உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் ‘எதையாவது எழுதவேண்டும்’ என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் ‘தனிக்கதை’ சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் ‘எதையாவது எழுதவேண்டும்’ என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் ‘முரண்’- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன்.

இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன். எம்மவரிடையே காலங்காலமாகப் பேணப்பட்டுவரும் புனிதப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிந்திருக்கின்றேன். பேசாப் பொருட்களை பேசியிருக்கின்றேன். அவைகளில் நான் வெற்றி பெற்றிருக்கின்றேனா என்பதெல்லாம் எனக்குத்தெரியாது. பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன் என்பதை என்னால் உறுதிப்படச் சொல்ல முடியும்.

எனக்கு இலக்கிய ஜாம்பவான்களைப் போல சொல் கட்டத்தெரியாது. எல்லோருக்கும் வாலிபப்பருவம் அதன் வசந்தத்தையும் ஊர் உறவு நண்பர்கள் என்று அள்ளிக்கொடுக்க, அதே வயதில் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் உபரிவிளைவாக நான் அகதியாக அந்நியதேசத்திற்குப் புலம் பெயர்ந்தும் இந்தச் சொல் கட்டுக்குள் வராமைக்கு ஒரு காரணமாகிற்று. அதனால் எனது ஆழ்மனதில் இருந்த நினைவுச்சிடுக்குகளே எனது எழுத்துக்களாகின. அவை இலக்கியத்தரமானவையா இல்லை தட்டைகளானவையா என்பதுபற்றி எனக்கு கவலைகள் இருந்ததில்லை. எனது மனதில் எதுதோன்றுகின்றதோ அதை எழுத்தில் கொண்டு வருகின்றேன். அதாவது எனது எழுத்துக்கு நான் விசுவாசியாக இருக்கின்றேன். அதேவேளையில் அதற்குரிய வினைகளை வாசகர்களாகிய நீங்களே தருகின்றீர்கள். ஆகவே இந்த முரண் சிறுகதைத்தொகுதியில் உங்கள் முரண்களைத் தயங்காது வெளிப்படுத்துங்கள். அதுவே என்னை மேலும் செம்மைப்படுத்தும். இந்த நூலை செம்மைப்படுத்திய தமிழ்க்கவி,தோழர் பொ.கருணாகரமூர்த்தி ஆகியோருக்கும், நூலைப் பிரசுரம் செய்த எதிர்பதிப்பகத்தினருக்கும், தமிழகத்தில் இருந்து இந்த நூலைக்கொண்டுவருவதில் முழுமையாக உழைத்த தோழர் முஹமட் சிராஜ்- க்கும் எனது நன்றிகள்.

நேசமுடன் கோமகன்

தொடர்பு : koomagan93@gmail.com

(Visited 10 times, 1 visits today)