பாஸ்”போர்ட்

யாழ்ப்பாணம்

வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே “சமரசங்கள்” என்ற பரம்பரையலகு அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திருந்தார். அப்பா அம்மாவை தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் நடந்த விமானக் குண்டுத்தாக்குதலில் தொலைத்த அவனுக்கு சின்ராசாதான் எல்லாமே. தங்கள் உயிர் வேண்டுமென்று குளறியழுத சனங்களின் உயிரை அந்த துர்க்கையம்மனால் கூட காப்பாற்ற முடியாமல் போனது அன்று காலப்பிறள்வாகவே போய்விட்டது. சின்ராசா தனது கூட்டாளியின் மகன் சொல்லிக்கொடுத்தவரின் பெயரை மனதில் உருப்போட்டுக்கொண்டிருந்தார். சின்ராசா எப்படியும் இன்று பேரனுக்கு பாஸ் எடுத்தேயாக வேண்டும் என்ற முடிவிலேயே இருந்தார். சின்ராசாவின் மகளுக்கு ஒரேயொரு மகனாக அவன் வந்து பிறந்தான். தனது வம்சம் தழைக்க வந்த அவனில் அளவுக்கு மீறி அன்பைச் செலுத்தினார் சின்ராசா. காலவோட்டத்தில் மகளைத்தொலைத்த சின்ராசாவுக்கு அவனை எப்படிப்பட்டாவது வெளிநாட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கு அவர் என்ன விலை கொடுக்கவும் தயாராகவே இருந்தார்.

பிரச்சனைகள் பிரைச்சனைகளாக உருவேறி பொங்கியெழுந்த ஒருநாள், சனங்கள் எல்லோரும் ஓர் குருட்டு நம்பிக்கையில் அருகில் இருந்த தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் குழுமியிருந்தனர். தோட்டத்துக்கு சென்ற சின்ராசா போட்டது போட்டபடியே மகள் குடும்பத்துடன் தஞ்சமடைந்து இருந்தார். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாது மிகவும் குழம்பிப் போயிருந்தார் சின்ராசா. இயக்கத்துக்கும் ஆமிக்கும் சண்டை படுபயங்கரமாக நடந்து கொண்டிருந்தது. சனங்கள் இயக்கத்துடன் பேசவே பயப்பிட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கும் சனத்துக்கும் ஓர் இடைவெளியை பேண பல சமன்பாடுகளையும் தேற்றங்களையும் போட்டிருந்தார்கள். இவைகளை உடைக்க சனங்களுக்கு அப்பொழுது துணிச்சல் இருக்கவில்லை. சனங்கள் அவர்களை ஓர் வேற்றுக்கிரக மனிதர்களைப் போலவே பார்த்துக்கொள்ள வைக்கப்பட்டார்கள். சின்ராசா ஓரிரு நாளில் இந்த பிரச்சனை தீர்ந்து தாங்கள் வீட்டிற்குப் போய்விடலாம் என்றே நினைத்தார். அதையே மகளுக்கும் சொல்லி அவளை தேற்றிக்கொண்டிருந்தார். அவள் மிகவும் பயந்து போயிருந்தாள். தும்பியின் சுற்றலும், போர் விமானங்களின் இரைச்சலும் அவளைக் கிலி கொள்ள வைத்தன. அவளுக்கு கைக்குழந்தையான அவனைப் பார்த்துக்கொள்வதே பெரும்பாடாகப் போய்விட்டது. அவன் சூழ்நிலைகளின் தீவிரம் தெரியாது அப்பா அம்மாவைப் படுத்திக்கொண்டிருந்தான் .சின்ராசா துர்க்கையம்மன் கோவிலுக்கு வந்து இரண்டாம் நாள் காலை கரியநாளாகவே விடிந்தது. திடீரென வானத்தில் தோன்றிய இயந்திரப்பறவைகள் துர்க்கையம்மன் கோவிலை குறிவைத்து குண்டுகளைத் துப்பிவிட அந்த இடமே பிணக்காடாகியது. அவனை றோட்டில் வைத்து பிராக்குக்காட்டிய சின்ராசா காயங்களுடன் உயிர்தப்பினர். கோவில் எங்கும் அழுகுரல் எழுந்தது. சின்ராசாவின் மகளும் கணவனும் கோவிலுக்கு உள்ளே சதைக்குவியல்களில் ஒன்றாகிபோயிருந்தனர்.

மகளின் நினைவுகளில் மூழ்கியிருந்த சின்ராசாவை அலுவலக உதவியாளர்கள் வரிசையில் வந்து நிற்கும்படி சொன்னது நிஜத்துக்குக் கொண்டுவந்தது. சனங்களின் வரிசை பாம்பு போல் நீண்டு நெளிந்து கொண்டிருந்தது .நினைத்ததை நினைத்த நேரத்தில் பெற்றுக்கொண்ட சனங்கள் இப்பொழுது வரிசையில் மணிக்கணக்கில் நிற்கப் பழகிகொண்டார்கள். தனது முறை வந்ததும் வாயிலில் நின்ற எடுபிடிக்கு ஓர் கும்பிடு போட்டார் சின்ராசா. அவன் விறைப்பாக நின்றுகொண்டிருந்தான். சின்ராசசாவும், அவனும் அலுவலகர் முன்னால் நின்று கொண்டார்கள். அலுவலகர் அவனை விட ஓரிரு வயது கூடியவராகவே இருந்தார். அவர் தொண்டையை செருமியவாறே, ” சொல்லுங்கோ…. என்ன விசயமாய் வந்தியள் “? என்று தனது விசாரணையை ஆரம்பித்தார்.” தம்பி இவர் என்ரை பேரப்பெடியன். இவற்றை அப்பா அம்மா குண்டடியிலை செத்துபோச்சினம். இவருக்கு செல்லடியிலை உள்காயங்கள் கனக்க கிடக்கு. கொழும்பிலை தான் இவருக்கு சிகிச்சை குடுக்கவேணும் எண்டு இங்கத்தையான் டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதாலை இவர் கொழும்புக்கு போக பாஸ் வேணும்”. ” இப்பிடி எல்லாரும் ஒவ்வண்டைச் சொல்லிக்கொண்டு போனால் நாங்கள் என்ன செய்யிறது ? எங்களுக்கும் ஆக்கள் வேணுமெல்லோ ? ” என்று சின்ராசாவின் மனநிலை புரியாது அந்த அலுவலகர் பேசத்தொடங்கினார். தன்னை விடப் பிலாக்கொட்டை சைசில் இருக்கும் ஒருவன் அதிகாரம் தந்த போதையில் தனது கோரிக்கையை எடுத்தெறிந்தது பேசியது சின்ராசாவுக்கு கடுப்பாக இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாது உங்களோடை கதைச்சால் பாஸ் எடுக்கலாம் எண்டு உங்கடை மைக்கேல் சொன்னவர். கொஞ்சம் தயவு காட்டுங்கோ என்று சின்ராசா பம்மினார். அவர் மைக்கேலுடன் வோக்கியில் தொடர்பு கொண்டு விட்டு, “ஆர் இவருக்கு பிணை நிக்கிறது ??என்று ஓர் இடைக்கேள்வியை போட்டார் அலுவலகர். நான்தான் பிணை நிக்கிறன் தம்பி. இவர் அவற்றை சித்தப்பாவோடை போறார்.” சரி மைக்கேலின்ரை பேரை சொல்லுறியள்.எல்லாத்தையும் குடுத்துப் போட்டு போங்கோ .பாஸ் உங்கடை வீட்டை வரும்.என்று சின்ராசாவை அலுவலகர் அனுப்பி வைத்தார்.

காலம் பல மணிகளைக் கடந்து இரண்டாவது நாளாக அன்று விடிந்திருத்தது .வீட்டின் பின்பக்கத்தில் இருந்த தோட்டத்தில் களை எடுத்துக்கொண்டிருந்த சின்ராசாவை சைக்கிள் மணியொலி ஒன்று வீட்டு பாடலைப் பக்கம் பார்க்க வைத்தது. படலையடியில் ஓர் பெடியன் நின்றிருந்தான். சின்ராசா களை எடுத்த கையை பக்கத்தில் இருந்த தண்ணித் தொட்டியில் கழுவி விட்டு “ஆர் தம்பி ?” என்றவாறே பாடலைப் பக்கம் வந்தார். வந்தவன் முகம் விறைப்பாக இருந்ததை அவதானித்த சின்ராசா, பெடி அவையளாகத்தான் இருக்க வேண்டும் என்று தனக்குள் எண்ணிக்கொண்டார். என்றாலும் தனது எண்ணத்தை வெளிக்காட்டாது,”என்ன தம்பி ஆரைப்பாக்க வந்தியள் ?” என்றார். வந்தவன், “சின்ராசா எண்டவர் நீங்களோ?”என்றான்.” ஓம் தம்பி. உள்ளுக்கை வாங்கோ” என்றார் சின்ராசா. வந்தவனோ சைக்கிளை விட்டு இறங்காமல், ” நான் சாவகச்சேரியிலை இருந்து வாறன். இதை உங்களிட்டை குடுத்து விடச் சொன்னவை.” என்று விட்டுப் பதிலுக்கு காத்திருக்காமல் சைக்கிளை மிதிக்கத்தொடங்கினான். வந்தவன் தந்த என்வலப்பை படப்படப்புடன் பிரித்தார் சின்ராசா. அதில் “உங்கள் பேரனுக்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது இந்தப் பயணிக்கு நீங்கள் பிணை நிற்பதால் பின்வரும் நிபந்தனைகளை அறிவுறுத்துகின்றோம்.இந்தப் பாஸ் பயணி ஒரு முறை கொழும்புக்கு சென்று திரும்பி வருவதற்கு மட்டுமே எம்மால் வழங்கப்படுகின்றது. பயணி மீண்டும் வரத்தவறும் பட்சத்தில் 20000 ரூபாக்களும், 3 பவுண்களும் தண்டமாக எம்மால் அறவிடப்படும் என்பதனை உங்களுக்கு அறியத் தருகின்றோம். அரசியல் பிரிவு சாவகச்சேரி.” என்று எழுதப்பட்டிருந்தது பாஸை மெதுவாக வருடிய சின்ராசாவின் இதழ்களுக்கிடையே ஓர் குறுநகை எட்டிப்பார்த்தது. அந்தக்குறுநகை,” என்ரை பேரனுக்கு எவ்வளவோ செய்யப்போறன். இவையின்ரை இருபதினாயிரமும் மூண்டு பவுணும் எனக்கு ஜுஜுப்பி ” என்பதாக இருந்தது.

பாஸ் கிடைத்த மறுநாளே தனது வீட்டையும் அதனுடன் இருந்த பத்துப் பரப்பு தோட்டக்காணியையும் ஈடு வைத்து 5 லட்சம் ரூபாவை ஊரில் பசையான கதிரேசப்பிள்ளையிடம் பிரட்டியிருந்தார் சின்ராசா .பேரன் வெளிநாட்டுக்கு போனால் இந்த வீட்டையும் தோட்டக்காணியையும் மீட்டுவிடலாம் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் சின்ராசா .பேரனை அழுத கண்களுடன் தனது ஒன்ற விட்ட தம்பியாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்தார் சின்ராசா. அவனையும் சித்தப்பாவையும் ஏற்றிக்கொண்டு காங்கேசன்துறைக்கு சென்று கொண்டிருந்தது ஓட்டோ .அவனும் சித்தப்பாவும் ஒவ்வரு சென்றியிலும் ஏறி இறங்கவேண்டியதாய் இருந்தது .பலாலி றோட்டில் ஓட்டோ சென்று கொண்டிருந்த பொழுது சென்றியில் இருந்தவன் ஓட்டோவை மறித்தான். பதற்ரத்துடன் இறங்கியவர்களை அக்கு வேறு ஆணி வேறாக பரிசோதனை செய்து விட்டு அவர்களுடைய பாஸை மேய்ந்து கொண்டிருந்தான் சென்றியில் நின்றவன். பாஸில் ஓரிடத்தில் அவனது கண்கள் நிலை குத்தி நின்றன.”அண்ணை தம்பியை அங்காலை போக விடேலாது. நீங்கள் தம்பியை இங்கை விட்டுட்டு போகலாம்” என்றான்.” உங்கடை ஆக்கள் தானே சாவகச்சேரியிலை இதை தந்தவை ??பேந்தென்ன கதைக்கிறியள்??” என்று அவனது சித்தப்பா எகிறிப்பாய்ந்தார்.”அதெல்லாம் உங்களுக்கு சொல்லதேவையில்லை. அப்பன் ஒட்டோவை எடு” என்று ஓட்டோவை ஒட்டி வந்தவனுக்கு கட்டளையிட்டான் சென்றியில் நின்றவன். அவனது சித்தப்பாவை சுமந்து கொண்டு மீண்டும் சின்ராசா வீட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது ஓட்டோ. தமையன் சின்ராசா தன்னிடம் நம்பி ஒப்படைத்த காரியம் முதலிலேயே பிழைத்ததால் சித்தப்பாவின் முகத்தில் பதற்ரத்தின் ரேகைகள் அங்காங்கே பரவியிருந்தன. வீடிற்கு போய் சின்ராசாவையும் ஏற்றிக்கொண்டு சாகவச்சேரிக்குப் பறந்தார் சித்தப்பா.

சாகவச்சேரி பாஸ் வழங்கும் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தத்து. அன்று சனங்கள் குறைவாகவே இருந்தார்கள். வேகமாக வந்த ஓட்டோ அலுவலக வாசலில் நின்றது. ஓட்டமும் நடையுமாக உள்ளே சென்ற சின்ராசாவையும் சித்தப்பாவையும் வாசலில் நின்றவன் மறித்தான். அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த சித்தப்பா உள்ளே இருந்த அலுவகரிடம், “தம்பி நிங்கள் தானே இந்த பாஸை தந்தியள் ? உங்களை விட இங்கை பெரிய ஆக்கள் இருக்கினமோ?? அங்கை பலாலியிலை நிண்ட உங்கடை ஒருத்தன் தம்பியை விடேலாது எண்டு தம்பியையும் பிடிச்சு வைச்சுட்டான். என்ன பகிடி விடுறியளோ ??” என்று எகிறிப் பாய்ந்தார். எல்லாவற்றையும் நிதானமாய் கேட்ட அலுவலகர் “அண்ணை நான்தான் இங்கை பொறுப்பு. அண்டைக்கு இருந்தவர் இதுகளிளிலை அனுபவம் இல்லாததாலை உங்கடை அலுவலை சரியாய் கவனிக்கேலை. உங்கடை தம்பிக்கு வயசு குறைவு. அதோடை கொழும்புக்கு வேறை போறார். அதாலை விட்டிருக்க மாட்டாங்கள். ” இஞ்சை…….. உந்த புலுடா கதையள் எல்லாம் எங்களுக்கு வேண்டாம். உங்கடை முத்திரையோடை பாஸ் தந்தனியள். நானும் தம்பியும் இப்ப கொழும்பு போகவேணும். இல்லாட்டில் என்ன செய்யவேணும் எண்டு எனக்கு தெரியும்”. என்று சித்தப்பா மேலும் எகிறினார். “நீங்கள் ஆராலை இங்கை வந்தியள் ?” ஏன் அதுவும் மறந்து போச்சோ ? மைக்கேலாலை “. அண்ணை கோபப்படாமல் நில்லுங்கோ எதுக்கும் அவனோடை கதைக்கிறன்” என்றவாறே வோக்கியுடன் உள்ளே சென்றார் அலுவலகர். சிறிது நேரத்தின் பின்னர் வந்த அலுவலகர், “அண்ணை மைக்கலோடை கதைச்சனான். பிரச்சனை கொஞ்சம் முத்தலாய் கிடக்கு. உங்களுக்கு தெரியும் தானே .சின்ன ஆக்களை எங்கடை தலைமை வெளியிலை போகவிடாது .அதுவும் கொழும்புக்கு எண்டு சொல்லுறியள். அதாலை இயக்க நிதிக்கு ஒரு 30000 வெட்டுங்கோ. நான் சென்றிக்கு சொல்லுறன்”. மறுபேச்சில்லாமல் காசை எடுத்து நீட்டிய சின்ராசாவை எதுவும் புரியாமல் சித்தப்பா பார்த்தார். காசை வாங்கிய அலுவலகர் சென்றியுடன் தொடர்பு கொண்டார்.” அண்ணை இப்ப சந்தோசம் தானே?? நீங்கள் இப்ப போங்கோ. அங்கை தம்பியை விடுவினம்”. எந்தக்கதையும் இல்லாமல் சின்ராசாவும் சித்தப்பாவும் ஓட்டோவுக்கு ஓடினார்கள்.*

கோப்பாய் கைதடி வீதியால் வந்த ஓட்டோ, உரும்பிராய் சந்தியில் திரும்பி பலாலி றோட்டில் ஓடத்தொடங்கிய பொழுது ஓட்டோவில் எதுவும் கதைக்காது வந்த சின்ராசாவை, ” இப்ப என்னத்துக்கு அவங்களுக்கு காசு குடுத்தனி??” என்று சித்தப்பா சின்ராசாவின் மௌனத்தைக் கலைத்தார். “அட விசரா .இவங்கள் பாஸை தாற மாதிரி தந்து போட்டு,காசுக்காகத்தான் அவனை பிடிச்சவங்கள். இதாலை டபிள் லாபம் அவங்களுக்கு. ஒண்டு நாங்கள் நீதியாய் தான் நடக்கிறம் எண்டு சனத்திட்டை நல்ல பேர் எடுக்கிறது. ரெண்டாவது இயக்கத்துக்கு காசு சேக்கிறது. இப்ப எங்களுக்கு படம் காட்டுறாங்கள். எங்களுக்கு அலுவல் நடக்க வேணும். வெளியிலை இயக்கத்துக்கு இருக்கிற பேரை இவங்கள்தரவளிதான் கெடுக்கிறாங்கள்” என்றார் சின்ராசா. மாலை வேளையில் பலாலி றோட்டில் இருந்த சென்றியை அண்மித்த ஓட்டோ பவ்வியமாக நின்றது. றோட்டில் வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தன. ஒருவன் பாஸ்களை சரிபார்த்து வாகனங்களை தொடர அனுமதித்துக் கொண்டிருந்தான். சென்றியின் உள்ளே ஒருவன் ஆயுதத்துடன் காவல் காத்துக்கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த சித்தப்பா ” தம்பி சாவகச்சேரியிலை இருந்து வாறன் .அங்கை இருந்து உங்களுக்கு செய்தி அனுப்பினவையோ ??அது சரி……… நீங்கள் பிடிச்சு வைச்சிருந்த தம்பி எங்கை??” என்று கேள்விகளை அடுக்கினார். ஓமண்ணை மைக்கேலும் செய்தி அனுப்பினவர். உங்கடை தம்பி பின்னாலை பங்கர் வெட்டுறார். பொறுங்கோ கூப்பிடுறன்” என்றவாறே அவர்களை அருகே இருந்த பனைமரக் குற்றியில் இருக்கப் பண்ணினான் காவலுக்கு நின்றவன்.” என்னது பங்கர் வெட்டுறாரோ ?? ஏன் அவர் என்ன பிழை விட்டவர் ??”என்று சூடாகக் கேட்டார் சித்தப்பா. “அவர் ஒரு பிழையும் விடேலை எல்லாரும் நாட்டுக்கு சேவை செய்ய வேணும். தனிய நாங்கள் துவக்கு தூக்கேலாது”. என்று விறைப்பாகவும் காரமுமாக பதில் வந்தது காவலுக்கு இருந்தவனிடமிருந்து. “வாயை குடுத்து காரியத்தை கெடுத்து போடாதை” என்று சின்ராசா சித்தப்பாவின் காதைக் கடித்தார்.

செம்பாட்டு மண் புழுதியில் தோய்ந்து அவர்களிடம் வந்த பேரனைப் பார்த்த சின்ராசாவின் கண்களில் அவரை அறியாது நீர் முட்டியது .அவர் அதை வெளிக்காட்டாது சென்றியின் முன்னே நின்றிருந்த ஓட்டோவில் போய் ஏறினார். அவர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் காங்கேசந்துறையை நோக்கி ஓட்டோ விரைந்தது. காங்கேசந்துறை அண்மித்தபொழுது ஆமி இவர்களை பொறுப்பெடுத்துக்கொண்டதால் சின்ராசா இவர்களை விட்டுப் பிரிய வேண்டி வந்தது. என்றுமே அழாத அவன் விக்கி விக்கி அழத்தொடங்கினான். சின்ராசாவுக்கு அவனைச் சமாதானப்படுத்தப் போதும் போதுமென்றாகிவிட்டது. பேரனைப் பிரிந்து அவர்கள் வந்த ஓட்டோவிலேயே வீடு திரும்பினார் சின்ராசா. பேரனைப்பற்றிய சிந்தனைகளால் அவரது முகம் இறுகிக்காணப்பட்டது. வீட்டிற்கு வந்த சின்ராசாவுக்கு சாப்பாடு பிடிக்கவில்லை.வரும் பொழுது மலையாளத்தான் கடையில் தோசையும் சம்பலும் பார்சல் கட்டிகே கொண்டு வந்திருந்தார். அவருக்கு அன்றைய இரவு சிவராத்திரியாகத்தான் இருந்தது. பேரன் இல்லாத அந்த வீடு வெறிச்சோடிக் கிடந்தது. அவரின் கண்கள் மகளின் படத்தில் நிலை குத்தி நின்றன. ஏனோ அன்று பார்த்து மகளின் நினைவுகள் அவரைப் பிழிந்து கொண்டிருந்தன. அவள் அவரை விட்டு போகின்ற வயதா அது?? எல்லாமே மூடி முழிப்பதற்குள் நடந்து முடிந்துவிட்டது. அவளும் மருமகனும் இருந்திருந்தால் அவனை இப்படி அனுப்பியிருப்பாரா என்ன?? எண்ணங்கள் எண்ணியெண்ணி ஒருகட்டத்தில் தானாகவே நித்திரை அவருக்கு வசப்பட்டது.

அன்றைய இரவு முழுவதும் ஓர் மண்டபத்தில் வைத்துவிட்டு மறுநாள் அதிகாலையில் தங்கள் கெடுபிடிகளை முடித்துக்கொண்டு துறைமுகத்துக்கு போகத்தயாராக எல்லோரையும் ஓர் மண்டபத்தில் விட்டிருந்தனர் இராணுவத்தினர். புலியின் வாசமே இருக்கக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக அவர்கள் இருந்தனர். இதனால் இளையோர் மீது அதிக கரிசனை செலுத்தினார்கள். வழமையாக தாங்கள் இருக்கின்ற இடத்தை சந்தைக்கடையாக வைத்திருக்கின்ற சனங்கள் இராணுவத்தின் முன்னால் அமைதி காத்தனர். எல்லோர் முகத்திலும் பயத்தின் ரேகைகளே படிந்திருந்தாலும் மனதின் உள்ளே பல்வேறு சிந்தனைகள் தறிகெட்டு ஓடிக்கொண்டுதான் இருந்தன. இராணுவ வாகனம் ஒன்று அவர்களை துறைமுகத்திற்கு கொண்டுசெல்ல வந்து மண்டபத்தின் முன்னால் வந்து நின்றது. எல்லோரும் நல்ல பிள்ளைகளாக வரிசையில் நின்று ஏறிக்கொண்டனர். துறைமுகத்து வாசலில் மீண்டும் இராணுவத்தினர் எல்லோரையும் பிரித்து மேய்ந்தனர்.

காங்கேசன்துறை துறைமுகம் ஓரளவுதான் வளர்ந்து இருந்தது. வடக்கில் இருந்த ஆமிக்கு பிரதான வழங்குதுறையாகவும் இதுதான் இருந்தது. தூரத்தே ஆழ் கடலில், கரையில் இருந்தவர்களை ஏற்றிச் செல்ல தயாராகத் தனியார் கப்பலொன்று நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்ததது . அதற்குப் பாதுகாப்பு கொடுக்கவென செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த ஓர் கப்பல் தயாராக நின்றிருந்தது. அதிகாலையில் மூசிப்பெய்த கூதல் காத்து அங்கிருந்தவர்களை சிலிர்க்கச் செய்தது. அவனுக்கு கடற்கரையும் தூரத்தே நின்றிருந்த கப்பலும் புதினம் பார்க்கும் ஆவலை அதிகரித்தன. நேற்று இருந்த மனநிலையை இன்று அவன் ஓரளவு தேறியிருந்தான். ஆனாலும் பாட்டா சின்ராசாவின் நினைவுகள் அவனை விட்டு முற்றுமுழுதாக விலகவில்லை.முகிலிடையே ஓடிப்பிடித்து விளையாடும் முழுநிலவைப்போல இடையிடையே எட்டிப்பார்க்கத்தான் செய்தன. எல்லோரையும் சிறு வள்ளங்களில் ஏற்றி கப்பலுக்கு கொண்டு சென்றனர் இராணுவத்தினர். எல்லோரையும் ஏற்றிக்கொண்டு மத்தியானம் அளவில் செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த கப்பல் பாதுகாப்புகொடுக்க அந்தத் தனியார் கப்பல் பைலட் வள்ளத்தின் துணை கொண்டு காங்கேசன்துறை துறைமுகத்தைவிட்டு நகரத்தொடங்கியது.

சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கும் காங்கேசன்துறையை அவன் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். உரமாக வீசிய காற்றினால் கடல் அலைகள் கப்பலுக்குள்ளும் வந்து விழுந்தன. அலையின் உக்கிரமான தாக்குதலால் கப்பல் மேலும் கீழுமாக தாண்டு எழும்பியது. அப்பொழுது கப்பல் பயணத்துக்குப் பழக்கமில்லாதவர்கள் சத்தி எடுக்கத்தொடங்கினார்கள். அதில் அவனும் ஒருவனாக இருந்தான். கடல் அலைகளைப் பார்த்து அவன் மிகவும் பயந்து போயிருந்தான். அவன் அதிகரித்த பயத்தினால் சித்தப்பாவுடன் ஒட்டிக்கொண்டு இருந்தான். ஆழ்கடலுக்குள் சென்ற கப்பல் ஒரு சீராக தனது ஓட்டத்தை திரிகோணமலையை நோக்கித் தொடங்கியது.காலையில் இருந்து ஒழுங்கான சாப்பாடுகள் இல்லாததாலும் தொடர் சத்திகளாலும் எல்லோருமே மிகவும் களைத்துப்போயிருந்தார்கள். அவனின் நிலையோ மோசமாக இருந்தது. மறுநாள் அதிகாலையில் அந்தக்கப்பல் திரிகோணமலை துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியது. சனங்கள் எல்லோரும் சோர்ந்து போயிருந்தார்கள். அவன் திரிகோணமலை ஜெட்டியையும் தூரத்தே தெரிந்த பிறீமா மா ஆலையையும் வியப்புடன் பார்த்தான். அவனுக்கு யாழ்ப்பாணத்தை விட்டு இதுவே முதல் பயணமாகவும், ஒன்பதாவது திசை நோக்கிய பயணமாகவும் இருந்தது. மீண்டும் இராணுவத்தினர் எல்லோரையும் வரிசைப்படுத்தி பாதுக்காப்பை உறுதிப்படுத்தினர். அவன் பசியினால் சோர்ந்து விழுந்தான். அவனது ஒன்பதாவது திசைநோக்கிய பயணத்தில் அவன் பசியை வெல்ல வேண்டிய நேரத்தில் பசி அவனை வென்றுகொண்டிருந்தது. இராணுவத்தினரின் கெடுபிடிகள் முடிவதற்கு மத்தியானத்துக்கு மேலாகிவிட்டது. சித்தப்பாவுக்கு தெரிந்த வீடொன்றில் தங்கி குளித்து சாப்பிட்டு விட்டு அன்று இரவே அவனும் சித்தப்பாவும் கொழும்புக்கு புகையிரதம் எடுத்தனர். வாழ்க்கையில் புகையிரத்ததையே பார்த்திராத அவனுக்கு அது பெரிய பூதம் போல் காணப்பட்டது. அவன் அதனை தொட்டுத் தொட்டுப் பார்த்தான். அதனது தடக் தடக் ஒலி அவனுக்கு விநோதமாக இருந்தது. ஜன்னலுக்கு வெளியே பூரணை நிலவு வானத்தில் ஜொலிப்பாக ஒளிர்ந்தது. அதன் ஒளியில் வெளியே காட்சிகள் மங்கலாக அவனுக்கு தெரிந்தன. சிறிது நேரத்தில் அவனுக்கு இயற்கையாக ஏற்பட்ட உடல் களைப்பினால் நித்திரை வசப்பட்டது.

00000000000000000000000000000000

கொழும்பு

அந்த அதிகாலை வேளையிலும் கோட்டே புகையிரதநிலையம் சனங்களின் வாய்ப் பேச்சுகளால் அமைதி இழந்து காணப்பட்டது. அமைதிக்கும் கோட்டே புகையிரத நிலையத்துக்கும் ஜென்மத்தில் சனி போல இருந்தது. தேநீர் வடை கூச்சல்களுக்கிடையில் திரிகோணமலையில் இருந்து வரும் புகையிரதம் எந்த மேடையில் வந்து நிற்கப்போகின்றது என்பதை பெண்ணொருத்தி ஒலிபெருக்கியில் அறிவித்துக்கொண்டிருந்தாள். ஏறத்தாளப் பத்து நிமிடங்களை விழுங்கி விட்டு அந்தப் புகையிரதம் மேடையில் ஆடியசைந்து வந்து நின்றது. வந்து நின்ற புகையிரதத்தில் நெல்லிக்காய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது போல சனங்கள் பிரிந்தார்கள். அவனும் சித்தப்பாவும் அந்த நெரிசலினூடாக நகர்ந்தார்கள். அவர்களுடைய இலக்கு தமிழர் செறிந்து வாழும் கொலனியான வெள்ளவத்தையாகவே இருந்தது. தொடர் பயணங்களினால் ஏற்பட்ட உடல், மனக் களைப்பும் அவனுக்கு கொழும்பு நகரின் அழகில் லயிக்க மனம் வரவில்லை. அவனுக்கு இப்பொழுது உள்ள பிரச்சனை ஓரிடத்தில் போய் நன்றாக குளித்து வயிறார சாப்பிடவேண்டுமேன்பதே. சித்தப்பா அவனைச் சந்தோசப்படுத்த தனது கொழும்பு அனுபவங்களை சிறிது கூட்டியும் குறைத்தும் சொல்லிக்கொண்டு வந்தார். அவன் சுவாரசியமின்றி கேட்டுக்கொண்டு வந்தான். சிறிது நேரப்பயணத்தின் பின்னர் அவர்களை சுமந்து வந்த ஓட்டோ வெள்ளவத்தையில் ஒரு லொட்ஜ் முன்பே அவர்களை இறக்கிவிட்டு சென்றது.

அந்த லொட்ஜிலேயே அவனது அடுத்த பயணத்தைத் தீர்மானிக்கும் ஏஜென்சி ரூம் பதிவு செய்திருந்தான். அங்கே அள்ளுகொள்ளையாக சனங்கள் வெளிநாட்டுக்குப் போக வந்திருந்தார்கள். அவர்கள் கனவுகள் எப்பொழுதும் வெளிநாட்டைப் பற்றியதாகவே இருந்தது. அதனால் அவர்களது பேச்சும் நடை உடை பாவனைகளும் வெளிநாட்டில் இருப்பவர்கள் போலவே இருந்தது. அங்கே இருந்த சனங்களின் இந்தக்கோலங்கள் அவன் வந்த முதல் இரண்டு நாளும் அவனைப் பாடாய்ப் படுத்தின. இதற்கிடையில் அங்கேயிருந்த இளம் பெட்டைகள் அவனது நிலை தெரியாது அவனுக்கு நூல் விட்டுக்கொண்டும் இருந்தார்கள். அவனது சித்தப்பா பிரான்ஸில் இருக்கும் அவனது அப்பாவின் தம்பியுடன் பயண ஒழுங்குகளையும் காசு அலுவல்களையும் பற்றி தொலைபேசிக்கொண்டிருந்தார். அவனது அப்பாவின் தம்பிதான் அவனுக்கு பிரான்ஸில் வழிகாட்டவிருக்கும் மீட்பர். காலம் நான்கு நாட்களை விழுங்கிய நிலையில் அவர்களுக்கு அறை எடுத்துக்குடுத்திருந்த ஏஜென்சி வந்திருந்தான். அங்கிருந்த சனங்கள் எல்லோரும் அந்த ஏஜென்சியை தங்கள் வாழ்வை மாற்றியமைக்க வந்த மீட்பராகவே பார்த்தார்கள். எல்லோரையும் சந்தித்து விட்டு ஏஜென்சி சித்தப்பாவையும் அவனையும் சந்தித்தபொழுது அதிகமாகவே கதைத்தான். ஏனெனில் அவனது கதைகளே அவனுக்கு மூலதனம். இந்த மீட்பர்கள் எப்பொழுதுமே தங்கள் கதைகளால் சனங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை பெற்றவர்கள். ஆயிரம் பாதையில் ஒருபாதை சரியாகும் என்ற உண்மையை, ஆயிரம் பாதையும் சனங்களுக்கே என்று நிறுவுவதில் வல்லவர்கள். இந்த நிறுவல்களில் நம்பிய சனங்கள் ஒருசிலர் தங்கள் வாழ்கையை தொலைத்த சம்பவங்களும் உண்டு. மறுநாள் அவர்களை சந்திப்பதாக சொன்ன ஏஜென்சிக்காரன் சொல்லியபடியே மறுநாள் அவர்களைச் சந்தித்தான் அவனை சிங்கபூரில் இன்னுமொரு ஏஜென்சி பொறுப்பெடுப்பதாகவும் இங்கு முதல் அரைவாசிக்காசு தரவேண்டும் என்றும் பிரான்ஸில் அவன் இறங்கியவுடன் மிகுதி காசு தரப்பட வேண்டும் என்றும் எஜென்சிக்கும் சித்தப்பாவுக்குமிடையில் பேச்சாக இருந்தது.

அவனது கைகளில் அவன் சிங்கப்பூர் செல்லவேண்டிய பயணச்சீட்டும் இலங்கை பாஸ்போர்ட்டும் இருந்தன. சாவகச்சேரியை போல இல்லாமல், எதுவித பிரச்சனையும் இல்லாமல் பாஸ்”போர்ட்” கிடைத்தது அவனுக்கு பெரிய சந்தோசமாக இருந்தது. அந்தப் பாஸ்போர்ட்டில் ” இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகிய நான், இந்தப் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர் தங்குதடையின்றி பயணம் செய்ய உதவுமாறும், அவருடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் இத்துடன் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கின்றேன் ” என்று அரச இலச்சினையுடன் இருந்தது . அவனது முதல் பாஸ் பலர் கை பட்டு கிழிந்து நூலாகி இருந்தது .அதைப்பார்கவே அவனுக்கு அருவருப்பாக இருந்தது .ஆனாலும் அந்தப் பாஸ் இல்லாவிட்டால் அவனுக்கு இந்தப்பாஸ்போர்ட் கிடைத்திருக்காது. மறுநாள் அவன் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நின்றிருந்தான். அவன் விமானநிலையம் வரும்வரையில் பல பாதுகாப்புத்தடைகளைத் தாண்டியே வரவேண்டியிருந்தது. சித்தப்பா அவனுடன் துணைக்கு வந்தாலும், ஆமியை மீண்டும் கண்டத்தில் அவன் மிகவும் பயந்து போயிருந்தான். ஆமி அவனது மனதில் நீங்காத ஓர் வில்லனாகவே தெரிந்தான். ஏஜென்சி சொல்லிக்கொடுத்த கௌண்டரில் போய் அவன் தனது பாஸ்போர்ட்டைக் கொடுக்க, அதில் இருந்தவன் எதுவித கேள்வியும் இல்லாது பாஸ்போர்ட்டில் ஒங்கி ஓர் குத்துக் குத்தினான். அவனைச்சுமந்து கொண்டு எயார்லங்கா விமானம் சிங்கப்பூர் நோக்கி வானத்தில் எம்பியது. அவன் புறப்பட்டதை சின்ராசாவுக்கு அறிவிக்க சித்தப்பா தொலைபேசிப்பக்கம் விரைந்தார்.

0000000000000000000000000000

சிங்கப்பூர்


விமானப் பயணம் அவனுக்கு முதல் தரமாகவும் புதுமையாகவும் இருந்தது. தான் அந்தரத்தில் பறப்பதை நினைத்து பயத்தில் அவனது அடிவயிறு சில்லிட்டது. அவனது சிந்தனைகள் எல்லாம் சிங்கப்பூர் எப்படியிருக்கும் என்ற கனவுகளிலேயே லயித்து இருந்தது. ஒருசில மணித்துளிகளை விழுங்கிய அந்த விமானம் தரையில் கால்பதிக்க ஆயுத்தமாக வினோத ஒலிகளை ஏற்படுத்தியது. அவன் ஜன்னலினூடாக வெளியே பார்த்தான். கடலின் நடுவே சிறிய குட்டித்தீவாக சிங்கப்பூர் தெரிந்தது. அந்தத்தீவு முழுவதும் நீண்ட நெடிய கட்டிடங்கள் அவனுக்கு வடிவாகவே தெரிந்தன. அவன் பிரமிப்புடன் விமானம் தரையில் தொடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். எயார் லங்கா விமானம் ஷாங்கி விமானநிலயத்தின் ஓட்டுபாதையில் வேகமாகத்தன் கால்களை இறக்கிப் பின் மெதுவாக வந்து நின்றது. அவன் படபடக்கும் நெஞ்சுடன் விமானத்தை விட்டு இறங்கினான். ஷாங்கி விமானநிலயம் கொழும்பு விமான நிலையத்தை விடப்பெரியதாக இருந்தது. அதில் அவன் வழிதவறிய செம்மறி ஆட்டுக்குட்டியைப்போல நின்றிருந்தான். அவனைக்கூட்டிப் போக யாராவது வந்திருக்கின்றார்களா என்று அவன் கண்கள் துளாவின. தூரத்தே ஒருவர் இவனைப் பார்த்து கையசைப்பது அவனுக்குத் தெரிந்தது. அவன் அவரை நோக்கி நடக்கத்தொடங்கினான். அவர் தன்னை அறிமுகப்படுத்தியவாறே அவனது கைப்பையை வாங்கிக்கொண்டார். இந்த ஏஜென்சி அவனுடன் அதிகம் கதைக்காதவராகவே இருந்தார். அவர்கள் இருவரும் ரக்சி மூலம் சிறங்கூன் பகுதியை வந்தடைந்தார்கள் .அவனுக்கு ஓர் தங்குவிடுதியில் அறை போட்டிருந்தார் ஏஜென்சி. அந்த அறை சிறியதாகவும் சுத்தமாகவும் இருந்தது. தேவையில்லாமல் வெளியில் போகக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியிருந்தார் ஏஜென்சி. அவனுக்கு சிறங்கூன் பகுதி ஓர் சிறிய வெள்ளவத்தையாகவே தெரிந்தது. தனது வாழ்கையில் பாத்திராத சீனர்களையும் மலேயாக்காரர்களையும் அவன் விநோதமாகப் பார்த்தான். அவர்களது சிறிய பூனைக்கண்கள் அவனுக்குப் புதினமாக இருந்தது. அவன் சிங்கப்பூர் வந்து இரண்டு நாட்களுக்கு மேலாகி விட்டன. சாப்பாடு எல்லாம் அருகில் இருந்த ஓர் மலேயா காறனின் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டான். அவசியம் இல்லாமல் அவன் வெளியே போக விரும்பவில்லை. தன்னால் தனது பயணத்துக்கு எதுவித கெடுதலும் வந்துவிடக்கூடாதே என்பதில் கவனமாக இருந்தான். ஆனால் ஊரில் ஆட்களுடன் கலகலப்பாக இருந்த அவனக்கு தனியே எதுவும் செய்யாமல் இருப்பது கொடுமையாக இருந்தது.

அவன் இங்கு வந்து ஒரு கிழமைக்கும் மேலாகி விட்டது. ஒருமுறை பிரான்ஸில் இருக்கும் அவனது சித்தப்பா தொலைபேசினார். அவர்தான் அவனது மீட்பர் என்பதால் அவன் மரியாதையாக கதைக்க வேண்டியிருந்தது. நேராக பிரான்சுக்கு வரமுடியாது என்றும், அவனை ஜெர்மனிக்கு வரும்படியும் தான் ஆட்களை வைத்து அங்கிருந்து காரில் பிரான்சுக்கு கூப்பிடுவதகாவும் சொன்னார். அவன் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுகொண்டிருந்தான். இப்பொழுது அவனுக்கு தனது நேரத்தைப் போக்காட்டுவது பெரும் பிரச்சனையாக இருந்தது. ஒரேயொரு முறை அவனை சந்தித்த எஜென்சிக்காக தவம் கிடக்க ஆரம்பித்தான். ஒரு நாள் காலையில் அவனைச் சந்திக்க ஏஜென்சி வந்திருந்தார். அவனுடன் கதைத்து விட்டு, “தம்பி இண்டைக்கு இரவு உம்மை அனுப்பிறன். ரெடியாய் இரும். இதிலை உம்மடை பாஸ்போர்ட் ரிக்கெற் எல்லாம் கிடக்கு. இந்தமுறை நீர் மொறிஷியஸ் நாட்டுக்காறனாய் போகப்போறீர். உம்மடை படம் எல்லாம் மாத்தி வலு கிளீனாய் செய்திருக்கிறன். ரூட் பிழைக்காது .ஏதாவது ஐமிச்சம் இருந்தால் கேளும்.” என்றார் . அவன் தயக்கத்துடன், ஏனண்ணை நான் வேறை நாட்டு பாஸ்போர்ட்டிலை போகவேணும் ?? என்ரை சொந்த பாஸ்போர்ட் கிடக்குதானே ?? இதிலை கிடக்கிற பேர் வாயிலை வருகுதில்லை.” என்றான். “அப்பன் இங்கை நான் எஜென்சியோ இல்லை நீரோ ?? இலங்கை பாஸ்போர்ட்டிலை ஒரு இடத்துக்கும் போகேலாது. அதோடை நீர் செய்யப்போறது கள்ளவேலை. இண்டையிலை இருந்து நீர் “அப்துல் ஹமீட் புட்டான்” எண்ட மொறிஷியன். பாஸ்போர்ட்டிலை இருக்கிறதை எல்லாம் பாடமாக்கி வையும். இந்த ரூட் ஜெர்மனிக்கு போகுது. அங்கை போன உடனை நேரை போய் ரொய்லட்டுக்குள்ளை போய் பாஸ்போர்ட்டை கிழிச்சு போட்டு ரொய்லட் தண்ணியை அமத்தும். உம்மடை பாஸ்போர்ட் தண்ணியோடை காணாமல் போகும் .பேந்து இமிக்கிறேசனிலை அவங்கள் கேக்கிற கேள்வியளுக்கு ஒண்டும் தெரியாத அப்பாவி நீர் மாதிரி நடிக்கவேணும். அவங்கள் உம்மை அகதியாய் பதிஞ்சு ஜெர்மனிக்கை விடுவாங்கள். சரியோ,” என்று சூடாக சொன்னார் ஏஜென்சி. என்றுமே கோபமாக அதிகம் கதைக்காத ஏஜென்சி இன்று அப்படி கதைத்தது அவனுக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. அன்று பகல் முழுவதும் அவர் சொன்னனவற்றையும் பாஸ்போர்ட்டில் இருந்ததையும் அவன் மனதில் உருவேற்றினான். அவன் பள்ளிக்கூடத்தில் கூட பரீட்சைக்கு இப்படி பாடமாக்கியதில்லை. அன்று இரவு அவனை விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்ல ஏஜென்சி வந்திருந்தார். விமான நிலையத்தில் அவர் சொல்லிக்கொடுத்தது போல அவன் நடந்து கொள்ள, இமிக்கிறேசனில் இருந்த மலாய்காறன் அவனது மொரிஷியஸ் பாஸ்போர்ட்டில் எக்சிற்ரை அடித்து மரியாதையாக நீட்டினான். சிறிது நேரத்தின் பின்னர் அப்துல் ஹமீட் புட்டான் என்ற அவனையும், அவனது வண்ணக்கனவுகளையும் சுமந்துகொண்டு ஜெர்மனிக்கு செல்லும் மலேசியன் எயார் லைன்ஸ், சிங்கப்பூர் ஷாங்கி விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி நோக்கி வானத்தில் எம்பிப்பாய்ந்தது.

 

 

கோமகன்
எதுவரை
25 மாசி 2015

(Visited 2 times, 1 visits today)