பதினொரு பேய்கள் கடந்து வந்த பாதை

ஈழத்தின் முடிசூடா மன்னன் பேராசிரியர் கைலாசபதியினால் இலக்கிய உலகுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் அ.முத்துலிங்கம் ஐயா என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை .பல சிறுகதை தொகுதிகளையையும், கட்டுரைதொகுப்புகளையும் வாசகருக்கு வழங்கிய முத்துலிங்கம் ஐயாவின் எழுத்துக்களில் மயங்கியவர்களில் அடியேனும் ஒருவன். அண்மையில் அ.முத்துலிங்கம் ஐயாவின் “பதினொரு பேய்கள்” சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. அந்தக்கதையில் இருந்து நான் என்ன கிரகித்துக்கொண்டேன் என்பதனை பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

அ.முத்துலிங்கம் ஐயா ஈழத்துக்கதை சொல்லிகளில் ஓர் உன்னதமான இடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.அதே வேளையில் அவரின் எழுத்துக்கள் ஓர் தவறான புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்துமாயின், அதை சுட்டிக்காட்டுவதும் எனது கடமையாகின்றது. ஓர் படைப்பானது பொது வெளியில் வரமுன்பு அதன் எழுத்தும், படைப்பும் ஆக்கியவருக்கே சொந்தமாகின்றது. அனால் அந்தப் படைப்பு பொதுவெளியில் வந்த பின்னர் அது வாசகர்களின் சொந்தமாகின்றது. அப்பொழுது எழுகின்ற சர்ச்சைகள் ஓர் எல்லைக்கு மேல் போகும் பொழுது, படைப்பாளி அதுசார்ந்த தன்னிலை விளக்கம் வாசகர்களுக்கு கொடுப்பது அறமாகின்றது. ஆனால் இந்தக்கதையின் விடயத்தில் அது நடைபெறவில்லை என்பது வருத்தத்துக்குரியது . அதாவது படைப்பாளிகளாகிய நான் எதையும் தருவேன் வாசகர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கு சமனானது .

“பதினொரு பேய்கள்” சிறு கதையானது ஓர் இனத்தின் விடுதலை வரலாற்றையும், புனைவையும் ஒன்று சேர்த்து கதை சொல்லியாக வாசகர் முன்னே வைக்கின்றது. பொதுவாகவே வரலாறு என்பதே புனைவுதான் என்றும் , அது எழுதுபவன் பார்வையிலான புனைவே என்று சொல்வோரும் உண்டு . அப்படியானால் வரலாறு என்பது என்ன என்ற ஓர் கேள்வியும் இங்கே இயல்பாக எழுகின்றது? “பதினொரு பேய்கள்” கதை சொல்லியாக அலன் தம்பதிகள் கடத்தல் விவகாரத்தையும், ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு எது சார்ந்து நிற்கின்றது?? என்றும் விபரிக்கின்றது. இங்குதான் சர்ச்சைகளின் மையம் ஆரம்பமாகின்றது. குறிப்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெண்கள் அமைப்பின் தோற்றுவாய் பற்றி கதை சாடிநிற்கின்றது. இந்தப் பார்வையானது யாழ்ப்பாணியத்தின் பார்வையாகவே எண்ண இடமளிக்கின்றது. ஏனெனில் தமிழர் தேசிய விடுதலையும் அது சார் ஈழ விடுதலைப்போராட்டமும் பல போராளிகளின் இரத்தத்தாலும், சதையினாலும், ஈடு செய்ய முடியாத இழப்புகளினாலும் கட்டியெழுப்ப பட்ட வரலாறாக எமது கண்முன்னே நடந்தேறியது. இதற்கு நேரடி சாட்சிகளாக ஏறத்தாழ மூன்று தலைமுறையினர் எம்முன்னே இருக்கின்றனர். வரலாறு இப்படியிருக்க வெறும் பாலியல் வேட்கையினால் தான் பெண்கள் தமிழர் தேசிய விடுதலையிலும் அதுசார் ஈழ விடுதலை போராட்டத்திலும் இணைந்து கொண்டார்கள் என்று “பதினொரு பேய்கள்” கதை சொல்லியாக சொல்வதை எந்த ஒரு வாசகனும் பொது வெளியில் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

அதே வேளையில் இந்த சர்ச்சைகளுக்கு அ.முத்துலிங்கம் ஐயா மட்டும்தான் பொறுப்பா ? என்று கேட்டால் இல்லையென்று தான் சொல்லவேண்டியிருக்கின்றது. பொதுவாக வரலாற்றுப் புனைவுகளை எழுதும் பொழுது படைப்பாளிகள், வாசகர் மட்டத்தில் எழும் சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக வரலாற்றுத்தகவல்களை செம்மைப்படுத்த அதுசார் நிபுணர்களை அணுகுவது வழமை. இந்தக்கதையிலும் அ.முத்துலிங்கம் ஐயா வரலாற்று தகவல்களை சரிபார்த்து செம்மைப்படுத்த,கதை நிகழ்வு நடைபெற்ற அன்றைய காலகட்டத்தில் பொறுப்பாக இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய பொறுப்பில் இருந்த முக்கியஸ்தர் ஓருவரை நாடியிருக்கின்றார். அந்த முக்கியஸ்தரும் வரலாற்றுத்தகவல் சரியே என்றும், அதை செம்மைப்படுத்த தேவையில்லை என்றும் கூறியதாக ஓர் இடைத்தகவல் உண்டு. அந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பொறுப்பற்ற விதமாக வரலாற்றை திரிபு படுத்திய குற்றம், அன்றைய காலகட்டத்தில் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய பொறுப்பில் இருந்த அந்த முக்கியஸ்தரையே சாருகின்றது. அந்த முக்கியஸ்தர் தனது அமைப்பு சார்ந்த பெண்கள் அமைப்பை இவ்வாறு கேவலப்படுத்துவார் என்று அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மொத்தத்தில், அ.முத்துலிங்கம் ஐயா அந்த முக்கியஸ்தரின் வார்த்தைகளை நம்பி வாசகர்களுக்கு நல்ல கதை தருகின்றேன் பேர்வழி என்று பிள்ளையார் பிடிக்க வெளிக்கிட்டு குரங்காகி போயிருக்கிறார். இந்த சர்ச்சைகளினால் இனி வருங்காலங்களில் அ.முத்துலிங்கம் ஐயா புனைவுகளை எழுதும் பொழுது மற்றயவர்களை நம்பமாட்டார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இப்படியாக குற்றவாளிகள் பொதுவெளியில் சுதந்திரமாகத் திரியும்பொழுது, எல்லோரும் கதை எழுதிய அ.முத்துலிங்கம் ஐயாவில் மட்டும் சேற்றை வாரி இறைப்பது என்னைப் பொறுத்தவரையில் அறமாகத் தெரியவில்லை. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தரும், பொதுவெளியில் விமர்சனத்துக்கு உள்ளாகவேண்டும். ஆனால் இது நடைபெறவில்லை. இது எந்தவகையான நுண் அரசியலைச் சார்ந்தது ? என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் இந்தக்கதையினூடாக வெளிவந்த சர்ச்சைகளுக்கு புலம் பெயர்ந்த பெரும் இலக்கியச்செம்மல்கள் கள்ள மௌனம் சாதிப்பது பெரும் ஆச்சரியங்களையும் சந்தர்ப்பவாத இலக்கிய அரசியல்களையும் பொதுவெளிகளில் எடுத்துக்காட்டுகின்றன.

அத்துடன் புலம் பெயர் நாடுகளில் சின்னஞ்சிறு விடயங்களுக்காக எல்லாம் போர்கொடி தூக்குகின்ற பெண்ணிய வாதிகள் இந்த விடயத்தில் கள்ளமௌனமே சாதிக்கின்றனர். பதினொரு பேய்களில் சொல்லப்பட்ட சொப்னா பாத்திரமும், அதனால் புனையப்பட்ட பாலியல் காட்சிகளினால் ஓர் போராட்ட அமைப்பின் பெண்கள் அமைப்பும், அதனூடாகவே ஒட்டுமொத்த விடுதலை அமைப்புகளினது பெண்போராளிகளும் அவமானப்படுத்தப்பட்டது தெட்டத்தெளிவாக தெரிந்திருந்தும், இந்தப் பெண்ணியவாதிகள் கள்ளமௌனம் சாதிப்பதன் நுண் அரசியலும் எனக்குப் புரியவில்லை. இவர்கள் எல்லோருமே பேசவேண்டிய இடங்களில் பேசாது அற்ப விடயங்களுக்காக தங்கள் நேரங்களை செலவிடுகின்றார்களோ என்று எண்ணவும் தோன்றுகின்றது.

இந்தக்கதையானது சோபாசக்தியின் “கண்டிவீரனின்” தழுவல் என்று சொல்வோரும் உண்டு.என்னைப் பொறுத்தவரையில் இரண்டுக்குமே அடிப்படையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. சோபாசக்தியின் கதை சொல்லியான “கண்டிவீரனில்” எள்ளல்கள் நக்கல்கள் தூக்கலாக இருந்து, இறுதியில் “கண்டிவீரன்” வரலாற்றில் வீரனாகவே போராளிகளை தமிழகத்துக்குப் படகில் கொண்டு செல்கின்றான். அங்கு வரலாறானது வாசகர்களுக்கு சோபாசக்தியினால் திரிக்கப்பட்டு இருக்கவில்லை. மாறாக எதிரிகளாயினும் தன்னை போட்டுத்தள்ள முடிவெடுத்தவர்களை இக்கட்டான வேளையில் பாதுகாக்கும் மனிதநேயம் கண்டிவீரனில் மேலோங்கி நின்றது.ஆனால் “பதினொரு பேய்களில்”, அலன் தம்பதிகள் கடத்தல் விவகாரம் உண்மைநிலைக்கு மாறாக எழுதப்பட்டு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெண்கள் அமைப்பும் இன்ன பிற அமைப்புகளின் பெண் போராளிகளும் வெறும் பாலியல் வேட்கைக்காகவே இணைந்தார்கள் என்று ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறே “பதினொரு பேய்கள்” கதையால் திசை திரும்பி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த திசை திருப்பலானது வாசகர்கள் மனதிலே பெரும் தாக்கங்களை உருவாக்கவல்லது. ஏனெனில் எமது விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வரு குடும்பத்திலும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண்களின் பங்களிப்பு இருந்து வந்திருக்கின்றது.

மேலும் எந்த ஒரு பொருள்களுக்கும் தேய்மானங்கள் என்ற ஒன்று உண்டு. அதுபோலவே படைப்பாளிகளின் ஆக்குதிறனும் அமைகின்றது. இதற்கு விதிவிலக்காக ஒருசில பன்முக ஆழுமையுள்ள படைப்பாளிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள் .பொதுவாக படைப்பாளிகளில் ஆக்குதிறன்கள் வற்றிக்கொண்டு போகும் பொழுது, பொது வெளிகளில் இழந்துவரும் தங்கள் பெயரைத் தக்கவைக்க ஒருசில படைப்பாளிகள் இப்படியான சித்து விளையாட்டுகளைக் காட்டுவதுண்டு. இந்தப் “பதினொரு பேய்கள்” கதையினூடாக அ.முத்துலிங்கம் ஐயா அந்த வகையில் சேர்ந்துவிட்டாரா என்றும் எண்ணத் தோன்றுகின்றது. எது எப்படியோ இந்தக்கதையில் பெரிய குற்றவாளிகள் தப்பியிருக்க படைப்பாளியை மட்டும் பொதுவெளியில் விமர்சிப்பது அறமாக எனக்குத் தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரையில் அ.முத்துலிங்கம் ஐயா ஓர் அம்பு ,அவ்வளவே.”பதினொரு பேய்கள்” கிளப்பிய இலக்கிய சர்ச்சைகளில் எய்தவர்களே முதல் குற்றவாளிகளாகின்றனர். ஆனால் அவர்கள் இதில் இருந்து சாமர்த்தியமாக தப்பிச் சென்றுள்ளனர் என்றே எண்ணத்தோன்றுகின்றது.வெறும் அம்பை மட்டும் பொதுவெளியில் களங்கப்படுத்துவது ஒருபோதுமே விமர்சன அறமாகாது . அதே வேளையில் வரலாறுகள் திரிக்கப்படும் பொழுது அதன் தாக்கம் வாசகர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இப்படியான புனைவுகளை எழுதும் படைப்பாளிகள் கவனத்தில் எடுக்கவேண்டும்.

 

 

 

கோமகன்

13 மாசி 2015

(Visited 2 times, 1 visits today)