ஒரு சில நக்ஷத்திரங்களால் உலகு ஜோதிமயமாகிவிடும் என்று நம்புவது எப்படி?

ஜெர்மனியின் பேர்லின் நகரில் ஏறத்தாழ 35 வருடங்களாக வாழ்ந்து வரும் பொ கருணாகரமூர்த்தி புலம்பெயர் ஈழத்துக்கதை சொல்லிகளில் முதன்மையானவர் . பல சிறுகதைகளையும் நாவல்களையும் இலக்கிய வெளிக்குத் தந்த பொ.கருணாகர மூர்த்தி 1985 களில்  தமிழகத்தில் இருந்த முதன்மை இலக்கிய சஞ்சிகையான  “கணையாழி” நடத்திய தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற “ஒரு அகதி உருவாகும் நேரம்’ மூலம் பலரைத் திரும்பிப்பார்க்க வைத்தார் . இதுவரையில், “கிழக்கு நோக்கி சில மேகங்கள் (சிறுகதைத் தொகுப்பு) – ஏப்ரல் 1996”, “ஒரு அகதி உருவாகும் நேரம் (மூன்று குறுநாவல்கள்) – ஏப்ரல் 1996”, “அவர்களுக்கு என்று ஒரு குடில் (சிறுகதைத் தொகுப்பு) – 1999 “, “கூடு கலைதல் (சிறுகதைத் தொகுப்பு) – டிசம்பர் 2005”, “பெர்லின்  இரவுகள் – டிசம்பர் 2005”, “பதுங்குகுழி – சிறுகதை டிசம்பர் 2010″, ” பெர்லின்  நினைவுகள் ” , “அனந்தியின் டயறிக்குறிப்புகள்” ( 2014 ) ஆகியன இதுவரையில் வெளியாகியுள்ளன. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2010 இல் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான தேர்வினை “பதுங்கு குழி’’ என்ற இவருடைய சிறுகதைத் தொகுதிக்கு வழங்கியது. இணையத்தின் மூலம் எனக்கு அறிமுகமாகியிருந்த பொ. கருணாகரமூர்த்தி, அவருக்கே உரிய இளையவர்களை அரவணைத்துச் செல்லும் பண்புடனும் ,அனுபவ முதிர்சியடனும் பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனை மூலம் வாசகர்களுக்காக நான் நடத்திய நேர்காணல் இது. 
 
கோமகன் 
 
 000000000000000000000000
உங்களைப்பற்றி சிறிது வாசகர்களுக்கு சொல்லுங்கள்?
கோப்பாய்  தொகுதியிலுள்ள புத்தூர் எனும் கிராமத்தில் ஒரு மத்தியதரக்குடும்பத்தின் ஐந்தாவது பிள்ளையாக 1954 ம் ஆண்டில் பிறந்தவன். தந்தையார்: முருகேசு பொன்னையா, தாயார்: இராசம்மா. புத்தூர் ஸ்ரீசோமாஸ்கந்தாக்கல்லூரியிலும், அனுராதபுரம் புனித வளவன் கல்லூரியிலும், விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியும், கொழும்பு College for Marine Radio Communications இல் கடல்வணிகத் தொலைத்தொடர்பாடல்துறையில் தகுதிச்சான்றிதழும் (டிப்ளோமா)  பெற்றேன். 1980 இல் பெர்லினில் ஒதுங்கியவன், 1986 இல் ரஞ்ஜினியுடன் திருமணம். காருண்யா, அச்சுதன், ஜெகதா, பூமிகாவென 4 குழந்தைகள்.
எழுத்து உங்களை எப்படி வசப்படுத்தியது ?
வாசிக்கும் பழக்கந்தான் எழுதவும் தூண்டுகிறது. எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. குமுதம், கல்கி, ஆனந்தவிகடன், கலைமகளிலிருந்து ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, லஷ்மி, அசோகமித்திரன் ஆகியோரது பலசிறுகதைத்தொகுதிகளும், நாவல்களும் வீட்டில் இருந்தன. இன்னும் எமது புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி நூலகத்திலும் அரிய பலநூல்கள் வாசிக்கக்கிடைத்தன. ஜெயகாந்தன், ஆதவன், ஆ.மாதவன், கஃப்கா, கம்யூ, ஹெமிங்வே, செக்கோவ் ஆகியோர் என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர்களாக இருந்தனர். இன்னும் படித்த பல நல்ல படைப்புகளைவிடவும் ,  மோசமான படைப்புகளே ‘அடே இவர்களைவிடச் சிறப்பாக உன்னால் எழுதமுடியும்’என்கிற அகம்பாவத்துடன் என்னை எழுதத் தூண்டின.
இலக்கியர்களும் கலைஞர்களும்  எப்போதுமே பல்வேறு உலகங்களில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள். ஒன்று  அரிசி, பருப்பு, காய்கறி, குழம்பு,  துணிமணி, வீட்டுவாடகை , டியூஷன் ஃபீஸ், சலவைச்செலவுகளுடன் அல்லாடும் அசல் உலகம்; மற்றவை  அவன்  இஷ்டப்பட்ட நேரம்  அவனாகத் தன் கனவுப்படுதாக்களை விரித்து விரித்து அவனே அரசனாக அவனே குடியாக, பல்லக்கில் அமர்ந்துசெல்பவனாக, சுமப்பவனாக, அவனே பயிராக அவனே மழையாக,  அவனே நிலவாக அவனே கடலாக, அவனே புயலாக அவனே தென்றலாய், அவனே இடியாக அவனே இசையாக, தன் தீராத கற்பனைகளுடன் சிருஷ்டிக்கும் பேரானந்தமும் அதிசயங்களும் நிறைந்த அற்புத உலகங்கள்.   ஒரு படைப்பின் சிருஷ்டிகர்த்தா தான் சிருஷ்டிக்கும் ஒவ்வொரு பாத்திரத்துடனும் வாழ்வான், விவாதிப்பான், முரண்படுவான், கொஞ்சுவான், குலவுவான், குதூகலிப்பான். கலை – இலக்கிய வாழ்வு சுகமானது.  அதன் உச்சங்களைத்தான் தொடமுடியாதுபோனாலும் உயரத்தில் ஒரு இடத்தையாவது பிடித்துக்கொண்டு உச்சத்தைத்தொடும் விக்கிரமாதித்த முயற்சியில் உற்சாகமாக இருக்கலாம். இதனாலேயே தொடர்ந்தும் அவர்கள் தமது அவாவுதல்களை, கனவுகளை விதைத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் விளைச்சலைப் பற்றிய கவலைகள் இருக்காது. அவர்களில் ஒருவன்தான் நானும்.
சிருஷ்டி கர்த்தாக்கள் தங்கள் கனவுகளையும் அவாவுதல்களையும் விளைச்சல்களைப்பற்றிக் கவலைப்படாது தொடர்ந்தும் விதைத்துக்கொண்டிருப்பார்கள் என்று சொல்கின்றீர்கள். இது ஓர் அசட்டுத்தனமான செயலாகத் தெரியவில்லையா? ஏனெனில் இன்றைய காலகட்டங்களில் பல சிருஷ்டி கர்த்தாக்கள் தங்கள் படைப்புகளை எப்படியும் சந்தைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தானே செயல் படுகின்றார்கள் ?
இல்லை. அசட்டுத்தனம் இல்லை. நான் விளைச்சலைப்  பற்றிக்கூறினேன், நீங்கள் பதர்களின் ஞாபகத்தில் இருக்கிறீர்கள். பதர்களும் இயல்பென்பதில் முரண்கருத்து இல்லை. ஒவ்வொரு படைப்பாளியும் ஒருவிதத்தில் ஒரு கோரிணியாக (Freak) இருப்பான். அந்தநிலையில்தான் படைப்புக்கள் பிறக்கும். ஒரு லாகிரிநிலை என்று வைப்போமே. ஒரு சங்கீதவித்துவான் சமயங்களில் தன் கற்பனைகளின் உயரங்களில் சஞ்சரிக்கும்போது இது ரஞ்சக ரசிகர்களால் சுவைக்கப்படுமா இல்லையா என்பதை மறந்துவிடுவதில்லையா? இந்த விளைச்சலும் அதைப்போலத்தான். விளைந்தால் நல்லது, விளையுமா இல்லையா என்கிற கவலை அளவுக்கு அதிகமானால் விதைக்கவே முடியாது. அல்லது பின் தள்ளப்படும்.
சந்தைப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுதான் இன்னும் எழுத்தாளர்கள் தமது பேனாக்களைத்திறக்கிறார்கள் என்று ஒரேயடியாகச் சொல்லிவிடமுடியாது. எமது முந்திய தலைமுறை எழுத்தாளர்கள் சாண்டில்யன், புதுமைப்பித்தன், ஆர்.கே.நாராயன் ஆதியோருக்கு தமது எழுத்துப்பணியின் விளைவாக இருந்த நிலம் வீடுவாசல் சொத்து அனைத்தையும் இழக்க நேர்ந்தது. கவிதை மற்றும் விமர்சனத்துறையை தமிழில் வளர்க்கவேண்டி ’எழுத்து’ என்கிற பத்திரிகையை நடத்திய, சி.சு.செல்லப்பாவுக்கு   தன் அந்திமகாலத்தில் எழுதிய  ‘சுதந்திரதாகம்’ எனும் நெடிய நாவலை அவரால் வெளியிடவே முடியாமற்போயிற்று. இறுதியில் அவர் காலகதியானபின் 2001 இல் அவருக்கு சாகித்திய அகடெமி பரிசு கிடைத்தபோது அப்பணத்தைக்கொண்டே அவரது  நாவலை சாகித்திய அகடமி வெளியிட்டது.  ஒன்று:> என்றைக்கும் தமிழில் எழுதிப்பிழைக்கமுடியாது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். தமிழில் எழுதிப்பிழைக்கலாம் என்று முனையும் ஒருவர் பேனாவைத்தூரவீசிவிட்டு நேரடியாகத் திருவோடு ஒன்றைக்கையில் எடுத்துக்கொள்ளுதல் சிலாக்கியம், மேலும் வாய்ப்பானது.
பெயர்ந்து வாழும் புலங்களிலும் பிழைப்பதற்காக எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. எந்த இலக்கியரும் தாம்தாம் படைத்தவற்றைக் காலத்துக்கும் சும்மா தலைமாட்டில் வைத்துக்கொண்டிருக்கவும் முடியாது. தன் படைப்புக்கள் பரவலாக வாசகனைச் சென்றடையவேண்டும் என படைப்பாளி விரும்புவது இயல்பானதே அது  கேலியின் வகைப்பட்ட விஷயமல்ல. தரமான படைப்புக்கள் தாமாகப்பரவும் வல்லபங்கொண்டவை. எவரிடமும் அவன் திணிக்கவேண்டியதில்லை. இன்று எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று  புகழப்படும் ஃப்றான்ஸ் கஃப்காவுக்கு தன் அந்திமகாலம் வரையில் தான் படைத்தவற்றுள் ஒன்றைக்கூட அச்சேற்றிப்பார்க்க இயலவில்லை. அகாலமாக அவர்  41வது வயதில் மரணப்படுக்கையில் வீழ்ந்தபோது தன் எழுத்துக்கள் அனைத்தையும் தீயில் பஸ்பமாக்கிவிடச்சொல்லித் தன் நண்பனை வேண்டினார். என் ஆதர்ஸம் ஃப்றான்ஸ் கஃப்காவை எவ்விடத்தில் வைத்துப்பார்ப்பீர்கள்?
உங்கள் நாவலான “பெர்லின் இரவுகளின்” தொடர்ச்சியாக அண்மையில் “பெர்லின் நினைவுகள்” வெளிவந்தது. அதுவரவேண்டிய சூழல்கள் மனநிலைகள் ஏன் வந்தன ?
பெர்லின் நினைவுகள் உருவானவிதம் சுவாரசியமானது. தினமும் வேலைக்குப்போவது, பின் சினிமா அல்லது தொலைக் காட்சிபார்ப்பது, கொஞ்சம்போல வாசிப்பது, கொஞ்சம் மது, போஷனம், பின் தூக்கம் இப்படி அன்றாட நிகழ்வுகளாலான  வாழ்க்கைமுறை எனக்கு அடிக்கடி சலிப்பேற்படுத்துவதுண்டு. இன்னமும் செய்யக்கூடிய ஏதோவொன்றைச் செய்யாமல் வெட்டியாகக் காலத்தை விரயமாக்குகிறேன் என்பது புரியும், ஆனால் அது என்ன வென்றுந் தெரியாமல்  மனது கிடந்து தவிக்கும். சரி எதையாவது எழுதலாம் என்றொரு முடிவுக்கு வந்தேன். வந்தபின்னால் எதைத்தான் எழுதுவதென்ற கேள்வி  முன்னதை விடவும் பெரிதாக எழுந்தது.
மேதாவித்தனங்கள் எதுவுமில்லாத சாமானியன், மருத்துவக்கல்லூரிக்கு நுழையவே சாமர்த்தியம்போதாதவன், IQ விலும் சராசரியாக இருப்பவன்  எதைத்தான் எழுதிக்கிழித்துவிடப் போகிறேன். திரிகாலமும் என்னைக் கேலிபண்ணிக்கொண்டு என் மண்டைக்குள் குடியிருக்கும் கிண்டல் கிச்சாமி திடுப்பெனப்பொறித்து  “நீ அதிமேதாவியோ, வித்தகசிரோமணியோ இல்லைத்தான், ஆனால் புகலிடத்தில் நீ வரித்துக்கொண்ட சீருந்து ஊழியத்தில் பலபுத்திசாலிகளையும், விநோத மாந்தர்களையும் சந்தித்திருக்கிறாயல்லவா…….. அவர்களைப்பற்றியெல்லாம் எழுதேன் ” என்றான். அந்த யோசனையின் விளைவாக எழுதப்பட்டு மாலனின்  ‘திசை’களில் தொடராக வெளிவந்ததுதான் ‘பெர்லின் இரவுகள்’.
பின்னர் 2005 இல் அது உயிர்மை வெளியீடாக நூல்வடிவில் வெளிவந்தபோது அமோகமான வரவேற்பைப் பெற்றது. மனம் அதிலும் திருப்திப்படவில்லை. அட இன்னும் எத்தனையோ விஷயங்களை அதில் சொல்லாமல் விட்டுவிட்டோமே அவற்றையெல்லாம் சேர்த்திருந்திருக்கலாமே என்கிற எண்ணம் மனதில் குடைந்துகொண்டேயிருந்தது. என் ஊழியத்தில் சேகரித்துக்கொண்ட அனுபவங்களையும், பெர்லின் நகரத்தின் பழமையும் புதுமையும் கலந்த கட்டிடக்கலையமைப்புக்களையும், அதன் புவியியல் அமைப்புக்களையும் துலக்கும் புகைப்படங்களையும் சேர்த்துக்கொண்டு அந்நூலை மீளவும் ஒரு செம்பதிப்பாகக் கொண்டுவரும் நோக்கில் விஷயங்களைப் புதுக்கி மெருகித் தொகுத்தேன். தொகுத்த பிரதியை தோழர்கள் அ. முத்துலிங்கம் அவர்களிடமும்,  இரவி அருணாசலத்திடமும் காட்டினேன். படித்துப்பார்த்த அவர்கள் இன்னும் சில விஷயங்கள் இதில் சேர்ப்பதற்குள்ளனவே என்றனர். அதாவது ‘நீ புலம்பெயர்ந்த காலமோ இலங்கையில் ஆயுதப்போராட்டம் முனைவுற்றிராத காலம். அவ்வேளை உன்னைப் புலம்பெயர வைத்தகாரணிகள்,  அதாவது உன் புலப்பெயர்வின் பகைப்புலம், புலப்பெயர்வில் புதியவொரு தேசத்தில் நுழைந்த (Penetration) அனுபவங்கள், ஆரம்பகால பெர்லின் வாழ்க்கை, சமூகத்துடனான ஒருங்கிணைவு/கலத்தல் (Integration), தொழில்வாய்ப்புக்கள், இவைகளையும் சேர்த்துக்கொண்டால் இன்னும் நிறைவாக இருக்குமே’ எனவும் அபிப்பிராயப்பட்டனர்.  சிந்தித்துப்பார்த்ததில் எழுதத்தெரிந்திருந்தும்  எமது புலம்பெயர் அனுவங்கள், அவஸ்த்தைகள் இவற்றையெல்லாம் பதிவுசெய்யாவிடின் அது ஒரு வரலாற்றுத்தவறாகிவிடுமோ என்றிருந்தது. அவ்வாறே  முடிந்த அளவுக்கு நுழைவுகால அனுபவங்களைக் காலஒழுங்கில் ஞாபகப்படுத்தி அனைவற்றையும் சேர்த்தால் பெர்லின் இரவுகளைவிடவும் சேர்த்துக்கொள்ளப்பட்ட விஷயங்கள் இருமடங்காக இருந்தன. பெர்லின் இரவுகளை முக்கியமான சாகித்தியமாக (சரணம்) அமைத்துக்கொண்டு புதிய விஷயங்களை அதன் புதிய பல்லவியாகவும், அனுபல்லவியாகவும், நிரவல்களாகவும் நிரைப்படுத்தியதில் அமையும் இந்நூலுக்கு  ‘பெர்லின் நினைவுகள்’ எனத்தலைப்பிட்டேன்.
 
ஓர் புலம் பெயர் நாட்டில் நீண்ட காலமாக இருந்து கொண்டு தாயகத்தில் உள்ள கதை மாந்தர்களை எப்படி ஓர் உயிர்ப்பான பாத்திரங்களாக்க முடியும்?
புலம்பெயர்ந்து வாழ்வது நிஜமே, அதனால் எமது தாயத்துடனான உறவுகள் அறுந்துபோய்விடவில்லையே. ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும் சென்று வருகின்றோம். இன்னும் நவீன தொலைத்தொடர்பாடல்கள் ஊடகங்கள் வளர்ந்துவிட்ட யுகத்தில் அங்கு நிகழ்வனவற்றையெல்லாம் கண்ணுறுகின்றோம். எப்படி ஒருவரால் அதுவும் இலக்கியரால் தவழ்ந்தமண்ணையும் ஒன்றியிருந்த உறவுகளையும் பழகிய மனிதர்களையும் எப்படி மறப்பது? என்ன……….. நிறைவிகிதம் மக்களை இயற்கையாகவும் போரிலும் இழந்துவிட்டோம் என்பதுதான் சோகம். இன்னொரு விதத்தினருக்கு குறிப்பாக இளந்தலைமுறையினருக்கு எம்மை யாரென்று தெரியவில்லை. அவர்களை அவரது குணாதிசயங்களை படைப்புகளில் வெளிக்கொணர்வதென்பது படைப்பாளியின் திறமை/ஆளுமை/ சம்பந்தப்பட்ட விஷயம். நான் பதுங்குகுழியை (குறுநாவல்) எழுதியபோது இவரெப்படி எழுதலாம் என்பதுபோன்ற முணுமுணுப்புக்கள் எழவேசெய்தன. ஆனாலும் படைப்பு நிறைந்தபோது எவராலும் படைப்பில் படைப்பாளி இக்குறைகள் புலம்பெயர்ந்திருப்பதனால் உண்டானது என்றவகையான குற்றங்களைச் சுமத்தமுடியவில்லை.
ஏறத்தாழ 35 வருடங்களை புலம் பெயர் சூழலில் கடந்து விட்டீர்கள். புலம் பெயர் சூழலில் உங்கள் ஆரம்ப கால தமிழர் வாழ்வியலுக்கும் இப்போதுள்ள தமிழர் வாழ்வியலுக்கும் ஓர் இலக்கியவாதி என்றவகையில் எந்த வகையான மாற்றங்களை உணர்கின்றீர்கள் ?
தமிழர்களின் வேடிக்கை/விடுப்பு பார்க்கும் மனோபாவங்களில் மாற்றமில்லை. சீரியல் நாடகங்கள், ஏழாந்தர சினிமாக்களைச் சலிக்காமல் பார்த்தல், இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ‘ஸ்வாமி’களிடம்போய் அருள்வாக்குக்கேட்டல், கிரக/ பிரதோஷ நிவர்த்தி/பரிகாரம் செய்வித்தல், வாஸ்து ஆலோசனைகள் பெறுதல், காதுகுத்து, ருதுசாந்திசெய்தல் போன்ற சாங்கியங்களில் மாற்றம் சிறிதுமில்லை. படித்துவளரும் இரண்டாவது தலைமுறையினரிடம் அவை கொஞ்சம் அருகிவருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. அந்த அளவில் சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.
 
இந்த மாற்றங்கள் ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாகியுள்ளதா?
மிகச்சிறிய விகிதத்தில் மாற்றம் தென்படுவது உண்மைதான். இரண்டாவது தலைமுறையினரின் உலகம் ஒன்று வெளிப்படும்போதுதான் மாற்றங்கள் முழுமையாக உணரப்படும்.
அண்மையில் நீங்கள் தாயகம் சென்று வந்துள்ளீர்கள். தாயகத்தில் ஒரு காலத்தில் இருந்த இறுகிய சாதிக்கட்டமைப்புகள் இன்றய உலகமயமாதலில் நீர்த்துப் போய் உள்ளனவா ?
இல்லை. சாதியம் இன்றும் காக்கப்படுகின்றது. பொதுவெளியிலான சமூக இயக்கத்தில் தீண்டாமை/சாதிகள் அத்தனை பொருட்படுத்தப்படுவதில்லை. ஆனால் மறைமுகமாக ஒரு நிலத்தை விற்பதானால்கூட தன் சாதியானுக்கோ, ஊரவனுக்கோ விற்கமுற்படும் தமிழன் சுபாவம் தொடர்கிறது. எங்களூரில் பல நூற்றாண்டுகளாக உயர்சாதிக்காரரின் குடும்பத்தாருக்குச் சொந்தமாக இருந்த பிரபலமான மனையொன்றை அவர்கள் தலித்து ஒருவருக்கு ஈடுவைத்து அதுமீளமுடியாமல் போனதில் அம்மனை அத்தலித்துக்கே சொந்தமாகிப்போனது. நான் ஊரில் நின்றபோது அவ்விஷயத்தை ஒரு செய்தியைப்போன்று என்னிடம் 100 பேர்வரையில் சொல்லிக் குறைப்பட்டார்கள்.
சாதியம் இன்னும் தொடர்வதற்குக் காரணம் சுயநலம்தான். உயர்சாதிக்காரர்கள் அதைத் தொடர்வதில் உள்ள அனுகூலங்களை இழக்கத்தயாரில்லை. உயர்சாதிக்காரர்களுடன் தன் தொடர்புகளைத் தக்கவைத்துக்கொள்வதில் பொருளாதார அல்லது தொழில்முறை அனுகூலங்கள் உள்ளன. ஒரு பொதுவியாபார நிலையத்தை நடத்தும் வியாபாரிகூட தன் பங்குதாரராக ஒரு தலித்தைச் சேர்த்துக்கொண்டால் தொடர்ந்தும் வாடிக்கையாளர்கள் வருவார்களா ஓரங்கட்டப்பட்டுவிடுவோமே என்று தயங்குகிறான். பொதுப்புத்தியிலும் தலித்துகளைப் பின் தள்ளி மற்றவர்களுக்கு முன்னுரிமைதரும் வழக்கம் தொடருகிறது.
பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு இணைகளைத்தேடும் வேளையிலும் சாதிக்கே முக்கியத்துவம் இன்றும் கொடுக்கப்படுகின்றது. என் மகள் தலித் ஒருவனைக் கைப்பிடித்தால் என் சமூகத்திலிருந்து நான் ஓரங்கட்டப்பட்டுவிடுவேன்  என் அடுத்த பிள்ளைகளைத் திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வரமாட்டார்களே என்கிற பயம்.
இன்றைய சமூகத்தில் பிள்ளைகளின் திருமணங்களை நிறைவேற்றிவைத்தல் என்பது புலம்பெயர்நாடுகளில் பெற்றோரின் கைகளில் முழுவதும் இல்லை. 50% மான பிள்ளைகள் தாமாகவே தம் இணைகளைத் தேடிக்கொண்டுவிடுகிறார்கள். இது 100% ஆகும் காலத்தில் ஒருவேளை சாதியம் ஒருவேளை மறையுதோ என்னவோ……எளிமையாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தென்படும் ஒரு சில நக்ஷத்திரங்களால் உலகு ஜோதிமயமாகிவிடும் என்று நம்புவது எப்படி?
சரி இவ்வாறு சொல்கின்றீர்கள்.எமது தாயகத்தில்  பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் எந்த அறிமுகமும் செல்வாக்கும் கிடையாது. அவர்கள் ஈழத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர்கள் எனக் கருதுகிறீர்களா?
 
ஆறுமுகநாவலர் மட்டுமல்ல 19ம் நூற்றாண்டின் மத்தியில் இலங்கையின் வாழ்ந்த கல்விப்பாரம்பரியமிக்க கல்விமான்களில் செவ்விகிதத்தினர் சாதிவாதிகளாகவே இருந்தனர். இவர்கள் அம்பேத்கார் பற்றியோ, பெரியார்பற்றியோ அறியவிரும்பியிருப்பார்களா? கருத்தியல் ரீதியாகவும், நடைமுறையிலும் இந்தியபெருநிலப்பரப்பில் சாதியவேறுபாட்டுக்காகவும், அதன் ஒழிப்புக்காகப் பாடுபடும் அம்பேத்காரை, பெரியாரைப்பயிற்றுவிக்க எம் கல்விமான்களோ நல்லாசிரியர்களோ முயலவில்லை, உள்ளபடி அவர்களும் அப்பெரியார்களைப்பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை என்பது வருத்த்த்துக்குரியதே.
புலம் பெயர் தமிழர் குழுமங்களே தாயகத்தில் சாதிகளை வளர்க்கின்றார்கள் என்றவோர் விமர்சனம் உண்டு. இது பற்றிய உங்கள் அவதானம் என்ன ?
அவர்கள்தான் வளர்க்கிறார்கள் என்பதைவிடுத்து, அவர்களும் வளர்க்கிறார்கள் என்று சொல்லுதல் இன்னும் பொருத்தமானது.. சாதியமனோப்பாவத்தை எம்முடன் எடுத்துவந்துவிட்டோம். எந்தவொரு ஊரிலும் நகரத்திலும் இங்கேயும் எவரொருவர் என்ன ஜாதி என்கிற தகவல் நிரலிகள் ஒவ்வொருவரிடமும் பாதுகாப்பாகப் பேணப்படுகின்றன.
கடந்து வந்த எமது தேசிய விடுதலைப்போராட்டத்தில் பலம் பலவீனம் என்று எதை உணருகின்றீர்கள் ?
குறைந்த அளவிலான பீரங்கிப்படகுகளையே வைத்துக்கொண்டு அரசகடற்படையின் சிம்ம சொப்பனமாக இருந்தமை. உளவுத்துறையின் ஆச்சரியப்படத்தக்க வலைப்பின்னல், புலம்பெயர்ந்தவர்களிடம் கலை நிகழ்ச்சிகள், மாவீரர்தின நிகழ்வுகள் என உணர்வைத்தூண்டும் நிகழ்வுகளைச்சோர்விலாது செய்யவைத்துக்கொண்டு அதன்மூலம் அவர்களிடம் நிதிவசூல் செய்தமை, தம் ஆயுள் முழுவதும் நிதிவசூல், நிகழ்ச்சிகளின் அமைப்பு , இணைப்பு என்று இயங்கியவர்களையும், இங்கத்தைய வங்கிகளில் தம்பொறுப்பில் பெருங்கடன்களை எடுத்துக்கொடுத்துவிட்டு அவற்றைத்தீர்க்கமுடியாமல் இன்றும் அல்லாடிக்கொண்டிருக்கும் விடுதலை அவாவிய தேசபக்தர்கள் பலரையும் நான் அறிவேன்.(இவை பலம்) ஆனாலும் தலைமைக்கு புதிய சர்வதேச ஒழுங்கும், சூழவுள்ள நாடுகள் எம் போராட்டத்தை நசுக்கும் என்கிற உண்மையும் தெரிந்திருக்கவில்லை. ஆலோசனைகளைப் புரியும் சக்தி இல்லாதிருந்தது, அல்லது தலைமையால் ஆலோசனைகள் புறந்தள்ளப்பட்டன. விவேகமற்ற வீரம் வெறும் முரட்டுத்தனந்தான். முரட்டுத்தனமான தன்போர்வீரர்களையும், அவர்களின் போர்த்தந்திரங்களினாலும் அரசின் அனைத்துப்படைகளையும் தோற்கடித்துவிடலாம் எனத்தலைவர் நம்பிக்கொண்டிருந்தார். அதன் விளைவே சந்திரிகாவுடனான வலிந்த சமாதானமுறிப்பு, மணலாறு மறிப்பு இவைகளால் சண்டையை வலிந்திழுத்தமை எல்லாம்.  தன்பக்க தாக்குவலுவைத் தெரிந்துவைத்திருந்தவர் நாச்சிக்குடா வீழ்ந்தவுடனேயே தன்நிலையைக் கணித்து ஆயுதங்களை மௌனித்துப் பேரழிவைத் தவிர்த்திருக்கலாம். தலைவனின் சுயகௌரவம் அதைச்செய்யவிடவில்லை. எம்மைப்போலவே இறுதிக்கட்டங்களில்கூட  எம் அயலவன் எம்மைவந்து மீட்பான் என்கிற நம்பிக்கையுடன் இருந்தார். சிந்தியபாலின் சுவையைப்பேசி இனி என்ன பயன்?
இன்றுள்ள அரசியல் கள நிலைகளில் தமிழர்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றீர்களா ?
நம்பிக்கைகொள்ள ஏதுக்கள் எதுவும் இல்லை. காலத்தை தள்ளிச்செல்லும்போக்கே காணக்கிடக்கிறது. தமிழர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுதருவது புதிய அரசின் நோக்கமாக இருப்பதாகத்தெரியவில்லை. 19வது 20வது சட்டமூலங்களைத் திருத்துவதிலுள்ள அக்கறை 13 வதில் இல்லையே. அதைப்பற்றி மனதிறந்துபேசவே பயப்படுகிறாரே ஜனாதிபதி. தேர்தல் முடிந்தபின்னால் எல்லாம் நிவர்த்திக்கப்படும் என்கிறது த.தே.கூட்டமைப்பு. அதன் தற்போதைய தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில்கூட அரசை அமைக்கும் என நம்பப்படுகின்ற ஐ. தே.கட்சியிடம் ஒன்றுபட்டநாட்டுக்குள்ளான எம் சமஷ்டிக்கோரிக்கையை வலியுறுத்துவோமெனச் சொல்கிறார்கள், ஐ. தே. கட்சியோ  ‘13வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கப்பால் எதுவும் கிடையாது’ எனப் பகிரங்கமாகச்சொல்கிறது. என்னமாதிரியான அரசியல்தீர்வு தரப்படும் என்பதை சிறுபான்மையினரின் வாக்குக்களால் பதவிக்கு வந்த ஜனாதிபதியோ என்றும் எதையும் வெளிப்படையாகக்  கூறியதில்லை. தள்ளுமுல்லுகளே தொடர்கின்றன. எம் கனவுகள் தொடரவேண்டியதுதான். நம்பிக்கை தரும் சமிக்ஞைகள் எதுவும் இல்லை.
 
இன்றைய யாழ்ப்பாண சமூக அமைப்பின் அதிகாரம் உயர் குடியினரிடம்  தொடர்ந்து நீடிக்கிறதா? 30 வருடகாலப் போராட்டம் உயர் குடியினரின்  அதிகாரத்தை அசைத்திருக்கிறதா? ஓர் இலக்கியவாதி என்ற வகையில் இதை எப்படி பார்க்கின்றீர்கள் ?
இன்றைய யாழ்ப்பாண சமூக அமைப்பின் அதிகாரம் உயர் குடியினரிடம்  தொடர்ந்து நீடிக்கிறது என்பது ஒன்றும் இரகசியம் அல்ல. இது கிழக்குக்கும் பொருந்தும். நம் மாகாணசபை அமைப்புக்களைப் பாருங்களேன். அங்கே எத்தனை தலித்து அங்கத்தினர்கள், பெண்கள் இருக்கிறார்கள்? அங்கேயும் ஒரு இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்துக்கான அவசியம் உணரப்படுகிறதல்லவா?
ஓர் சிருஷ்டியின் இலக்கியத்தரம் பற்றி ஒவ்வருவரும் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவாறு அந்த சிருஷ்டியைப் பற்றி தரப்படுத்துகின்றார்கள். நீங்கள் இதை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
எந்தவொரு படைப்பையும் ஆழமாகத் திறனாய்வுசெய்யவோ, விமர்சிக்கவோ இலக்கியத்தில் புலமையும் பரந்த வாசிப்பும் அவசியம். இலங்கையின் பிரசித்த விமர்சகர்கள் திறனாய்வாளர்களான பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர்மீதே அவர்கள் தாந்தாம் போற்றும் இஸங்களைக்கொண்டும், கொள்கைகள், கோட்பாடுகளைக்கொண்டுமே படைப்புகளை நோக்குகிறார்கள் என்கிற விமர்சனங்கள் இருந்தன. அவை அப்படித்தான் அமையும், ஒருவருக்கு மிளகின் சுவை பிடிக்கும் என்றால் மிளகு சேர்க்கப்பட்ட பதார்த்தங்கள்தான் உயர்ந்தவை என்கிற கருத்தைக்கொண்டிருப்பது இயல்பானதே,  அதுவே சரியானது என்கிற வாதங்களும் உண்டு. மிளகைத்தவிர எனக்கு வேறு வெஞ்சனங்களின் சுவைபற்றிய ஞானம் இல்லை என்பதை விமர்சகர்கள் அறிந்திருப்பதில்லை என்பதுதான் இதன் அவலம்.
எந்த விஷயமும் அளவோடு மிதமாக இருப்பதுதான் அழகு. சிலர் மலையைக்குடைந்து எலியைப் பிடித்திருப்பார்கள். நல்ல படைப்புகள் எல்லாம் நல்ல திறனாய்வாளர்களின் பார்வையில் பட்டுவிடுவதில்லை. சாதா விமர்சகர்களால் சில படைப்புக்கள் அவற்றின் தரத்தை மேவியும் புகழப்பட்டுள்ளன.  நிஜமாகவே வேறுசில தரமான படைப்புகள் கண்டுகொள்ளப்படாமல் காலத்தோடு அடிபட்டுமுள்ளன. அவ்வகையில் எனக்கு முதலில் நினைவில் வருவது அமரர் ப. சிங்காரத்தின்  ‘புயலில் ஒரு தோணி’. ப.சிங்காரம் அவர்கள் தினத்தந்தி பத்திரிகையில் (1947 -1987) 40 ஆண்டுகாலம் செய்திப்பிரிவில் பணிபுரிந்திருக்கிறார், அவரது பக்கத்துமேசைக்காரருக்கே அவர் ஒரு நாவலாசிரியர் என்பது தெரிந்திருக்கவில்லை.
எனது ‘பால் வீதி’ நெடுங்கதையை விமர்சகர் ஒருவர் படித்துவிட்டு பொ.கருணாகரமூர்த்தியின் எழுத்தில்  ஆணாதிக்கம் இருக்கிறது என்றாராம். நல்ல ஒரு விமர்சனத்தின் நோக்கம் ஒரு படைப்பின் பலம் பலவீனம் இரண்டையும் எடுத்துச்சொல்லி அதன்மூலம் அப்படைப்பை வாசகனிடம் எடுத்துச்சென்று நுகரவைக்கும் ஊக்குவிப்பாக  அமைதலேயாகும்.
ஒருமுறை   கலாநிதி. நா. சுப்பிரமணியம்  அவர்கள் ‘புலம்பெயர்ந்த படைப்பாளிகள் எவருமே படிப்பாளிகள் கிடையாது, ஆதலால் அவர்களால் என்றுமே உயர்வான  படைப்புகளைத் தந்துவிடமுடியாது’ என்று சொல்லியிருக்கிறார். அப்போ புதுமைப்பித்தன் எந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றாராம்? இலக்கியத்தில் இப்படி பார்வைகள் இருப்பதெல்லாம் இயல்பு/சகஜம்.
ஓர் சிருஷ்டிக்கு அழகியல் வர்ணனைகள் தேவையற்றது, சொல்லவந்த விடையத்தை சொன்னாலே அந்த சிருஷ்டி முழுமை பெறும் என்ற ஓர் கோட்பாடு அண்மைக்காலங்களில் உருவாக்கி இருக்கின்றது. இது பற்றிய உங்கள் பார்வை எப்படி இருக்கின்றது ?
அது ஒரு சிலருடைய கருத்தாக இருக்கலாம்.  ‘கோட்பாடு’ என்று விளிப்பது கொஞ்சம் அதிகபக்ஷம். வர்ணனைகள் இல்லாமலே ஒரு சிருஷ்டியின் வேலை முடிந்துவிடும் என்பது உண்மைதான்.
சொல்லவந்த விஷயத்தைமட்டுமே சொல்லிச்செல்வது என்கிற எழுத்துவகையில் நான் முதன்முதலாக தரிசித்த எழுத்து கே. டானியல் அவர்களது எழுத்தைத்தான். அவரிடம் 1000 வார்த்தைகள் இருந்தன என்று சொன்னால் அது அதிகம். எழுத்தில் அங்கத்தச்சுவை என்பதே கிடையாது. ஆனாலும் தலித்திய இலக்கியத்தில் பலபேசாப்பொருள்களைத் தமிழில்பேசி அனைவரையும் தன்பால் ஈர்த்தார்.
ஒரு உணவுப்பதார்த்தம் எப்படி வெஞ்சனங்களால் குணமும், சுவையும் அதிகரிக்கப்பெறுகிறதோ அவ்வாறு படைப்பின் வர்ணனைகளால் அதன் குணமும் சுவையும் அதிக்கரிப்பது நிஜமே. ஆனால் அதுவும் வெஞ்சனங்களின் கூட்டைப்போலத்தான், அளவோடிருந்தாலே சுவை.
சங்கப்பாடல்களில் வர்ணனைகள் விஞ்சிக்கிடப்பதை நாம் அறிவோம்.சிருஷ்டிகளில் அழகியல் வர்ணனைகள், உவமானங்கள், படிமங்கள் மிதமாக இருந்தது ஒருகாலம். காவியங்களில் தொடங்கி சங்கக்கவிதைகள் அடங்கலான நவீன படைப்புக்காலம்வரை அவற்றை நாம் அவதானிக்கலாம். 17ம் நூற்றாண்டில் திரிகூடக்கவிராயர் எனும் புலவரால் பாடப்பெற்ற திருக்குற்றாலக்குறவஞ்சியில் வசந்தசவுந்தரி எனும் அழகிய நங்கை எவ்வாறு பந்து விளையாடுகிறாள் என்பதை எப்படிப்புலவர் விபரிக்கிறார் பாருங்கள்.
“பொங்கு கனங்குழை மண்டிய கொண்டை புரண்டு புரண்டாட- குழல் மங்கு வில்வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட- இனி இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை திண்டாட
மங்கல மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே.”
புலவர் நினைத்திருந்தால் ‘அந்த மங்கல மங்கை வசந்த சவுந்தரி பந்து விளையாடினளே’ என்று மொட்டையாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அதுதான் அங்கே செய்தியும், வர்ணனைகளின் அடர்த்தியில் கவிதையின் இறைச்சி அடிபட்டுப்போகும் அபாயமும் உண்டு. ஆனால் புலவரோ எதுகை, மோனை தவறாததோடு மேலும் சந்தந்தரும் வார்த்தைகளைத்தேடித்தேடிக் கண்ணியில் கோர்த்த விதத்தில் அதைப் படிக்கையில் ஏதோ நாமே துள்ளி விளையாடுவதைப் போலவொரு அதிர்வு எம்மிடம் தொற்றுவதை உணர்கிறோமல்லவா? காலத்தோடு பாடும் முறைகள், சொல்லும் முறைகள் எனபன மாறி விஷயத்துக்கே முதலிடம் என்று வரும்போது உவமானங்கள், அழகியல் வர்ணனைகள் அருகிவரும்.
கவிதைகளில் வர்ணனைகள் உவமான உவமேயங்கள் உருவகங்களாக மாறி நவீனகவிதைகளில் படிமங்களாகியுள்ளமை ஒருவகைப் பரிமாணம். சிறுகதைகள், நாவல்களில் வரும் பாத்திரங்கள் மட்டுமல்லாமல், படைப்பின் பகைப்புலம்பற்றிய தகவல்களில்  வர்ணனைகள் அவசியமே. நான் வீயன்னா நகரின் பகைப்புலத்தில் ஒரு கதை எழுதுகிறேனென்று வையுங்கள். அதன் பகைப்புலத்தைநான் சரியாக விபரித்து வர்ணிக்காவிட்டால் அவ்விடம் வீயன்னாவா, வடலியடைப்பா என்பது  வாசகனுக்குப்புரியவராது. படைப்பில் நுட்பமான வர்ணனைகள் இடம்பெறுதல் படைப்பின்மேல் ஈர்ப்பை ஆர்வத்தை வாசகனுக்கு ஏற்படுத்தும். வர்ணனைகள் மிதமாக இருத்தல் அதன் வாசிப்புச்சுவையையும் அதிகரிக்கும். வாசிப்புச்சுகமும் இலக்கியத்துக்குத் தேவையல்லவா?
தமிழ் இலக்கியத்தில் “அங்கத” அல்லது நையாண்டி எழுத்துக்கள் என்று ஏதாவது இருக்கின்றதா ?
சங்ககாலத்துப் புலவர்களுள் ஒட்டக்கூத்தரையும், காளமேகத்தையும் நையாண்டி, சிலேடை வகைக் கவிதைகளில் சிறந்தவர்களாகக்கூறுவர். பாரதிகூட  ‘வேதநாயக முதலியாருக்கு உத்தரீயத்தை எவராவது எடுத்துக்கொடுத்தால்போதும் உழைப்புக்குப் பின்வாங்காத அவர் தானாகவே அதைத்தோளில் போட்டுக்கொள்வார்’ என்பதுபோன்ற நையாண்டிகலந்த பலகட்டுரைகளை எழுதியிருக்கிறார். தவிர தமிழிலும் 19 நூற்றாண்டின் எழுத்தாளர்களில் கல்கியையும், புதுமைப்பித்தனையும், தேவனையும், பாக்கியம் ராமசாமி, சோ. ராமசாமி, சாவி, அனுராதா ரமணன் ஆகியோரை நையாண்டிவகை எழுத்துக்களில் தேர்ந்தவர்களாகச் சொல்வார்கள்.
ஆங்கிலத்தில் எழுதிய தமிழர்களில் R. K. நாராயன்  நான் மிகவும் ரசித்தவொரு அங்கத எழுத்தாளார். புன்னகைக்காமல் அவர் நூல்களில் ஒரு பக்கத்தைக்கூடப்புரட்டமுடியாது. அவர் தமிழராயிருந்தும் தமிழில் எழுதாமல்போனதால் தமிழில் மட்டும் வாசிக்கும் பலவாசகர்களுக்கு அவரைப்பெரிதும் தெரியாது போயிற்று. ஒருமுறை அவரை ஒரு சந்திப்பின்போது  “நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்,என்ன காரணம்” என்று கேட்டதுக்கு “ நீங்கள் ஏன் எழுதப்படாது என்பதற்கான காரணத்தை முதலில் வையுங்கள், நான் ஏன் எழுதுகிறேன் என்பதைச்சொல்கிறேன்” என்று பதில் கிடுக்கி போட்டாராம்.
இலங்கை எழுத்தாளர்களில் சிரித்திரன் சுந்தரைக்குறிப்பிடலாம். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து எழுதும் எழுத்தாளர்களில் அ. முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்கள் அங்கதம் தோய்ந்தவை. அவ்விஷயத்தில் அவரை யாரும் இன்னும் விஞ்சிவிடவில்லை. இவரால் அங்கதம் சேராமல் ஒரு பத்தியைத்தானும் எழுதவேமுடியாது. அவரது இயற்கை அப்படி. தவிரவும் சமகாலத்து இளம் எழுத்தாளர்களில் உபரியாகப்பலரும் ஜனரஞ்சக  இதழ்களில், முகநூலில், வலைப்பக்கங்களில் அங்கதம் நிறைந்திருப்பது வரவேற்கக்கூடியதே. இவை அல்லாமல் தமிழில் இதுவும் ஒருவகை இலக்கியம் என்று வகைப்படுத்துமளவுக்கு நையாண்டி இலக்கியம் பரவலாக படைக்கப்படவில்லை.
 
உங்கள் சொல்லாடல்களைக் கவனித்தபொழுது தமிழக வழக்குகளின் பிரயோகம் அதிகமாகத் தென்பட்டது. உங்களுக்கென்று ஏன் ஒரு சொல்லாடலை தெரிவு செய்ய முடியாமல் போனது?
1970 களில் ஒரு இலக்கிய கலந்துரையாடலின்போது ஜெயகாந்தனிடம் ஒருவர் “ நீங்கள் உங்கள் நாவலுக்கு ‘அந்தரங்கம் புனிதமானது’ என்று தலைப்பிட்டுள்ளீர்களே, அவை இரண்டுமே வடசொற்கள், அப்படியிருக்க எப்படி நீங்கள் உங்களை ஒரு தமிழ் எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளலாம்” என்று கிண்டலாகக் கேட்டாராம். இயல்பில் எளிதில் ஆத்திரமடையக்கூடியவர் ஜெயகாந்தன். அன்று சாந்தமாகவே புன்னகையுடன் அவரிடம் “ தோழர் அதே அர்த்தம் தொனிக்கக்கூடிய தனித்தமிழ்வார்த்தையை நீங்களே கூறுங்கள்…………..இப்போதே அத்தலைப்பை மாற்றி அமைத்துவிடுகிறேன்” என்றாராம்.
செந்தமிழ்வித்தகர் ஆறுமுகநாவலரே விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தபோது விசுவாசம், பிரசங்கம், இரக்ஷிப்பு போன்ற பல வார்த்தைகளை அப்படியே வடமொழியிலிருந்து பெய்திருக்கிறார். இப்போது என் படைப்புக்களில் முடிந்த அளவில் பிறமொழி வார்த்தைகளை தவிர்ப்பதிலும் ஈடாக எளிய தமிழ்வார்த்தைகளைப் பிரயோகிப்பதிலும் கவனம் செலுத்திவருகின்றேன். உங்களுக்கு என் படைப்புகள் புரிகின்றனவா இல்லையா, அதுதான் முக்கியம். அதற்கும்மேல் அவனை ஒரு மொழியியல் அறிஞனாகப் பார்க்கக்கூடாது. அப்படி இருக்கவேண்டியதும் இல்லை.
என் ஆரம்பகால எழுத்துக்களில் தமிழகத்தில் புழக்கத்திலுள்ள சொற்களின் பிரயோகங்கள் இருந்தது உண்மைதான். தமிழில் டச்சு – அரபு – பாரசீக – சமஸ்கிருத – பாளிச்சொற்கள் கலந்தேயுள்ளன என்பது ஒன்றும் இரகசியமல்ல. என் வார்த்தைகள் என் தேர்வுகளே, இதே வார்த்தைகளை தமிழக, மலேஷிய கனேடிய எழுத்தாளர்களும் பயன்படுத்துகிறார்கள்  என்பதில் என் கவனம் இல்லை. எனக்கு தமிழக வழக்கிலுள்ள சொற்களை வடிகட்டி எழுதவேண்டுமெனத்  தோன்றவில்லை. வரேக்கை / போகேக்கை / சொன்னாயெண்டால் போன்ற எம் வழக்கில் இருக்கக்கூடிய பிரயோகங்களையும் தவிர்த்தேன்.
‘கூடுகலைதல்’ எனும் என் சிறுகதையொன்றில் ’சேர்………..வாங்கோ தேநீர்  சாப்பிடுவோம்’ என்று உரையாடலில் ஓரிடத்தில் எழுதியிருந்தேன். எப்படி நீங்கள் அப்படி எழுதலாம், இலங்கை வழக்கில் தேநீர் குடிப்போம் என்றுதானே சொல்லுவோம் என்று சிலர் விசனித்தனர். அது நமக்குப் புரியாதவொரு வார்த்தையாடலாயிருந்தாலாவது பரவாயில்லை. முடிந்தவரையில் தமிழைப்பிரயோகிப்போம் எனமுயன்றாலும் உங்கள் செந்தமிழ் கடுமையாயும். இடக்காயுமிருக்கேயென்றும் கூவுகிறார்கள்.
எனக்கு மொக்கையானபேச்சு/மொக்கையானபடைப்பு/ நூல்போடுகிற/ /சுட்டுக்கொண்டுவந்த /ஐயா கிளம்பிட்டாரா /இட்டாந்திருக்கேன் போன்ற சொல்லாடல்களுக்கெல்லாம் மூலம் தேடிக்கொண்டிருந்தால் பிரயோகிக்கத்தான் முடியுமா?
இன்னொரு காரணம்: இன்ன சந்தர்ப்பத்தில், இன்ன விஷயத்தைப் பேசுகையில் எந்த வார்த்தையைப் பெய்தால்  நான் சொல்லவருவதை வாசகன் எளிதாகப் புரிந்துகொள்வான் என்பது மாத்திரமே எனது அக்கறை. இதுவே மிகப்பொருத்தமானது என நாம் நம்பும் வார்த்தையை  அதன் மூலங்களை ஆராயாமல் என் படைப்புகளில் பிரயோகிக்கிறேன். நான் உ.வே.சு, மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார், தனிநாயகம் அடிகள் வரிசையில் வரும் தனித்தமிழ்வாதியோ மொழித்தேசியவாதியோவல்ல. ஒரு முறை. புதுவையில் கி.ராஜநாரயணன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது  அவர்களது வழக்கில் உரையாடலானேன், அவரே வேண்டாம் நீர் உம்ம வழக்கிலேயே பேசும், அது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். நானும் ஒரு வார்த்தைகளின் உபாசகன்தான், சில வார்த்தைகள் காரண காரியமின்றிப் பிடித்துப்போகும். பிரயோகிப்பேன். எனக்கு ஆரியத்துடன் அவர்கள் மேலாண்மை, சனாதனவியலுடன் ஒவ்வாமைகளுண்டு, ஆனால் ஆரிய மொழிகளுடனோ ஏன் சிங்களத்துடன்கூடவோ பகைமை இல்லை. எந்த மொழியின் அழகையும் தரிசப்பதில் எனக்கு மனத்தடைகள் எதுவுமில்லை.
தமிழகத்தில் புலம்பெயர்ந்த மக்களுடன் பழக நேர்ந்த தமிழ்நாட்டினர் பலர் ‘கதைக்கிறது, இஞ்சைவா என்பதுபோன்ற சொற்களைப் பாவிப்பதைக் கேட்டுள்ளேன். இரண்டு மொழிவழக்குகள்  கலப்பதுவும் பேச்சு வழக்கில் அவை இயைந்து போவதும் இயல்பானதே, அவை குறைகளல்ல.
சிந்தனைகளில், படைப்பாக்கத்தில் எனக்கேயான தனித்துவம் என்னிடமே இருப்பதைப்போல வார்த்தைத்தேர்வுகளிலும்  நான் நானாகவே  இருக்கமுடியாதா? என்னதுட்பட 50% திராவிடர்களது பெயர்கள் ஆரியமொழிகளின் வழிவந்தவையாகத்தானே உள்ளன, அதற்காக அப்பெயரைச்சொல்லி என்னை அழைக்காமலா  இருந்துவிடப்போகிறீர்கள்?
புலம் பெயர் இலக்கியத்துக்கும் புலம் பெயர்ந்த இலக்கியத்துக்கும் அடிப்படையில் ஏதாவது வேறுபாடுகள் உள்ளனவா ?
ஒரு தேசத்திலிருந்து பிறிதொரு தேசத்துக்கு புலம்பெயர்ந்த மக்களால் படைக்கப்படும் இலக்கியங்களே எளிமையாக –புலம்பெயர் இலக்கியங்கள்- எனப்படும். சுதாராஜ் இலங்கையின் அறியப்பட்ட ஒரு எழுத்தாளர், நீண்டகாலக்கடலோடி வாழ்க்கையை அனுபவித்தவர். அந்தக்கடல் வாழ்க்கை, அவருடன் பணிபுரியநேர்ந்த பல குணாதிசயங்களும் பிரச்சனைகளையுமுடைய மாலுமிகள், அவர் சந்தித்த மக்கள், கண்டுவந்த நாடுகள் என இப்படிப்பலவற்றைத் தனது படைப்புகளில் பதிவுசெய்துள்ளார். அவரைப்போல் எழுத்தாற்றல் வாய்ந்த இன்னொரு தமிழ்க்கடலோடியை நான் சந்தித்ததில்லை. அவரது படைப்புகளைக்கூட புலம்பெயர்ந்தவர் இலக்கியத்துக்குள் அடக்கலாம்.
புலம்பெயர்ந்தவர் இலக்கியம் மேலும் வாழும் பகைப்புலத்தின் மக்களையும் அவர்களது பிரச்சனைகளையும் பிரதிபலித்தவை / விட்டுப்போன புலத்தின் நினைவுகளில் தோய்ந்து உறைந்து எழுதப்பட்டவை என இரண்டு கூறுபோடுகிறார்கள்.
தமிழில் எழுதப்பட்ட புலம்பெயர் இலக்கியவகையில் இந்தியமண்ணிலிருந்து இலங்கையின் மலையகங்களில் குடியேறியவர்கள்/ அவர்கள் வழித்தோன்றல்கள் படைத்த ‘துன்பக்கேணி’, ‘தூரத்துப்பச்சை’ எல்லாமே புலம்பெயர் இலக்கியத்துள் அடங்கும். இன்னும் ப.சிங்காரம் அவர்கள் பணியின் நிமித்தம் புலம்பெயர்ந்து மலேஷியா, சிங்கப்பூர், சுமாத்திரா, பர்மா ( மியன்மார் )என்று பலதேசங்களில் வாழ்ந்தவர். ஆங்கிலவழிக்கல்வி பெற்றவராயினும் தனது வாழ்வனுபவங்களை மீட்டு தமிழிலே  ‘புயலிலே ஒரு தோணி’, + ‘கடலுக்கு அப்பால்’ ஆகிய இரு நாவல்களை எழுதியிருக்கிறார். அங்கதம் தோய்ந்தநடை அவரது. ‘எந்தக்கழுதையும் கண்ணகிதான், காலை இறுக்கி மூடிக்கொண்டிருந்தால்’என்பார். ‘ப.சிங்காரம் அவர்களின் நாவல்கள் அவர் வாழ்ந்தகாலத்தில் எவராலும் சீண்டப்படாதிருந்தன. தமிழில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்றொரு குரல் எழுந்தபின்னால் இப்போது ப.சிங்காரத்தின் ‘புயலில் ஒரு தோணி’ முந்தியதா   ‘துன்பக்கேணி’ ‘தூரத்துப்பச்சை’ முந்தியா என்கிறதொரு இழுபறி எழுவதை அறிவீர்கள். இந்தவகைப்பிரிவுகள், பாகுபாடுகள் எல்லாம் ஒரு நூலகருக்கு வேண்டியதாயோ, அவசியமாயோ இருக்கலாம்.
என் கணிப்பில்    இரண்டுவகை எழுத்துக்கள்தான் உண்டு. 1. நல்ல கனதியான சாரமான இதயத்துக்கு நெருங்கிவரும் இலக்கியங்கள், 2. மொக்கையான எழுத்துக்குவியல்கள்.
இலக்கிய வெளியில் ஓர் ஆண் படைப்பாளி தனது படைப்பை வெளிக்கொண்டு வரும் பொழுது ஏற்படுகின்ற அதிர்வுகளை விட அதே ஆண் படைப்பாளி ஓர் பெண்ணின் பெயரில் எழுதும் பொழுது அதிக கவனிப்பைப் பெறுகிறார்கள். இது பற்றி உங்கள் அவதானிப்பு என்ன?
பெண்கள் அதிகம் எழுதவராத காலங்களில் பெண்களின் பெயரில் யார் எழுதினாலும் அதைப்படித்துப்பார்க்க தனியாக ஒரு ஆர்வம் வாசகர்களுக்கு தோன்றுவது நிஜந்தான். பெண்கள் பெயருக்கு எத்தனை ‘கிறேஸி’ உண்டு என்பதை நீங்கள் பொதுவலைத்தளங்களில் ‘சாட்’ பண்ணும்போதே  அறியலாம். ஒரு பெண்ணின் பெயரைத் திரையில் பார்த்ததும் ” ஆ…….கண்ணு சௌக்கியமா, சாப்பிட்டியா” என்று மொக்கை விசாரிப்புகளுடன் ஒரே சமயத்தில் 100 பேர் வந்து குதிப்பார்கள். பத்திரிகையில் பெண்பெயரில் எழுதும் எழுத்தாளர்கள் விஷயத்தில் இன்னார் என்னபெயரில் எழுதுகிறார்கள் என்கிற உண்மையும் எப்படியோ அவர்கள் எழுதும் பத்திரிகைகளாலேயோ, இதர பத்திரிகைகளாலேயோ விஷயம் கசிந்துபோகிறது. ஒருமுறை சுஜாதாவையே மனதில்கொண்டு “புடவைகட்டிக்கொண்டு எழுதிற எழுத்தாளர்’ என்று ஜெயகாந்தன் கிண்டலத்திருக்கிறார்.
1960 களின் நடுப்பகுதியில் ’புதுஅலை’ என்று சொல்லிக்கொண்டு கிளாமரான எழுத்துக்களை தமிழில் பரவிவைத்த புஷ்பா தங்கத்துரை தன்னை ஒரு பெண்தான் என நம்பவைத்துக்கொண்டு வெகுகாலத்தைச் வெகுஜனப்பத்திரிகைப்பரப்பில் ஓட்டிக்கொண்டிருந்தார். ஒரு விடயம்பற்றி ஒருவிதமான கருத்தைக்கொண்டிருந்த ஒரு படைப்பாளியின் கருத்துநிலை காலத்தோடுமாறும்போது அவர்  வேறொருபெயருக்கு தாவுவது புரிந்துகொள்ளக்கூடியதே.அதேவேளையில், பெண் மீதான கவர்ச்சியை ஈர்ப்பைத் துறந்துவிட்டு மனிதன் எஞ்ஞான்றும் வாழமுடியாது.  உலகின் சுழற்சியோடியைந்த நியதி அது.
இலக்கியத்தில் பின்நவீனத்துவத்தின் பிறப்பிடம் பிரான்ஸ். இலக்கியவாதியான நீங்கள் பின்நவீனத்துவத்தை எப்படி பார்க்கின்றீர்கள்?
நீங்கள் என்னை பின்நவீனத்துவம் மீதான ஒரு ஆய்வறிஞனைபோல் நோக்குகிறீர்கள் போலத்தெரிகிறது. நான் அத்தகைய ஆய்வறிஞன் அல்ல.  பின் நவீனத்துவம் என்கிற விஷயத்தில் கற்றுக்கொள்ள எனக்கும் நிறையவுள்ளன.
என் பார்வையில்…………………
பின் நவீனத்துவம் தரும் புதிய சொல்லாடல்களைப் புரிந்துகொள்ளவே அதனுடன் நிறையப்பரிச்சயப்பட வேண்டும். மேலோட்டமாக சும்மாபோகிறபோக்கில் அதுபற்றிக்கருத்துக்களை கூறிச்செல்தல் சரியாகாது. பின் நவீனத்துடன் கட்டுடைத்தல், பிரதி, பெருங்கதையாடல் எனப்பல பின்நவீனத்துவ வார்த்தையாடல்கள் தமிழுக்கு வந்துசேர்ந்தன. ஒரு பிரதி வாசகனுக்கு வாசகன் பலவகைப்பட்ட பொருள்களைத் தரலாம். அதனால் படைப்பு பிரதியென அழைக்கப்படுகிறது. எதையும் கேள்விக்குட்படுத்துதல், இதுவரை பேணப்பட்ட மரபுகளை, விதிகளைப் படைப்புக்குள் மீறுதல் கட்டுடைப்பு. இதுவரை எவராலும் பேசப்படாத/கையாளப்படாத விஷயத்தைப்பேசுதல் பெருங்கதையாடல். உதாரணம்: மூன்றாம் பாலினர்/ சமபாலினர் பிரச்சனைகள்/ பொருந்தாப்பாலியல் உறவுகள் பற்றிய படைப்பாக்கங்கள்.
நவீனத்துவமும் அதன் காலமும் [Modernism]. அறிவியல் தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய காலகட்டம் ஆகும். இங்கே புராணங்கள், தொன்மங்கள் அவற்றின் சனாதனக்கருத்தியல்கள் ஒதுக்கப்படுகின்றன/ கேள்விக்ட்படுத்தப்படுகின்றன.
பின்நவீனத்துவம் [Post modernism] நவீனத்துவத்தையும் மறுத்து தர்க்கத்தைமீறிய அறிதலை முன்வைக்கும் இலக்கிய காலகட்டம் ஆகும். தமிழில் இலக்கியம் 19ம் நூற்றாண்டில் சரித்திர, புராணக்கதைகளையும், மாயாவி பாணியிலான சாகசக்கதைகளையும்ம் ரஞ்சக ரீதியில் பரவிவிரவிக்கொண்டிருந்த நேரத்தில் தமிழில் பின்நவீனத்துவத்தின் வரவு  பலபேசாப்பொருள்களைப் பேச ஆரம்பித்தது.  அதாவது, பெண்ணீயம், தலித்தியம், சாதியம், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை, பாலியல் அசமத்துவம், ஒருபாலுறவு, மூன்றாம் பாலினரின் அங்கீகாரம்  எனப்பல விஷயங்கள் பேசுபொருளாயின. பெருங்கதையாடப்படுகின்றன. கட்டுடைத்தல்கள் நிகழ்த்தப்படுகின்றன. சிலர் ஜி.நாகராஜனையும், புதுமைப்பித்தனையும், சில படைப்புகளில் ஜெயகாந்தனையும் இதன் ஆரம்பப்புள்ளிகளைத் தொட்டுவைத்தவர்கள் என்பர். அவர்களை முற்றாக மறுதலிப்பவர்களும் உளர்.
எந்தக்கோட்பாடோ இசமானாலும் இசங்களுக்குள் நின்றுகொண்டு அவற்றுக்கு அமைவாக இலக்கியம் படைத்தல் அதாவது சட்டகத்தை வாங்கிவைத்துக்கொண்டு அதற்குள் ஒருவர் தன் ஓவியத்தை வரைதல்போலும் சிரமமானது. எனது கதையை எனது மொழியில் வாசகன் புரியும்படியாகச் சொல்கிறேன், எந்த இசங்களைப் பற்றியும் ஆழமான ஆய்வுகளை நான் செய்தவனல்ல. தமிழில் பின்நவீனத்துவம்பற்றி விரிவான பல கட்டுரைகளை ஆரம்பத்தில் கா.சிவத்தம்பியும், தமிழவனும், ரமேஷ்-பிரேம் போன்றவர்கள் தந்துள்ளனர். அவை நூல்வடிவில் வெளிவந்துள்ளன. விரிந்து செல்லக்கூடிய விஷயம் இது.  பதிலின் சுருக்கம் கருதி இக்குறிப்புகளை நிறைவு செய்கிறேன்.
 
புலம் பெயர் சூழலில் நடைபெறுகின்ற இலக்கிய சந்திப்புகள் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது ?
ஐரோப்பிய இலக்கியச்சந்திப்புக்கள் சுதந்திரமான கருத்தாடல்களுக்கு களங்களாக அமைந்தன என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆண்டுதோறும் பல கருத்தியலாளர்கள் வரவழைக்கப்பட்டு உரையாற்றவைக்கப்பட்டனர்.
ஒருமுறை பாரீஸில் நடைபெற்ற சந்திப்பில் ‘சாட்’டின் மாணவர் ஒருவர் வந்து உரையாற்றினார். பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், இருத்தலியல், பின் நவீனத்துவம் என்று அங்கே அலசப்படாத, சிந்திக்கப்படாத விஷயங்கள் இல்லை எனலாம்.
ஒருமுறை தன் வலைத்தளத்தில் திருப்பாசுரம் பற்றியோ/ திருவாயமுது தொடர்கட்டுரை எழுதும் பேராசிரியர் ஒருவர் பேசுவதாக இருந்தது. இடைவேளைக்குப்பின் ’தண்ணி’விட்டுக்கொண்டு வந்த சிறுகும்பல் ஒன்று அந்தச் சனாதனி எப்படி இலக்கியச்சந்திப்பில் உரையாற்றாலாம் எனக்கூச்சல் போடவும் அவர் பின்கதவால் தன் மனைவியுடன் எழுந்துபோய்விட்டார்.
இன்னொரு தடவை Stuttgart நகரில் நடந்த சந்திப்பின்போது Heidelberg university யில் விரிவுரையாளர் திரு. தாமோதரன் அவர்களை ’என் பார்வையில் புலம்பெயர் இலக்கியம்’ எனும் தலைப்பில்பேச அழைத்துவந்திருந்தேன். அப்போது ’தோழர் பரா’வும் இருந்தார். நிகழ்வின் அமைப்பாளர்கள் தொடர்பாடலில் ஏதோ குளறுபடி தயாரிக்கப்பட்ட  நிகழ்ச்சி நிரலில் அவர் பெயரோ உரைபற்றிய தகவலோ விடுபட்டுப்போயிருந்தது. திரு. தாமோதரன் அரங்குக்குள் வரவே மறுத்துவிட்டார். இதுவரை நடைபெற்ற இலக்கியச்சந்திப்புகளில் 25 சந்திப்புகளிலாவது கலந்துகொண்டிருப்பேன். உலகநடப்புகளில் எல்லா இலக்கியர்களுக்கும், கலைஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரேவிதமான கருத்தே இருக்கமுடியும் என்று எதிர்பார்க்கமுடியாதுதான். ஆனாலும் இலங்கையில் இச்சந்திப்பை 2013ம் ஆண்டு நிகழ்த்துவதா வேண்டாமா என்கிற இழுபறியில் ஏற்பட்ட பிளவால் இப்போது இலக்கியச்சந்திப்பில் பங்கெடுக்கும் ஆர்வலர்களின் எண்ணிக்கை நலிந்தே காணப்படுகின்றது. அதன் எதிரொலிப்பு ஐரோப்பாவில் இடம்பெறும் நூல்வெளியீடுகள் / அறிமுகங்களிலும் தெறிப்பதைக்காணமுடிகிறது விரைவில் அது செம்மைப்படும் என்பது என் விருப்பமும் எதிர்பார்ப்பும்.
 
ஆனால் , புலம் பெயர் இலக்கியச் சந்திப்பாளர்கள் தொடர்சியாக ஒன்றைச் சொல்லி வருகிறார்கள். இலங்கையில் அரசாலும் புலிகளாலும் பிற ஆயுதக் குழுக்களாலும் ஜனநாயகத்தின் குரல்வளை முற்றாக நெரிக்கப்பட்டபோது இந்த புலம் பெயர் இலக்கியச் சந்திப்புகள்தான் தமிழ் இலக்கியப் பரப்பில் சனநாயக சக்திகளிற்கு இடமளித்த தளம் என்கிறார்கள். ஓர் இலக்கியவாதி என்றவகையில் இதை எவ்வாறு நோக்குகின்றீர்கள் ?
நான் அவதானித்தவரையில் தேசியவாதிகள் அல்லது த.வி.புலிகளின் செயற்பாடுகளை நேரிடையாக ஆதரித்தவர்கள் (இரவி அருணாசலம்போன்றோர்) தங்கள் பக்க நியாயங்களை கருத்துக்களை பொதுவாக்க இலக்கியசந்திப்பு எனும் தளத்தைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் பெரிதும் விலகியிருந்தார்கள் அல்லது அங்கே தாம் சார்ந்த அரசியலை விரித்து அலசாமல்  பொதுவான  இலக்கியம்பற்றியே  அலசினார்கள். ஆனால் எதிர் தேசியக் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களுக்கும் , மாற்று இயக்கங்களில் இயங்கியவர்கள், ஆதரித்தவர்களே இலக்கியச்சந்திப்புகளில் அதிகமும் கலந்துகொண்டார்கள், கொள்கிறார்கள் என்பது இரகசியம் அல்ல.
ஜெயகாந்தனின் கதைகள் எந்தளவில் இலக்கியப்பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தியது ? அவரது எழுத்துக்கள் அதிகமாக ஓர் குறிப்பிட்ட சாதிப்பிரிவினரை மையப்படுத்தித்தானே வெளிவந்தன ?
ஜெயகாந்தனின் எழுத்துக்கள் அவரது சமகாலப் படைப்பாளிகளிகள்  எடுத்துப்பேசிய விஷயங்களிலிருந்தும்,  அவர்கள் படைப்புக்களின் பகைப்புலங்களின்றும் வேறுபட்டுமிருந்தன. உயர்ஜாதிக்காரர்களின் அடுக்களையும், ஆபீஸ்களையும், அக்ரஹாரங்களையும்விட்டு நீங்கி, சிறுதொழிலாளிகளையும், பிச்சைக்கார்கள், பாலியல்தொழிலாளிகள், விளிம்புநிலை மக்களைப்பற்றியும் அவர் படைப்புக்கள் பேசின. 1960 களின் நடுப்பகுதியில் அவர் ஜனரஞ்சகப்பத்திரிகையான ஆனந்தவிகடனில் எழுதிய ‘அக்கினிப்பிரவேசம்’ கதை அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு படைப்பாகும். அதன் பின்னாலேயே ஜெயகாந்தன் பெரிதும் கவனிக்கப்பட்டார் என்பதுவும் மிகையல்ல.
கல்லூரிக்குச் செல்லும் சிறுமி ஒருத்தியைத்தொடரும்  ஒரு காமுகன் அவளை ஒரு மழைநாளில் கல்லூரிச்சாலையில் கண்டு தன் காரில் விநயமாகப்பேசி ஏற்றிக்கொண்டுபோய் அவளுடன் பாலியல் உறவுகொள்கிறான். அவன் அவளுடன் உறவுகொள்கையில் எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை என்கிறாள்.
வீட்டுக்கு வரும் மகளிடம் நடந்ததை அறிந்துகொள்ளும்  அவளது தாயார் அவளை நீரால் முழுக்காட்டி ‘உனக்கு ஒன்றுமில்லை. நீ மனசால் கெட்டுப்போகவில்லை. நீ தூய்மையானவள், இதுபற்றி யாரிடம் எதுவும் சொல்லாதே’ என்று சொல்லி அவளை ஏற்றுக்கொள்கிறாள். தனக்கு  ‘என்ன நடந்தது’ என்றே அறியாத அந்தப்பேதைப்பெண் அவன் கொடுத்த சூவிங்கம்மை இன்னும் வாயில் அதக்கிக்கொண்டிருக்கிறாள் என்றும் சொல்வார் ஜெயகாந்தன். வஞ்சனையின்மூலமோ பலாத்காரமமோ பிரயோகிக்கப்பட்டு ஒரு பெண்ணின் கன்னிமை பறிக்கப்பட்டிருந்தாலோ, வல்லுறவுக்குட்பட்டிருந்தாலோ அதனால் பெண்கள்  இளிமைப்பட்டுச் சிறுமைப்பட்டுப் போவதில்லை  என்றான் என் ஆசான்.
கன்னிமையுடன் ஒரு குமரிப்பெண் இருப்பதுதான் ‘கற்புடமை’ என எண்ணிவந்த பழமைவாதச்சமூகம் ’ஆஹாஹா…….. குளிப்பாட்டிவிட்டாலாயிற்றா….’ என்று இப்படைப்பையிட்டுச் சீறியெழுந்தது. இச் சிறுமியை ஜெயகாந்தன் ஒரு பிராமணக் குழந்தையாகவும் படைத்திருந்தார். அது தற்செயலானதாகவோ அல்லது அதுதான் முதலில் திருந்தவேண்டிய சமூகமென்றோ அவர் நினைத்ததாலேயோ இருந்திருக்கலாம். அதைத்தொடர்ந்த அவரது  ‘ரிஷிமூலம்’ போன்ற குறுநாவலில் சோரம்போகும் பிராமணப்பெண்கள் இருந்தார்கள். இதனால் அவர் வேண்டுமென்றே பிராமண சமூகத்தை இழிவுபடுத்துவதாகப் பிராமணர்கள்  எம்பிக்குதித்தனர். இதே அனுபவமும் வசவுகளும் தி.ஜானகிராமனுக்கும்  ‘ அம்மா வந்தாள்’ வெளிவந்தபோது வந்தது. ஆனாலும் பின்நாட்களில் ஜெயகாந்தன் காஞ்சிமடம் சாய்ந்து ‘ ஜெய ஜெய சங்கர’ ,‘ ஹர ஹர சங்கர’ ஆகிய நாவல்களைத்தந்த அதிசயங்களும் நிகழ்ந்தன.
பொ.கருணாகரமூர்த்தி என்ற இலக்கியவாதியின் அரசியல்தான் என்ன?
என் கல்லூரிக்காலங்களில் தோழர்கள் பாலா தம்பு, வி.பொன்னம்பலம் போன்ற இடது சாரிகளின் பேச்சுக்களைக்கேட்க நேர்ந்தமையால் பொதுவுடமைக்கோட்பாடுகள், இடதுசாரி அரசியல்மீது ஒரு ஈர்ப்பு வந்தது. அப்போதைய பொதுவுடமைக்கட்சிகள் தீப்பொறி என்றும், பின்னர் ஒருபொறி  யென்றும் வெளியிட்ட பத்திரிகைகளில் அதன் ஆசிரியர் அந்தனிசில் தீட்டும் தலையங்கள்  ஆர்வத்தைத்தூண்டும் விதத்தில் அமைந்திருந்தன. இன்னும் கிடைத்தபோதெல்லாம் கே. சட்டநாதன், என்.கே. மகாலிங்கம் இவர்களின் கூட்டுழைப்பில் வெளிவந்த பூரணி பத்திரிகை, சோவியத்நாடு பத்திரிகைகள் படிக்கக்கிடைத்தன, செல்லத்துரை சட்டநாதன் என்றொரு நண்பர் இருந்தார். (என் உறவினரும்) தீவிரமான பெரியாரியவாதி , அவரே எனக்கு பெரியாரியத்தின் அடிச்சுவடுகளை  சொல்லித்தந்தார்.  இடதுசாரி அரசியல்நாடியாக புதுவை இரத்தினதுரையின் முற்றத்தில் வாழ நேர்ந்தாலும் அக்காலங்களில் அவர் சிறுவர்களான எமையெல்லாம் பொருட்படுத்திக்கொண்டு எம்முடன் அரசியலை விவாதிக்கமாட்டார்.
சமாதான காலத்தில் அவர் ஐரோப்பாவுக்கு வந்தவேளைகளில் அவருடன் விடுதலைப்புலிகளின் அரசியலைப்பற்றி விவாதிக்கப்போய் அவரை எரிச்சலூட்டியிருக்கிறேன். சிலர் என்னை புதுவையுடனான உறவைக்கொண்டு இவரும் புலிதான் என்பவர்களுண்டு. என் ஆரம்பகால நண்பர்கள் பலரும் ஈறோஸில் இருந்தவர்களாதலால் என்னை ஈறோஸ்காரன் என நினைப்பவர்களுமுண்டு.
மார்க்ஸிம் கோர்க்கியின் ‘தாய்’ சொல்வதைப்போன்று சர்வதேச சகோதரத்துவத்தை, சமூக நேயத்தை , மானுஷத்தை நோக்கி எந்தக்கொள்கை, கோட்பாடு, எந்தப்போக்கு இட்டுசெல்கிறதோ அதுவே என் அரசியலும்.
 
இறுதியாக வளர்ந்து வருகின்ற படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ?
நிறைய படியுங்கள். படிப்பவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் எழுதுங்கள், என்றைக்குமாய் அறத்துடனேயே நில்லுங்கள். மனச்சாட்சியை கொன்று எழுத நேர்ந்தால் உங்கள் பேனாவை தூரவீசிவிடுங்கள்.
ஜீவநதி – இலங்கை 
 
02 தை 2016
(Visited 4 times, 1 visits today)