நரைத்த மனிதர்களின் பாடுகளை சொல்லும் நரையன்-கருப்பு அன்பரசு

வெற்றியடைந்த பிரதிக்கு பரிந்துரைகள் தேவையில்லை . அது முகமறியா வாசகர்களிடத்தில் இருந்து தன்னிச்சையாக மேலெழும். ஏனையவர்களை வாசிக்கத்தூண்டும். அவ்வாறு வந்ததுதான் இந்த வாசிப்பு மனம். இந்த வயதிலும் சிறந்த அனுபவதிரட்சியும் சொல்லாட்சியும் கொண்ட தமிழ்க்கவிக்கே இதன் வகிபாகங்கள் அனைத்தும் சாரும். காலை எனது மின்னஞ்சலுக்கு வந்த இந்த அனுபவத் பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். தோழர் கருப்பு அன்பரசுவின் நேரத்திற்கும் வாசிப்பின் மீது கொண்ட அடங்காப்பற்றிற்கும் மிக்க நன்றி .

000

“அன்றைக்குப் பிறகு அவளின் புருஷன் அவளை தொடுவதே கிடையாது”
என்னவாக இருக்கும்..? அவளே சொல்கிறாள். நேர்மையான மனதோடு அவசியம் வாசியுங்கள்.

செப்டம்பர் 10, 1993, வெள்ளிக்கிழமை காலை எப்பொழுதும்போல் அவனுக்கும் அவளுக்கும் விடிந்தது..
விடிந்தது என்னவோ அந்த வீட்டில் அவர்கள் இருவருக்கும் என்றாலும் வீட்டின் எல்லா வேலைகளும் செய்யவேண்டியது அந்த நிறைமாத கர்ப்பிணி மட்டுமே. அவனும் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுப்பது மட்டுமே இந்தக் காலத்தில் அவளுக்கு செய்யவேண்டிய கடமையாக நினைத்து கொண்டு அவளின் மன உணர்வை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் வழக்கம்போல் அலுவலகம் செல்வதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக அவளுக்கு வலி ஏற்பட அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவளை பிரசவ பகுதிக்குள் அட்மிட் செய்கிறார்கள். மூன்றாவது மாதத்திலிருந்து அந்த பெண்மணிக்கு தொடங்கிய மருத்துவ பரிசோதனை அடங்கிய நோட்டுப் புத்தகமும் அங்கே மருத்துவர்களின் மேசையில் அட்மிட் செய்யப்படுகிறது. நாள் முழுவதும் வைத்திருந்து வலி குறைந்தது கூடுவது காரணமாக அவருக்கு செயற்கையாக தொடர் வலி தருவதற்கு மறுநாள் தயாராகிறார்கள் மருத்துவர்கள்.

தலைமை மருத்துவர் அங்கே வந்து அந்த மருத்துவ பரிசோதனை புத்தகத்தை பார்த்த பொழுது அதில் இன்னும் 15 நாட்களுக்கு தேதி தள்ளி குறித்திருப்பதை கண்டுபிடிக்கிறார். உடனடியாக அந்தப் பெண்ணுக்கு செயற்கையாக வலி வருவதற்கான ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. (நல்லா பார்த்தாங்க டீடெயிலு..!) அந்த பிரசவத்திற்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாதது போல ஏதோ அந்த இரண்டு நாளையும் அவள் அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டதைப்போல நினைத்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் அவரது கணவன் வீட்டுக்கு வந்து சேர்கிறான்.

மீண்டும் இன்று வலி ஏற்பட, இதை தன் கணவருக்கு சொன்னால் எரிச்சலோடுதான் கேட்பார் என்று பயந்துகொண்டு பக்கத்தில் குடியிருக்கும் மீராவுக்கு தகவல் சொல்ல, மீரா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் அவளின் கணவனை அழைத்து அவளின் நிலையை சொல்கிறார். மீண்டும் அதே மருத்துவமனை, மருத்துவமனையில் அந்த பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட படுக்கை எண் மட்டுமே மாற்றப்பட்டது. மற்றபடி கடந்த வாரம் நடைபெற்ற அனைத்தும் முறையாக நடத்தினார்கள். அந்தப் பெண்மணிக்கு தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இடுப்பு வலி. அப்பாடா எப்படியும் இன்னிக்கு குழந்தை பெற்றிடுவார் இன்னொரு நாளைக்கு நாம வரத் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டு வெளியே காத்திருக்கிறார் அவரின் கணவர். வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய வலி அன்று பகலும் இரவும் தொடர்கிறது. சனிக்கிழமை காலை வருகிறார் மருத்துவர். செவிலியர்களும் அவரை பரிசோதனை செய்து இன்று இரவுக்குள் பிரசவம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய அவரின் பிரசவவலி கூடிக்கொண்டே இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை வரையும் வலி அதிகரித்துக் கொண்டே.. வெள்ளி சனி ஞாயிறு என மூன்று நாட்களும் அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை வராண்டாவில் நடக்கிறாள், படுக்கையில் படுக்கிறாள், நடக்கிறாள், படுக்கையில் மீண்டும் படுக்கிறாள். அவனுக்கோ ஒருபுறம் எரிச்சலாகவும், இன்னொருபுறம் வேதனையாகவும் உணர ஆரம்பிக்கிறான்.

அவளின் வேதனையை அவளின் கண்கள் வழியாக. வலி ஞாயிற்றுக்கிழமையும் தொடர அந்த வலியின் உச்சமாக ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த பெண்ணுடைய குரல் மட்டுமே, அழுகை ஒலி மட்டுமே. அது அலறலாக எழும்ப மருத்துவமனையின் அமைதியை கிழித்துக்கொண்டு இருக்கிறது. மருத்துவமனை வெளியில் அவன் மட்டுமே தனியாக அமர்ந்து அந்த வலியான அழுகையின் சத்தத்தை கேட்கும் மனவலிமை இல்லாதவனாக, மருத்துவமனைக்குள் பசித்த பூனையைப் போன்று அங்குமிங்குமாக நடந்து கொண்டிருக்கிறான். காதல் மணம் புரிந்த தம்பதி தான் இருவரும். அவளின் அலறல் அவருடைய மனதை பிசைந்து கொண்டே இருக்கிறது. பிரசவ வலியின் வேதனை பெரும் துயரம் அன்று இரவு முழுவதும் அவனை கண்மூட விடவில்லை. அவனுடைய அடிவயிற்றில் உருவமற்று ஏதோ ஒன்று சதையைக் கிழித்துக்கொண்டு குடல் வழியாக நெஞ்சாங்கூட்டை நெருங்குவதை போன்று அந்தநேரம் அதை உணர்கிறான். ஒவ்வொரு நிமிடமும் அறிய முடியாத அச்சம் பயம் இயலாமை அவனுக்குள் புகுந்து அவன் உடலையும் சிந்தனையையும் எதையோ செய்து கொண்டிருக்கிறது. ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்கிற உதறல் அவனுக்குள் ஒவ்வொரு நாழிகையும் அதிகரித்துக்கொண்டே தூங்காத இரவாக ஞாயிற்றுக்கிழமை அவனின் மன வலுவை சிதைத்துக் கொண்டே இருக்கிறது. அந்தப் பெண்ணின் வேதனை மிகுந்த வலிகொண்ட அலறல் அவனுடைய விழி ரப்பையின் முடிகளை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்து கொண்டே இன்னொரு உயிரை கொண்டு வருவதற்காக ஓருயிர் படும் அவஸ்தை அவனுடைய இருதயத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தது. அந்த பெண்மணியின் குரல் மட்டுமே அழுகையாக இரவு முழுவதும். திங்கள் கிழமை புலர் காலைப் பொழுதின் 5 முப்பத்தி நான்கு மணிக்கு குழந்தையின் அழுகுரல் ஒலி அமைதியாக உறங்கிக் கிடந்த கதிரவனை மெல்ல வெளியே வா என்று தாயின் குருதி படிந்த தன் இதழ்களால் தாயின் வயிற்றுச் சூட்டின் கதகதப்போடு முத்தம் ஒன்றினை பதிக்கிறான் வாஞ்சையாக.

பிரசவ வலியின், வேதனையின், அழுகையின், துன்பத்தை அந்த இரவு மிகப் பெரும் காதலாக தன் மனைவி மீது கொள்ளச் சொல்லி அவனுக்குள் நிகழ்த்திவிட்டு சென்றது. புதிய ஒரு உயிரின் இதயம் துடிப்பதற்கு தாயின் இதயம் எத்தனை வேகமாக துடித்திருக்கும் ரத்தம் தெறித்திட அழுதிருக்கும் என்பதை வலித்திருக்கும் என்பதை அன்றுதான் முழுவதுமாக உணரத் தொடங்கினான். அவன்தான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கருப்பு. பிரசவ வலியால் துடித்தவராக எனது இணையர் சுமதி. அவளின் உயிர் சுமந்த இன்னொரு உயிராக மகன் சத்தியபாரதி.

நரையன் தொகுப்பில் இடம் பெற்றிருக்கக் கூடிய “கொடுத்த இன்பம்” சிறு கதையை வாசிக்கும் பொழுது
அன்று நான் அறிந்த அத்தனை வலிகளையும் உணர முடிந்தது. பெரும்பாலும் எந்த ஆணுமே தன்னுடைய மனைவி பேறுகாலத்தில் அவளின் தாய் வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லும் பொழுது அருகிலிருந்து பார்ப்பது என்பதும் அருகில் இருந்து அவளுக்கு தேவையான பணிவிடைகளை செய்வது என்பதுவும் குறைந்து போயிருக்கிறது. உலகமயமாக்கலும் நுகர்வு கலாச்சாரமும் நம் அனைவரையும் ஆட்கொண்டிருக்கும் இக்காலத்தில் கணவன் மனைவி உறவுகளுக்குள் மிகப்பெரியதொரு இடைவெளியினை அமைத்தும் உரையாடல்களையும் குறைத்தும் வைத்திருக்கிறது.

பேறுகால பெண்களுக்கு தேவைகள் என்பது பெரும்பாலும் ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும். அவளுடைய மன உணர்வுகளின் தேவை உணரமுடியாமல் தனித்து விடப்பட்டு எல்லாமும் மருத்துவமனைகளிலும் அங்கு பணி புரியும் செவிலியர்கள் இடமும் அவைகள் ஒப்படைக்கப்படுகிறது. பேறுகாலத்தில் இக்காலங்களில். குழந்தை பிறப்பிற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அந்தப் பெண் படக்கூடிய பெரும் துயரங்களை வலிகளை அதன் அவஸ்தைகளை நேரில் பார்க்கக் கூடிய ஆண்களுக்கு மீண்டும் தன்னுடைய மனைவியை குழந்தை பிறப்பிற்குகான கருவியாக்கி உட்படுத்த மாட்டான், அவள் மீது நிஜமான நேசம் கொண்டவனாக இருந்தால்.

அன்பின் அடையாளம் புது உயிர்களை படைப்பது என்றாலும் புது உயிர்களை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவது என்றாலும் இயற்கையின் அற்புதங்களில் மேன்மைகளில் அழகில் சிறப்பு வாய்ந்தது என்றாலும், அதில் அந்தப் பெண்உயிர் மட்டும் படக் கூடிய வலிகளை சொல்லிமாளாது.எழுதி மாளாது. எந்த எழுத்துக்குள்ளும் அடங்க முடியாத வலி குழந்தை பிறக்கும் பொழுது இருக்கக்கூடிய அந்த உயிரின் வலி. அந்த வலியை விட நூறு மடங்கு மகிழ்வு இன்னொரு உயிர் இந்த மண்ணில் வந்து தன் முதல் அழுகையோடு காற்றை சீண்டும் போதும் போதும், தாயின் பச்சை இரத்தத்தின் ஈரத்தோடு நிலத்தைத் தீண்டும் போதும், வயிற்றில் பிள்ளையை சுமந்திருக்கும் பெண்ணும் மழையைத் தேக்கி வைத்திருக்கும் கருமேகமும் எப்பொழுது மடை திறப்பார்கள் என்று எவருமே அறிய முடியாது. இயற்கையின் படைப்புகளில் இந்த இருவருமே பேரழகானவர்கள்.

பெண்கள் அனைவருமே இந்த வலியினை கடந்து வந்திருந்தாலும் சக பெண்ணொருத்திக்கு இப்படியான வலி ஏற்படும் பொழுது எல்லா பெண்களுமே தனக்கான வலியாக நினைத்து அந்தப் பெண்ணுக்கு சுகமான பிரசவத்தை நடத்தி முடிக்க ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும், ஆலோசனைகளையும் பேரன்போடு செய்திடும் அக்கறையில் இருக்கும் மனித உள்ளங்களின் அழகுதான்
எல்லாவற்றிலும் பேரழகு. அப்படியான பேரழகுகளை இந்த “கொடுத்த இன்பம்” கதையில் ஆசிரியர் சொல்லி இருக்கிறார். கதையில் சுகந்தியும், சுகந்திக்கு வலி ஏற்படும் பொழுது உடனிருந்து துடித்திடும் பெண்களும் பேரழகானவர்கள்.

தான் அவளுக்கு கொடுத்துப் பெற்ற இன்பத்தை, இப்படித் திரட்டித் தந்திருக்கிறாள் என்று வியப்புறும் ஆண்களுக்கு ஒருபோதும் தெரியப்போவதில்லை அவள் பட்ட துன்பம். அதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யப் போவதுமில்லை ஆண்களின் உலகம்.

இதுநாள் வரையிலும் எத்தனை பெண்களோடு கலவியில் ஈடுபட்டோம்.. காதலிப்பதாக சொல்லி படுக்கையறை சுகத்தோடு முடித்துக்கொண்ட பெண்கள் எத்தனை பேர் என்பவையெல்லாம் ஆண்களின் உலகம் சூழ்ந்து நிற்கும் பொழுது பெருமையாக பேசியும், அவைகளை எழுத்திலும் கொண்டு வந்து பெண் உடல் குறித்தான தம் பார்வைகளை ஆண் திமிரோடு பொதுவிலும் வைப்பார்கள் வெட்கம் ஏதுமில்லாமல் கௌரவம் என்றே கேட்கும் வாசிக்கும் நாமும் இவைகள் எல்லாவற்றையும் மிகச்சாதாரணமாக கடந்து போய்க்கொண்டே இருப்போம்.

குழந்தைப் பருவம் தொடங்கி பதின்பருவத்தை ஊடுருவி கட்டாயத் திருமணத்திற்கு விருப்பமின்றி தலையசைத்து, திருமண உறவில் மனம் ஒன்றாத சூழலில் அதனை பக்குவமாக புரிந்து ஏமாற்றி அனுபவித்த ஆண் உடல்கள் எத்தனை எத்தனை என்பதையும். தான் மனமுவந்து கலவியில் ஈடுபட்ட ஆணிடம் நம்பி பல உண்மைகளை பகிர்ந்து கொண்டாலும் அந்த ஆணின் பார்வையில் தன்னை யாராக பார்க்கிறான் என்பதையும் இங்கு வெடிப்புறப் பெண்கள் பேசத் தொடங்கிவிட்டால் ஆண்களின் உலகம் முற்றாக பொதுவில் நிர்வாணப்படுத்தப்பட்டு கேவலப்பட்டு நிற்கும். அந்த வேலையினை “கற்பெனப்படுவது” என்கிற சிறுகதையில் ஆழமாகவும் காத்திரமாகவும் பேசி பொதுக் குளத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் தமிழ்க்கவி அவர்கள்.

கலவியும் காதலும் இரு பாலருக்கும் பொதுவானது ஆனால் அவை குறித்து பேசுவது என்பது இங்கு ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாக மாறி இருக்கும் சூழலில் இந்த கதையில் பெண் ஒருவர் வலியோடு தான் கடந்து வந்த வாழ்வினைப் பேசுவார்.
“கற்பெனப்படுவது” இருபாலருக்குமானதே . “பெண்ணுக்குள் என்ன உண்டு” என்கிற சிறுகதையிலும்.. அறிமுகமானவர்கள், அந்நியோன்யமானவர்கள் என நினைத்து பெண் பிள்ளைகளை அவர்களின் பாதுகாப்பில் விட்டுச் சென்றிடும் பொழுதினில் அங்கே இருக்கக்கூடிய ஆண்களால், மனதளவிலும் உடலளவிலும் பெண் குழந்தைகளின் உடல் என்னவாக இருந்தது?எப்படிப் பார்க்கப்பட்டது? நிகழும், தொடரும் கொடுமைகளை எவ்வாறு எதிர்கொள்கிறது? என்பதை கதைக்குள் பெரும் வலியோடு கொண்டு கொண்டு வந்து இருக்கிறார் சிறுகதையாசிரியர்.

“சாவை நோக்கி” சிறுகதையில், எழுத்தாளரின் நேரடி கள அனுபவங்களிலிருந்து பெண் புலிகளின்
மெச்சத் தகுந்த, மரியாதைக்குரிய, அனைவராலும் போற்றப்படுக்கூடிய வீரம் ஆண்களுக்கும் நிகரானது என்பதை சொல்கிறது. இலக்கு மட்டுமே குறிக்கோளாக கொண்ட போராளிகளின் நிகழ்கால சூழ்நிலை கணக்கில் எடுக்காமல் நேற்றைய நிலையிலிருந்து வடிவமைத்த திட்டத்தின் அடிப்படையில் செல்ல முற்படும் பொழுது எத்தகைய பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்.
அக் கதையில் வரக்கூடிய கடைசி வாக்கியம்,
“பிள்ளை… நான் சாகலாம்.. நீ சாகலாம்.. “நாங்கள்” சாகக் கூடாது என்பதை மறந்திட்டியா..”
இதில் வரக்கூடிய அந்த “நாங்கள்” என்கிற வார்த்தை ஆழம் மிகுந்ததாக அர்த்தம் பொதிந்ததாக அமைந்திருக்கிறது. அர்த்தமற்று மனித இழப்புகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது “சாவை நோக்கி” சிறுகதை.

ஒப்பாரி என்கிற சிறுகதையில், செத்துப்போன பரமசிவத்தின் கடந்த கால வாழ்க்கையும்.. அவர் உடல் நலிவுற்றதும் மனைவி மற்றும் பிள்ளைகளால் சந்திக்கும் பாடுகளையும்.. கதையின் உச்சமாக
மனைவியின் ஒப்பாரி வீடியோ படமாக்குவதாகும்.

சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு “நரையன்”. தலைப்பின் பெயரில் இருக்கக்கூடிய சிறுகதை குறித்து நான் இங்கு எதுவும் சொல்லப் போவதில்லை. மிகவும் அழகிய நேசம் மிகுந்த வலிமிகுந்த கதை இது. அந்த உணர்ச்சியை அதிலிருக்கும் பேரன்பை நீங்கள் வாசிக்கும்போது அனுபவியுங்கள்.

தொகுப்பில் இருக்கக்கூடிய 15 கதைகளில் “காணி வைத்தியம்” என்கிற கதைக்குள் மட்டும் என்னால் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை.
“சிவில் பாதுகாப்பு” கதையோ காவல்துறையின் நிகழ்கால செயல்பாடுகளை பகடி செய்யக்கூடிய அளவில் இருக்கிறது.
“மாற்றங்கள்” என்ற கதை உலக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நம்முடைய நிலத்திற்குமான தொடர்பு எப்படி வகை மாற்றம் செய்து ஆளும் அரசுகளால் கள்ளத்தனமாக மக்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை பேசுகிறது.

கதைகள் சொல்லும் அட்டைப்படத்துடன் அழகிய முறையில் வடிவமைத்து ஆசிரியரின் 15 கதைகளை தேர்வு செய்து தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள் நடு வெளியீட்டகத்தார். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இலங்கைவாழ் தமிழ் மக்களின் வாழ்வியல் முறைகளை அவர்களின் மொழியிலேயே கதையாக நம் கையில் கொடுத்து பல கதைகளின் வழியாக அமைதியாக இருக்கும் குளத்திற்குள் ஒரு கல்லினை வீசி அதிர்வினை ஏற்படுத்தி இருக்கும் தமிழ்கவி என்கிற தமயந்தி அவர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.

கருப்பு அன்பரசன்-இந்தியா

#நரையன்
#நடு_வெளியீடு
#தமிழ்க்கவி
பக்கங்கள் 128.
இந்திய விலை ₹140/-
இலங்கை விலை ₹400/-

(Visited 36 times, 1 visits today)