வேங்கையின் மைந்தன்-புதினம்-பாகம்-1-5- நிலவிலே ஒரு பொற்சிலை

பாகம்-1-5-நிலவிலே-ஒரு-பொற்சிலை.இள மாம்பிஞ்சை இரு கூறாகப் பிளந்தெடுத்தாற் போன்ற கண்கள் அருள்மொழியின் கண்கள். அந்த மாவடுக் கண்கள் இப்போது பெருஞ்சினத்தால் சிவப்பேறியிருந்தன. கொடும்பாளூர் மேல்மாடக் கூடத்திலிருந்து புறப்பட்டு, சூறாவளியைப்போல் கீழே இறங்கி வந்தவள்நேரே அந்தப்புரத்துக்குள் நுழையாமல் ஒரு கணம் தாமதித்தாள்.

வழக்கமாக உணர்ச்சி வயப்படாதவள் அருள்மொழி. ஆனால், ஒரு சிறிய நிகழ்ச்சிக்காக இன்று அவள் மனத்தைப் படாதபாடு படுத்திக்கொண்டாள்.கொடும்பாளூர் மதுராந்தக வேளாரை அவளால் மன்னிக்கவே முடியவில்லை.
‘முதன் முறையாகப் போர்க்களம் செல்வதற்கு அனுமதி கேட்கிறார் கொடும்பாளூர் இளவரசர். என் தந்தையாரிடம் அவர் கேட்கும்போது, பெரியவேளார் ஏன் குறுக்கே புகுந்து இப்படி ஒரு அவச்சொல் சொல்ல வேண்டும்!
‘வெற்றியோடு திரும்பி வா’ என்று சொன்னால் இவருடைய வீரத்துக்கு இழுக்கு வந்து விடுமா, என்ன? இளவரசர் திரும்பி வராவிட்டால் இவருக்குப் பின் இந்தக் கொடும்பாளூர் முடியை வேறு யார் தாங்குவார்களாம்! இப்படியெல்லாம் எண்ணித் தன்னை வாட்டிக் கொண்ட அருள்மொழி, இந்தக் கொடும்பாளூர்க்காரர்களே மூர்க்கத்தனமான போர் வெறியர்கள் என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
மாவடுக் கண்கள் கோவைக் கனிகளாக மாறிவிடவே அருள்மொழிக்கு அந்தக் கண்களோடு அந்தப்புரத்துக்குள் நுழையப் பிடிக்கவில்லை. அன்னையாரோ, அத்தையாரோ காரணம் கேட்பார்கள். தங்கை அம்மங்கையிடம் அகப்பட்டுக் கொண்டால் அப்புறம் மீளவே முடியாது.ஆயிரமாயிரம் கேள்விகள் கேட்டு, மேலே ஆண்கள் பேசிக்கொண்ட அரசியல் ரகசியங்களையெல்லாம் கூட அம்பலத்துக்குக் கொண்டு வந்துவிடுவாள். ஆகவே அருள்மொழி மெதுவாக அரண்மனைப் பூங்காவுக்குள் புகுந்தாள்.
வானத்தில் பொற்தகடாக மிதந்த வளர்பிறை நிலா, தன்னையே உருக்கி வார்த்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தவுடன் குளிர் அமுதமாக மாறிப்பொசிந்தது. மலர்களின் கதம்பமணத்தைச் சுமந்ததால் மென்காற்று மயங்கிக் கிறங்கிற்று. அருள்மொழி அந்தக் கனவு உலகத்துக்குள் சுய நினைவிழந்து மெல்ல நடந்து வந்தாள். பூங்காவின் மைய மண்டபத்துத் தூணில் அவள் பொன்னுடல் வார்த்தெடுத்த சிற்பச் சிலையெனச் சாய்ந்தது. மேல் மாடக் கூடத்தில் சோழ மண்டலத்தின் புதிய திட்டங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. பெரிய வேளார்ம துராந்தகரிடமும், அவர்மைந்தன் இளங்கோவிடமும் தமது கருத்துக்களை விவரித்துக் கொண்டிருந்தார் இராஜேந்திரர். சோலைமலையில் இளங்கோ கண்டு வந்த சமணத் துறவியைப் பற்றியும் பேச்சுத் திரும்பியது.
“அவர் ஒரு வேளை பாண்டியர்களின் ஒற்றராக இருக்கக்கூடுமோ என்று நினைக்கிறேன்” என்றான் இளங்கோ.
“அப்படியா?”

“ஆம் சக்கரவர்த்தி! அவரை முதலில் பாத்தவுடன் மெய்த்துறவி என்றுதான் தோன்றியது. ஆனால், நான் பனைமரத்தின் உச்சியிலிருக்கும்போது அவர் குகைக்குள்ளிருந்து ஏன் எட்டிப் பார்க்கிறார்? என்னால் அவரை நம்ப முடியவில்லை. மலைச்சாரலில் திரண்டிருக்கும் கூட்டத்தினரிடம் யாரும் போகாதபடி அவர் காவல் காத்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?”

மதுராந்தக வேளாருக்குக் கோபம் வந்துவிட்டது. “இவ்வளவையும் தெரிந்துகொண்டு நீ ஏன் அவரைச் சும்மா விட்டு வந்தாய்? அதே இடத்தில் வெட்டிச் சாய்ந்து விட்டு வந்திருக்க வேண்டும். நாமும் விழிப்போடு

இருக்கிறோம் என்பதை எதிரிகள் அறிந்து கொள்ளட்டும்!”
கலகலவென்று சிரித்தார் இராஜேந்திரர். “மதுராந்தகரே, உங்களுடைய குமாரனின் உடைவாளைவிட மிகவும் உறுதியுள்ளது அந்தத் துறவியின் கை. அவரை இலேசாக நினைத்து விடாதீர்கள். இரும்பு மனிதர் அவர்!”

“தங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்று வியப்புடன் கேட்டான்

இளங்கோ. அவன் தந்தைக்கோ சக்கரவர்த்தி தம்மை எதிரில் வைத்துக் கொண்டே மற்றொரு மனிதரின் வீரத்தைப் புகழ்ந்ததில் மனக்குமைச்சல். அவருடைய மீசை துடித்தது. இதைக் கண்டு கொண்ட இராஜேந்திரர்,
“மதுராந்தகரே! அவர் யார் தெரியுமா? இரண்டு கிழவிகளுக்குக் கணவரான இல்லறத்துறவி! அவருடைய வரவைத்தான் நாம் இப்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

“ஓஹோ! அவரா?”- பெரிய வேளாரின் மீசைத் துடிப்பு அடங்கியது.

யார் என்று தெரிந்து கொள்ளாமல் விழித்தான் இளங்கோவேள். படிகளில் யாரோ ஒருவர் மேல் மாடத்தை நோக்கி வரும் காலடிச் சத்தம் கேட்டது. அந்த ஓசையைக் கொண்டு வருகிறவரை நிச்சயித்து விட்ட மாமன்னர், “இளங்கோ! அந்தத் துறவியே உனக்குத் தரிசனம் தருவதற்காக வந்துவிட்டார்” என்றார்.
ஒற்றைத் தென்னைமரம் போல் உயர்ந்த தோற்றத்துடன் உள்ளே நுழைந்தார் வல்லவரையர் வந்தியத்தேவர். நரை, திரை, சுருக்கம் எதுவுமே அவரிடம் தென்படவில்லை. அறுபது வயதைக் கடந்துவிட்ட இளங்கிழவர் அவர்!
“வாருங்கள் மாமா!” என்றார் பேரரசர். “வரவேண்டும் சிற்றப்பா!”என்றார் சிற்றரசர். “வணக்கம் தாத்தா!” என்றான் இளவரசன்.
இளங்கோவின் கரத்தைப் பற்றிக் கொண்டு அவனை அன்போடு தட்டிக் கொடுத்தார் வந்தியத்தேவர். “பொல்லாத பிள்ளையப்பா நீ!” என்னையே ஏமாற்றிவிட்டு, உன் காரியத்தைச் சாதித்துக் கொண்டு ஒன்றுமறியாதவனைப் போல் திரும்பிவிட்டாயே!” என்றார். பிறகு பெரிய வேளாரிடம் திரும்பி,

“உங்கள் குமாரன் கெட்டிக்காரன்!” என்று பாராட்டினார். அதோடு இளங்கோவிடம் அவனோடு வந்த வீரமல்லனைப் பற்றியும் கேட்டார்.

“உன்னோடு வந்த முரட்டுப் பையன் எங்கே?எதற்கெடுத்தாலும் வாளை உருவத் துடித்தானே அவன்!”

இராஜேந்திரரின் நெற்றிப் புருவங்கள் நெளிந்தன. இளங்கோவை அவர் அனுப்பும்போது கூடச் செல்ல வேண்டிய ஆளை அவனையே பொறுக்கிக்கொள்ளச் சொல்லியிருந்தார். நம்பிக்கைக்குப் பாத்திரமுள்ளவனாகவும் நிதானமாக நடந்து கொள்ளக் கூடியவனாகவும் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

“யார் அந்தப் பையன்?” என்று இப்போது இளங்கோவிடம் கேட்டார் சோழப் பேரரசர்.

“மேலைச் சளுக்கப் போரில் சளுக்க மன்னன் மீது வேல் எறியப்போய் உயிர் நீத்த ராஜமல்ல முத்தரையனின் தம்பி வீரமல்லன்” என்றான் இளங்கோ,

“விருந்தினர் மாளிகையில் அவனைத் தங்கச்செ ய்திருக்கிறேன். இப்போது போய் அழைத்துக்கொண்டு வரட்டுமா?”

“வேண்டாம், நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்” என்றார் இராஜேந்திரர். “உனக்குத் தெரிந்த விவரமெல்லாம் அவனுக்குத் தெரியுமா? ரகசியங்களைக் காப்பாற்றக் கூடியவன்தானா அவன்”“காப்பாற்றக் கூடியவன்தான். என்றாலும் சில முக்கியமான தகவல்கள் அவனுக்குத் தெரியாது.”

“அதுதான் சரி” என்று ஆமோதித்தார் வல்லவரையர் வந்தியத்தேவர்.
போரில் தன் தமையனைப் பறிகொடுத்தவன் என்பதால் இளங்கோவுக்கு வீரமல்லனின் மீது அநுதாபம் உண்டாயிற்று. அந்த அநுதாபமே நாளடைவில் நட்பாக மாறியது. நட்பு முறையில் அவர்கள் அடிக்கடிப் பழக நேர்ந்தாலும், இந்தப் பிரயாணத்தின் போது தான் அவனைப் பற்றி நன்றாக இளங்கோவால் அறிந்து கொள்ள முடிந்தது. அறிந்து கொண்ட விஷயங்கள் இளங்கோவுக்கு அவ்வளவாக மகிழ்ச்சியைத் தரவில்லை. முன்கோபமும், முரட்டுத்தனவும், ஆத்திரமும், படபடப்பும் வீரமல்லனிடம் குடி கொண்டிருந்தன. ஆகவே ஒரு சில அரசியல் அந்தரங்கச் செய்திகளை வீரமல்லனிடமிருந்தே இளங்கோ மறைக்க வேண்டியிருந்தது.
பெரியவர்கள் மூவரும் ஈழநாடு செல்வதற்கான மிகப் பெரிய திட்டங்களை வகுக்கத் தொடங்கினார்கள். இளங்கோவுக்கு இனி அங்கு வேலை இல்லை. மதுராந்தக வேளாரிடம் தம் கண்களால் அனுமதி கேட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் இளங்கோ. உடனடியாகக் கடலைத் தாண்டி ஈழத்தின் மறுகரையில் போய்க் குதிக்க வேண்டுமென்ற ஆவல் அவனை உந்தித்தள்ளியது. ‘வானத்தில் பறந்து இலங்கைக்குத் தாவிய அநுமானின் சக்தி எனக்கும் இருந்தால். . .?’ என்று கற்பனைச் சிறகடித்தான் இளங்கோ. யாரிடமாவது தான் பெற்ற பேற்றைச் சொல்லி மகிழ வேண்டும் போலிருந்தது இளங்கோவுக்கு. நண்பன் வீரமல்லனை நாடி விருந்தினர் மாளிகைக்குச் செல்லலாமா என்று ஒரு கணம் நினைத்தான். ஒருவேளை அவன் உணவை முடித்துக் கொண்டு உறங்கிப் போயிருந்தால்-தன் மகிழ்ச்சியைத் தன் மனத்திடமாவது சொல்லிப் பகிர்ந்து கொள்ள ஆவலுற்றான். காதலியை நினைத்து மகிழ்வதற்காகத் தனிமையை நாடும் காதலனின் கால்கள் போல் இளங்கோவின் கால்கள் பூங்காவை நாடின. நினைவை எங்கோ தொலை தூரத்திலிருந்த ஈழத்துக்கு நீளவிட்டு, தன்னை மறந்த லயந்தன்னில் நடந்தான் அவன் பூங்காவின் மைய மண்பத்துத் தூணில் சாய்ந்து கொண்டிருந்த பொற்சிலைக்கு, அவன் அதே மண்டத்தை நாடி வருவது தெரியவில்லை. அவனுக்கும் அங்கொரு பொற்சிலை புதிதாய்ச் சமைந்திருப்பது கண்களில் படவில்லை. அவள் சாய்ந்திருந்த தூணுக்குப் பின்னால் மிகவும் நெருங்கி வந்த பிறகுதான் அந்த உயிரோவியம் அவன் கண்களைப் பறித்தது . . .? ‘நான் தஞ்சை மாநகரிலிருந்த போது, இப்படியொரு தங்கச் சிலையைத் தந்தையார் இந்த மண்டபத்தில் இணைத்திருக்கிறார்களோ? எந்தச் சிற்பியின் கைவண்ணம் இந்த எழில் உருவம்? அடடா!.

நினைவு ஈழத்திலிருந்து முற்றிலும் திரும்பியது. நிலவொளியும் இளவரசி அருள்மொழியை அவனுக்குக் காட்டிக் கொடுத்தது. மேல் மாடக் கூடத்தில் சற்று முன்பு அவன் கண்ட அதே அருள்மொழிதானா இவள்? நிலவுக்கும் தென்றலுக்கும், பூங்காவின் சூழ்நிலைக்கும் ஏதோ ஓர் மந்திர சக்தி இருக்க

வேண்டும். அழகை நூறு மடங்கு மிகைப்படுத்திக் காட்டுகிற அற்புத சக்தியாஇது? அல்லது அவன் கண்களுக்கு அது ஒரு மாயத்திரையிட்டு விட்டதா?
தன் வயமிழந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று அவள் தனிமையைக் கெடுக்காமல் அவ்விடத்தை விட்டு அகல நினைத்தான்.தனிமையில் அவளைச் சந்திக்கும் விருப்பமோ, ஆவலோ, துணிவோ அவனிடம் இதுவரையில் இருந்ததில்லை. உடனே மேல்மாடத்தின் ஒளிச்சுடரில் அவள் தன் விரலைச் சுட்டுக் கொண்ட நினைவு அவனுக்கு வந்தது.
அவள் அலறிய அலறலைப் பார்த்தால் வேதனை அதிகமாக இருந்திருக்கவேண்டும்! அதைப் பற்றி ஒரு வார்த்தை அவளிடம் கேட்டுவிட்டுப் போனால் என்ன?
பின்னால் வந்தவன், தன் வழியை மாற்றிக்கொண்டு, அவள் கண்களில் படும்படியாக எதிரில் நடந்து வந்தான். அந்த வேளையில், அந்தச் சூழ்நிலையில், அவனைத் தனியே கண்டவுடன் அருள்மொழிக்கே வியப்புத் தாங்கவில்லை. வேறொரு சமயமாக இருந்திருந்தால் அவளும் அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றிருப்பாள். தனிமையில் இதுவரையில் அவர்கள் சந்தித்துக் கொண்டதும் இல்லை. அதை அவர்கள் விரும்பி எதிர்பார்த்ததும் இல்லை.

இம்முறை ஏனோ இளங்கோவின்மீது அவளுக்கு அளவற்ற அநுதாப உணர்ச்சி பொங்கிக் கொண்டிருந்தது. மதுராந்தக வேளார் தம்முடைய முரட்டுத்தனமான பேச்சால் இளங்கோவுக்கு ஊறு செய்துவிட்டதாக அவள்

உருகினாள். ‘ஈழத்துக்குச் செல்லத் துடிக்கும் இளவரசர் இன்னல் ஏதும் இல்லாமல் திரும்பி வரவேண்டும்!’ என்று அவள் தவித்துக் கொண்டிருந்தபோதுதான், இளங்கோ அவள் அருகில் வந்து நின்றான்.
“இளவரசி!”
“வாருங்கள்!” நாணத்துடன் மெல்ல எழுந்த வண்ணம் அவன் முகத்தை நோக்கினாள் அருள்மொழி. அந்த விழிகளில் படிந்திருந்த பனித்திரையை நிலவுத்திரை என்று நினைத்துக் கொண்டான் இளங்கோ.
“நீங்கள் வந்திருப்பது தெரியாமல் பூங்காவுக்குள் வந்து விட்டேன். உங்களைக் கண்ட பிறகு, நீங்கள் விளக்கில் சுட்டுக் கொண்ட விரலைப் பற்றிக் கேட்கத் தோன்றியது-விரல் அதிகமாய்க் கொப்பளித்திருக்கிறதா?”
“இலேசான சூடு; சிறு எரிச்சல், அவ்வளவுதான்” என்று சொல்லிச் சிரிக்க முயன்றாள் அருள்மொழி. உண்மையைக் கூறி அகப்பட்டுக்கொள்ளவும் அவளுக்கு விருப்பமில்லை.
“ஏதும் மருந்து போட்டீர்களோ? நீங்கள் இன்னும் அந்தப்புரத்துக்கேபோகவில்லை போலிருக்கிறதே!”
“மருந்தை நாடும் அளவுக்கு வலியோ, வேதனையோ கிடையாது.”
“இப்போது ஒன்றும் தெரியாது உங்களுக்கு! இரவில் அமைதியான உறக்கம் வருமென்று நினைக்கிறிர்களா? காலையில் எழுந்து பார்த்தால் நீங்களே பயப்படும் அளவுக்கு விரல் கொப்பளித்துவிடும். எங்கே எந்தவிரலில் சுட்டுக் கொண்டீர்கள்? நான் பார்க்கலாமா?”
அருள்மொழிக்கு அழுவதா, சிரிப்பதா என்று தோன்றவில்லை! ஒருபொய்யை மெய்யாக்குவதற்கு இதுவரையில் ஒன்பது பொய்களை அடுக்கியாகிவிட்டது. அடுத்த பொய்யையும் மெய்யாக்கும் துணிவோடு தன்ஆள்காட்டி விரலைத் தூணின் நிழலில் சுட்டிக்காட்டினாள். அந்தச் சூடுவிரலில் இல்லை. அது என்னுடைய நெஞ்சில் இருக்கிறது அதற்குக் காரணமும் நீங்களே!’ என்று அவள் அவனைச் சுட்டிக் காட்டுவது போலிருந்தது. விரலைச் சரியாக அவன் கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் அவனுக்கு ஒன்றும் தெரிந்திருக்காது.

“இருங்கள், இதோ நொடிப்பொழுதில் வந்துவிடுகிறேன்” என்று உடைவாளை உருவிக்கொண்டு, வாழைப்புதரை நோக்கி விரைந்தான்.அவனது பரபரப்பைக் கண்ட அருள்மொழி பெருமூச்சு விட்டாள்.


தொடரும்
 

(Visited 8 times, 1 visits today)