குப்பியும் ப தெய்வீகனும்- வாசிப்பு அனுபவம்

சற்று முன்னர்தான் ப தெய்வீகன் எழுதிய “சயனைடு” சிறுகதை வாசித்திருந்தேன். முதலில் அங்கு இங்கு என்று அலைய விடாத தெளிவான கதை நடைக்கு வாழ்த்துகள். சாதாரண வாழ்வில் தற்கொலைகளைப் பொலிடோல் குடித்தல், தூங்கி சாதல், என்ற குறியீடுகளிலேயே ஈழத்துச் சமுதாயம் இதுவரைக்கும் பார்த்து வந்துள்ளது. ஆனால் சயனைடு மூலமும் ஒரு சாதாரண வாழ்வில் இருப்பவர் தற்கொலை செய்யலாம் என்பதை சொல்லிநிற்கின்றது இந்த சிறுகதை. தற்கொலைகளுக்கான உத்திகளில் இதுவும் ஒன்று, இதில் என்ன புதுமை இருக்கின்றது என்று மேம்போக்காக யோசிக்கலாம்.

நாங்கள் கடந்துவந்த விடுதலைப் போராட்டத்தில் இந்த “சயனைடு”-வின் பார்வையும் அர்த்தப்படுத்தலும் வேறுவிதமாகவே ஒரு தற்கொலையை நியாயப்படுத்தி இருந்தன. ஏன் அந்த வேளையில் அது சரியாகவும் கூட இருந்தது. இந்த கலாச்சாரம் பொன் சிவகுமாரன் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பொழுது ஒரு பெரிய உளவியல் தாக்கத்தை சனங்களிடம் கொடுத்தது. ஆனால் அதே குறியீடு சாதாரண வாழ்வில் பிரயோகிக்கும் பொழுது பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கொண்டு வருகின்றது. சிறுகதையின் இயல்பே தனிய ஒரு தளத்தில் சுழராது பல்வேறு தளத்தில் சென்று வாசகர்களிடையே பன்முக ஊகங்களை கிளப்புவதுதானே. ஆக இந்தக்கதையானது அதை சிறப்பாகவே செய்திருக்கின்றது ஆனால் தேசியர்களுக்கு இந்தக்கதை ஒருபோதும் உவப்பாக இருக்க வாய்ப்புகள் இல்லை. துரோகிகள் சங்கப் பட்டியலில் புதிய துரோகியாக ப தெய்வீகனும் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. சமகாலத்து சிறுகதைப்பரப்பில் மாற்றங்கள் வரவேண்டுமானால் இப்படியான காய்த்தல் உவத்தல்களுக்கப்பாலான கேள்விக்குட்படுத்தல்களே அவசியமாகின்றது. அத்துடன் இந்த சிறுகதையானது ஈழத்தின் / புலத்து எந்த சஞ்சிகையில் வந்திருந்தாலும் இதே அதிர்வினைத்தான் கொடுத்திருக்கும்.

கோமகன்

04/07/2018

(Visited 22 times, 1 visits today)