“கவிதையின் அழகே அது சுதந்திரமாகவும், உண்மைத் தன்மையுடனும் தன்னை வெளிப்படுத்துவதுதான்.”-கவிதா லட்சுமி

புலம் பெயர்ந்த ஈழத்து அகதிகளின் இரண்டாவது பரம்பரையின் அசுரவளர்ச்சிக்கு ஓர் சிறந்த உரைகல்லாக இருப்பவர் கவிதா லட்சுமி. ஈழத்தின் வடபுலத்தில் குரும்பசிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கவிதா லட்சுமி மிகச்சிறிய வயதில் புலப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டவர். தற்பொழுது நோர்வே நாட்டில் வசித்துவரும் கவிதா, கவிதை, இலக்கியம், நடனம் என்று பல்முக ஆற்றல்களை தன்னகத்தே கொண்டவர். ஈழத்தின் இரண்டாம் புலம்பெயர் தலைமுறையில் தனக்கென்று தனிமுத்திரை பதித்த கவிதா பெண்ணிய, சமூக சிந்தனைகளையுடையவராகவும் எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவரது கவிதைகள் பெண், சமூகம் போர், வாழ்தல், காதல், மொழியாக்க கவிதைகள் என்று பல்வேறுபட்ட தளங்களில் படுபொருள்களைக் கொண்டவை. இவரது கவிதைகளிலே இலகு சொல்லாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஞானம்தேடிச் சென்றவர் கதை
ஒருவனுடைய தலைகள்
அந்தக் கூடைமுழுவதும் விற்பனைக்கென நிரம்பிக் கிடக்கிறது
கடைகளில் எல்லாம் அதே தலைகள்
கவனத்திற்குரிய தற்கால அழகுப்பொருள்
இந்தத் தலைகள்தான்
 
முண்டத்தின் தேவை அற்றுப்போனதோ
முழுமை விட்டுப்போனதோ
சுயத்தை முழுதாய் இழந்த தலைகள்
இவைகள் எதற்கும் தயாராயிருக்கின்றன
 
ஒரு கொரூரத்தோடு
வீட்டின் முலைமுடுக்குகளில் இடமாற்றிக்கொண்டே இருக்கிறேன்

தோட்டத்து இலைகொட்டிப்போன மரத்தடியில்
சமயலறையின் நாற்றம் விரட்ட வைத்த மெழுகின் அருகில்
காலணிகள் கழட்டும் கீழ்படிக்கட்டின் மூலையில்
சின்ன அழகியல் காட்ட வரவேற்பறையில்
சுவரின் நிறத்தோடு ஒத்துப்போக அம்சமாக படுக்கையறையில்
மேலத்தேய நாகரீகமாக குளியலறையில்
தலைகளை வைத்திருப்பவர்களுக்கு
அதை வைத்திருப்பது பற்றிய பிரக்ஞை என்பதும்
தலைகளுக்கு தாம் ஏன் இந்த இடத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறோம் என்பதும் தெரிவதில்லை
எனது கட்டுப்பாட்டில் வைத்த இடத்திலெல்லாம்
இந்தத் தலைகள் இருப்பதில் எனக்கு ஒரு அதீத திருப்தி.
 
தலைகள் படும் அவஸ்தையை கண்ட யாசோதரை
கொஞ்சமேனும் தனக்குள் சிரித்திருப்பாள்
நானும் அதே உணர்வோடு கடைசித்தலையை
ஒரு கதவிடுக்கில் வைத்தபோது
எதுவும் அறியாததுபோல் கண்களை மூடியபடியிருந்தது தலை.
எல்லாத ;தலைகளும் இப்படிதான்
என நினைத்துக்கொண்டது மனது
000000000000000000000000
இதுவரையில் “கருவறைக்கு வெளியே”, “கறுத்தப்பெண் “, “என் ஏதேன் தோட்டம் ” ,”தொட்டிப்பூ “,”பனிப்படலத்தாமரை ” ஆகிய நூல்கள் தமிழ் இலக்கியப் பரப்புக்கு இவரால் கிடைக்கப்பெற்றுள்ளன . ஈழத்தில் இருந்து வெளியாகும் ஜீவநதி இலக்கிய சஞ்சிகைக்காக பல்வேறுகட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம்  நான் நடாத்திய நேர்காணல் இது ………
கோமகன்
00000000000000000000000
 
கவிதா லட்சுமியை நான் எவ்வாறு அடையாளப்படுத்த முடியும்? 
என்னைப்பற்றி சொல்லத் தெரியவில்லை. என் ஆன்மா பற்றி இப்படி எழுதியிருக்கிறேன்.
ஐம்பூதங்களின்றி ஏதும் அசையாது….
 
நானும் அப்படித்தான்!
எட்டாத என் கனவுச்சமுதாயம் நோக்கி விரியும் சிறகாய்
கற்பனை எனது வானம்

என் நிழல் தாங்கிய உயிரின் இருக்கைகளாய்
உறவு எனது நிலம்

நீராகி நதியாகி கரைபுரண்டோடும் அருவியாய்

என் தினசரித் தாகங்களைத் தீர்க்கும்
மாபெறும் ஊற்றெனக்கு நட்பு!
என்றும் அணையாத் தீபமாய், பிளம்பாய்
இதம் தரும் வெட்பமாய்
எனக்குள் நடனம் எரியும் நெருப்பு!

சுவாசமாய் எங்கும் நிகழ்ந்திருக்கும் கவிதை
என் காற்று!
அவ்வளவுதான்.
நீங்கள் மிகச்சிறிய வயதில் புலம்பெயர்ந்திருக்கின்றீர்கள். உங்கள் இளமைக்காலம் எப்படியாக இருந்தது?
நான் நோர்வே வந்தது எனது 12வது வயதில். நான் வாழ்ந்த இத்தனை  வருடங்களில் முக்கியமான காலம் என்று சொல்வது தமிழகத்தில் கரிசைக்காட்டில் வாழ்ந்த காலத்தைத்தான். அந்த நாட்கள்தான் எனக்கு அனுபவங்களை தந்தவை. ஈழத்தமிழர்களின் போராட்ட வலராற்றின் ஆரம்பம் அது. கரிசைக்காடு என்னும் அழகிய கிராமத்து சிறுமியாகவே வளர்ந்தேன். ஒரு தென்னந்தோப்பு நடுவே ஒரு குடிசை. அதில் நான், அம்மா எங்களோடு வாழ்ந்த போராளி மாமாக்கள். இஸ்லாமியப் பாடசாலையில்தான் எனது ஆரம்பக்கல்வி. பின் ஒரு கிருஸ்தவப் பாடசாலை மீண்டும் தாயகத்தில் ஒரு இந்துப் பாடசாலை அதன் பிறகு நோர்வே. புதிய மொழி, கலாச்சாரம், புதிய நண்பர்கள். நோர்வே மண்ணில் எனது இளமைக்காலம் அத்தனை இனிமையானதாக இருந்தது என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் தனிமை விரும்பியாகவே இருந்தேன். இந்த நாட்களில்தான் நான் புத்தகங்கள் படிக்கத் தொடங்கியதும், எழுதத் தொடங்கியதும். புத்தகங்களோடே எனது இளமைக்காலங்கள் கழிந்து போயின. சிவகாமியின் சபதம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நடனத்தின் மீதும் எனது ஆர்வம் திரும்பியது. எனது ஆசைகளுக்கெல்லாம் என்னோடு வந்தவர் என் அம்மா.
உங்கள் கவிதைகள் பெரும்பாலானவை தன் முனைப்பு கவிதைகளாக இருக்கின்றன.தன் முனைப்புக் கவிதைகள் புனைவதற்கு ஏதாவது விசேட காரணங்கள் இருந்தனவா?
கவிதைகள் என்பதே உணர்வுகளைக் பாடுவதுதானே. எனது உணர்வுகளை நான் சொல்லாமல் வேறு யார் சொல்லமுடியும்? எனது ஆத்மாவைத்தான் நான் எழுதமுடியும். நான் என்று இருப்பதெல்லாம் நான் என்று அர்த்தப்படவேண்டியதும் இல்லை. நான் என்பது நீங்களாகவோ, அவர்களாகவோ, ஏன் ஒரு கடவுளாகவோ கூட இருக்கலாம். வாழ்க்கையில் இருந்து எழுதுகிறேன். காலங்களை நினைவுகூறுகிறேன். அவ்வளவே. நான் யாருக்காகவும் எழுதவில்லை. ஒவ்வொருநாள் கடைசியிலும் ஏதோ ஒன்று ஒவ்வொருவருக்கும் இருக்கும், எனக்கு வாசித்தல் பிடிக்கும். அப்பப்போ ஆன்மாவை எழுதத் தோன்றும். எழுதி முடித்ததும் இதுவல்லவே நான் எழுத நினைத்தது என்று தோன்றும். அதனால் மீண்டும் மீண்டும் எழுதுகிறேன்.
ஒரு கவிதை மொழியானது எப்படியாக இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்?
மரபுக்கவிதை மொழி, புதுக்கவிதை மொழி என்று பார்த்தால் நான் புதுக்கவிதை மொழியையே தேர்ந்தெடுப்பேன். மரபுக்கவிதைகள் பலவற்றில் மொழித்திறமையும், அதன் வடிவமுமே முன்னி றுத்தபட்டிருக்கும். மரபுக்கவிதைகள் கட்டமைப்புக்குள் சொற்களை தேடிபுகுத்தப்படுவதால் எனக்குச் சலிப்புத் தட்டிவிடுவதுண்டு. பெரும்பான்மையானவை இயற்கை, காதல், கடவுள், போற்றுதல் போன்ற உட்பொருளையே கொண்டிருப்பவை.
நான் அதிகம் படிப்பவை புதுக்கவிதைகள்தான். புதுக்கவிதைகள் கொண்டுவரும் உணர்வுகளில் வேட்கை, வேகம் என்பனவே மரபை மீறச்செய்திருக்கிறது. எதுகை, மோனை, சீர் தளை என கட்டுக்குள் உளன்றுகொண்டிராது, போர்க்குணமும், விடுதலை பெற்ற சுதந்திர உணர்வும் கொண்ட வடிவமாக நான் புதுக்கவிதைகளைப் பார்க்கிறேன். விதிகளை மீறுதல் என்பது எந்த வயதிலும் சுகமான அனுபவம்தானே.
மரபுக்கவிதையோ, புதுக்கவிதையோ ஒரு கவிதையின்மொழி என்பது கவிஞனின் ஆளுமைத்திறனைப் பொறுத்தே அமையும். மொழியை கையாள்வது என்பது ஒரு கலை. சிலர் இலகு மொழியிலேயே கவித்துவம் புனைவர். சிலர் கடினமான மொழியை பிரயோகிப்பர். கவிஞன் தனது கருத்தையோ, உணர்வையோ வெளிப்படுத்தும் போது அவன் கையாளும் உத்திகளும் எளிமையான மொழியும் தான் வாசகரிடத்தில் அனுபவத்தை ஏற்படுத்தவதாக நினைக்கிறேன். புதுக்கவிதையிலும் மரபுக்கவிதையிலும் இதை ஆளுமையுடன் பயன்படுத்தியவர் மகாகவி பாரதி. புதுக்கவிதையில் பிடித்தவர் பிரமிள்.
ஒரு கவிதையின் மொழி கவித்துவமாக இருக்கவேண்டும் என்பதைத் தவிர நான் தனிப்பட்டமுறையில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட முடியாது. கவிதையின் அழகே அது சுதந்திரமாகவும், உண்மைத்தன்மையுடனும் தன்னைவெளிப்படுத்துவதுதான்.
இலக்கியம் பற்றிய உங்கள் புரிதல் எப்படியாக இருக்கின்றது?
சமீபத்தில் படித்த நினைவுக்குறிப்பு ஒன்றில் வருகிறது.
“எந்த ஒரு மனிதனும், எவ்வளவு ஈடுபாட்டுடன், உண்மையாகவும், அழகாகவும் தன் எண்ணத்தை வெளியிட விரும்பினாலும், அவனால், தன் மன ஓட்டத்தின் ஒரு சிறு பகுதியை மட்டுமே வெளிப்படுத்த முடியும். அவர்களுக்கு அது தெரிவதில்லை. அதனால், எல்லாப் படைப்பாளிகளும் மழலை மொழி பேசும் குழந்தைகளே!” – மிகெய்ல் நைமி
நானும் அப்படித்தான். என் புரிதலும் அவ்வளவே. எதையோ புரிந்து கொள்வதற்காகவே தேடுகிறேன், வாசிக்கிறேன், எழுதுகிறேன். புரிந்துகொண்டால் ஒருவேளை அதற்குரிய தேவைகள் தீர்ந்துவிடும். அப்போது சொல்கிறேன் இதற்கான பதில்.
கவிதைப் புனைவில் ஆண் மொழி பெண்மொழியை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
எழுத்தில், கவிதைமொழியில் ஆண்மொழி பெண்மொழி என வேறுபாடு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் கருப்பொருளில் வேறுபாடுகள் உண்டு. ஆண்களே பெரும்பான்மையான கவிஞர்களாக, எழுத்தாளர்களாக இருந்த சமூகத்தில் பெண்கள் எழுதத் தொடங்கும் போது, அதுவும் பெண், அழகானவள், அன்பானவள், அடக்கமானவள், பயந்தவள், ஒழுக்கத்தையும் கலாச்சார விழுமியங்களையும் கட்டிக்காக்க வேண்டியவள் என்ற சமூகப்பார்வையில் இருந்து அதற்கு முரணாண கருத்துக்களுடன் காத்திரமாகவும் சுதந்திரமாகவும் பெண்கள் எழுதத் தொடங்கியதால் பெண்மொழி ஆண்மொழி என்று பார்க்கிறோம் என்று நினைகிறேன்.
நிச்சயமாக பாடுபொருளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். நாங்கள் பிறப்பிலேயே வேறானவர்கள்தானே. அப்படி இருக்கும் போது கவிதை உணர்வுகளிலும் அவை பிரதிபலிக்கத்தான் செய்யும். அதுமட்டுமன்று ஆணைவிட பெண் சமூகக்கட்டுபாடுகளும், அடங்குமுறையும், அதிகாரமின்மையும், சுதந்திரமும் அற்றவளாக, ஒரு இரண்டாவது நிலையில் இருக்கவேண்டிய ஒரு சமூகதிலிருந்து மீண்டுவர எத்தனிக்கும் பெண்களின் மொழியில் சோகமும், வலியும், கோபமும், தன்முனைப்பும், அடங்கமறுப்பும், துணிவும், கட்டுடைப்பும் காணப்படுவது இயல்பு. ஒரு வேளை இவைதான் பெண்மொழி என்று கூறப்படுகிறதா? இது மொழி வேறுபாடு அல்லவே. பாடுபொருளில் உள்ள வேற்றுமையே.
பிறருடைய கண்களாலேயே இந்த உலகைப்பார்க்கக் கற்றுகொடுக்கப்ட்ட நமக்கு, இந்த சமூகத்தை எமது சொந்தகண்களால் மட்டும் பார்க்க எத்தனிக்கும்போது அது அசௌகரியங்களை உருவாக்கும். பிறகு பழகிவிடும்.
 
நீங்கள் இதுவரை ஐந்து நூல்களை பெரும் ஆரவாரங்கள் இன்றி வெளியே கொண்டுவந்திருக்கின்றீர்கள். இந்த வெளியீடுகளில் உங்கள் அனுபவங்கள் எப்படியாக அமைந்தன?
 
உண்மையில் முதலாவது நூல்தான் நான் ஆர்வக்கோளாற்றில் வெளியிட்டது. அதன் பிறகு நூலாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எதுவும் எழுதவில்லை. எழுதிய கவிதைகளை இணையத்தளத்தில் போடுவதே வழக்கம். எனது நண்பர்கள்தான் அதை நூலாக்க வேண்டும் என்று தமிழகத்தில் நேர்நிறைப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்கள். வெளியீட்டில் மூ.மேத்தா. எஸ்.பொ, பாலுமகேந்திரா, யுகபாரதி போன்றவர்கள் கலந்து சிறப்பித்தது மகிழ்வைத்தந்தது. தொடர்ந்து ”என் ஏதேன் தோட்டம்” கவிதை நூலுக்கு அந்த ஆண்டின் சிறந்த நூலுக்கான சிறப்புவிருது, திருப்பூர் தமிழ் சங்கத்தால் கிடைத்தது. தொடர்ந்து நம்பிக்கையைத் தந்தது.
இந்த நேரத்தில் எனது நண்பர்களுக்கே நன்றி சொல்ல வேண்டும். நோர்வே மண்ணில் ஒரு நடனக்கலைஞராகவே அடையாளப்படுத்தப்பட்ட நான் ஒரு கவிஞராகவே அடையாளப்படுத்தபட விரும்பி இந்த நூல்களின் அறிமுகவிழாவினை சற்று கவனிக்கத்தக்க வகையில்தான் நடாத்தினேன். அதன் பிறகு எழுதிய நூல்கள் எதற்கும் வெளியீட்டுவிழா நடாத்தவில்லை. சில இலக்கிய ஆர்வலர்களுடனும் அவர்களுடைய கருத்துகளோடும் பெற்ற கருத்துப்பரிமாற்றங்கள் மட்டுமே. எந்த ஒரு படைப்பும் விளம்பரத்தின் மூலம் பயனையடையமுடியாது. அந்த நூலுக்கு பயன் இருப்பின் அதுதானாகவே தன் இடத்தைப் பெற்றுக்கொள்ளும். ”விளம்பரத்தில் உங்களைத் தொலைத்துவிடாதீர்கள் அதே நேரம் விளம்பரம் இல்லாமலும் தொலைந்துவிடாதீர்கள்” என்ற வரி நினைவுக்கு வருகிறது.
”விளம்பரத்தில் உங்களைத் தொலைத்துவிடாதீர்கள் அதே நேரம் விளம்பரம் இல்லாமலும் தொலைந்துவிடாதீர்கள்” என்று சொல்கின்றீர்கள். வாதத்தின்படி பார்த்தால் இது முரண் நகையாகப் படவில்லையா ? ஏனெனில் இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் விளம்பரங்கள் இன்றி எவ்வாறு பொருட்கள் நுகர்வோரை சென்றடையும்?
நீங்கள் சொல்வதேனோ உண்மைதான். ஒரு முழுநேர எழுத்தாளன். அல்லது எழுத்தை தனது தொழிலாகக் கொண்டவனுக்கு இப்படியான தேவைகள் உண்டு. அது தவறில்லை.
நான் முழுநேர கவிஞனோ, கலைஞனோ அல்ல. எழுத்தும் கலையும் எனது நேசத்திற்குரியன. நான் யாருக்காகவும் எழுதுவதாக நினைக்கவில்லை. யாருடைய முகவரியும் எனது எழுத்துக்களில் இல்லை. இந்த சமூகத்திற்கு எனது படைப்புகளுக்கான தேவை உண்மையிலேயே இருக்குமென்றால் அது நிச்சயம் அந்த இடத்தைப்போய்ச் சேரும். அல்லது காலத்தால் அழிந்து போகும். விளம்பரத்தால் படைப்புகள் விற்பனையாகலாம், ஆனால் வீரியமானதாகிவிடாது. எழுத்தும் கலையும் ஆன்மாக்களுக்கானது, நுகர்வோர்கான பொருளாக நான் பார்க்கவில்லை.
 
தமிழகத்தின் திரைப்படத்துறைக்கு நீங்கள் பாடல்கள் எழுதியதாக அறியமுடிந்தது .அப்படி எழுதவேண்டிய பின்புலங்கள் எப்படியாக இருந்தன?
நான் ஒரு பாடலாசிரியர் அல்ல. அப்படி எழுதவேண்டும் என சந்தர்பங்களை தேடிப் போனவளும் அல்ல. எனது நன்பர் செந்தூரன் இயக்கிய ஒரு திரைப்படத்திற்கு நட்புக்காக எழுதியபாடல்களும் அதைத் தொடர்ந்து கிளிநொச்சி என்ற குறும்படத்திலும் ஜெய் என்ற மொழியாக்கப்படத்திலும் எழுதினேன். ஆனால் ஒரு பாடலாசிரியர் ஆகுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடுக்க விருப்பமும் இல்லை. தமிழகத் திரைத்துறை என்பது ஒரு கடல். அங்கே எத்தனையோ கவிஞர்கள் பாடல்கள் எழுதுவதற்காக அதையே தம் தொழிலாக கொண்டவர்கள் இருக்கிறார்கள். அந்தக் கடலை எனது வசிப்பிடமாக கொள்ளமுடியாது. அதற்காக திரைப்பாடல் எழுதுதை நான் தவறாகச் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நட்போடு எப்போதாவது கடலில் படகில் போய் வரலாம்.
தமிழகத்து திரைப்படத்துறைக்குப் பாடல்களை எழுதிய நீங்கள் ஈழத்து திரைப்படத்துறைக்கு செய்த பங்களிப்புத்தான் என்ன?
முதல் கேள்வியிலேயே சொன்னது போல திரைத்துரைக்கு பாடல் எழுதுவது எனது ஆர்வம் அல்ல. அதனால் நான் எந்தத் திரைத்துறையையும் தேடிப்போகவில்லை. ஈழத்து திரைப்படத்துறைக்கும் நான் எந்தப்பாடலும் எழுதவில்லை. நான் அப்படி எழுதுவதற்கு நான் ஒரு பாடலாசியரும் இல்லை. நோர்வே மண்ணில் வாழும் இசையமைப்பாளர்களின் இறுவட்டுகளுக்கு எழுதிய அனுபவம் உண்டு. யாராவது கேட்டால் மட்டும் எழுதுவதுண்டு.
உங்கள் பார்வையிலே பெண் விடுதலை அல்லது பெண்ணியம் எப்படியாக இருக்கின்றது?
சிலகாலமாக இந்தசொல் எனக்குள் ஒரு வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண் என்பவள் சுதந்திரமாக, ஒரு மனுசியாக அவள் அவளாக, எவ்வித குற்ற உணர்வும் இன்றி தன்னையும் தன் சார்ந்த விடயங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு அக்கறையுண்டு. இது தொடர்பாக பல கவிதைகள் நான் எழுதியிருக்கிறேன். சில அரங்கப் படைப்புகளையும் கொண்டுந்திருக்கிறேன். அதிதீவிரமான போக்கு என்னுடையதில்ல என்றாலும் பெண்ணியக் கருத்துக்களைக் பேசுவதாலேயே ஒருசிலரால் தொடர்ந்தும் கேலிக்கும், சொற்தாக்குதலுக்கும் ஆளாகவேண்டியிருக்கிறது.
ஆண் செய்வதையெல்லாம் ஒரு பெண் செய்ய வேண்டும் என்று நினைப்பவள் அல்ல நான். அதன் தேவையுமில்லை. ஆண் செய்ய முடியாததைப் பெண் செய்பவள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எந்த ஒரு இடத்திலும் சமமானவர்கள் ஆகமுடியாது. யாரும் ஒருவருக்கொருவர் மேலானவர்களோ அல்லது கீழானவர்களோ ஆகமுடியாது. நாங்கள் வேறு வேறானவர்கள். பெண்ணியம் என்பது பெண்ணானவள் எப்படி இருக்கிறாளோ அப்படியே அவளை முழுமனதோடு சமூகம் எற்றுகொள்ள வைப்பதே என்னைப் பொறுத்த வரையில் பெண்ணியம்.
பெண் என்பவள் உடல் சார்ந்தும், உடமை சார்ந்தும் இருக்கும் பார்வை இல்லாமற்போகாது. அதை கடந்து போக நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தத் துணிவு வேண்டும். சிலர் நினைப்பது போல, ஆண்களுக்கு நிகராக மது அருந்துவதோ, ஆண்களைப் போல நடை, உடை பாவனை செய்வதோ, இன்னொரு மனிதன் மீது அதிகாரத்தை பிரயோகப்படுத்துவதோ அல்லது பெண்கள் தம் அழகு பொருட்களை நிராகரிப்பதோ, உடைக்குறைப்போ, வாகனம் ஓட்டுவதோ, சமயல் வேலைகளை பிரித்துக்கொடுப்பதோ அல்லது வலுகட்டயமாக கவிதைகளில் உடல்சார்ந்த சொற்களை எழுதுவதோ அல்ல பெண்ணியம்.
எமது சமூகத்தில் ஆண்கள் அளவிற்கு பெண்களின் சிந்தனைப்போக்கும் ஒரே போலதான் இருக்கிறது. பலசமயம் பெண்கள்தான் தமக்குத் தாமே எதிரிகளாக இருந்துவிடுகின்றனர். பெண் குறைவானவளாகவே இருக்கவேண்டும், உடல்சார்ந்து தன்னை ஒடுக்கிக்கொள்ள வேண்டும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அவள்தான் தூக்கிநிறுத்தவேண்டும் என்ற சிந்தனை இருக்கும்வரை, பெண்ணிய சிந்தனைகளையுடைய பெண்களும் சற்று கேவலமானவர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்பது எனது சொந்த அனுபவம்.
இயற்கையை தரிசிக்கக் கற்றுக்கொண்டாலே பாதி பிரச்சனைமுடிந்தது. காதலை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டால் மீதி பிரச்சனையும் முடிந்துவிடும். இருந்தாலும் எனது தங்கன்மாமா எனக்குச் சொல்வது போல இதையெல்லாம் தாண்டி சமூகத்தில் வர்க்கப்பிரச்சனை ஒழியாமல் பெண்ணியச்சிந்தனை சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
பெண்கவிஞர்கள் ஒரு சிலரின் ஆண் பெண் அந்தரங்க அவையவங்களின் கவிதை வெளிப்பாடு பற்றிய உங்கள் புரிதல்கள் எப்படியாக இருக்கின்றது?
உடல்சார்ந்த சொற்பிரயோகங்களைப் பாவிப்பது படைப்பை வீரியமானதாக, காத்திரமானதாக, ஆக்குகிறது என்ற கருத்தோடு இருப்பவர்கள் சிலர். ஆனால் இது தன்னை சமூகத்தின் மத்தியில் கவனத்தைப் பெறவைக்கும் உத்தியாகவும் பாவிக்கபடுகிறது. அந்த கவனத்தை சமூகமும் கொடுத்திருக்கிறது. ஆனால் இந்தச் சொற்கள் பாவிக்ககூடாது என்று எதை வைத்து நாம் சொல்வது ? இந்தக் கேள்விகூட இந்த சொற்களை ஆண் பாவிப்பது பற்றியல்ல ஒரு பெண் பாவிப்பது பற்றயதுதானே? இல்லையா?
இந்த இடத்தில் ஆண் தனக்கு சாதகமான அரசியலையும், பெண் தனக்குச் சாதகமான அரசியலையும் நுணுக்கமாக கொண்டுசெல்லும் உத்தி ஓடுகிறது. எனக்கு ஏனோ இப்படியான சொற்களை பாவிப்பவர்களும் சரி எதிர்பவர்களும் சரி எல்லாரும் ஒன்றுதான்.
எந்த ஒரு படைப்பும் உண்மைத்தன்மையோடு படைக்கப்படும்போது, எழுத்தாளரும் மொழி ஆளுமையுடையவராக இருக்கும் பட்சத்தில் அந்தந்தச் சொற்கள் சரியான இடத்தில் வந்தமரும். உடல் சார்ந்த சொல் என்றாலும் சரி அல்லது வேறு சொற்களாக இருந்தாலும் சரி தேவையற்றுத் திணிக்கப்படும் சொற்கள் எந்தப்படைப்பையும் வீரியம் அற்றதாக்கிவிடும். அப்படியான படைப்புகளை நாம் இனம் காணுவது ஒன்றும் கடினமல்ல.
சொற்களில் ஏதுமில்லை ஒட்டுமொத்த படைப்பு வாசகனிடத்தில் எதிர்பார்த்த அனுபவத்தை உண்டு பண்ணியதா என்பதே கேட்கப்படவேண்டியது. இந்த சொற்பிரயோகங்களுக்குள் எல்லாம் தொங்கிக் கொண்டிருக்கமுடியாது. படைப்பாளிகளுக்கு சமூகப் பொறுப்பிருக்கிறது. வாசகர்களுக்கும்தான்.
பல வருடங்களைப் புலம்பெயர் சூழலில் கடந்திருக்கும் நீங்கள் புலம்பெயர் சூழலில் பெண்களின் இருப்பு பற்றி……..
ஒட்டுமொத்த பெண்களையும் நாம் ஒரு இடத்தில் நிறுத்திவைத்து பேசமுடியாது. எமது முதல் தலைமுறையினர் பாவப்பட்டவர்கள். அவர்களுடைய வாழ்வு குறுகிய வட்டத்திற்குள் விழுந்துவிட்டது. போரில் தம்மை தொலைத்தவர்கள். இன்னும்
தம்மைத் தேடிஅலைபவர்கள்.
ஆரம்பகாலத்தில் தமதும் தமது உறவுகளின் பொருளாதார இருப்பினையும் நோக்கி பயணித்தவர்கள் தற்போது தமது பொருளாதார வளர்ச்சியை அனுபவித்துவிடும் மனிதர்களாக இருக்கின்றனர். மேலத்தேய நாடுகளில் வாழ்ந்தாலும் அந்நாட்டு மக்களுடன் ஒன்றிவாழும் சூழலோ தன்மையோ கிடைக்கப்பெறாதவர்கள். தமது குழந்தைகளின் வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு மட்டுமே உழைத்தவர்கள். ஒரு போர்சூழுலில் அனைத்தும் இழந்து  வந்தவர்களிடம் வேறு எதைத்தான் நாம் எதிர்பார்க்கமுடியும்? சமூகம்பற்றிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாவிட்டாலும், தம்நாட்டு அரசியலில் மட்டும் ஆர்வம் உள்ள பெண்கள் உண்டு. அவர்களுக்கான பொருள், பொழுதுபோக்க தமிழ் தொலைகாட்சிகள் தரும் நாடகங்கள், நிகழ்வுகள் மற்றும் விழாக்கள், விடுமுறை வந்தால் சுற்றுலாக்கள் என அவர்களுடைய காலங்கள் கரைந்தோடுகிறது.
அடுத்த தலைமுறைக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் பெண்களே முன்னிலை வகிக்கிறார்கள். கலைகளை வளர்பதில்கூட பெண்களின் பங்கு அளப்பரியது. ஆனால் அவை தொடர்பான தேடலோ, வளர்ச்சியோ சொல்லும்படியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எமது முதல் தலைமுறையினர் பெரும் உழைப்பாளிகள். இவர்களிடம் சமூகம் பற்றியோ, இலக்கியம், பற்றியோ அல்லது படைப்புகள் பற்றியோ
அதிக வளர்ச்சியில்லை. அது அவர்களது உலகமல்ல.
இரண்டாம் தலைமுறைபற்றி அதிகம் சொல்லத்தெரியவில்லை. இரண்டாம் தலைமுறையில் பெண்கள் கல்வி ரீதியில் தம்மை வளர்த்திருக்கிறார்கள். எமது முதல் சந்ததியினரின் சிந்தனைகள் புகுத்தப்படாதவரை இவர்களுடைய சிந்தனைத்திறனும், சமூகச்சிந்தனையும் எம்மில் இருந்து வேறுபடுகிறது. அதை நாம் புரிந்துகொள்ளாத பட்சத்தில் முதல் சமூகத்தினர் கட்டமைத்த எமது சமூகத்திலிருந்து அவர்கள் விலகிக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
புலம்பெயர் பெண்ணிய அமைப்புகள் அல்லது சங்கங்கள் காத்திரமாக இயங்கி வருகின்றனவா?
நான் நோர்வே மண்ணில் உள்ள சில பெண்ணிய அமைப்புகளைப் பற்றி மட்டும்தான் குறிப்பிட முடியும். நான் எந்த ஒரு அமைப்பிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்வில்லை. காரணம் எனக்கு இந்த அமைப்புகளில் நம்பிக்கை இல்லை. அமைப்புகளில் உள்ளவர்கள் ஆர்வம் உள்ளவர்களே ஆனால் பெண்கள் பற்றி விழிப்புணர்வு உள்ளவர்களாக அறியமுடியவில்லை. ஆனால் இந்த அமைப்புகள் பெண்களுக்கான, சிறுவர்களுக்கான பல உதவித்திட்டங்களை செயலாற்றி வருகிறது. பெண்கள் அமைப்பு என்ற பெயர் ஏன் என்று அவர்கள் தேடும்வரை ஒரு உதவியமைப்பாக, ஒரு களிப்பூட்டும் கலைநிகழ்சிகளை வழங்கும் நிறுவனமாக, வளுவளுப்பான காகிதத்தில் ஆண்டுமலர்களை கொண்டுவரும் ஒரு அமைப்பாக மட்டுமே இவை இயங்கமுடியும்.
சில பெண்ணிய அமைப்புகள் வேறு அமைப்புகளின் கீழ் நடாத்தப்படுகிறது. அப்படி நாடாத்தப்படும் பெண்ணிய அமைப்பு எப்படி சுதந்திரமாக இயங்கமுடியும் ? சுதந்திரமாக இயங்காத பெண்களுக்கான அமைப்புகளில் என்ன பயன் ? சங்கங்கள் பற்றி சொல்லமுடியாது. அது ஒவ்வவொன்றும் தனக்கு தேவையான ஒவ்வொரு அரசியலோடு இயங்குகிறது. ஓன்றோடு ஒன்று வேறுபடுகிறது. குழுக்களின் குறியீடாக அதன் வெளிப்பாடாக இயங்குகிறது.
நடன அரங்கில் இலக்கியத்தை மொழிபெயர்க்கும் பொழுது நூறு விகித உணர்ச்சி பாவங்களை வெளிப்படுத்த முடியுமா?
இலக்கியம், நடனம் இரண்டும் எனக்கு பிடித்தமான கலைவடிவம். இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டபின் சில இலக்கிய வடிவங்களுக்கு நடன வடிவம் கொடுக்க முயற்சி செய்திருக்கின்றேன். இலக்கியம் நடனம் தொடர்பாக எனது சொந்த அனுபவத்தைத்தான் கூறலாம்.
எழுத்து, இலக்கியம் என்பவைகளை நடனத்திற்கு மாற்றுவதில் ஆர்வம் கொண்டவள் என்பதால், ஆர்வக் கோளாறின் காரணமாக சில இலக்கியப் படைப்புகளை அரங்க ஊடகத்திற்கு மாற்றியமைத்திருக்கின்றேன். எழுத்து இலக்கியங்களை அரங்க ஊடகத்திற்கோ, ஒளிஒலி படைப்புகளுக்கோ மாற்றும் போது, இரசிகனுக்கு வாசிப்புத்தரக்கூடிய அனுபவத்தை, காட்சிகளை, கற்பனை ஓட்டத்தை மட்டுப்படுத்தி, புதுவடிவம் பெற்ற இலக்கியம் சிதறுண்டு விடுகிறது.
நூறு சதவீத பாவம் என்று நாம் அளவுகோள்களை பாவத்தில் நிறுவவும் முடியாது. நடனக்கலைஞர் திறமையானவரான இருக்கும் பட்சத்தில் தனது முழுத்திறமையையும் அவர் வெளிக்காட்டினாலும், ஒரு சிறந்த வாசகனாகவும், இரசிகனாகவும் இருக்கும் பார்வையாளர்களால் அரங்க நிகழ்வு முழுமையான அனுபவத்தை கொடுக்க முடியாததை உணரமுடியும். எழுத்து வடிவம் என்பது வாசகனுக்கு விரிந்த கற்பனை வளத்தை தரக்கூடியது. அரங்கம் அதை ஒரு சதுரத்திற்குள் அடக்கி இதுதான் இப்படித்தான் என்று சொல்லி முடித்துவிடுகிறது. உதாரணத்திற்கு கல்கியின் ’சிவகாமி’ பற்றிய வாசகனின் கனவுவடிவத்தைத் தாண்டி அத்தனை இலகுவாக அவளை அரங்கில் கொண்டுவந்துவிடமுடியாது.
எனது எந்த ஒரு படைப்பும் வெற்றி கண்டதாக என்னால் சொல்ல முடியாது. எந்த ஒரு எழுத்து இலக்கியத்தையும் பிற ஊடகங்களிற்கு மாற்றுதல் என்பது சவால்கள் நிறைந்தது. வாசிப்பனுபவத்தை ஈடுசெய்யும் ஊடகங்கள் இன்னும் எம்மிடம் வளரவில்லை, ஆதலால் பார்ப்பதைக் கேட்பதைத் தாண்டி வாசித்தலே பெரும்அனுபவத்தை தருவன என்பது ஒரு வாசகனாகவும் ஒரு படைப்பாளியாகவும் இரசகையாகவும் என்னால் கூறமுடியும். அதற்காக இலக்கியங்களை நடனத்தில் கொண்டுசெல்லும் முயற்சியை விட்டுவிட முடியாதல்லவா ?
நடன அரங்கத்தில் இலக்கிய மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட உங்கள் அனுபவங்கள் எப்படியாக இருக்கின்றது?
பரதநாட்டியக் கலைவடிவம் என்பது ஒரு குறுகிய கருப்பொருளோடு உறைந்துபோன கலைவடிவமாகப் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இக்கலைக்கான ஒரு குறிப்பிட்ட சமூகமும் இருந்துகொண்டே வந்திருக்கிறது. பல நடனக்கலைஞர்கள் பல புதிய முயற்சிகள் செய்திருந்தாலும் அவைகளால் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தமுடியவில்லை.
பக்தியும், காதலும் மட்டுமே பிரதான கருப்பொருளாக இருக்கும் கலைவடிவத்தில் பல இலக்கிய வடிவங்களையும் கொண்டுவரவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. எமது வட்டத்திற்குள்ளே ’சங்ககாலம் முதல் பாரதிவரை’ ’தமிழ் இலக்கியத்தில் பெண்’ ’பாரதி தமிழிசையில் ஆடல் ஆடங்கேற்றம்’ ’சிவகாமியில் சபதம்’ போன்ற முயற்சிகள் செய்திருந்தாலும் எனதளவில் அவை திருப்பதியளித்ததாகச் சொல்லமாட்டேன். ஆனால் இந்த முயற்சிகள் எனது மாணவர்களுக்கு ஆர்வத்தை அளித்திருக்கிறது என்பதும், பார்வையாளர்கள் மத்தியில் இந்த முயற்சிகளில் தமக்கு பரதநாட்டியத்தை விளங்கி இரசிக்கமுடிகிறது என்றும் அறியமுடிந்தது. எப்போதும் ஒரு கண்ணன் பாடலை எடுத்துக்கொள்ளாமல், இப்படியான புதிய முயற்சிகள் மூலம் என்னை நான் மேலும் வளர்த்துக்கொள்ளவும் மாணவர்களுக்கு எமது இலக்கியங்களை அறிமுகப்படுத்தவும் முடிந்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல் புதிய கருப்பொருட்களையும் நாம் பரதநாட்டியத்தில் செய்யமுடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது அடுத்து சந்ததியினர் பக்தியையும், காதலையும் மட்டும் மையப்பொருளாக வைத்து இந்தக்கலையை வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை. இங்குள்ள சமூகமும் எமது கலையை அண்ணார்ந்து பார்க்குமளவு நாம் தமிழர் கலைவடித்தை கொண்டுவரவேண்டும். அது அடுத்த சந்ததியினால்தான் முடியும். அதற்கான அடித்தளம் நாம்தான் போடவேண்டும் என்ற பிரக்ஞையோடு செயற்படவேண்டும் என்று நினைக்கிறேன். இதன் ஆரம்பமே இலக்கிய வடிவங்களை நடன வடிவமாக்கும் முயற்சி.
இனி அடுத்த முயற்சியாக புகழ் பெற்ற நோர்வேஜிய எழுத்தாளர் ஹென்றிக் இப்சனின் (Henrik Johan Ibsen)  நாடகவடிவத்தை நடனமாக்கும் முயற்சியில் இருக்கிறேன். தற்போது அதன் முதன் கட்டமாக மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன்.
நடனக்கலையில் சிருங்கார ரசபாவம் பற்றிய உங்கள் பார்வைதான் என்ன?
எனக்கு மிகவும் பிடித்தமான பாவம். சிருங்காரம் என்பது காதல் பற்றியது. இந்த உலகத்திற்குத் தேவையானதும் காதல்தான். நடனத்தில் இறைவனே ஆணாகவும் நடன மாது பெண்ணாகவும் சித்தரித்தே இந்த பாவம் அமைவதுண்டு. அப்படியில்லாமலும் நாம் இதை வெளிப்படுத்தலாம். என்னைப் பொறுத்தவரையில் இறைவனைவிட சகமனிதர்களுக்கிடையிலான காதலும் இந்தச் சமூகத்தின் மீதான காதலுமே இன்று முக்கியத்துவம் பெறுகிறது. நான் பேசும் விடயம் இரண்டு உடல்களுக்கானது அல்ல. சர்வ உயிரினங்களுக்குமானது. புலம்பெயர் தேசத்தில் வளர்ந்துவரும் எமது சந்ததியினர் எத்தனைதூரம் கடவுளுக்கும் தமக்குமான காதல் என்பதை புரிந்து செய்கிறார்கள் என்ற கேள்வி இருக்கிறது. சமயச்சிந்தனையை வாழ்வியலாகக் கொள்ளாத சமூகத்தில் வளரும் ஒரு குழந்தைக்கு இது எத்தனைதூரம் சுவாரசியமானது, தேவையானது என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும்.
உணர்வுபூர்மாக செய்யப்படாத ஒன்றின் பலன்தான் என்ன? அதைத்தாண்டி நாம் பயணிக்க வேண்டும். நான் நாஸ்தீகம் பேச வரவில்லை. யதார்த்தம் பற்றி புரிந்துகொள்ளச் சொல்கிறேன். காதலை நேசம் என்றும் சொல்லாம்.
சிருங்காரம் என்பது அன்பு. அன்பு என்பதற்கு மறுபெயர் குற்றம் என்று எனது நண்பர் ஒருவர் கூறுவார். அன்பும் குற்றமும்தான் உலகத்தின் இயக்கம். உலகத்தின் இயக்கமே சிருங்கார ரசத்தில்தான் இயங்குகிறது. அதில பலகோடி அழகியல் இருக்கிறது.
உங்கள் நடனக்கலை மூலம் சிறுவர்களுக்கு எப்படியான புரிதல்களை ஏற்படுத்துகின்றீர்கள்?   
கலை என்பது புரிதலை எற்படுத்துகிறதா என்பதைவிட அது அனுபவத்தை ஏற்படுத்துகிறதா என்பதே முக்கியம். தவறான புரிதல்கள் இல்லையென்றால் ஒரு விளக்கம் தரலாம்.
கடவுளை அடைவது பேரின்பம், உடலளவில் பெறக்கூயடிது சிற்றின்பம் என்று கூறப்படுவதின் பொருள், எம்மை நாம் மறந்த நிலையில் இருக்கக்கிடைப்பதே. ஒருவிடயத்தை நாம் இரசிக்கும் போதுகூட எம்மை
ஒருசிலவினாடி மறந்துவிடுகிறோம் அல்லவா ? கலையின் மூலம் ஒருகலைஞன் இந்த நிலையை அடைகிறான்.
நடனம் மட்டுமல்ல கலைகள் என்பன தம்மை மறந்த இன்பநிலையைக் கொடுப்பன. கலைஞர்கள் பலருக்கு தமது கலை என்பது ஒரு போதையைத் தருகிறது. அப்படி உணராத ஒருவன் ஒரு உண்மையான கலைஞனாக முடியாது. நீங்கள் புரிதல்கள் என்று கேட்பது எது தொடர்பான புரிதல்கள்? நாட்டியவகை சார்ந்த? சமயங்கள் சார்ந்த? அழகியல் சார்ந்தா?
அதாவது இரட்டை கலாச்சாரத்தில் இருக்கும் தமிழ் சிறுவர்களுக்கு  நாட்டியம் சமயம் அழகியல் ஆகியவை எந்தளவு தூரத்துக்கு சென்றுள்ளன?
நடனக்கலையை ஒரு குழந்தை கற்பது சமயச்சிந்தனைக்காகவோ, அல்லது அழகியல் சிந்தனைக்காகவோ என்று சொல்லும் ஆசிரியை நான் அல்ல. இந்தச் புலம்பெயர் சூழலில் அவை நிச்சயமாக தாயகத்திலிருந்து வேறுபடுகின்றன. புலம் பெயர் சூழலில் நடனம் தொடர்பாக ஒரு புரிதல் இருக்கிறது. அதுதான் தேர்வு. தேர்வுகளுக்காக நடனத்தைக் கற்றுக்கொள்வது. தேர்வுகளால் தமது தரத்தினை அளவிட்டுக்கொள்வது. தேர்வு முடிந்ததும் தேடலையும் முடித்துக்கொள்வது.
கலைகள் என்பன ஆன்மாவோடு செயற்படவேண்டிய ஒன்று. அது எதைப்பற்றியும் பேசலாம், எந்த விதத்திலும் ஆடப்படலாம், எந்த மொழியிலும், மொழியற்றும் ஆடப்படலாம், அந்த சில மணிநேரங்கள் நீ உன்னை மறந்து இருந்தாயா, பார்வையாளர்கள் தம்மை மறந்து நடனத்தோடு இருந்தார்களா, நேர்த்தியும் அழகியலும், வாழ்தலும் இருந்தனவா? இப்படியான ஒரு நடனத்தை உன்னால் படைக்க முடிந்ததா? அதுதான் கலை. அதையே எனது மாணவர்களுக்கு கற்றுகொடுத்துக் கொண்டிருக்கிறேன். கற்றுக்கொடுக்கவும் ஆசைப்படுகிறேன்.
இவை தாண்டி பரதம் கற்பதன் மூலம் சில விடயங்கள் இயல்பாக நடக்கின்றன. அது எமது வேர்களை அறிதல். பிற சமூகங்களுக்கு அதை ஆளுமையுடன் எடுத்துவருதல், கூட்டுமுயற்சி, ஆற்றும் திறன் போன்ற விடயங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கிறது.
உங்கள் நடனம் வேற்று மொழியினரான நோர்வே மக்களுக்கு எவ்வளவு தூரத்துக்கு சென்றடைந்துள்ளது?
இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அதற்குரிய முயற்சிகள் தற்போதுதான் தொடங்கியுள்ளேன். இருந்தும் பல வருடங்கள் ஆகலாம். மற்றபடி நோர்வேஜிய மேடைகளில் நிகழ்வுகள் பல நடத்தியிருக்கின்றேன். அந்த நிகழ்ச்சிகள் ”ஓ இதுதான் பரதநாட்டியமா?” என்ற மனநிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்குமே ஒழிய பரதத்தை அவர்களிடம் சென்றடைந்ததாக சொல்ல முடியாது. இந்த விடயத்தை கொண்டுவர, சரியாக வழிநடத்தப்பட்ட தேடுதல் உள்ள எமது அடுத்த சந்ததியினரால்தான் சாத்தியமாக்க முடியும். அதனால்தான் சொல்கிறேன் நமக்கு நாமே புகழ்பாடிக்களிக்காமல், அடுத்த சந்ததிக்கு இதன் முக்கியத்துவத்தை புகுத்தவேண்டும்.
மேலைத்தேய நடனமுறைகளுடன் பரத நாட்டியம் கலந்த புதுவடிவங்களை புகுத்தும்பொழுது ஏற்பட்ட அனுபவங்கள் எப்படியாக இருந்தது?
சகிக்கமுடியாமல் இருக்கிறது. இரண்டு வடிவங்களையும் சரிவரக்கற்காமல் ஏதோ மாற்றம் என்ற பெயரில் செய்யும் FUSION வகைகள் எல்லம் பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. மாற்றம் என்பதை தவறான வகையில் புரிந்து கொண்ட சிலரின் செய்கைகள் பிறந்தநாள் விழாக்களில் வேண்டுமானால் சகிக்கலாம். முதலில் மாற்றங்கள் கொண்டுவருதல் பற்றிய பிரக்ஞை தேவை. மாற்றம் என்றால் எப்படி இருந்தால் அதன் பயன் என்ற விளக்கம் இதை செய்பவர்களுக்கு வேண்டும்.
மற்றபடி பரதநாட்டியம் மற்றும்  FUSION முறையில் செய்த இரண்டு நாடகங்களான  ”குருசேத்திரம்’ ’புத்தன் உயிரோடு இல்லை’ ஓரளவு வரவேற்பைப்பெற்றது.
நீங்கள் நடாத்தும் நடன அரங்கிலே சனங்களின் ரசனைகள் எப்படியாக இருக்கின்றன?
தங்கள் குழந்தைகளை மேடையில் காண்பதற்கே பெரும்பான்மை மக்கள் வருகின்றனர். சிலர் அழைப்பின் பேரில், பலர் தம் குழுசார்ந்து அந்தந்த குழுவின் நிகழ்வுக்கு அந்தக் குழுவைச்சேர்ந்தவர் போகின்றனர். கலை என்பது பலருக்கு ஒரு கௌரவம் அவ்வளவே. கலை ரசனையோடு வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மிகக்குறைவான விகிதமே. அதற்காக அவர்களைக் குறைசொல்லவும் கூடாது. மற்றும் தமிழகப் பிரபலங்களின் நிகழ்வுகள் பொறுத்து பார்வையாளர்கள் வருவர். பார்வையாளர்களை நோக்கி கலையின் தரத்தையும் நாம் உயர்த்த வேண்டும். பார்வையாளர்களை மட்டும் நான் குறைசொல்ல மாட்டேன்.
ஆதற்காக மக்கள் கேட்பவை எல்லாம் கொடுப்பவன் கலைஞனல்ல. தான் கொடுக்க விரும்பியதை மக்கள் இரசிக்கும் வண்ணம் கொடுப்பதென்பது கலைஞனுக்கு சவால் நிறைந்தது.
நடனக்கலையில் உடல் மொழியின் ஆதிக்கம்தான் என்ன?
என்னை பொறுத்தவரை பரதத்தில் முத்திரைகளைவிட உடல்மொழிதான் இன்றியமையாதது. முத்திரை என்பது நாட்டியத்தின் மொழி என்று கூறுவர். நான் அப்படிச் சொல்லமாட்டேன். முத்திரைகள் என்பது மொழியல்ல அது ஒரு மொழியின் எழுத்துக்கள் மட்டுமே. எழுத்துக்களால் மட்டும் ஒன்றை புரியவைத்து விடமுயடியாது. அதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதைப்பொறுத்தே. அதனால் உடல்மொழியில்லாமல் முத்திரைகள் நடனத்தை முழுமையடையச் செய்யாது.
முத்திரைகள் இல்லாது உடல்மொழி இயங்கும். ஆனால் உடல்மொழியில்லாமல் முத்திரையினால் பயன் இல்லை. இந்த உடல்மொழியின் பயன் என்பது எனது நடனத்திற்கு மட்டுமானது அல்ல, கவிதைகளிலும் அது நுணுக்கமாகக் வெளிப்படவேண்டும். முத்திரைகள் ஒரு கலைஞன் தான் கற்றுக்கொண்ட பயணின் ஆழத்தை காட்டும். உடல்மொழி அவனது அழகியலையும் படைப்பாற்றலையும் காட்டும்.
நீங்கள் ஓர் புதுமையான பெண்ணாக இலக்கியப் பெருவெளியில் முகத்தைக் காட்டிக்கொண்டு ஒரு பரத நாட்டியக்கலைஞராக உருவாக வேண்டியதன் பின்னணிதான் என்ன?
ஓ, அப்படியா? புதுமைப்பெண்கள் எந்தகலையைக்  கற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது? புதுமைப்பெண்ணுக்கு விரைவிலக்கணம்தான் என்ன? தெரிந்தவர்கள்தான் சொல்லவேண்டும்.
யார், பாரதிகண்ட புதுமைப்பெண்ணா? அல்லது யார்கண்ட புதுமைப்பெண்? ஏற்கனவே நான் இது பற்றி எனது கவிதையொன்றில் எழுதியிருக்கிறேன்.
”பாரதி பெண் நானில்லை!
 
படைத்த பிரம்மனும் கூட
வரையறுக்க முடியா என்னை
சிந்தனை உளிகொண்டு
அறிவு விரல்களால்
என்னை நானே செதுக்கி
நிமிர்ந்து நிற்கும்

எனது பார்வையில் பெண்நான்.”
என்னைப் பொறுத்தவரை நான் எப்படி இருக்கவேண்டும், என்ன செய்யவேண்டும் என்று நினைகிறானோ அதை செய்யும் ஆளுமை பெற்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன். அந்த இடத்திற்கே இன்னும் வந்துசேரவில்லை.
பரதநாட்டியம் தாசிகளால் ஆடப்பட்டதாக இருக்கலாம், அது பார்ப்பனியர்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக இருக்கலாம், அல்லது ஒருதனிப்பட்ட மதத்தையும் புராணங்களையும் பரப்புவதாகவும் இருக்கலாம் அல்லது பணம் படைத்த மேல்தட்டு வர்க்கத்தின் கலையாக இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி வர யாரேனும் சிறுமுயற்சியேனும் எடுக்கக்கூடாதா என்ன? இதெல்லாம் ஒரு சாட்டே தவிர ஒரு பொருட்டல்ல. ஆர்வமும் திறமையும் இருப்பின் ஒரு பருத்தி துணியுடுத்தி இடுப்பில் கட்டிய துண்டுடன் கூட யாரும் ஆடமுடியும். எதையும் ஆடமுடியும். பரதத்தை பரிசுத்தமாக அப்படியே காவிச்செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள்தாம் அதிகம். நான் அதனை ஒரு மொழியாக ஒரு ஊடகமாகப்பார்க்கிறேன். கலாசாதனா என்ற பெயர் வைத்ததே அதன் நோக்கத்தோடுதான். சாதனா என்றால் பயிற்சி, ஊடகம், சாதனை, சக்தி போன்ற அர்த்தங்கள் உண்டு. கலைகள் எல்லாம் ஒரே தரம்தான் அதனை கையாளுவதில்தான் மீதம் இருக்கிறது. நடனம் என்பது ஒரு விடுதலையின் முதல் அசைவு. உங்களுக்குத் தோன்றியதை யாருமில்லததொரு பெருவெளியில் நின்றாடுவது போல கூச்சலிடுங்கள் ஆடுங்கள். அவை முழுமையான வாழ்தல் எனப்படும்.புதுமைபெண், புதுமையில்லாதபெண் என்பதெல்லாம் அதைப் பற்றி பேசுபவர்களிடமே கேளுங்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று.
இலக்கியப் பெருவெளியிலும் நடனத்துறையிலும் உங்களுக்கு ஆதர்சங்கள் என்று யாராவது இருந்திருக்கின்றார்களா?
நிச்சயமாக இருக்கிறார்கள். இலக்கியத்தில் முதலில் புதுமைபித்தன், பாரதி, பிரமிள். மனநிலையைச் சமச்சீராக வைத்திருக்க எஸ்.ரா, மனுஸ்யபுத்திரன், கவிஞர் அனர் என்று பட்டியல் போடலாம். ஒருவித மயக்கநிலையில் படிக்க கல்கி, ஜெயகாந்தன், மு.மேத்தா அதைவிட கே டானியல். பிறமொழி எழுத்துக்களில் கவர்ந்தவர்கள் முகமது பசீர், தத்தொய்வெஸ்கி. சற்று நாட்களுக்கு முன் ஒரு நண்பர் பரிந்துரையின் பேரில் அலெசான்ட்ரோ பாரிக்கோவின் “பட்டு” ம், சினுவ அச்சிபியின் “சிதைவுகள்” மிகெய்ல் நைமியின் “அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்“ மற்றும் கலீல் ஜிப்ரானும் படித்தேன். பிடித்திருக்கிறது. அதற்கு மேலும் கூட பல எழுதாளர்கள் வியப்படையச் செய்திருக்கிறபர்கள். இதற்கு அதிகமாக இன்னும் படிக்கவில்லை. மிகவும் தரமான நூல்கள் என்று சொல்பவை பல எனக்குப் படிக்க கடினமாகவே உள்ளது. சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளை நிறையப் பிடிக்கும்.
நடனத்துறையில் முக்கியமாக எனது குரு. மைதிலி இரவீந்திரா. ஒரு குருவாக என்னை வியக்க வைத்த சீலா உன்னிக்கிருணன், ஆணின் வேகத்தையும் பெண்ணின் ஆதங்கத்தையும், பாவத்தை உணர்வுபூர்வமாக செய்வதில் நர்த்தகி நடராஜ், மேலும் ரமா வைத்தியநாதன் அவர்களையும் சொல்லலாம். இவர்கள் அனைவரிடமும் சிறிததளவேனும் நான் நடனநுணுக்கங்களை கற்றதில் பெருமையுண்டு. இவர்களைத்தவிர நான் மேலும்;  சந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் ஆசைப்படுவது பத்மா சுப்ரமணியம் மற்றும் ஜானகி ரங்கராஜன்; அவர்களின் நுணுக்கங்களையே.
இலக்கியத்திலும் சரி, நடனத்துறையிலும் சரி மேலும் என்னை வளர்த்துக்கொள்ள எப்போதும் என்னோடு இருந்து வழிநடத்தும் பேராசிரியர் இரகுபதி பொன்னம்பலம் அவர்களை நிறையப்பிடிக்கும். அவரைத்தாண்டித்தான் மற்றவர்கள் யாரும் என்றும் தோன்றும்.
தரமான நூல்கள் என்று சொல்பவை பல உங்களுக்கு படிக்க கடினமாக உள்ளது என்று குறிப்பிடுகின்றீர்கள். இதை உங்கள் வாசிப்பு அனுபவ குறைபாடு என்று எடுத்துக் கொள்ளலாமா?
அப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். எனக்கு ஒன்றும் அத்தனை தமிழ் தெரியாது. வாசிப்பின் மூலமே நான் தமிழ் படித்தேன். தொடர்ந்தும் படித்துக்கொண்டிருக்கிறேன். இந்தக் குறைபாடு சாகும்வரை இருக்கத்தான் போகிறது. எப்போதும் சிலநூல்கள் படிக்க கடினமாகவே உணரப்படும். ஆனால் இதை நான் எனது குறைபாடாக நினைக்கவில்லை. புரியாததை நோக்கிச் செல்லும் பயணியாக உணர்கிறேன். இறங்குமிடம் பற்றிய சிந்தனை கடந்து, பாதை நெடுகிலும் சிந்திக்கிடப்பவற்றை ருசிப்பதே பயணத்தின் பேறு.
தனிநடன நிகழ்சிகள் எப்படியாக இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்?
மனிதர்களுக்கு புரியும் விதத்திலும், பார்வையாளர்கள் ஒன்றிப்போகும் விதத்தில் இருக்கவேண்டும். நிறைய அழகியல் இருக்கவேண்டும். நேர்த்தி மிகமுக்கியமாக இருத்தல் வேண்டும். பேச நினைக்கும் பொருளை பேச தயங்காமல் பேசக்கூடிய ஒரு மொழி வளத்தைக்கொண்டிருக்க வேண்டும். நடன வரலாற்றில் ஒரு காலத்தின் பின் கடவுளர்களுக்காக, கடவுளை அடையும் வழியாக மாற்றப்பட்ட இந்த நடனவகை அதை அந்த காலத்தின் புரட்சியாகவே எடுத்துக்கொண்டது என்பதை புரிந்து நாம் நடனத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் அறிந்துகொண்டதன்படி ஆரம்பகாலத்தில் நடனக்கலையை மக்கள் கலையாகவோ, அரசவைக்கலையாகவோ, ஒவ்வொரு நிலத்தில் வாழ்ந்த மக்களும் பேணியிருந்திருக்கிறார்கள். இதுவரை மக்கள் கலையாக இருந்து வந்த கலைகள் இந்தச்சமய மரபுடன் தன்னை இணைத்துக்கொள்கின்றது.
கடவுள் என்ற கருத்து அனைவருக்கும் பொதுவானது, பக்தி என்பது அனைவருக்கும் சொந்தமானது என்ற சமூகப்புரட்சியினுடைய மூலங்கள் கி.பி 400 ஆம் ஆண்டுஅளவிளேயே காரைக்கால் அம்மையார் திருமூலர் (400 – 500ஆம் நூற்றாண்டு) போன்ற முதல்அடியார்களுடன் ஆரம்பமாகின்றது. அதன் பின் அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய நாயன்மார்களினது தேவாரங்களும் (600 – 700ஆம் நூற்றாண்டு) மற்றும் முதல் மூன்று ஆழ்வார்களினது (பூதத்தாழ்வார், பேயாழ்வார்) நாலாயிரம் பாசுரங்கள் இதே காலப்பகுதியில் எழுதப்பட்டன. பக்திமரபின் தொடக்கமே எல்லாமட்டத்திலிருந்தும் வருகின்றது. இக்காலத்தில் பக்திமரபு வளர்ச்சிபெற தாழ்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்களை குறிப்பிடத்தக்கவர்கள். இதில் முக்கியமாக காரைக்கால் அம்மையார் (ஒரு பெண்) அவரைத் தொடர்ந்து திருநாலைப்போவார் – நந்தனார் (பறையர்), கண்ணப்பர் (வேடன்), திருநீலகண்டர் (குயவர்), சண்டேஸ்வரன் (இடையர்) என்பவர்களையும் நாம் குறிப்பிடவேண்டும். இப்படியான நமது சமூகத்தில் இருந்து வந்த ஒரு புரட்சியே இந்தப் பக்திமரபு. இது நடனக்கலையையும் தனது ஊடகமாகக் கொண்டது.
வரலாற்றை புரிந்துகொண்டால் மாற்றங்களும், புரட்சியும் நடனக்கலைக்குப் புதிதல்ல என்று புரியும். இப்படியாக இன்னும் பல புரட்சிகள் வரலாம். வரவேண்டும். ஆனால் இதை புரிந்து கொள்ளும் மனநிலையில் எமது நடனக்கலை சமூகம் இல்லை. அவர்கள் புனிதப்போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். மாற்றம் என்று செய்யப்படும் செயற்பாடுகளும் இப்படியான மனப்போக்கை ஊக்குவிக்கிறது.
இலக்கியத்திலோ இல்லை நடன அரங்கிலோ உங்கள் அரசியல்தான் என்ன?
அரசியல் என்றால் என்ன? இதற்கு பதில் வேண்டுமே முதலில். என்னிடம் அரசியல் இருக்கின்றதா இல்லையா என்றெல்லாம் அறியேன். இது என்னுடைய தாகம், காதல், புலம் பெயர் தேசத்தில் எனது நாட்களைக் கடப்பதற்கும், மனதை சமநிலையில் வைத்திருப்பதற்குமான அரசியல் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன். எழுத்து வாசிப்பு என்பது எனது தனிமையை உணர்வதற்கும், அதை கடப்பதற்குமான வழி. என்னை நான் புரிந்து கொள்வதற்கான யுக்தி.
கலை வேறு வடிவம் கொண்டது. அது புது மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது. தனிமையை அறுத்து திருவிழாக் காலங்களைத் தருகிறது. அழகியல் மூலம் இந்த உலகைப்பார்க்க வைக்கிறது. குழந்தைகளோடு நெருக்கம் தருகிறது. இளைஞர்களின் கனவுகளோடு பயணிக்க முடிகிறது. மோதல்களைத் தருகிறது. காதலுக்கு வடிவம் கொடுக்கிறது. இந்த சமூகத்தை கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கச் சொல்கிறது.
எழுத்து, நடனம் என எனக்கு ஆர்வம் இருப்பதனால் இரண்டையும் அரங்கிற்கு கொண்டுவருகிறேன். இது நாட்டியத்தின் தொடர்ச்சியில் ஒரு சிறு நகர்வாக இருக்கலாம். எதையும் தாண்டி இரண்டிலும் எனது நேசமே இருக்கிறது. எனது ஆத்மாவிற்கான இருப்பைத் தருகிறது.
ஜீவநதி (இலங்கை)
02 பங்குனி 2016
(Visited 8 times, 1 visits today)