கோமகனின் ‘தனிக்கதை ‘ -அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை

கோமகனின் ஒவ்வொரு கதையும் புனையப்பட்டதாக தெரியவில்லை. நடந்த நிகழ்வுகளின் பதிவாகவே தோன்றுகிறது. குறும்படமோ திரைப்படமோ தயாரிக்கத்தக்க கதைகள்.
0000000000000000000000000
இந்த 16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் பெரும்பாலான சிறுகதைகள், சமூKomakan Book Coverகப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், சாதிப் பிரச்சினைகள் இவற்றின் பிரதிபலிப்பாகவே அமைந்துள்ளன.
சமூகத்தின் அவலங்களை அப்படியே தத்ரூபமாக தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார். இவர் பயன்படுத்தும் கிராமிய வட்டார வழக்குச் சொற்கள் இன்றைய இளையதலைமுறையினர், குறிப்பாக புலம்பெயர்ந்து பல திசைகளில், வெளிநாடுகளில் சிதறியிருக்கும் அம்மண்ணுக்குச் சொந்தங்கள் அறிவார்களா?
ஒவ்வொரு கதையும் புனையப்பட்டதாக தெரியவில்லை. நடந்த நிகழ்வுகளின் பதிவாகவே தோன்றுகிறது. அதற்கு கோமனின் கிராமிய மண்வாசனை கலந்த வார்த்தைகளின் அழகும், அதில் அவர் புகுத்தியிருக்கும் உணர்வுகளின் அழுத்தமும் மிகப் பெரிய காரணிகளாக இருக்கின்றன.
‘சின்னாட்டி’ கதையின் நாயகன், சின்னாட்டி ஒரு கீழ்ச்சாதிக்காரன், பறையடிப்பதில் வில்லாதி வில்லன். ஊரில் சாவு விழுந்தால் நடக்கும் சடங்குகள் அப்படியே தெள்ளத்தெளிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அந்தக் கதையில் பறையடிக்கும் ஒலியை ஆசிரியர் கோமகன் தெளிவாய் உள்வாங்கி வார்த்தையில் வடித்துள்ளார். சின்னாட்டி அடித்த பறை “டண்டணக்கு டண்டணக்கு டடாண்டணக்கு ணக்குணக்குவென” என ஓங்கி அதிர்ந்ததாக எழுதியுள்ளார். அந்த வரியை இரண்டு முறை திரும்பிப் படித்தால் நம் ஊரில் பறையடித்து ஆடும் ஆட்டம் கண்முன்னே விரிகிறது.
அதே போல ‘பாண்’ கதையில் பாண்போடுவது எப்படி என்று அப்படியே ஒரு குறிப்பையும் விடாமல் வர்ணித்திருப்பது எவ்வளவு ஆழமாக கோமகன் தன்னைச் சுற்றி நடப்பவைகளை கவனிக்கிறார் என்று காட்டுகின்றது.
‘அவன் யார்?’, ‘விசாகன்’ இருகதைகளில் அகதிகளாய் புலம்பெயர்ந்தோர் கையில் முறையான விசா கிடைக்க நடக்கும் போரட்டத்தை மையமாக வைத்திருக்கின்றன. இரண்டிலும் சட்டத்திற்கு விரோதமான முறையிலேயே முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட நம்மவரின் நிலை, அவர்களின் மனப்போரட்டங்கள் நம் மனதைப் பிழிவதாய் அமைந்துள்ளன.
’அவன்யார்’ கதையில் விசாவுக்காக பலமுறை தன் உண்மையான பெயரையே மாற்றவேண்டியவனின் மனக்குழப்பத்தையும், மன உளைச்சலையும் வெளிக்காட்டுகிறது.
அவன் யார்? கதையின் முக்கிய கதாபாத்திரம் குகன். கதை முழுதும் குகன் என்ற பெயர் சுமார் 60 முறை வருகிறது. கதை முடிந்ததும் பின்குறிப்பில் ஒரு வார்த்தை குசன் அதற்கு பொருள் அரபு மொழியில் மச்சான். அடடே எங்கே அதை விட்டுவிட்டோமே என்று கதை முழுதும் தேடிக் கண்டுபிடித்தேன். தவிர்த்திருக்கலாம்.
’விசாகன்’ கதையில் முறையற்ற வகையில் ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் பெற்று அவளின் உதவியால் விசா கிடைக்கப்பெற்ற பின் அவளுக்கு துரோகம் இழைப்பதுடன் ஒப்பந்தத்தின்படி கொடுக்கவேண்டிய பணத்தை சேர்ப்பிக்கக் கொண்டுவந்தும் கொடுக்காமல் ஏமாற்றுவதும், நம்மவர் மேல் நமக்கே வெறுப்பையும், கோபத்தையும் உண்டாக்குவதாய் அமைந்துள்ளது.
’குட்டிபாபர்’ என்னை அந்தக் கால நினைவுகளில் தள்ளிவிட்டது. நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்தான். சிறுவனாய் இருக்கும் போது மாதம் ஒருமுறை எங்க ஊரில் இருக்கும் ஒரு முடிதிருத்துபவர் எங்கள் வீட்டுக்கே வருவார். வாசலில் மணை போட்டு முதலில் என் அப்பா, பிறகு நான், அடுத்து என் தம்பி என எங்கள் மூன்று பேர் தலையிலும் கைவைத்துவிட்டுத்தான் கிளம்புவார். இந்தக் கதையிலும் அதே போன்ற காட்சி. ஆனால் 3 தலையையும் திருத்த 80களில் என் தந்தையார் சுமார் பத்தோ, பதினைந்தோ ரூபாய்தான் தருவார். ஆனால் இந்தக் கதையில் காசுவாங்க மறுக்கும் குட்டிபாபருக்கு தேத்தண்ணி தந்து, கமத்தால் வந்த நெல்லு கொஞ்சம் அதோடு நூறு ரூபாயும் கொடுப்பதாக இவர் எழுதியிருப்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது.
இன்னொரு உள்ளத்தைப் பிழியும் கதை ‘கிளி அம்மான்’. ஒரு புலம்பெயர்ந்த போராளி வாழ்க்கையில் பிடிப்பற்றுக் கெட்டு நொந்து கவனிப்பாரற்று திரியும் இழிநிலையை அப்படியே படம் எடுத்துக் காட்டுகிறது. அந்நிலையிலும் அவரின் சில ஒழுக்கமான கட்டுப்பாடுடனுடைய நடவடிக்கைகள் அவர்மீது நம்மையும் அறியாமல் ஒரு மரியாதையை ஏற்படுத்துகின்றன. தாயகத்தில் ஒரு குண்டுவெடிப்பில் அவருடைய மொத்தக்குடும்பமும் பலியாக, புலம்பெயர்ந்த நாட்டில் அகதிக்கான அனுமதியும் ரத்துசெய்யப்பட மனநிலை குழம்பியரவராக கவனிப்பாரற்றுத் திரிந்து, அந்த அன்னியதேசத்தில் ரயிலில் அடிபட்டு சாவது அப்படியே நம் இதயத்தைப் பிழிந்து நம்மை உலுக்குகிறது.
அதைவிட ஒருபடி மேலாக அவர் செத்தபிறகு “மேஜர் கிளி அம்மானுக்கு வீரவணக்கம்” என இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினாலும், அவர் உடலைப் பொறுப்பெடுத்து பெற்று இறுதிச்சடங்கு செய்ய ஒருவரும் முன்வராமல் இருப்பது நம் விழியோரங்களில் கண்ணீரை வழியவிடுகின்றது.
இதைப் படித்ததும் ஏனோ எனக்கு சுதந்திரக்கவி பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் சிலர் மட்டுமே பங்கேற்றதை நினைவுபடுத்துகிறது. ஒரு கவிஞன் அவரது இறுதி ஊர்வலத்தைப்பற்றி குறிப்பிடும்போது அதில் பங்கேற்றோரின் எண்ணிக்கையைவிட அவர் மீது மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை அதிகம் என எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது.
‘மனிதம் தொலத்த மனங்கள்’ கதையில் புலம்பெயர்ந்த பிறகு பெற்ற அன்னையின் சாவுக்கு, கொள்ளியிடக் கூட செல்லமுடியாத ஒருவனின் மனப்போராட்டத்தை ஆழமாக சித்தரிக்கிறார்.
அதுபோலவே ‘வேள்விகிடாய்’ கதையில் புலம்பெயர்ந்த ஒருவனின் உழைப்பில் சொந்த நாட்டில் அவன் குடும்பத்தார் சொகுசு பெறுவதும், இவனைப்பற்றிய கவலையோ இவனுக்கும் வயதாகிறதே ஒரு துணையைத் தேடுவோம் என்று பொறுப்பேற்கவோ மறந்த சுயநல குடும்பத்தைப்பற்றி சித்தரிக்கிறது.
மொத்தத்தில் அனைத்து கதைகளும் ஒரு டுவிஸ்ட்(TWIST) இருக்கும், ஒரு டெர்ன்(TURN) இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் நகர்ந்தாலும், அப்படியெதுவும் கதைக்காக புனையப்படாமல் உள்ளதை உள்ளபடியே அது சமூக இழிநிலைச் சம்பவமாக இருந்தாலும் ஒரு சாதிக்கொடுமைச் சம்பவமாக இருந்தாலும் சரி அப்படியே எடுத்துக் காட்டுகிறார்.
இயற்கை அழகை ஆங்காங்கே வர்ணிக்கும் விதம் எவரையும் மிகவும் கவரும் விதம் உள்ளது. ஆனால் பல இடங்களில் கோயில் மணி அடிப்பதும், கூழைக்கிடாக்கள் அரைவட்டமாகப் பறப்பதுவும் காட்டப்பட்டுள்ளன.
கதைகளின் ஊடே அவர் புகுத்தியிருக்கும் வர்ணனைகள்:
நாறல் மீனைக் கண்ட பூனை போல
முகிலிடையே ஓடிப்பிடித்து விளையாடும் நிலவைப்போல
ஜென்மத்தில் சனி போல
நெல்லிக்காய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது போல
வழிதவறிய செம்மறி ஆட்டுக் குட்டியைப் போல
அன்று உதித்த பூரண நிலவு போல
சரியான இடத்தில் பொருந்தி அதிக சுவையூட்டுவதாக உள்ளன.
கிராமிய வழக்கில் சொற்களை அப்படியே பயன்படுத்தியிருப்பது அனைத்துக் கதைகளிலும் பெரும் பலம்.
மொத்தத்தில் இவரின் இப்படைப்பில் பல கதைகளை வைத்து குறும்படம் தயாரிக்கலாம், அல்லது ஓரிரு கதைகளை இணைத்து திரைப்படமே தயாரிக்கலாம்.
இதுபோல பல கதைகளை கோமகன் நம் தமிழுலகுக்குத் தரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

– மெல்போர்ன் அரவிந்த் – அவுஸ்திரேலியா

December 23, 2015

(Visited 3 times, 1 visits today)