‘என்னளவில் நானொரு சமகாலத்தை ஆவணப்படுத்தும் ஓர் எளிய கடத்தி’-நேர்காணல்-பாலைவன லாந்தர்-கோமகன்

“எனக்கு வசப்பட்டிருக்கும் எழுத்துக்கள் முதலில் என்னை திருப்தி செய்யவேண்டும்.  இந்த சுயநலமான விதிதான் எனது நிலையில் நான் கண்டடைந்த பொருளும் கூட. எண்ணிலடங்கா எழுத்தாளர்களுக்கு மத்தியில் நான் ஒப்பிட்டு மதிப்பிட்டு பார்க்க எழுதுவதை விட என்னை ஆற்றுப்படுத்தும் எழுத்துக்களே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கலைகளுக்கு செய்யும் ஆகப்பெரிய மரியாதை அதை அதற்கான தன்போக்கில் செலுத்தும் தன்வித்தையை கையாளும் உளப்பாங்கே”. என்று போர் சிந்து படிக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்த பாலைவன லாந்தர், ‘உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்’,’லாடம்’,’சிகப்புத்தடங்கள்’ என்று இதுவரையில் மூன்று நூல்களை தமிழ் எழுத்துப்பரப்பிற்கு தந்திருக்கின்றார். நடுவின் தமிழக சிறப்பிதழுக்காக நான் பாலைவன லாந்தருடன் செய்து கொண்ட கதையாடல் இது .

கோமகன்

00000000000000000000000

ஒரு சிறிய அறிமுகத்துடன் இந்த நேர்காணலை தொடருவோமே ……

என்னுடைய இயற்பெயர் நலிஜத், பிறந்தது காயல்பட்டிணம் தூத்துக்குடி, வளர்ந்தது சென்னை, பள்ளிப்படிப்பை முழுவதும் முடிக்கும் முன்பே திருமணம். சிறிய வயதில் இருந்தே தரைமட்ட சமூகத்தின் மீதான அக்கறைகளுடன் வளரும் சூழல் கிடைக்கப்பெற்றது. அதற்கு நான் வாழ்ந்த வடசென்னை மிகப்பெரிய காரணம். இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட பெரிய குடும்பம். நிறைய கட்டுப்பாடுகள். வெளி உலகம் பெரிதாக அறியாத பெண்ணாகவே வளர்ந்தேன். உலக கல்வி மற்றும் இஸ்லாமிய வழிக்கல்வி இரண்டிலும் ஓரளவு அடிப்படை தேர்ச்சி பெற்றிருக்கிறேன். குடும்பத்திற்குள் எல்லாவிதமான வரையுரைக்குட்பட்ட சுதந்திரங்களுடன் பால்ய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அன்பான கணவர் மகள் மற்றும் மகன், திருமணத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட ஒரு தளத்தில் வாழ்க்கை அமைந்தது. வாழ்வின் சின்னச்சின்ன சவால்களை எதிர்கொண்ட காலம் அது. எதிர்நீச்சல் போட வாழ்க்கை கற்றுத்தந்தது. சாதாரண மனிதனின் பொருளாதார எதிர் கொள்ளல் அத்தனை பெரிய பாடமாக அமைகிறது. அனுபவங்களின் வாயிலாகவே தனிமனிதன் தனது பக்குவப்பட்ட பயணத்தை அவதானிக்கிறான், நானும் அவ்வழியிலேயே எனது எழுத்து துறையை தேர்ந்தெடுத்தேன்.

“நிறைய கட்டுப்பாடுகள். வெளி உலகம் பெரிதாக அறியாத பெண்ணாகவே வளர்ந்தேன். உலக கல்வி மற்றும் இஸ்லாமிய வழிக்கல்வி இரண்டிலும் ஓரளவு அடிப்படை தேர்ச்சி பெற்றிருக்கிறேன். குடும்பத்திற்குள் எல்லாவிதமான வரையுரைக்குட்பட்ட சுதந்திரங்களுடன் பால்ய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று சொல்கின்றீர்கள். நீங்கள் எழுத்துலகில் நுழையும் பொழுதும் பொதுவெளியில் வரும்பொழுதும் உங்கள் குடும்பத்தவரின் எதிர்வினை எப்படியாக இருந்தது ?

மேற்சொன்ன காரணங்கள் தவிர்த்தாலுமே ஒரு பெண் பொதுவெளியில் நுழையும் போது எதிர்கொள்ளும்  சூழல்களை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். ஆண்களை விட பெண்களை கூர்மையாக்கும் காரணிகளாக அவற்றை நான் எடுத்துக்கொண்டேன். பொதுவாக ஒரு பெண்ணை, அவளது திறமைகளை, ஆக்கங்களை இல்லாமல் ஆக்குவதற்கு நேருக்குநேர் எதிர்கொள்ளத்  தயங்கும் கோழைகள், நயவஞ்சகர்கள் தமது கைகளில் எடுக்கும் ஆயுதம் ‘உளவியல் யுத்தம்.’ உளவியல் ரீதியாக ஒரு பெண்ணை தீண்டும் போது அவள் உருக்குலைந்து தடுமாறிப்போகிறாள். ஆனால் ஒரு பெண் இதையும் எதிர்கொள்ள பழகிக்கொண்டாளோ அவள் மிகப்பெரிய அடையாளமாக உருவேற்கிறாள்.

எல்லோரும் எதிர்கொள்ளும் பொதுவான எதிர்வினைகளை காலங்காலமாக குறை சொல்வதை தவிர்த்து தீர்வை தேடி நகரும் காலமிது. காயங்கள் இல்லாத வெற்றியில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது? தழும்புகளை முத்தமிடும் வீரனுக்கான கர்வம் அது. எங்களிடம் தழும்புகள் இருக்கின்றன. அவற்றை வெளிக்காட்டி தான் அங்கீகாரம் கிடைக்கவேண்டு என்று விரும்பவில்லை.

முற்றிலும் பாலைவன லாந்தராக மட்டும் ஏற்றுக்கொண்ட வாசகர்கள், சக எழுத்தாளர்களின் விமர்சனங்கள் பாராட்டுக்கள் அறிவுரைகள் அது ஒன்றே எனக்குப் போதும்.

எனது குடும்பம் மிகப்பெரியது. ஓர் எழுத்தாளராக  சமூகத்தை தான் எனது குடும்பமாக பாவிக்க வேண்டும். அதனால் சமூகத்திற்கான பொதுப்பதிலை இங்கு தந்துள்ளேன். மற்றபடி எனது பெற்றோர் ,சகோதரர்கள், கணவர், குழந்தைகள், பற்றி இங்கு பேசி என்னவாகிவிட போகிறது. நான் எழுதும் துறையை தேர்ந்தெடுத்துள்ளேன். என் மீதான நம்பிக்கையை அவர்கள் தற்போது தான்  விதைத்து இருக்கிறார்கள்.  ஒரு குழந்தை தத்தித்ததி நடக்கப்பழகும் போது பதைபதைக்கும் தாயைப்போல் எனது குடும்பமும் ஒரு காலத்தில் பதைபதைத்தது.  நான் அதன் உட்பொருளை புரிந்து கொண்டேன். அதனால் அவர்களின் எதிர்ப்பு பெரிதாக என்னை காயப்படுத்தவில்லை. என் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரும்வரை காத்திருந்தேன். கிட்டத்தட்ட எட்டு ஒன்பது ஆண்டுகால காத்திருப்பு அது.

நீங்கள் இப்பொழுது சவுதியில் வசித்து வருகின்றீர்கள். உங்கள்தமிழ் சங்கம் தொடர்பாகவும் அதன் நோக்கங்கள் பற்றியும் சொல்லுங்கள்….

‘ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்’ எனப்படும் அமைப்பை நாங்கள் தற்போது மிகவும் சிரத்தையுடன் நடத்தி வருகிறோம். ஓரளவு தேர்ந்த உறுப்பினர்களுடன் தொடங்கிய ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் தனது இலக்குகளை தெளிவாக உருவாக்கி வைத்திருக்கிறது. அதன்படி, தமிழ் இலக்கிய வரலாற்றில் எங்களின் பங்கு ஒரு துளியேனும் நிச்சயமாக இருக்கும். மேலும் தாய்மண்ணைப்  பிரிந்து தங்களின் அலுவல் காரணமாக வளைகுடாவில் பணி புரியும் எமது சகோதரர்களின் உணர்வுகளைப்  பிரதிபலிக்கும் பிம்பமாகவும் செயல்படும். மிக முக்கியமாக, சக மனிதனுக்கு சாதிமத பிரிவினை ஏற்றத்தாழ்வுகள் இன்றி உதவிகள் தேவைப்படும் சகோதரகளுக்கு எங்களால் இயன்றதை மனித நேயத்துடன் கைக்கொடுக்க முயல்கிறோம். தற்போது “ஆய்த எழுத்து” என்னும் இலக்கிய தளத்தை ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக தொடங்கி இருக்கிறோம். இது முழுக்க முழுக்க இலக்கிய செயல்பாடுகளைக் கொண்டு தனித்தன்மையுடம் செயல்பட இருக்கிறது.

பாலைவன லாந்தர் ஏன் எழுத வேண்டும் ?

பாலைவன லாந்தர் ஏன் எழுதக்கூடாது …………. ? பொதுவாக கருத்துரிமை வழங்கப்பட்டிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் ஜனநாயக நாட்டின் குடிமகளாக எனக்கு என் மனசாட்சிக்கு இக்காலத்தையும்  இக்கால நடைமுறைகளையும்  வரும் தலைமுறைகளுக்கு ஆவணமாக விட்டுச் செல்வதற்கென்றேனும் எழுதுவதென்பது தலையாயக்கடமை. இருந்தாலும் எழுதிவிட்டால் மட்டும் என்ன நேர்ந்துவிடும் என்ற கேள்வி துரத்திக்கொண்டே இருக்கிறது. மொழியின் மீதும் சமூகத்தின் மீதும் நான் கொண்டிருந்த ஈடுபாடுதான் என்னை எழுதத்தூண்டியது. தன்னால் செயல்படுத்த இயலாத மாற்றத்தை கலைஞன் கலைகளாக மொழிபெயர்த்துக்காட்டுகிறான். ஓவியம் இசை நாடகத்தை போல் கவிதைகளும் தனக்கான பாடுபொருளை இடம்பெயர்த்து நிற்கிறது. எனக்கு வசப்பட்டிருக்கும் எழுத்துக்கள் முதலில் என்னை திருப்தி செய்யவேண்டும்.  இந்த சுயநலமான விதிதான் எனது நிலையில் நான் கண்டடைந்த பொருளும் கூட. எண்ணிலடங்கா எழுத்தாளர்களுக்கு மத்தியில் நான் ஒப்பிட்டு மதிப்பிட்டு பார்க்க எழுதுவதை விட என்னை ஆற்றுப்படுத்தும் எழுத்துக்களே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கலைகளுக்கு செய்யும் ஆகப்பெரிய மரியாதை அதை அதற்கான தன்போக்கில் செலுத்தும் தன்வித்தையை கையாளும் உளப்பாங்கே. மேலும், சமூக சீர்கேடல்களின் மீது ரௌத்திரம் பொழியும் எவருக்கும் ஓர் ஆயுதம் தேவைப்படுகிறென்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் புள்ளியில் உணருங்கள். எனது ஆயுதம் என் எழுத்துக்கள்.

கவிதை என்பது உங்களிற்கு எப்படியாக இருக்க வேண்டும் ?

என்னை துளியேனும் சலனப்படுத்த வெண்டும். கடந்து சென்ற பின்னும் திரும்பித்திரும்பி பார்க்கும் ஏதோ ஓர் ஈர்ப்பின் உக்தியாக இருத்தல் வேண்டும். இந்த வரிகளை நாம் ஏன் எழுதவில்லை என்ற ஏக்கத்தை தர வேண்டும். உயிரற்ற அந்த எழுத்துக்களை நேசிக்கவும் மதிக்கவும் வைப்பதாக இருக்க வேண்டும். தொலைந்த காதலனின் சாயலில் மரித்த அன்னையின் சாயலில் ஏன் பலமுறை தற்கொலை செய்த என்னின் சாயலில் ஒரு கணமேனும் புரட்டிபோட வெண்டும் என்ற  வகையில் இவ்வாறான நிறைய கவிதைகளை வாசித்து இருக்கிறேன். மனிதன் தன்னால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை வரைந்து இசைத்து சமைத்து செதுக்கி அறுத்துக் கொண்டாடியபோது களித்திருந்த கூட்டம், இன்று அதிகமாக எழுத்துக்களின் உதவியை நாடி நிற்கிறது. அவ்வகையில் எனது கவிதைகள் சமகால அத்துமீறல்களின் வடிகால் என்றும் கூறலாம்.

கவிதையின் செய்நேர்த்தியை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள் ?

அது ஒரு நீரூற்று என்று சொன்னால் மிகையாகாது. இரண்டு வரிகளிலும் நீரூற்று இருக்கிறது. போர்வீரனின் கையில் இருக்கும் நீண்ட வாளுக்கும் குறுங்கத்தியுக்கும் எந்த வேறுபாடுகளும் இல்லை கவிதைகளும் அவ்வாறே தனது உத்வேகத்தை நிர்ணயித்துக்கொள்கிறது. நீங்கள் சிதைந்த கருக்கலைவை நேராக பார்த்து இருக்கிறீர்களா? குறைந்த பட்சம் முட்டைகளை உடைத்து அதிவேகமாக மஞ்சள் கருவை வெள்ளையுடன் முட்கரண்டியால் கலைக்கும் போது ஓர் உணர்வு மின்னல் போல் வந்து தோன்றுமே…..! அதன் உச்சபட்ச நீட்சியை சொல்கிறேன். இன்றைய காலகட்டத்தில் திரும்பிய திசையெல்லாம் சிதைவுகள், இரத்தக்கசிவுகள், வெடிப்புகள். இவையாவும் நேர்த்தியற்றிருக்கும் போது கவிதைகளுக்கு மட்டும் செய்நேர்த்தி தேவையா ? என்னளவில் நானொரு சமகாலத்தை ஆவணப்படுத்தும் ஓர் எளிய கடத்தி. புள்ளிகள் கோடுகள் வளைவுகள் வைத்து அளவுக் கட்டுமானங்களாக  அளக்கும் கட்டமைப்புகள் என்னிடம் இல்லை.

அப்போ கவிதைகளுக்குப் பகுப்புகள் தேவையில்லை என்று சொல்கின்றீர்கள்….

ஆமாம்……….. பகுப்புகளுக்குள் (categories) கவிதைகளை நிர்பந்திக்கத் தேவையில்லை.  அதை வேறுவிதமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பகுப்புகள் வைத்து தான் இன்றைய கவிதைகள் எழுதப்படுகின்றதா? சமீப காலமாக அதிகமான வரவேற்புகளை பெற்ற கவிதைகள் தனிப்பட்ட பகுப்புகளில் தன்னை அடைத்துக்கொள்ளவில்லை. இதை நான் தற்போதைய தேவையாகவே பார்க்கிறேன். இன்னும் ஆழ்ந்து தேடினால் கடந்த காலங்களில் கூட பகுப்புகள் பிரித்து மட்டுமே கவிதைகள் எழுதப்படவில்லை.

என்னுடைய முதல் கவிதை தொகுப்பிற்கும் இரண்டாவது தொகுப்பிற்கும் வேறுபாடுகள் இருந்தன. மூன்றாவது தொகுப்பும் வேறு மாதிரியாகத்தான் இருக்கும் (இன்ஷா அல்லாஹ்). குறுகிய காலங்களில் இந்த தொகுப்புகளுக்கே நிலையான பகுப்பை நிர்ணயிக்க இயலாத போது பகுப்புகள் தேவையா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.  இது மட்டுமின்றி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு தனித்தன்மையும் தனிப்பட்ட எழுத்து நடையும் (போலச்செய்தல் தவிர்த்து) செம்மையுடன் இருக்கிறது. கருத்து, கருப்பொருள் ரீதியாக எடுத்துக்கொண்டால் புறச்சூழல் போதுமானதாகிறது.

மூன்றாம் உலகபோர் தண்ணீருக்கானதாக இருக்கும் என்ற பொதுக்கருத்தைத் தாண்டியும் இன்று பல்வேறு நிலப்பிரிவுகளில் இனம் மொழி சார்ந்து ஏகப்பட்ட குறும் யுத்தங்கள் படுகொலைகள் நடந்தேறிக்கொண்டுதானே இருக்கின்றன. இத்தகைய சூழலில் ஆயிரம் பாரதிகள் விடுதலை தாகத்தை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் ஆசுவாசமாக அழகியலை, நகைச்சுவையை, நையாண்டியை கையில் எடுங்கள் என்று உபதேசித்துப்பாருங்கள். கவிதைகள் தனது சுதந்திரத்தை எந்த குடுவைக்குள்ளும் ஒருபோதும் அடைத்துக்கொள்வதில்லை

ஒரு கவிதைக்கு அதன் பயணம் தொடர்பாக ஆரம்பம் அல்லது முடிவு என்ற ஒன்று உண்டா ?

இதை இப்போதே எழுதிவிட வேண்டும் என்ற உந்துதலை ஆரம்பம் என்று வைத்துக்கொண்டால் இதற்கு மேல் ஒரு புள்ளி கூட வைக்க கூடாது என்ற மனநிலையை முடிவு என்று கொள்க. பயணத்தை அதன் உரிமையாளன் தான் தீர்மாணிக்க வேண்டும், நான் ஒரு நாடோடியைப் (ஜிப்ஸி) போல கட்டமைப்புகளை உடைத்து எழுதப்படாத விதிகளிடம் இருந்து வெளியேறி பயணிக்கிறேன். கலைகளின் தொடங்குமிடம் நிச்சயமாக ஒழுங்கற்றதாகத்தான் இருந்திருக்க வேண்டும். அது ஆழ்மனதின் குழப்பங்களை பிரதிபலிக்கும் ஆடி. அதில் வரையறைகளை உடைக்கும் எழுத்தாளனின் கர்வம் மிகப்பெரிய பாடுபொருள். சிலருக்கு வலி ,சிலருக்கு போதை, சிலருக்கு மந்தகாசம்,சிலருக்கு கொண்டாட்டம், இப்படி எந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் பயணத்தை தொடங்கியிருக்கலாம். ஒவ்வொருவருக்கும் போகுமிடம் தீர்மானிக்கப்படாத பயணத்தில் ஒவ்வொரு இலக்கு காலத்தால் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும்.

புதுக்கவிதைக்கும் நவீன கவிதைக்கும் இடையே வேறுபாடுகளை உணருகின்றீர்களா ?

மொழியை சற்றேனும் தளர்த்திய கட்டமைப்புகள் புதுக்கவிதை. நவீன கவிதைகளை அதற்கு அடுத்த தளமாக வைத்து கொள்ளலாம். எத்தனை மாற்றங்களை இந்த உலகம் இதுவரை சந்தித்திருந்தாலும் அதை தோற்றுவித்தவர்களை நினைவுகூர்தலே அதற்கான மரியாதையாக இருக்கும். அவ்வளவில் நவீன கவிதைகளின் ஆசிரியர்களாக ஆத்மாநாம், பிரமிள், விக்ரமாதியன், பிரம்மராஜன், சுகுமாரன், ஞானக்கூத்தன், நகுலன், சுந்தரராமசாமி, தேவதச்சன், கலாப்ரியா, யவனிகா ஸ்ரீராம்  போன்றவர்களின் பங்கு மிக முக்கியமானது. தவிர்த்து இக்காலத்தில் தொடர்ந்து இயங்கி வரும் நவீனத்துவ கவிஞர்களை பெயர்கள் குறிப்பிடவில்லை என்றாலும் நாம் நன்கறிவோம் . என்னளவில் இந்த வேறுபாடுகளை ஆராய்ச்சி செய்யும் தேவை ஏற்பட்டிருக்கவில்லை, பாரதியின் மீதுள்ள ப்ரியத்தை மறுதலிக்கவே இயலாது. நெடுங்காட்டுக்குள் புதைத்து வைத்த தீயின் ஆக்கமே பாரதியின் வரிகள்,  புதுக்கவிதைகள் பாரதியின் வரிகள் என்றால் எண்ணற்ற பாரதியின் மெய் பிம்பங்களே நவீன கவிதைகள், காலப்போக்கில் கலைகளும் தனது வீரியத்தை புதுப்புது உருவாக்கத்தில் மெருகேற்றிக்கொள்ள விரும்பிக்கொள்ளும் என்பதற்கு பின்நவீனத்துவ கவிதைகளும் உதாரணம். பின்நவீனத்துவ கவிதை என்றால் என்ன என்ற கேள்வி சமீப காலமாக தொடர்ந்து வருகிறது, என்னளவில் சமைக்க தெரிந்த எனக்கு சமையல் குறிப்புகள் செய்முறை விவரிக்கத்தெரியாத கையறு நிலையில் இருக்கிறேன். எனது கவிதைகளுக்கென்று எந்த கட்டமைப்பு வரையறைகளையும் நிர்ணயித்ததில்லை. பொதுவாக இந்த மாதிரியான செய்முறை கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை.

நவீன கவிதை வடிவத்திற்கு தெளிவானதொரு அறம் இருக்கிறதா ? ஆம் என்றால் எப்படியாக ?

ஆமாம் இருக்கிறது. அது அந்த கவிதையை எழுதிய எழுத்தாளனுக்கும் கவிதைக்கும் இடைபட்டதாக இருக்கின்றது. அறச்சீற்ற வரிகளை நீங்களும் அவதானித்து இருப்பீர்கள். பொதுவாக நவீன கவிதைகள் இலகுவாக செய்யப்படுகிறது என்ற எண்ணம் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனும் தனது மினக்கெடல்களை, தகவல் சேகரிப்புகளை, கற்பனைகளை, வார்த்தை அமைப்புகளை, வாசிப்பு அனுபவங்களை, இரசனைகளை சிறிது சிறிதாக செதுக்கித்தான் கவிதைகளை உருவாக்கி வைத்திருக்கிறான். அவற்றை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதும் விமர்சிப்பதும் நியாயமற்ற செயல்பாடு. ஒழுங்கற்ற ஒவ்வொன்றையும் வியந்து ப்ரியப்படும் இன்றைய காலகட்டத்தில் நவீன கவிதைகளின் வடிவத்திற்கு தெளிவானதொரு அறம் என்பதை எப்படித் தீர்மானித்தாலும் அவற்றையும் விமர்சிக்கும் பொதுத்தன்மையும் இருக்கிறது. சில குரல்கள் இந்த மாற்றத்தை விரும்பவில்லை என்று தீவிரமாக பதிவு செய்து வருகின்றன. நாம் அதன் முடிவுகளை வாசகர்களின் வசமே ஒப்படைப்போம். தன்னைத் திருப்தி செய்யும் கலையை ஆக்குவதே கலைஞனின் அறமெனில் இங்கே நவீன கவிதை தனக்கான அறத்தை அடைந்தே தீரும்.

விமர்சனம் என்பதே தவறுகளை செப்பனிடுவதற்கும் புதிய தேடுதலுக்கான வாசல்களைத் திறப்பதும் தானே. நீங்கள் எப்படி விமர்சனத்தை நியாயமற்றது என்று சொல்ல முடியும் ?

நவீன கவிதையின் வடிவத்தை குறித்து ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதை தான் நியாயமற்ற செயல்பாடு என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேனே தவிர விமர்சனங்களை புறக்கணிக்கவில்லை. விமர்சனங்களின் மீது எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது எப்படிப்பட்ட விமர்சனம் என்பதில் தான்எனக்குக்  குழப்பம். ஒருவேளை பாரதியின் கவிதைகள் அன்று தவறான விமர்சனங்களால் புறக்கணிக்கப்பட்டு இருந்தால் இன்று எத்தகைய இழப்பை நாம் சந்தித்திருப்போம். எந்த பொந்தில் எந்த அக்கினிக்குஞ்சு இருக்கிறதென்பது யாருக்கு தெரியும்?

ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர்களால் புறக்கணிக்கப்படும் ஒருவரின் கவிதைகள் இன்னொரு சாரார்களால் கொண்டாடப்படுகிறது. இதை என்னவென்று சொல்வீர்கள்? விமர்சனங்கள் இங்கு குழுக்கள் குழுக்களாக வேறுபடுகின்றது.  ஒரு கவிதையின் அடியில் எழுத்தாளரின் பெயரை கவனிக்காமல் கவிதையை மட்டும் இரசிக்கும் போக்கு குறைந்துள்ளது. தமிழ் இலக்கிய சூழலில் ஒரு நூல் ஐந்நூறு பிரதிகள் விற்பது பெரிய விஷயம். ஆனால் திரும்பத்திரும்ப அந்த ஐந்நூறு வாசகர்களிடம் தான் நாம் சென்றாக வேண்டும். முதலில் விமர்சனக்கூட்டங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். பொதுத்தன்மையுடன் வெளிப்படையாக விமர்சிக்க வேண்டும். தனிமனித விருப்பு வெறுப்புகளை தவிர்த்த நேர்மையான விமர்சனங்கள் நடைபெறும் போது மட்டுமே நீங்கள் குறிப்பிடும் வாசல்கள் திறக்க வாய்ப்பு வரும்.

சமீபத்தில் கவிதை குறித்த ஓர் உரையாடலில் கலந்து கொண்டேன். அது தெளிவற்ற சிந்தனையில் இருப்பவர்களின் வலைப்பின்னல் என்று சில கேள்விகளுக்கும் பதில்களுக்கும் பிறகுதான் நான் உணர்ந்தேன். அதில் எனது நிலை எவ்வாறு இருந்தது என்றால், “ஏம்பா………… கைய புடிச்சு இழுத்தியா?”, “என்ன…….. கைய புடிச்சு இழுத்தியா?” என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சொல்லும் வரிகள் நினைவு வந்தது. நான் இதை சிரிப்பதற்கு சொன்னாலும் நாம் சொல்லும் வரிகளையே மீண்டும் மீண்டும் நமக்கே கேள்விகளாக மாற்றி நம்மை கோபப்படுத்தி வார்த்தைகளை விடச் செய்யும் செயலை அவர்கள் தொடர்ந்து செய்து வருவதைப் பின்புதான் கவனித்தேன். இது ஒரு பாடமாக அமைந்தது. இன்றைய அரசியலும் இன்றைய தமிழ் இலக்கிய களமும் நிறைய தொனியில் ஒரே மாதிரியாக செயல்படுகின்றது.  சாமனியர்களின் குரல் வெளியே கேட்பதே இல்லை.

இவற்றை தவிர்த்து பெரும்பான்மையான சமகால எழுத்தாளர்களின் மீது நான் மரியாதை வைத்து இருக்கிறேன். அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தும் வரிகிறேன். எனது கவிதைகள் குறித்த நிறை குறை விமர்சங்களையும் பரிசீலித்து எனது தவறுகளை திருத்தவும் செய்கிறேன். இவை தான் நான் எனது எழுத்துக்களுக்கு செய்யும் கடமை.

ஒரு இலக்கிய பிரதியானது எந்தக்காலத்தை வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும் ?

சமகாலத்தை பதிவு செய்யும் பொறுப்புதாரர்களாக இலக்கியவாதிகளை பார்க்கிறேன். ஒரு  எழுத்தாளனுக்கு தேவையான கருப்பொருளைக்  காலம் காட்சிப்படுத்தி விடுகிறது. இருந்தாலும் சில விதிவிலக்குகளும் இருக்கின்றன. உலகின் ஆதி வேரிலிருந்து இன்று வரையான அனைத்து சலனங்களையும் அசைத்துப்பார்க்கும் உத்தியும் ஆர்வமும் எழுத்தாளனுக்கு வசப்படுகின்றது. உங்கள் கேள்வி வாசகர்களை குறித்து இருப்பதால் இதை இன்னொரு கோணத்தில் எடுக்கிறேன்.  பசியின் பல்வேறு வேறு தன்மைகளை கொண்டே உணவு மதிக்கப்படுகிறது. அனைத்து துறையிலும் நிகழும் மாற்றம் இது. ரசனைகளுக்கேற்றாற்போல் தம்மை முன்னிறுத்தும் நுட்பம் கலைகளையும் விட்டுவைத்ததில்லை. இதைப்  பெரும்பான்மையாக எடுத்துக்கொள்ளலாம். காலங்காலமாக தண்ணீரின் சுவையும் தன்மையும் மாறாமல் இருப்பது போன்ற திடமான இலக்கிய வாசகர்கள் இருக்கும் வரை நிர்ணயமற்ற காலப்பிரதிகள் அழிந்துபோவதில்லை.

தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடிகளாக யாரை அடையாளப்படுத்துகின்றீர்கள் ?

ஆத்மாநாம், பிரமிள், விக்ரமாதியன், பிரம்மராஜன், சுகுமாரன், ஞானக்கூத்தன், நகுலன், சுந்தரராமசாமி, தேவதச்சன், கலாப்ரியா, கவிஞர் கல்யாண்ஜி வண்ணதாசன், யவனிகா ஸ்ரீராம் போன்றவர்களை தமிழ் சமகால இலக்கிய சமூகம் மூத்த ஆசிரியர்களாக ஏற்றுக்கொண்டிருக்கும் போது எனக்கென்று தனிப்பட்ட கருத்து இருக்கவில்லை. மேலும் நான் அதிகமாக வாசித்திருக்கவில்லை. இதை சொல்வதற்கு சிறிது தயக்கமாக இருந்தாலும் உண்மை அதுதான். சமீப காலமாகவே வாசிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறேன். ஆதலால் இன்றைய சூழலில் இயங்கும் கவிஞர்களை வாசித்திருக்கும் அளவிற்கு முன்னோடிகளின் எழுத்துக்களை வாசிக்கவில்லை.

பெண்கள் அதுவும்  முஸ்லீம் பெண்கள் பல வழிகளில் தனிமைப்படுத்தப்படுவதாக அல்லது ஒடுக்கப்படுவதாகக ஒரு குற்றச்சாட்டு உண்டு. இது தொடர்பாக …..?

இது காலங்காலமாக தொடரும் குற்றச்சாட்டு. இதன் வேர் மிகப்பழமையானது. இந்த நிலை உருவாக்கப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் சமூகம் இதற்கான பொறுப்பை பகிர்ந்தே ஆக வெண்டும். 2019ம் ஆண்டில் இதன் அடர்த்தி குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி பெண்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தவோ ஒடுக்கப்படுவோ இல்லை (விதிவிலக்குகள் தவிர்த்து).

அடுத்து முஸ்லிம் பெண்கள் என்று வேறுபடுத்தி கேள்வி எழுந்தமையால் :

முஸ்லிம் பெண்கள் தங்களின் கொள்கைகளின் கோட்பாடுகளின் அடிப்படையில் வளர்க்கப்பட முயற்சிக்கப்பட்டு தோல்வியடைகிறார்கள். தெளிவான புரிதல்கள் இன்று எழுபத்தைந்து விழுக்காடு இல்லை என்பதே உண்மை. இது மிகப்பெரிய சவால். ஒரு ஜனநாயக நாட்டின் கோட்பாடுகளை இன்றைய அரசியல் எவ்வாறு புறக்கணித்து விளிம்பு நிலை மக்களின் மீது கட்டவிழ்ப்பு செய்கிறதோ அதே போல் இஸ்லாமிய சட்டங்களை புரிந்து கொள்ளாத அறிவீனர்கள் செய்யும் அடக்குமுறை தான் பெண்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் ஒதுக்குதல் என்பது.  பெண்களின் உணர்வுகளுக்கு சுதந்திரம் தருவதில் இஸ்லாமிய சட்டங்களை போன்று எந்த சட்டமைப்பிலும் இல்லை. குறிப்பாகப்  பெண் திருமணங்கள், விதவை மறுமணங்கள் விவாகரத்து, பெண் கல்விமுறை, சொத்துரிமை, நிர்வாகபொறுப்புகள் போன்றவற்றில் இஸ்லாமிய அடிப்படை சட்டங்களில் பெண்களுக்கு ஆண்களுக்கு சமமான இடமளித்துள்ளது. ஒரு குற்றச்சாட்டை வைக்கும் முன் தெளிவான ஆதாரங்களை கையிலெடுத்தல் அவசியம். இந்த தகவலிலும் நேர்மையான ஆதாரத்தை மூலப்பிரதிகளில் தேடினீர்கள் என்றால் உண்மை பதில்களை பெற்றுக்கொள்ள இயலும்.  காலமாற்றத்தில் இடையில் ஏற்படுத்தப்பட்ட சுயநலவாதிகளின் ஆதிக்க அடக்குமுறைகளால் இம்மாற்றங்களை மக்கள் தமது பெண் சமூகத்தின் முதுகில் சிலுவைகளைப்போல் ஏற்றியுள்ளது.  உங்களின் குற்றசாட்டு உண்மை ஆனால் அது இஸ்லாம் மார்க்கத்தால் ஏற்படுத்தப்பட்டது அல்ல.

பெண் என்பவள் சகல வழிகளிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய கீழ்நிலை உயிரி என்று பழமைவாத உலமா வர்க்கம் உறுதி செய்கின்றார்களே…?

அப்படியிருந்தால் பெண்ணின் வயிற்றில் கருவை வைத்திருக்க வேண்டிய அவசியம் தான் என்ன ? இப்படி ஒரு கூட்டம் மடத்தனத்தை மக்களிடையே பரப்பும் என்பதால் தான் கர்ப்பப்பை என்னும் கண்ணியத்தை இறைவன் பெண்களிடத்தில் ஒப்படைத்து இருக்கிறான். ஏற்கனவே மேலே சொன்னதை போன்று தெளிவான புரிதல் இல்லாத இடைப்பட்ட மக்களால் கணக்கிலடங்கா குழப்பங்கள் உருவாக்கப்பட்டு மக்களை மூடர்கள் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அறிவையும் தெளிவையும் தேடுவோர்க்கு திருக்குர்ஆன் சிறந்த வழிகாட்டி.

‘தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது’ என்று இஸ்லாம் கூறுகின்றது.

இது தாய்மைக்கு கிடைத்த மரியாதை. திருக்குரான், மனம் ஒப்புக்கொள்ளாத திருமண வாழ்வை முறித்துக்கொள்ளவும் மனம் ஒத்த ஒருவருடன் மீண்டும் திருமணம் செய்து வாழவும் முழுச்சுதந்திரம் தருகின்றது. அது பெண் சிசுக்கொலையை பகிரங்கமாக தடுக்கின்றது. பெண் கல்வியை முழுமையாக ஆதரிக்கின்றது. மேலும் அது பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியிருக்கிறது. இவையெல்லாம் தாண்டி பெண் கட்டுப்படுத்த வேண்டிய கீழ்நிலை உயிரி என்று சொல்பவர்களின் அறிவும் மனநிலையும் பரிசோதித்துப் பார்க்கவேண்டிய ஒன்று.

‘தற்கால சூழலில் தானும் தன் சமூகமும் அழிக்கப்படும்போது பாதுகாப்பிற்கும், வாழ்வின் இருப்பிற்காகப் போராடுவதும் ஜிகாத் ஆகிறது. இது ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாதுகாப்பிற்கான யுத்தம்.’ ஹெச். ஜி ரசூல் -ஜிகாதி என்ற நூலில் கூறுகின்றார் . இது தொடர்பாக உங்கள் பார்வை என்ன ?

முறையற்ற செயற்பாடுகளுக்கு ஆயிரம் பெயர்கள் வைத்தாலும் அது சரியான தீர்வு என்று ஒருபோதும் ஆகாது. தனது பால்ய மகளை பாலின வேதனை செய்த ஒருவனை தந்தை கொலை செய்து விடுகிறான் என்றால் நீங்கள் யாரின் பக்கம் ஆதரவு வைப்பீர்கள்? இவ்வாறு ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாதுகாப்பிற்கென அவர்கள் முன்னெடுக்கும் ஜிஹாத் என்றாவது வெற்றி அடைந்து இருக்கிறதா ? சூத்திரம் தவறானால் விடையும் தவறாகத்தான் கிடைக்கும். தவறான பாதை என்றுமே ஊர் போய் சேராது. அத்தகைய குறுக்கு வழி குறித்து நாம் போதிக்கப்படவுமில்லை. மேலும், இன்றைய சூழலில் கண்களுக்கு முன்னமே சட்டம் வளைக்கப்படுவதை நாம் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எதிர்வினை ஆற்றவில்லை. ஏனெனில்,  நாம் இன்னமும் சக மனிதர்களின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். தவிர்த்து, வன்முறையை கையாளும் போது அங்கே அப்பாவி மக்கள் பாதிப்படைவதை தவிர்க்க இயலாது. இந்தக் கொடூர உத்தியை இஸ்லாம் ஒருபோதும் கற்றுத்தரவும் இல்லை, வழிகாட்டவும் இல்லை. இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்,

‘ஒவ்வொரு ஆத்மாவும் தான் சம்பாதித்தை கைகளில் ஏந்திச் செல்லும் மரணத்திற்கு பிறகான தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது இழப்பிற்கு வேதனைக்கு இங்கேயே குறுக்குவழியில் பதில் தேட மாட்டான்’.

பாதிப்படைந்தவர்கள் பெருந்திரளாக ஒன்றினைந்து நேர்மையாக போராடினால் உலகில் எந்த மாற்றத்தயும் கொண்டுவரலாம். வரலாற்றில் இதற்கான படிப்பினைகள் ஏராளம் உள்ளது.

பெண்களுக்கான ஆடைத் தேர்வை மறைமுகமாக ஆண்களே தங்கள் கையில் வைத்துக்கொண்டு அதே வேளையில் அபாயா தான் முஸ்லீம் பெண்களது கலாச்சார உடை என்று சொல்கின்றார்கள். ஆனால் அவர்கள் தமது பழைய பாணியில் இருந்து இறங்கி வரவில்லையே ?

பெண்களுக்கான ஆடைதேர்வை ஆண்கள் தங்கள் கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தவறான குற்றச்சாட்டு. நீங்கள் எங்கேயோ சில இடங்களில் நடக்கும் செயல்களை வைத்து ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டக்கூடாது. தமிழ் நாட்டை பொறுத்தவரையில் இஸ்லாமிய பெண்கள் பெரும்பாலும் (எழுபத்தைந்து விழுக்காட்டிற்கும் மேலே) விரும்பியே அபாயா அணிகிறார்கள். அவர்கள் பள்ளிகளில் சீருடை அணியும் போது அபாயா அணிவதில்லை. மற்றபடி சட்டத்தை அதன் நோக்கத்தை உணர்ந்து செயல்படுகிறார்கள். ஒரு பொய்யை பலமுறை சொல்லி உண்மை ஆக்குவது போல் ஆடை விசயம் சமீப காலமாக கையாளப்படுகின்றது. இதில் பழைய புதிய பாணியெல்லாம் இல்லை. அபாயாவிலும் மேற்கத்திய ரசனைப்படி தைக்கப்பட்ட ஜீன்ஸ் ரகம் புகுந்துவிட்டது. இன்னமும் சாளரம் உடுத்தி பணிகளுக்கு செல்லும் ஆண்களும் இருக்கின்றனர். இதை என்னவென்று சொல்வது? ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் ஆடை சுதந்திரம் இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட ஒரு கூட்டம் சார்ந்து அடையாளமாக ஒரு ஆடையை கையில் எடுக்கும் போது அதன் நிறை குறைகளை உற்றுநோக்கித்  தீர ஆலோசித்து பெரும்பான்மையினரின் முடிவுகளை செயல்படுத்துதலே சிறந்தது. அவ்வகையில் அபாயா ஒருபோதும் விமர்சனத்திற்குள்ளாகாத உடையாகவே இருக்கும்.

உள்ளதை சொல்லுங்கள். அபாயா பெண்களுக்கு ஒரு சிறையா இல்லை சிறகா ?

அபாயாவிற்கு முந்தைய காலம் என்ற ஒன்று உள்ளது. கடந்த நூற்றாண்டில் தான் அபாயா இந்தியாவில் வேகமாக பரவியிருக்கிறது. அப்போதும் கூட எமது மூத்தவர்கள் உடலில் கிலோ கணக்கில் துணியை சுற்றிக்கொண்டிருந்தார்கள். அது சேலை வகையை சார்ந்து இருந்ததால் விமர்சிக்கப்படவில்லை. மேலும் இன்றைய காலகட்டத்தில் ஆடைகளால் தான் பாலின வன்முறைகள் நடக்கின்றன என்பதுவும் தவறான பார்வை.

சிறகுகள் உள்ள பறவைகளைக் கூட சிறைகளில் அடைத்து பாதுகாக்கும் சமூகமிது. ஆக, சிறை, சிறகு என்ற உவமேயத்தை கடந்து தனிப்பட்ட மனிதனின் சுதந்திரத்தை அறுத்து விடுவதாக குற்றச்சாட்டுகளையும் தவிர்த்து அபாயாவை குறித்து சொல்கிறேன்:

‘ஆடை அவரவர் உரிமை. இங்கே மறுக்கப்படுவதின் மீதான மோகங்கள் தலைதூக்கி நிற்கின்றன. எதிர்மறைக் காதலின் காலமிது. என்னளவில் எந்த பதிலும் எவரையும் முழுமையான திருப்தி படுத்திவிடாது.

எனக்கான எனது பதில் என்னவென்றால் ,

“எந்த ஓர் ஆடை எனது தாயுக்கும் மகளுக்கும் அணிவித்து இரசிக்கும் தன்மையுடையதோ அதுவே எனக்குமானது எனது அபாயா எனது விருப்பத்திற்குரிய முதல் தேர்வு “

இறுதியாக நீங்கள் உங்களை எப்படியாக உணருகின்றீர்கள்? ஒரு இஸ்லாமிய தமிழிச்சியாகவா இல்லை ஒரு முஸ்லீமாகவா?

ஒரு கதை சொல்லட்டுமா …… ? பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கும் புகழ்பெற்ற நடிகை ஒருவரிடம் பதினெட்டுக் கொண்ட மைக்குகள் நீட்டப்படுகின்றன. அதில் சரமாயாக கேள்விகள் கேட்கப்பட்டன:

”இந்த வலியை எப்படி உணர்கிறீர்கள்?”

”இந்த குழந்தைக்கு என்ன இனிஷியல்? ”

”அடுத்த திரைப்படம் எப்போது வெளிவரும்?”

”இனி இந்த உடலை கொண்டு கவர்ச்சி காட்ட இயலுமா?”

இன்றைய ஊடகங்கள் பெரும்பாலானவை ஒளிப்பரப்பாகும் செய்திகளின் நிலையும் இதே நிலை தான்.  பெருகிவரும் இனப்படுகொலைகள். ஆணவக்கொலைகள்,சாதி மத இன மொழியின் பெயர்களால் நடைபெறும் கொலைகளுக்குள் அறுபடுவது ஒரே குருதியும் நரம்புகளும் தான். சக மனிதனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத, சக மனிதனின் உணர்வுகளுக்கு மரியாதை செலுத்தாத செயலுக்கு எந்த பெயர் சொன்னாலும் அவை ஒதுக்கபட வேண்டிய மறுக்கப்பட வேண்டிய ஒன்றுதான். அவ்வகையில் நான் இஸ்லாமிய தமிழச்சியாக, முஸ்லிமாக இந்தியனாக மனிதநேயம் மிகுந்த மனிதனாகப்  பெருமிதம் கொள்கிறேன்.

பாலைவன லாந்தர் – இந்தியா

(Visited 5 times, 1 visits today)