வேட்டை காறர் அண்டைக்கு செய்த வேலையாலை எங்கடை மூண்டு கூட்டுக்கும் நல்ல பம்பல். அவை எல்லா இறைச்சி தொன்னையளையும் இடுப்பிலை கட்டி நாயளை கூட்டி கொண்டு திரும்ப ஒழுங்கையாலை வந்தீச்சினம் . வேட்டைக்காறங்களை பாத்த அம்மாச்சிக்கு அண்டங்கிண்டம் எல்லாம் பத்தீச்சிது . அவங்களை தூசணத்தாலை பேசி எனக்கு நல்ல மண்டகப்படி தந்துதான் விட்டீச்சுது மனுசிசி .

1985 ஒருநாள் காலமை நான் பள்ளிகூடம் வெளிக்கிட்டு ஒழுங்கை தண்டி பருத்தித்துறை றோட்டுக்கு வந்தன் . தூரத்திலை ஒரு உறுமல் சத்தம் கேக்கிது . எனக்கு விளங்கீட்டுது வேட்டைகாறங்கள் வாறாங்கள் எண்டு . கவசவாகனத்திலை வந்த வேட்டைக்காறர் என்னோடை வந்த வைத்தி , புண்ணாக்கு , தோப்பிளாண்டி , சுறுக்கன் எல்லாரையும் உடுப்பை கழட்டி பெண்டறோடை றோட்டிலை படுக்க வைச்சுபோட்டாங்கள் . அதுவும் பள்ளிக்கூடம் போக நிண்ட பெட்டையளுக்கு முன்னாலை .நாங்கள் சிறாப்பற்றை நாயுண்ணி பத்தைக்குளால ஓடின காட்டுமுயலுகள் மாதிரி முழுசிக்கொண்டு றோட்டிலை படுத்திருந்தம் .

December 30, 2012

(Visited 1 times, 1 visits today)