அரசியலும் எழுத்தும்

எழுத்தை அரசியலினூடாக அணுகுவது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகின்றமை அருவருப்பை தருகின்றது. அத்துடன் நில்லாது எழுதுபவரின் மேலேயே இலவச பட்டங்களும் தங்கள் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்றால் போல் போடப்படுவது கண்டனத்துக்குரியது. எனக்கு எழுத்து வசப்பபட்டது பாரபட்சமில்லாத வாசிப்பினாலேயே ஒழிய தெரிந்தெடுத்த எழுத்தாளர்களால் இல்லை. ஈழத்து இலக்கியப் பரப்பில் உள்ள சமகால எழுத்துக்களில் அரசியல் வெடில்கள் இல்லாத புனைவுகளே இல்லை. அதற்காக, “எழுதியவர் இன்ன தளத்தில் இருப்பதால் நான் அவருடைய எழுத்தை படிப்பதில்லை” என்ற பொது வெளி வாதம் சிறுபிள்ளைத்தனமானது. கண்டனத்துக்குரியது சாத்திரியின் ஆயுத எழுத்தும் சரி, குணாகவியழகனின் விடமேறிய கனவும் சரி, அவரின் அப்பால் நிலமும் சரி ,சயந்தனின் ஆதிரையும் சரி, ஆறாவடுவும் சரி ,ஷோபாசக்தியின் பெட்டியும் சரி பல இன்னோரன்ன ஷோபாசக்தியின் கதைகளும் சரி, அரசியலை கேள்விக்குட்படுத்துகின்றன. எல்லோரது படைப்புகளையும் நான் வாசிக்கின்றேன். தற்பொழுது ஆதிரை வாசிப்பில் உள்ளது. அதற்காக நான் சயந்தனை, “நீ இன்ன இடத்தில் இருந்து எழுதுகின்றாய். உனது படைப்பை வாசிக்க மாட்டேன்” என்று சொல்ல முடியுமா? சாத்திரியோ ,சயந்தனோ, குணா கவியழகனோ, ஷோபா சக்தியோ வேறானவர்கள். தனிப்பட்ட குணாம்சம் உள்ளவர்கள். அவர்களது படைப்புகள்தான் பேசப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் இல்லை.
நான் அண்மையில் புலோலியூரானை முகடு சஞ்சிகைக்காக நேர்காணல் செய்திருந்தேன். அந்த நேர்காணல் அரசியல் வெடிலை அள்ளி வீசியது. அதில் புலோலியூரான் தனது நிலைப்பாட்டை சொல்லி இருக்கின்றார். இது தேசிய கோப்பிசங்கள் ,சிலாகையள், தீராந்தியள், ஆணியள் போன்றோருக்கு இடியாக போய் விட்டது. உடனே சிவா ஏரம்பு என்ற தேசியம் என்னை ஈ பி டீ பி என்று சேறடிக்கின்றது.
ஒரு படைப்பை வாசிக்கின்ற வாசகன் அதில் முரண்கள் இருந்தால், அந்த படைப்புக்கு வாசகனானவன் பொது வெளியில் விமர்சனம் அல்லது எதிர்வினை வைக்க வேண்டும். அதுவே இலக்கிய மரபு. அதை விடுத்து எழுதியவரின் மீது வசைபாடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதனாலேயே நான் யாழ் இணையத்தை விட்டு விலக வேண்டி வந்தது. சிவா ஏரம்புவுக்கு கவிஞர் கருணாகரன் சொல்லியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன் “பொதுவெளி என்பது துடக்குப் பார்க்கும் இடமல்ல “. உங்களுக்கு நேர்காணலில் முரண்கள் இருக்கா? நேரிடையாக முகடு சஞ்சிகைக்கு உங்கள் எதிர்வினையை வையுங்கள். அவர்கள் பிரசுரம் செய்வார்கள். அதுவே எழுத்து அறமாகும். அதை விடுத்து எனது நதிமூலம் ஆராய வேண்டாம்.
நன்றி வணக்கம்.
(Visited 18 times, 1 visits today)