தீரனின் பார்வையில் ‘முரண்’

‘எதிர்’ வெளியீடாக வந்திருக்கும் கோமகனின் ‘’முரண்’’ சிறுகதைகளின் தொகுப்பு நூல் வாசித்த பின் மூன்று நாட்களாக வேறு ஒன்றையும் வாசிக்க முடியாமல் கிடந்தேன்..சமூகத்தில் நிகழும் அல்லது நிகழாத சில அசாத்தியங்களின் பக்கங்களை அடுக்கி புனைவு ‘நூலா’ல் சாமர்த்தியமாக கோர்த்து விட்டு ஏதும் அறியாத அப்பாவி போல தன் படைப்புமுகத்தை வைத்துக் கொண்டிருக்கும் இந்த ‘’எழுத்துக் கல்லுளிமங்கனின்’’ படைப்புலகம் ஓர் அலாதியான ஆச்சரியம்தான்…

பதினோரு உள்ளடக்கங்களை கொண்ட இக்கதைகளைப் பற்றி கோமகன் கூறுகையில்– //இக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட பல இடங்களில் முரண்பட்டிருக்கின்றேன்..’’ // என்று கூறுவதன் மூலம் இக்கதைகளின் ஏறிகைகளின் எதிர்வீச்சுக்களிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு பலமான ‘பங்கரை’ அமைத்து விட்டார் என்றே கூறுவேன்.. ஆயினும் அந்த ‘பங்கருக்குள்ளிருந்து எட்டிப் பார்த்து ‘’// கதை சொல்லும் உத்திகளில் சில பரிசோதனைகளை செய்திருக்கிறேன்…பேசாப் பொருளை பேசியிருக்கிறேன்…// என்றெல்லாம் நுகர்ச்சியாளனிடம் ஏன் சொல்ல வேண்டும்…?

ஆனால் உண்மை அதுதான்,,,முரண்-தகனம்-வெள்ளி13 முதலான கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் கோமகன் நுணுக்கமாய் பின்னிஎடுத்திருக்கிறார்….சில கதைகளில் அ..;றினைப் பொருட்களை பேசவிடுவதில் கடும் சிரத்தை காட்டியிருக்கிறார்… இவற்றில் கோமகன் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து இக்கதைகளை நகர்த்துவதன் மர்மம் இன்னும் எனக்கு விளங்குவதாயில்லை.. புறாக்களுக்குள் புகுந்து கதை சொல்வதும் திடீரென பட்டிமாடுகளின் ஆன்மாவுக்குள் புகுந்து பேசுவதும் கும்பலாய்க் கிடக்கும் சவங்களுக்குள் புகுந்து தன்னிலை விளக்கம் சொல்வதும் போதாதென்று ..மயானமே தான் வரலாறு சொல்வதுமாக அதகளப்படுத்தியிருக்கிறார் மனுஷன்….இவற்றில் எல்லாம் எவ்வித சிக்கலும் பிக்கல்பிடுங்கலுமின்றி தன் சரளமொழியில் கதை சொல்லிச் செல்லும் நேர்த்தி கோமகனிடத்தில் இயல்பாக இருக்கிறது… இதனால் வாசகனின் புருவங்களை தொடர்ந்தும் உயர்த்தி வைப்பதில் மகா வெற்றிதான் இந்த படைப்பாளிக்கு……..

புணர்ச்சி செய்தலுக்கு ‘’முயங்குதல்’’ என்ற சொல்லை தன் பல கதைகளிலும் பயன்படுத்தியிருக்கிறார் கோமகன்.. இந்த சொல்லை நான் இதுவரை அறிந்தேனில்லை….அது எப்படியோ போகட்டும் ஆயின் ‘’டிலீப்டிடியே’’ கதையில் வரும் டிலீப்டிடியே என்பவன் சவமாகிக் கிடக்கும் நிலையில் மதுமிதா அவனோடு (அதனோடு) நிர்வாணமாக முயங்கிக் கொண்டிருந்தாள் .. என்று சொல்வது மிகவும் அபத்தம் என்றே எனக்குத் தோன்றுகிறது…சவமான பின் எந்த வித விறைப்பும் இல்லாத குறியில் எப்படி…அதுவும் ஒரு பெண் வைத்தியர் முயங்குவாள் என்பதை யோசித்து இதை கோமகனிடமே நேரில் கேட்டுவிட வேண்டுமென்று ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தாலும் ‘’இதில் நானே முரண் பட்டிருக்கிறேன்’’ என்று சொல்லி இலகுவாக கடந்து விடுவாரோ என்றும் யோசிக்கிறேன்…

முஸ்லிம் கதை மாந்தர்களை தன் கதைகளில் வெகு கவனமாகவே கையாண்டிருக்கும் கோமகன் குண்டு வெடிப்புதாரிகள்-கடத்தல்காரர்கள் அனைவரும் முஸ்லிம் மாந்தர்களாகவே சித்தரித்திருப்பதில் ஒரு ‘’கமலஹாஸத்தனம்’’ தெரியாமலில்லை… வெள்ளி13 மற்றும் வெடிப்பு ஆகிய புனைவுகள் அத்தகையன…அதிலும் ‘’வெள்ளி 13’’ கதையில் ஆயிஷா என்ற பெண் பாத்திரம் படு செயற்கையாக சேர்க்கப்பட்டுள்ளது என்பேன். ஏனெனில் அப்பாத்திரம் இல்லாமலே அக்கதை தனியாகவே ‘’நிற்கும்’’…………….

‘’ஏறு தழுவுதல்’’ ஒர் அற்புதமான சிறுகதை…ஜீவநதியில் இக்கதை வந்த போது பலராலும் பேசப்பட்ட ஒரு கதை..கறுப்பன் என்ற ஏறு உண்டுபண்ணும் புரட்சியை ரொம்ப அற்புதமாக சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்குரியதே… அகதி கதையில் புறா சொல்லும் செய்திகள் ஒரு பறவை சொல்லக் கூடியவாறு இல்லை என்பதே என் அபிப்பிராயம்..யூதர்கள் நாசிகளால் கொல்லப்படும் செய்தி—அகதி அந்தஸ்து பற்றிய விபரம்-பாரிஸ் வங்கியில் வீட்டுக்கடன் எடுக்கும் சங்கதிகள்…எல்லாம் அந்தப் புறாவை அதன்பாட்டில் பேசவிடாமல் புறாவுக்குள் படைப்பாளி புகுந்து கொண்டு புறாவுக்கு சம்பந்தமில்லாத செய்திகளை சொல்லும் உணர்வையே தருகின்றன..

.’’முரண்’ கதை கொஞ்சம் சிக்கலான ‘’கரு’’க் கொண்ட கதை.. ஆக்காட்டி ஒரு அற்புதமான கதை.. கதை என்று சொல்லமுடியாத ஒரு சாத்தியமான நிர்மானம் என்றுதான் சொல்லவேண்டும்.. அற்புதமான முறையில் கதையை திகீர் பகீருடன் சொல்லியிருக்கும் கதை நேர்த்தி மெச்சத்தக்கது… படகு மூழ்கி உயிரிழந்த மாதுமையின் உடலம் அகன்று பறந்து விரிந்த அந்நாட்டில் எங்குமே ஒதுங்காமல் சரிசட்டமாக மேரி-ஆனின் காலடியில் ஒதுங்குவது என்பது படு சினிமாத்தனம் என்றே தோன்றுகிறது.. கதையின் அடியில் யாவும் உண்மை கலந்த கற்பனை என்று போட்டுவிட்டு சுகமாக தூங்கப் போய் விடுகிறார் கோமகன்,,,அட..இது கூட ஒரு நவீன உத்திதான்.

.. ‘’பருப்பு’’ கதையின் பருப்பின் வாழ்க்கை நம் எதிரிக்குக் கூட வரக்கூடாது.. மோசமான ஒரு கருவை அற்புதமாக கதையாக்கியிருப்பது கோமகனின் ஒரு தனித் திறமைதான்… இதை வாசித்த பின் அதிலும் குறிப்பாக அந்த இந்தியனும் அந்த பிரஞ்ச் பெடியனும் பருப்பைக் கையாண்ட விதத்தை எண்ணினால் நம் வீட்டில் இனி பருப்புக்கு தடை சொல்லிடலாம் போல இருகிறது… கட்டியம் கூறி ஆரம்பிக்கப்படும் ‘’தகனம்’’’ கதை மங்களம் பாடி முடிகிறது…இது ஒரு ‘காண்டம்’ விட்டுக் ‘காண்டம்’ பாயும் ‘எறிகதை’ எனலாம்.. அது சொல்லப்படும் முறை புதிது…

பொதுவாக முரண் தொகுதில் உள்ள 11 புனைவுகளும் கச்சிதமான சொற் கோர்வையினால் நவீன முறையில் இழைக்கப்பட்டுள்ளன… கதைகள் சொல்லப்பட்ட தளங்களும் அவற்றில் கையாளப்பட்டுள்ள பல சோதனை முயற்சிகளும் நம்மை வியக்க வைப்பன… அதே சமயம் நேர்த்தியான சொல்முறைகளால் இலகுவில் மனத்தைக் கவர்ந்து விடுகின்றன..கோமகனின் இந்த நவீன கதை சொல்-இயல் உண்மையில் மனம் திறந்து மெச்சத்தக்கது..

சில புலம் பெயர் எழுத்தாளர்கள் ஒரு கதையைத் தொடங்கினால் அதற்கென்றே ஒரு பாத்திரத்தை கதையில் உலவ விட்டு தமது புலம் பெயர் அனுபவங்கள்-பட்ட சிரமங்கள்-சாதனைகள்—என்பவற்றை வளவளத்துக் கொண்டிருப்பதிலிருந்து முற்றாக தவிர்ந்து கொண்டிருக்கும் கோமகன் ஒரு கதைக்குத் தக்க அளவில் சொற்சிக்கனமாக கதைக் களத்தைக் காட்சிப்படுத்தியிருக்கின்ற நேர்த்தி வெகுவாகப் பாராட்டத்தக்கது… சிறுகதைகள் என்ற பெயரில் நீளநீளமாக பக்கங்களை வளர்க்காமல் கட்டுத் தறி போல கதைகளை சிறு-கதைகளாகவே சொல்லிச் சட்டுப் புட்டென்று முடித்து விடுகிற இந்தக்கதைசொல்லியை எவ்வளவும் ரசிக்கலாம்.. வாழ்த்துக்கள் கோமகன்….. souhaitant bien

ஆர் எம் தீரன் நௌஷாத்

(Visited 3 times, 1 visits today)