ஓர் படைப்பாளியின் படைப்பு சுதந்திரம் பற்றி அருள்இனியன் ஊடாக……..

எனது எழுத்துக்களிலும் எனது படைப்புகள் சார்ந்த கருத்துக்களிலும் நான் என்றுமே சமரசம் வைத்துக்கொள்வதில்லை. அதை ஒரு படைப்பாளியினுடைய ஆக்கு சுதந்திரத்துக்கு விடுக்கப்படுகின்ற எச்சரிக்கையாகவே எண்ணி வருகின்றேன் . எனது எழுத்துக்களுக்கு அப்படி ஓர் நிலை வருமானால் எனது பேனையை முறித்து விட்டு எழுத்துப்பரப்பில் இருந்து நான் ஒதுங்கி விடுவதி எனது இறுதித்தேர்வாக இருக்கும். நிற்க உடகாவியலாளர் அருள் இனியனதும் அவரது கேரளா டயறீஸ் தொடர்பாகப் பொதுவெளியில் எழுந்த சர்ச்சைகளுக்கு நான் நேற்று முகநூலில் வைத்திருந்த நிலைத்தகவல்கள் மற்றும் கருத்துக்களில் எதுவித மாற்றங்களும் இல்லை. இந்த எனது நிலைத்தகவலிலும் கருத்துக்களிலும் அருள் இனியன் என்ற படைப்பாளி எனது கருத்துக்களுக்கான ஓர் குறியீடு அவ்வளவே. ஓர் படைப்பாளியினது கருத்துச்சுதந்திரத்தை மறுதலிப்பதும் அவனது படைப்பை தடை செய்தலுக்குமான பாசிஸப் போக்குகளுக்கு எதிரான எனது எதிர்புணர்வையே நான் பதிவிட்டிருந்தேன் . அத்துடன் படைப்பாளிகளது சுதந்திரங்கள், அவை தொடர்பான வரையறைகள், ஓர் படைப்பாளியினது இருப்புகள்,  மற்றும் தமிழ் எழுத்துப்பரப்பில் இருக்கின்ற போலித்தனங்கள் தொடர்பாக அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற எனது நண்பர் தெய்வீகன் முகநூலில் எழுதியுள்ள நிலைத்தகவலின் பொருளடக்கமே எனது நிலைப்பாடுமாகும். நன்றி .

கோமகன்

000000000000000000000000000000000000000

2012 ஆம் ஆண்டு தனது பெயரில் ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரையொன்றிற்காக ஊடகவியலாளர் அருளினியன் இன்று யாழ்ப்பாணத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதாவது, ஒரு பத்திரிகையில் வெளியான ஆக்கத்துக்கு பத்திரிகை பொறுப்பேற்பதற்கு அப்பால் அதில் எழுதியவர்களுக்கும் தனிபட்ட பொறுப்பிருக்கிறது என்பதனை தன் பக்க நியாயமாக விளக்க முனைந்திருக்கிறார். ஊடக பொதுநியாயத்தின் பிரகாரம் இது தேவையில்லாத விடயமென்றாலும்கூட கடந்த சில நாட்களாக அருளினியனுக்கு விடப்பட்ட தனிப்பட்ட அச்சுறுத்தல்கள், அவர் வீட்டுக்கு அழைப்பெடுத்து விடுக்கப்பட்ட மிரட்டல்கள் போன்ற அழுத்தங்களின் வெளிப்பாடாக இந்த பொறுப்புத்துறப்பு இடம்பெற்றிருப்பது இதன் பின்னணியை வலு தெளிவாகவே எடுத்துக்காட்டியிருக்கிறது.
பெரிய பெரிய கட்சிகளே இன்று சமூக வலைத்தளங்களில் தங்களை புரோமஷன் செய்துகொண்டிருக்கும் காலப்பகுதியில், ‘கேரள டயரீஸ்” புத்தக வெளியீட்டினை தடுத்து நிறுத்துவதற்கு யாழ்ப்பாணத்தில் நோட்டீஸ் அடித்து ஒட்டுமளவுக்கு இந்த கும்பல்கள் வலுப்பெற்றிருப்பதும் இவற்றின் பின்னணியில் உள்ள அரூப கரங்களை நன்றாக வெளிக்காட்டிவிட்டன.


இது இவ்வாறிருக்கையில் – பெண்போராளிகளை கொச்சையாக விமர்சித்துவிட்டார் என்று அருளினியன் மீது குற்றச்சாட்டினை முன்வைத்து கரகமாடுகின்ற முகநூல் கும்பல்கள் இதனை மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடுவதுடன் தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக நாளை நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு நிகழ்வையும் தடுத்துநிறுத்தப்போவதாக சூளுரைத்திருக்கிறார்கள். அருளினியனை தாக்கப்போகிறோம் என்கிறார்கள். இவற்றை நிகழ்வு ஏற்பாட்டுக்குழு காவல்துறையினரின் ஊடாக அணுகுவது இந்த நேரத்தில் முக்கியமானது.
இந்த வேளையில்தான் சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளாதிருக்கிறது. இந்த கேள்விகளுக்கு எந்த தரப்பின் ஊடகவியலாளர் சந்திப்புக்கு போவதென்றும் தெரியாமலுள்ளது.


1) பெண் போராளிகளை கொச்சைப்படுத்தும் வகையில் வெளியான பதிவுக்கு மன்னிப்புக்கோரியுள்ள அருளினியன், அந்த கட்டுரையில் விகடன்தான் தன்னை மாட்டிவிட்டது என்ற தோரணையில் இன்று பதிலளித்து விகடன் மீது வெளிப்படையாகவே பழிசுமத்தியிருக்கிறார். அப்படியானால், தற்போது அருளினியன் விடயத்தில் சங்கு ஊதும் கும்பல்கள் இனிமேல் தமிழர் தாயகத்துக்கு வருகின்ற விகடன் இதழ்களை தடை செய்வதற்கு தயாரா?


2) சாதி மற்றும் மத விவகாரங்களை – குறிப்பாக ஆறுமுகநாவலரை – விமர்சித்து வெளியாகவுள்ள ‘கேரள டயரீஸ்” என்ற புத்தகத்தை யாழ் இந்து கல்லூரியில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று ‘நாயன்மார்கள்” சிலர் கோட்டம், வட்டம், வலயம் என்று எல்லா இடங்களுக்கும் மரதன் ஓடி கடைசியில் அந்த மண்டபத்தையும் தடை செய்திருக்கிறார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. அப்படியானால், வாழ்நாள் முழுவதும் சாதியம் – தலித்தியம் என்பவற்றை தவிர வேறு எதையும் பேசாத பூர்வ ஜென்ம புரட்சிவாதிகள் இன்னமும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். குறைந்நது அருளினியனுக்கு சார்பாக ஒரு அறிக்கைகூட விடமுடியவில்லையா?
3) நடந்து முடிந்த 47 ஆவது இலக்கிய சந்திப்பின்போது – கத்னா விகாரத்தில் – சர்மிளா அக்காவை பேச அனுமதிக்கவில்லை என்பதற்காக கருத்துச்சுதந்திரம் பறிபோய்விட்டதாக இரவெல்லாம் பரா லைட் அடித்து பிரச்சாரம் செய்துவிட்டு பகல் முழுவதும் பரசூட்டில் ஏறிநின்று புரட்சி செய்த சிங்கங்களே! இன்று அருளினியன் என்ற ஈழத்தமிழனின் புத்தகம் என்னவாகவும் இருந்துவிட்டுப்போகட்டும். ஆனால், அதனை வெளியிடுவதற்கான கருத்து சுதந்திரம் “அடித்து முறிப்போம்” “புத்தகத்தை எரிப்போம்” என்றளவுக்கு முற்றிப்போயிருக்கிறதே! என்ன பேச்சையே காணோம்?
4) யாழ்ப்பாணம் நூலகத்துக்கு பின்பாக வைத்து இலக்கிய தோழர் ஒருவரை சைக்கிளால் தள்ளிவிட்டதற்கே அதனை தெய்வத்துக்கு ஏற்பட்ட குற்றமாக விழித்து அறிக்கை விடுத்து அதனை பகிர்ந்துகொண்டு திரிந்த ‘விதை குழுமம்” போன்ற அமைப்புக்கள் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் – கருத்து சுதந்திரத்துக்கு எதிராக கட்டவிழ்த்துள்ள – அடக்குமுறைக்கு தலைகாட்ட வரமாட்டீர்களா? அல்லது அருளினியனையும் யாராவது சைக்கிளால் தள்ளி விழுத்தினால்தான் வருவீர்களா?


இவற்றுக்கெல்லாம் யாரும் பதில் தரமாட்டார்கள். இது தொடர்பாக முதலில் நான் பதிவு செய்த விடயத்தைத்தான் திரும்பவும் சொல்லவருகிறேன். எங்களுக்கு தேவை வசதியான போராட்டங்கள். பெண்போராளிகளை கொச்சையாக எழுதி தனக்கொரு ஊடக வெளிச்சத்தை சம்பாதித்துக்கொண்டார் என்று அருளினியனை குற்றச்சாட்டும் அதே கும்பல், இந்த அருளினியனை வைத்து தாளிப்பதன் மூலம் தங்களின் மீது ஊடக வெளிச்சத்தை கோரி நிற்பது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? இதன்மூலம்தான் இவர்கள் தங்களை ஏதோ பெரிய புரட்சிகர முன்னணியாக பிரகடனம் செய்துகொள்ள பார்க்கிறார்கள்.
அதுபோல, முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய ஒழுக்க நெறிகள் எனப்படும் விடயங்கள்வரை ஊடறத்து ஊடகவியல் செய்யவேண்டும் என்று துடித்துக்கொண்ட நாங்கள், யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக தலைவிரித்தாடும் சாதிய – மத வெறியாட்டத்தை கண்டிப்பதற்குக்கூட நாதியற்றவர்களாக இருக்கிறோம். அல்லது அதனை தீர்த்துக்கொள்வதற்கு அறிவார்ந்த அணுகுமுறைகளை தொலைத்துவிட்ட வறியவர்களாக கிடக்கிறோம். ஒரு சிலரின் முகநூல் பதிவுகள் “இது நடக்கும் என்று தெரியாதா” என்ற பெருமூச்சுக்களுக்குள் மாத்திரம் அடங்கிவிடுகின்றன.
இலக்கியம் என்று வந்துவிட்டால் சொல்லவே தேவையில்லை. நாங்கள் விரல் எண்ணி பார்த்து பார்த்து அறச்சீற்றம் கொள்வதில் விண்ணர்கள். நித்திரையால் எழும்பி வந்தவர்கள்போல யாரையாவது பிடித்து மூத்திர சந்தில்வைத்து கும்மு கும்மென்று கும்முவோம். கண்டன அறிக்கைள் எழுதுவோம். பதிவுகளை போடுவோம். பின்னர் அழிப்போம். அதைப்பற்றி நல்லிணக்க வகுப்பெடுப்போம். கொஞ்ச காலத்தில் பதங்கமாகிவிடுவோம்.
வாழிய வாழிய வாழியவே!!
நன்றி : தெய்வீகன்

(Visited 3 times, 1 visits today)