வேங்கையின் மைந்தன்-பாகம் 2-18-பாசத்தின் பிடிப்பு

மின்னலெனப் பாய்ந்து வந்து தமது இடது கரத்தில் தைத்து வீழ்ந்த கூரம்பை இராஜேந்திர மாமன்னர் ஒரு கணம் உற்றுப் பார்த்தார். அந்த அம்பு எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது அவருக்கு உடனே விளங்கிவிட்டது. அது தாங்கி வந்த நறுக்கோலையின் மீது தமது பாதத்தை ஊன்றி அதைக் காலின் கீழ் நன்றாக மறைத்துக் கொண்டார்.

அருகிலிருந்த ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அம்பு பாய்ந்ததுதான் தெரிந்தது. அது சுமந்து வந்த ஓலை தெரியவில்லை. ஆனால் சற்றுத் தொலைவில் இருந்தாலும் மகிந்தரின் கழுகுக் கண்கள் கவனித்து விட்டன.

நொடிப் பொழுதுக்குள் சபை மண்டபமே கொதித்தெழுந்தது. நாலாபுறத்திலும் ஆவேசக் கூக்குரல்கள் கிளம்பின. மெய்க்காவலர் அம்பு வந்த திசை தெரியாது துடித்தனர். வேளைக்காரப் படையினரோ குமுறிக்
கொண்டு எல்லாப் பக்கங்களிலும் குற்றவாளியைத் தேடிப் பாய்ந்தனர்.

கூட்டத்திலிருந்த அனைவருமே அக்கம்பக்கத்தில் இருந்தவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்க முற்பட்டனர்.

இந்த விநாடிப் பொழுதுக்குள், இராஜேந்திரர் கீழே குனிந்து அம்பில் கட்டியிருந்த ஓலையை எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார். பிறகு கூட்டத்தினரிடம் அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

“யாரோ அறியாமையால் ஆத்திரப்பட்டு இப்படிச் செய்திருக்கிறார்கள்; உணர்ச்சி வெறி கொண்ட தனி மனிதரின் செயல் இது; அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.’’

அதே சமயம் அவருடைய கூர்விழிகள் கூட்டத்தை ஊடுருவத் தவறவில்லை. முதலில் மேல் மாடத்தைக் கூர்ந்து நோக்கி விட்டு, பிறகு கண்களை அகலத் திறந்துகொண்டே கூட்டத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம்
வரையில் வலை போட்டு அரித்தார்.

ஆடவர், பெண்டிர், அதிகாரிகள், இல்லறத்தார், துறவிகள் ஆகிய பல்வகைப் பொதுமக்களும் கூட்டத்தில் நிறைந்திருந்தனர். சைவர், வைணவர், பௌத்தர், சமணர் ஆகிய நால்வகைச் சமயத்தாரும், சைவத்தின்
உட்பிரிவுகளைச் சார்ந்த கபாலிகர், காளமுகர் முதலியோரும் அங்கு வந்திருந்தனர். அவர்களில் யாருமே மாமன்னர் அரித்தெடுத்த வலையில் விழக் கூடியவர்களாக இல்லை.

கடைசியாக மாமன்னரது விழிகள் மகிந்தரின் முகத்தில் பதிந்தன. ஆனால் மகிந்தருக்கு மாமன்னரை ஏறிட்டுப் பார்க்கும் துணிவில்லை. நடுநடுங்கிப்போய் முள்ளின்மேல் அமர்ந்திருக்கும் உணர்ச்சியோடு
உட்கார்ந்திருந்தார். ரோகிணியும் பயங்கரமாக விழித்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த மகிந்தரின் பணியாளனான கந்துலனை நோக்கி யாரோ ஒரு முரட்டுக் காளமுகன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதற்கே பயங்கரமாகவும்
அருவருப்பாகவும் இருந்தது கந்துலனுக்கு. செம்பட்டை நிறத் தாடியும் மீசையுமாக, சடை முடியோடு காட்சியளித்தான் அந்தக் காளமுகன். கண்கள் சிவந்திருந்தன. மேனியெல்லாம் வெண்ணீறும் பூச்சுமாய், இடையில் புலித்தோலைச் சுற்றி, கையில் திரிசூலம் ஏந்தியபடி நடந்து வந்தான் அவன்.

அவனிடமிருந்து தப்பிச் செல்ல வேண்டும் போல் தோன்றியது கந்துலனுக்கு. ஆனால் காளமுகன் அவனை விடுவதாக இல்லை. கூட்டத்திலிருந்து மற்றவர்கள் சந்தேகப்படாத வண்ணம் அவனைத் தொடர்ந்து சென்று ஒரு தூணின் மறைவில் அவனை எட்டிப் பிடித்து நிறுத்தினான்.

காளமுகன் தனது வலதுகரத்துக்குள் மூடிவைத்திருந்த ஒரு பொன் மோதிரத்தைத் திறந்து காட்டியவுடன் கந்துலனின் விழிகள் வியப்பால் விரிந்தன.

சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கந்துலனின் செவிகளில் எதையோ கூறினான் அவன். கந்துலன் மௌனமாகத் தலையசைத்தானே தவிர அவனிடம் மறுமொழியொன்றும் கூறவில்லை. பிறகு அவன் கூட்டத்துக்குள் மறைந்து மற்றக் காளமுகர்கள் நின்ற இடத்தில் சிறிது நேரம் நின்றான். அடுத்தாற்போல் எங்கு சென்றானோ தெரியவில்லை.

மாமன்னரோ மற்றவர்களோ இதைக் கவனித்திருக்க முடியாது. எதேச்சையாகத் திரும்பிய ரோகிணியின் கண்களுக்கு இந்தக் காட்சி மின்னலைப் போல் தட்டுப்பட்டது. உடனே அதைக் கவனியாதவள் போல்
முகத்தைத் திருப்பிக்கொண்டு சபா மண்டபத்தைப் பார்த்தாள்.

காளமுகன் மறையும் வரையில் அவனைப் பார்த்துக் கொண்டு நின்ற கந்துலன், பின்னர் மெதுவாக மகிந்தரை நெருங்கி வந்தான். அவர் காதருகில் குனிந்து எதையோ சொல்ல முற்பட்டான். “பிறகு பேசிக் கொள்வோம்;
அவசரமில்லை’’ என்பதுபோல் சைகை காட்டி அவனை விலகியிருக்கச் செய்தார் மகிந்தர்.

விழா தொடர்ந்து நடைபெற்று இனிது முடிந்தது. இடையில் மக்களிடையே ஏற்பட்ட பரபரப்பை வேறு திசையில் திருப்பி, அந்தச் சிறு நிகழ்ச்சியை அப்போதைக்கு மறக்கும்படிச் செய்து விட்டார் மன்னர்.

மகிந்தர் தமக்கு ஒதுக்கப்பெற்ற விடுதிக்கு வந்து சேர்வதற்குள், கந்துலனைத் தனியே சந்தித்துப் பேசிவிட்டுத்தான் வந்தார். அவன் கூறிய செய்திகள், அவருக்கு மகிழ்ச்சியையளித்தன. சபா மண்டபத்தில் அவரிடம் ஏற்பட்ட பதற்றமும் பயமும் இப்போது அவரிடம் அவ்வளவாக இல்லை.

கந்துலன் கூறிய விஷயங்கள் ரோகிணிக்குத் தெரியவில்லையென்றாலும், அவருடைய மன மாறுதலை அவள் கவனித்தாள். அவருடைய அச்சத்தைப் போக்கித் துணிவு தரக்கூடிய செய்தியாக அது இருந்திருக்க வேண்டும்.

அப்படியானால் அந்த அம்பு?… தக்க பொழுதை எதிர்பார்த்திருந்து,

“அப்பா! அமைச்சர் கீர்த்தி இப்போது மதுரையிலிருக்கிறார் போலிருக்கிறதே!’’ என்று ஆரம்பித்தாள் ரோகிணி.

“விழா மண்டபத்துக்குக்கூட அவர் வந்திருப்பாரென்று தோன்றுகிறது.’’

திடுக்கிட்டு நிமிர்ந்து தமது மகளைப் பார்த்தார் மகிந்தர்.

“ஏன், நீ அவரை அந்தக் கூட்டத்தில் பார்த்தாயா ரோகிணி’’

“நான் அவரைக் கூட்டத்திலும் பார்க்கவில்லை, வெளியிலும் பார்க்கவில்லை. ஆனால் அவர் எங்கோ ஓரிடத்தில் மறைந்திருந்தார் என்பது தெரியும் அப்பா! ஏன் என்னிடம் வீணாக மறைக்கப் பார்க்கிறீர்கள்?’’

“நீ என்ன சொல்கிறாய் ரோகிணி!’’

“ரோகணத்தில் ஒரே ஒரு மனிதர்தான் இப்படிக் குறி தவறாமல் அம்பெய்யக் கூடியவர். கப்பகல்லகம் கோட்டைக்குள் நாம் திரும்பி வந்து நுழையும்போது உங்கள் குதிரையின் கழுத்தில் இதேபோல் ஓர் அம்பு
பாய்ந்து வந்து தைக்கவில்லையா?’’

பெரிய குரலில் சிரித்துத் தமது மகளை ஏமாற்றப் பார்த்தார் மகிந்தர். அது முடியாமற் போகவே, “ரோகிணி! அமைச்சரின் அம்பாக அது இருந்திருந்தால் அது இப்படிக் குறி தவறிப் போயிருக்காது. ஒன்று, சக்கரவர்த்தியை வீழ்த்தியிருக்கும்; அல்லது முடிசூட இருந்தவனுக்குப் பிடி சாம்பல் தேடித் தந்திருக்கும். வேறு யாரோ இதைச் செய்திருக்கிறார்கள்’’ என்றார்.

“குறி தவறவில்லையப்பா, தவறவில்லை!’’ என்றாள் ரோகிணி.

“அமைச்சரின் நோக்கம் அதுவல்ல. அவர்களில் யாரைக் கொன்றாலும் அதற்காக நீங்கள் பழிவாங்கப்படுவீர்கள் என்று அவருக்குத் தெரியும். இரண்டு காரணங்களுக்காக எய்யப்பட்ட அம்பு அது, ஒன்று நடந்துவிட்டது; மற்றொன்று நடக்கவில்லை.’’

மகிந்தர் தமது மகளின் கூர்மதியைத் தமக்குள் வியக்கலானார். அவளைக் கூர்ந்து நோக்கினார் அவர்.

“அப்பா! சக்கரவர்த்திகளின் கரத்திலிருந்து முடியைத் தட்டிவிட்டு விழாவை அபசகுனத்தில் முடிக்க வேண்டுமென்று அமைச்சர் நினைத்திருக்கிறார். அடுத்தாற்போல், அந்த நறுக்கோலையின் மூலம்
சக்கரவர்த்திக்கு எதாவது எச்சரிக்கை விடுத்திருப்பார். என்னுடைய ஊகம் சரியானதுதானே?’’

ரோகிணியின் முதுகை அன்போடு தட்டிக் கொடுத்தார் மகிந்தர். தம்முடைய வெகுளித்தனமான சொற்களுக்குப் பின்புறம் மறைந்து கிடந்த நுண்ணறிவை அவர் முன்னரே கண்டிருக்கிறார். அவளுடைய சுறுசுறுப்பும், குதூகல சுபாவமும் அவரைப் பெருமையுறச் செய்திருக்கின்றன.

ஆனால் அந்தப் பெருமைக்குப் பின்புறம் ஓர் ஆழ்ந்த கவலையும் அவரை வாட்டிக் கொண்டிருந்தது. அவர் மௌனம் சாதித்தார்.

“என்ன அப்பா தீவிரமாக யோசனை செய்கிறீர்கள்?’’

“உன்னுடைய அறிவும் திறமையும் வீணாகப் போய் விடக் கூடாதே என்று கவலைப்படுகிறேன், ரோகிணி! சிலசமயம் நீ எனக்குத் துணையாக நிற்கிறாய். இன்னும் சிலசமயங்களில் உனக்குத் தெரிந்தோ தெரியாமலோ பகைவர்களுக்குத் துணை செய்துவிடுகிறாய். உன் தம்பி காசிபனை நீ தப்புவித்ததற்காக ரோகணமே உனக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால்… ஆனால்… அந்த மணிமுடியை…’’

“வேண்டாம் அப்பா, வேண்டாம்!’’ என்று கெஞ்சினாள் ரோகிணி.

“நடந்து போனதைப் பற்றி நீங்கள் பேசவே பேசாதீர்கள்.’’

“நடந்து போனதை நினைத்தால்தானே நடக்க வேண்டியதில் நம்பிக்கை வைக்க முடியும்?’’

“இன்னும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா அப்பா?’’

“ஏன், உனக்கு நம்பிக்கையில்லையா?’’

‘இல்லவே இல்லை!’ என்று சொல்லத் தோன்றியது ரோகிணிக்கு. சோழநாட்டுக்கு வந்த பிறகு அவர்களுடைய ஆட்சியின் வலிமையையும், படைபலத்தையும் கட்டுப்பாட்டையும் அவள் ஓரளவு தெரிந்துகொண்டிருந்தாள்.
தன்னுடைய தந்தையாரின் மனம் உண்மையை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தால், ‘மாற்றாரின் பண்பையும் படைபலத்தையும் அறியாமல் மனம் பொங்குகிறார் அமைச்சர்; அவரை நம்புவது ஆபத்தாக முடியும்’ என்று அவள் சொல்லியிருப்பாள்.

ஆனால் மகிந்தரின் போக்கை அவளால் மாற்ற முடியாது. ஆகவே “நம்பிக்கையிருக்கிறது அப்பா!’’ என்று நம்பிக்கையற்ற குரலில் கூறினாள் ரோகிணி.

“உண்மைதான் ரோகிணி! அமைச்சர் கீர்த்திக்கும் இப்போதுதான் என்னிடம் நம்பிக்கை பிறந்திருக்கிறது’’ என்று குதூகலத்துடன் கூறிவிட்டு,

“எனக்கும் அவர் தனியே செய்தி அனுப்பியிருக்கிகார்’’ என்றார்.

‘எப்படியப்பா அனுப்பினார்? அந்தக் காளமுகனிடம் சொல்லி அனுப்பினாரா? அல்லது அவர்தான் அப்படி மாறுவேடத்தில் வந்தாரா!’ என்று கேட்கத் தோன்றியது ரோகிணிக்கு. ஆனால் அவரிடம் தான் அந்தக் காளமுகனைப் பார்த்ததை அவள் சொல்ல விரும்பவில்லை.

“நல்ல செய்தி அனுப்பியிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறதப்பா!’’ என்றாள் ரோகிணி.

“நல்ல செய்திதான் ரோகிணி! நாம் சோழர்களுடன் நெருங்கி உறவாட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர் அதைப்பற்றித் தவறாகவே எண்ணப் போவதில்லையாம்.’’

“வியப்பாக இருக்கிறதே!’’

“இதில் வியப்பொன்றுமில்லை. பகைவர்களிடம் உறவு பூண்டு அவர்களை முறியடிக்கப் பார்ப்பது ஒருவகைப் போர் முறையாகும். பொறுப்பை என்னிடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். அவர் நேரடியாகப் பகையைப் பகையால் வெல்வதற்குக் கங்கணம் கட்டிவிட்டாராம். அவருடைய மைத்துனர் சுந்தரபாண்டியரும் அவருடைய படையினரும் இனி நம்முடைய அமைச்சருக்கும் உதவி செய்யபோகிறார்கள். ரோகணம் விடுதலையடையப் போகிறது மகளே!’’

“தோற்றுப்போய் ஓடிய சுந்தரபாண்டியரை எப்படியப்பா நம்புவது? தம்முடைய நாட்டைப் பறிகொடுத்தவரா நம்முடைய நாட்டைக் காப்பாற்ற முன்வரப் போகிறார்?’’

“ரோகிணி! தோல்விதான் வெற்றிக்கு அடிப்படை. இப்போது நாம் தோற்றுப் போய்விட்டோம். ஆனால் எப்போதுமே அப்படி இருக்க மாட்டோம். இதை நீ நம்பவேண்டும்.’’

“நான் நம்புவதனால் உங்களுக்கு என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது அப்பா?’’

“கட்டாயம் கிடைக்கும் ரோகிணி! நம்பிக்கையிருந்தால் துரும்பையும் இரும்பாக்கி விடலாம். என்னுடைய வயதான காலத்தில் இந்த ஆதரவில்லாத நிலையில், நான் உன்னைத்தான் என்னுடைய வலது கரமாக நம்பியிருக்கிறேன், மகளே!’’

மகிந்தர் தமது மகளின் வலது கரத்தை இறுகப் பற்றினார். நட்டாற்று வெள்ளத்தில் வீழ்ந்து தவிப்பவர், தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கையில் தட்டுப்பட்ட ஏதோ ஒரு பொருளை வெறியோடு பற்றுவது போலிருந்தது அது.

அவரிடம் அந்தக் காளமுகனைப் பற்றியும் கேட்க வேண்டுமென்று நினைத்த ரோகிணி, அப்போதைக்குத் தன் ஆவலை அடக்கிக் கொண்டாள்.

தொடரும்

(Visited 1 times, 1 visits today)