‘எல்லோரும் பேசமலிருந்தோம்.பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை’-யோ.கர்ணன் -இலங்கை

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இதுவரை வெளிவந்திருக்கிறன .

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உள்ளிருந்து பார்த்தவர் கர்ணன். அதன் உயிருள்ள சாட்சியமாய் அவர் முன்வைத்தை கொலம்பசின் வரைபடங்கள் மிக முக்கியமான நாவல். போராளியாக, சனங்களோடு சனமாய்,முன்னாள் போராளியாகப் போரைப் பார்த்தவர் யோ.கர்ணன். அதன் வெளிப்பாடுதான் கொலம்பசின் வரைபடங்கள். திக்கற்ற கடலில் நாடுகாண் பயணங்களுக்குப் புறப்பட்ட கொலம்பசினைப்போல தம் சொந்த நிலத்திலிருந்து பல வரைபடங்களோடு ஒன்பதாவது திசையை தேடிப்புறப்பட்ட மக்களின்கதையது.

எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை. வாழ்வின் மீதான பிடிப்பையும், நம்பிக்கைத் துரோகத்தையும் ஒவ்வொரு பக்கத்தில் ஏந்திய தராசு எந்தப்பக்கம் சாயும் ? நண்பன் தலையைக் குனிந்தபடியிருந்தான்… (கொலம்பசின் வரைபடங்கள் நாவலிலிருந்து.)

கோமகன்

0000000000000000000000000000000000

ஆரம்பத்தில் உங்களைப் பற்றி சிறிது ஆக்காட்டி வாசகர்களுக்கு சொல்லுங்கள்?

என்னைப்பற்றி சொல்வதற்கு அவ்வளவாக எதுவும் இல்லை. தமிழ் ஆயுத இயக்கங்கள் இந்தியாவிற்கும், இன்னும் வேறுவேறு நாடுகளிற்கும் ஆயுதப்பயிற்சி பெற சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் பிறந்தேன். வடமராட்சியில் பல இயக்கங்களிற்கும் கோட்டைகள் இருந்தன. அந்தக் கோட்டைகளிற்குள் வாழ்ந்த மக்களில் வளர்ந்தேன். பின்னர், புலிகள் தவிர்ந்த மற்றையவர்களெல்லோரும் கொழும்பிற்கும், இந்தியாவிற்கும் சென்ற சில வருடங்களில் நான் புலிகள் அமைப்பிற்கு சென்றேன். பின்னாளில் சில கதைகள் எழுதினேன். அவ்வளவுதான்.

ஓர் போராளியாக இனங்காணப்பட்ட நீங்கள் ஓர் கதைசொல்லியாக வரவேண்டிய பின்புலங்கள் என்ன?

நான் கதைகள் எழுதத் தொடங்கியது இளம் வயதில் நிகழ்ந்தது. நான் இயக்கத்திற்கு போவதற்கு இரண்டு வருடங்களின் முன்னரே அம்புலிமாமா பாணிக்கதைகள் எழுத ஆரம்பித்தேன். அதெல்லாம் இயல்பாக நிகழ்ந்த விடயங்கள்.

எங்கள் வீட்டில் நிறைய வாசிப்பதற்கான சூழல் இருந்தது. அறுபதுகளின் பின்னர் தமிழ் சூழலில் அதிகம் பேசப்பட்ட வெகுஜன இதழ்களில் வந்த முக்கியமான நாவல்களில் பெரும்பாலானவை எங்கள் வீட்டில் இருந்தன. ஜெயகாந்தன், அகிலன், சாண்டில்யன், கல்கி கதைகள், இதிகாச கதைகள் எல்லாம் தொகுதிகளாக கட்டப்பட்டு வீட்டில் புத்தக றாக்கைகளில் இருந்தன.

நானெல்லாம் சிறுவயதில் வீட்டுக்கடங்கிய பிள்ளை. பாடசாலை, ரியூசன், அயல் நண்பர்களுடன் விளையாட்டு என்றிருந்த ஆள். இதனால் எப்படியும் இவற்றை மேய்ந்து பார்க்கும் சூழல் தவிர்க்க முடியாமலே ஏற்பட்டு கொண்டிருந்தது. அதுதான் எழுதும் ஆர்வத்தை தூண்டியது.

ஆனால்,அதனை வழிப்படுத்தி, எழுத்து பற்றிய பிரக்ஞையை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த சமயத்தில்த்தான்- இருபதாவது வயதில்- பெற்றேன். இதற்காக, ஆயுதப்பயிற்சியைப் போல, எழுத்துப்பயிற்சியையும் புலிகளிடம் பெற்றுவிட்டு, உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்கிறாயா என யாரும் கேட்டு விட கூடாது. சில சமயங்களில் அந்த அமைப்பில் இருந்திராவிட்டால் இன்னும் சிறிது காலம் முன்னர் எழுத ஆரம்பித்திருக்கலாம் என நினைக்கிறேன்.

புலிகள் அமைப்பில் இருந்த முதல் ஐந்துவருடங்களில் எழுதுவதைப் பற்றியே சிந்திக்க முடியாது. அது வேறு வாழ்க்கை. ஏனெனில் நான் அந்தக்காலங்களில் தீவிர போராளி. அப்பொழுதும் படித்தேன்தான். அது சகாப்தம் படைத்த ஸ்ராலின் கிராட் மாதிரியான புத்தகங்கள். அவற்றை படித்ததன் நோக்கங்கள் வேறு. எழுதுவதற்காக அல்ல, செயற்படுவதற்காக படித்த காலங்கள் அவை.

பின்னர், காயமடைந்ததன் பின்னர்தான் எழுதும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, ஆறுமுகம் மாஸ்ரர், ஆதிலட்சுமி அக்கா போன்றவர்கள் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். எழுத்து பற்றிய பிரக்ஞை ஏற்படத் தொடங்கிய காலத்திலும் நல்ல நூலங்களுடன் வாழும் காலம் வாய்த்தது. வன்னியிலிருந்த மிகச்சிறந்த நூலங்கள் மூன்றும் விசுவமடுவை அண்மித்த பகுதியிலேயே இருந்தன. ஒன்று விசுவமடு பொதுநூலகம், மற்றது நவம் அறிவுக்கூடத்தில் இருந்தது. மற்றது கஸ்ரோவிடமிருந்தது. புலிகளுடன் தொடர்புபட்ட பின்னைய இரண்டு நூலகங்கள் இருந்த இடங்களிலும் இருந்தேன்.

எழுதுவதற்கு வாய்ப்பான சூழல் இருந்ததால், நானும் கதைகள் எழுதத் தொடங்கினேன். என் இளமையில் முழுவதும் நீடித்த புத்தகங்களுடன் வளரும் சூழலில் கதைகள் எழுதாமலிருந்திருந்தால் நானெல்லாம் எதற்கும் லாயக்கற்றவனாகியிருப்பேன்.

தமிழ்க்கவி, நீங்கள், கருணாகரன் ஆகிய மூவருமே போரியல் இலக்கியத்துறையில் முக்கிய பங்காற்றி இருக்கின்றீர்கள். உங்கள் மூவரது கதைகளையும் வாசிக்கும் பொழுது, விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை விமர்சனத்துக்கு உட்படுத்தாது, அரசியல், நிதி, காவல் துறை போன்றவற்றிற்கே காரசாரமான விமர்சனங்களை வைத்து மூவரும் ஒரு நேர்கோட்டில் வருகின்றீர்கள். இதற்கு ஏதாவது விசேட காரணங்கள் உள்ளனவா?

அப்படியா? அவர்கள் அப்படி எழுதியிருக்கிறார்களா? ஆயினும் மூவரையும் எந்த நேர்கோட்டில் வைத்து பார்க்கிறீர்கள் என்பது தெரியவில்லை. நான் அப்படி தனித்துதனித்து படையணி படையணியாக விமர்சித்ததாக தெரியவில்லை. சில விடயங்களில்- குறிப்பாக ஆட்சேர்ப்பு விவகாரத்தில்- நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பகுதியும்தான் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததால் அதனை குறிப்பிட்டிருப்பேன். மற்றும்படி புலிகள் குறித்த விமர்சனங்களை, படையணிகளாகவோ, தனிநபர்களாகவோ பகுத்து வைத்ததில்லை.

இன்னுமொன்று, நீங்கள் குறிப்பிடும் மற்ற இருவர் குறித்தும் என்னிடம் விமர்சனம் உள்ளது. குறிப்பாக, தமிழ்கவியும் நீங்கள் குறிப்பிடும் அரசியல்த்துறையில்த்தான் இருந்தார். அவர் இறுதிவரை விடுதலைப்புலிகளின் தீவிர பிரசாரகராகத்தான் இருந்தார்.

கருணாகரன் தொடர்பிலும் அதற்கு கிட்டவான விமர்சனம் உள்ளது. இவையெல்லாம் தனிநபர்கள் மீதான விமர்சனங்கள் அல்ல. தமிழ்ச்சூழல் அல்லது விடுதலைப்புலிகளின் புத்திஜீவி பிரிவின் மீதான விமர்சனம் அது. ஏனெனில், அவர்கள் இருவரும்தான் அப்படியிருந்தார்கள் என்றில்லை. வன்னியிலிருந்து எல்லாப்புத்திஜீவிகளும் அப்படித்தான் இருந்தார்கள்.

நான் வன்னிப்புத்திஜீவி வட்டாரத்தில் இருந்ததில்லை. இன்னும் சொன்னால், வன்னிப்படைப்பாளி வட்டத்தில் கூட இருந்ததில்லை. இதனால் அப்படியொரு நேர்கோட்டில் எப்படி என்னைக் கொண்டு வந்தீர்கள் என்பது தெரியவில்லை.

நீங்கள் வன்னிப்படைப்பாளிகள் வட்டத்திலோ இல்லை புத்திஜீவிகள் வட்டத்திலோ இருந்ததில்லை என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் நீங்கள் யாராக இருந்தீர்கள்?

இந்தப்பதிலை விளங்கிக் கொள்ள நீங்கள் வன்னிச்சூழலை புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான தமிழ்படைப்பாளிகள் விடுதலைப்புலிகளை கேள்விக்கிடமின்றி ஆதரித்தாலும் வன்னிக்குள்ளிருந்தவர்களிற்குத்தான் ‘சூரியதேவன்’ பாணி கவிதை எழுதும் வாய்ப்பிருந்தது. வன்னிப்படைப்பாளிகளில் மிகப்பெரும்பான்மையானவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். என்ன சதவிகித வேறுபாடுதானிருந்தது. வன்னியின் இலக்கிய அசைவியக்கமாக அந்த பாணிதானிருந்தது. இலக்கிய அமைப்புக்கள் எல்லாமும் அப்படித்தான் இருந்தது. இந்த அணிகள் எதிலும் நானிருந்ததில்லை. அந்த அசைவியக்கத்தின் பங்காளராகவும் நானிருக்கவில்லை. பெரும்பாலான வன்னிப்படைப்பாளர்களை எனக்கு அறிமுகமேயில்லை. மிகச்சிலரைத்தான் நேரில் கண்டிருக்கிறேன். வன்னியில் நான் சென்றது ஒரேயொரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு. வன்னி இலக்கிய செயற்பாட்டியக்கத்துடன் எனக்கு தொடர்பிருக்கவில்லை. நான் கதைகள் எழுதிக் கொண்டுதானிருந்தேன். ஆனால் தனித்திருந்தேன்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பலர் விமர்சனம் வைத்தாக இப்பொழுது கூறுகிறார்களே? உதாரணமாக பாலகுமாரன் முதலானவர்கள் விமர்சனம் வைத்தார்கள்தானே?

இல்லை. இதைவிடவும் அபத்தமாக கருத்துக்கள் கிடையாது. இன்று ஒருசாரரால் அப்படியொரு கதை சொல்லப்படுகின்றது. அது அறமான கூற்றல்ல. பக்கத்து இலைக்கு சொதி சொல்லும் உத்தி. எதிலும் நழுவிச் செல்லும், எந்த இடத்திலும் தங்களை தகவமைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் தமிழ் புத்திஜீவிப்பரம்பரை தங்கள் பாவங்களை கழுவிக் கொள்ள பாலகுமாரனின் இலைக்கு சொதி கேட்கிறார்கள்.
தமிழ்சமூகத்தின் அழிவிற்கு இந்த வகையானவர்கள் தமது பங்களிப்பு குறித்து மனந்திறந்த சுயவிமர்சனத்திற்கும், உரையாடலிற்கும் செல்ல வேண்டும். அதன்பின்னர் விடுதலைப்புலிகள் பற்றியும், ஏனைய இயக்கங்கள், ஆயுத செயற்பாடுகள் பற்றியும் பேசலாம்.

தமிழ்புத்திஜீவிச் சூழல் என்பது எப்பொழுதும் சுயநலமானதும், வசதி வாய்ப்புக்களிற்காக வளைந்து கொடுப்பதுமாகத்தான் இருந்தது. வசதிகளை பெறத்தான் அவர்களின் அறிவு பயன்பட்டதே தவிர,பொதுச்செயற்பாட்டிற்கு பயன்பட்டதில்லை. அரசன் அம்மணமாக ஓடிய சமயங்களில் ஆடை அழகாக இருந்ததாக கவிதை எழுதிய வரலாறுதான் நமது புத்திஜீவி வம்சங்களின் வரலாறு.

இதனால்த்தான் புத்திஜிவிகளை புலிகள் ஒரு எல்லையுடன் நிறுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் கதைக்கவும், தம்மைப்பற்றிய கற்பனைகளில் மிதக்கவும், தமக்குள் குழுவாக பிரிந்து சட்டையை பிய்த்துக் கொள்ளவும்தான் லாயக்காக இருந்தார்கள். இந்த விடயத்தில் சற்று கடுமையாக பேசுவதாக நீங்கள் நினைக்கக்கூடாது.

நமது புத்திஜிவிப்பரம்பரையால் நமது சமூகத்திற்கு ஏதாவது ஆகியிருக்கிறதா? வாராவாரம் ஆய்வுகளும், அரசியல்கட்டுரைகளும் எழுதுகிறார்கள்? தமிழ் அரசியலில் ஏதேனும் சிறுமாற்றம் ஏற்பட்டதா? சலனமற்ற கற்களை எதற்காக எறிந்து கொண்டிருக்க வேண்டும்? பத்திரிகையில் பெயர் வருகிறது என்ற சிறு சுயதிருப்தியை விட்டால் வேறென்ன?

இந்த பரம்பரை வன்னியில் விடுதலைப்புலிகளின் மீது விமர்சனம் வைத்ததென்றால், பழ.நெடுமாறன் கூட நம்ப மாட்டார்.

விடுதலைப்புலிகள் வீடுகளிற்கு வருவதையும், அவர்களின் கூட்டங்களிற்கு செல்வதை பெருமையாகவும் கருதித்தான் நமது புத்திஜீவிகள் செயற்பட்டார்கள். இதில் எந்த புத்திஜீவியும் விதிவிலக்கல்ல. அவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளினால் போசிக்கப்பட்டார்கள். வாகனங்கள், சற்றலைற் அன்ரனா என ஒவ்வொருவருக்கும் எது தேவையோ அதனை வழங்கினார்கள். அவருக்கு தொலைபேசி வசதி செய்து கொடுத்தார்கள், எனக்கு தரவில்லை என மூக்கால் அழுது கொண்டு திரிந்தவர்களையெல்லாம் எனக்கு தெரியும்.

இவர்கள் விடுதலைப்புலிகளின் மனைவிகளைப் போல பவ்வியமாக பணிவிடை செய்தார்கள். இதனை தவறென்று அரசாங்கம் சொல்லுமே தவிர, என்னால் சொல்ல முடியாது. அப்படியிருந்தது தவறென்று நான் சொல்ல மாட்டேன். அது அவர்களின் நம்பிக்கையென்று கொள்ளலாம். ஆனால் அப்படியிருந்துவிட்டு, நான் அப்பொழுது விமர்சனம் வைத்தேன் என்றபடி மற்றப்பக்கம் நிற்பதைப் போன்ற அபத்தம் கிடையாது.

ஒருமனிதன் வரலாற்றிலிருந்து கற்பதை அல்லது நிலைப்பாடுகளில் கூர்ப்படைவதை அங்கீகரிக்காத வறட்டு அரசியல்பார்வையை நான் வெளிப்படுத்துவதாக நீங்கள் கொள்ளக்கூடாது. எந்தவிதையும் நேற்று விதைக்க நாளை கனி தருவதில்லை. எந்தக்குழந்தையும் பிறந்த அன்றே ஆறடி மனிதனாகிவிடுவதில்லை. வளர்ச்சிக்கான படிமுறை வரலாறு இருக்கும். அப்படியான ஒரு வளர்ச்சியை எந்த புத்திஜீவியும் கொண்டிருக்கவில்லை. இப்படியானவர்கள்தான் இப்பொழுது பாலகுமாரன் விடுதலைப்புலிகள் மீது விமர்சனம் வைத்தார் என்கிறார்கள். இதனை படித்துவிட்டு, புலம்பெயர் போராளிகள் கொண்டாடுகிறார்கள்.

சூழலை புரிந்து கொள்ளாதவர்களின் சிறுபிள்ளைத்தனம் அது. பாலகுமாரன் இறுதிவரை விடுதலைப்புலிகளின் வானொலிகளில், தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார்.

அவர் விடுதலைப்புலிகள் மீது வைத்த விமர்சனத்தில் ஒரு எழுத்தை உங்களில் யாரேனும் காட்ட முடியுமா?
விடுதலைப்புலிகளின் பிரசார கூட்டங்களில் பேசினார். படையணிகளிற்காக ஆட்களை சேர்ப்பதற்கான கூட்டங்களில் பேசினார். “ஒரு மோட்டு அரசாங்கம் பதவியில் உள்ளது. அவர்களை நாம் ஏன் பதவிக்கு கொண்டு வந்தோம் என்றால், இப்படியானவர்களின் காலத்தில்த்தான் தமிழீழம் எடுக்கலாம்” என புலிகளின் சாதாரண அரசியல்போராளி கதைத்த தரத்தில் அவரும் சாதாரண இளைஞர்கள் மத்தியில் அரசியல் பேசினார். அவர் ஜனவரியில் காயமடையும்வரை இந்தப்பணிகளில் ஈடுபட்டார்.பாலகுமாரனை, அவர் அறிவுஜீவி தளத்தில் செயற்பட்டதை மட்டும் தொகுத்து ஒரு சித்திரமாக்க முடியாது. அனைத்தையும் தொகுக்க வேண்டும்.

தனது அமைப்பில் விமர்சனம் இருந்தால் எதற்காக ஆட்சேர்த்தார்? தான் தப்பித்து கொள்ள, அவர்களை படையில் சேர்த்து அனுப்பிக் கொண்டிருந்தாரா? அதெப்படி விடுதலைப்புலிகளையும் விமர்சித்து கொண்டு, ஆட்களை கட்டாயமாக பிடித்து களமுனைக்கு அனுப்பிக் கொண்டிருக்க முடியும்? கட்டாயமாக ஆட்சேர்க்க மாட்டேன் என இயக்கத்தைவிட்டு விலகியவர்களை, தாங்களே நேரடியாக களத்திற்கு சென்ற எராளம் சாதாரண போராளிகளை நான் கண்டிருக்கிறேன். ஏன் பாலகுமாரன் அப்படியொரு முடிவை எடுக்கவில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவுடன் தொடர்புபட்ட சிறுதொகை புத்திஜிவிகள், படைப்பாளிகள், அரசியலாய்வாளர்கள் குழுவொன்று கிளிநொச்சியில் இருந்தது. பாலகுமாரனும் கிளிநொச்சியில்த்தான் இருந்தார். இந்த வட்டாரங்கள் அடிக்கடி கூடிக்கதைத்திருக்கலாம். அப்பொழுது பரஸ்பரம் புலிகள் பற்றி விமர்சனத்தை தமக்குள் பகிர்ந்து கொண்டிருந்திருக்கலாம். அதனை இப்பொழுது விமர்சனமென்று கூறுகிறார்கள் என நினைக்கிறேன்.

என்னைக்கேட்டால், இதனைவிட அயோக்கியத்தனமான வோறொன்று இல்லையென்பேன். இரகசியமாக தமக்குள் புலிகளை விமர்சித்து கொண்டு, பகிரங்கமாக புலிகளின் வெற்றிகளிற்கு கட்டியம் கூறிக் கொண்டிருந்தது அயோக்கியத்தனம். அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.அப்பொழுதும் புலிகளை புகழ்ந்தேன், இப்பொழுதும் புகழ்ந்தேன் என யாராவது நெஞ்சை நிமிர்த்தி சொன்னால் அவரது நேர்மையை நாம் பாராட்டலாம்.

ஆனால் நமது சூழல் அப்படியானதல்ல. புத்திஜீவிகள், படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள் என வன்னியிலிருந்து வந்தவர்கள் பலர் தமது வாழ்க்கையையும், தமது சொற்களையும் தாமே மறுதலிக்கும் ஒரு நிலை ஏற்பட்டது. ஒருதரமல்ல, இரண்டு தரமல்ல, பேதுருவைப் போல மூன்றுதரம் மறுதலித்தவர்களையும் அறிவேன்.

நமது போரிலக்கிய பிதாமகர்கள், ஆய்வாளர்கள் யாருமே தமது சொற்களிற்கு விசுவாசமாக இருந்தவர்கள் அல்ல. தமது சொற்களை அவர்களே அநாதரவாக கைவிட்டவர்கள்தான். அதாவது அவை கள்ளஉறவில் பிறந்த குழந்தைகளாக அவர்கள் கருதினார்கள்.

விடுதலைப்புலிகளின் மீது பகிரங்கமாக விமர்சனம் வைத்த நூற்றுக்கணக்கான மக்களை நான் எதிர்ப்பட்டுள்ளேன். இந்த விமர்சன புகழை தயவுசெய்து இனியும் பாலகுமாரன்களிற்கு கொடுத்து கொண்டிருக்காமல் சாதாரண சனங்களிடமே கொடுத்து விடுங்கள்.

எனக்கும் பாலகுமாரனிற்குமிடையில் தனிப்பட்ட எந்த குரோதமும் கிடையாது. எனது கதைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். அதற்காக சில தடவைகள் தனது வீட்டிற்கு அழைத்துமிருக்கிறார். இவை நமது சூழல் பற்றிய, அவசியம் பேச வேண்டிய விடயங்கள் என்பதால் பேசியுள்ளேன்.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதின் பின்னர் போராளிகளின் இருப்பானது எப்படியாக இருக்கின்றது? அவர்கள் சந்திக்கின்ற உளவியல் தாக்கங்கள் என்ன?

இதுபற்றி நான் சொல்லி யாரும் அறிவதற்கு என்ன புதிய விடயம் உள்ளது? அன்றாடம் செய்திகளில் இதுபற்றிய நிறைய தகவல்கள் வந்து கொண்டுதானே இருக்கின்றன?

‘தலித்தியம்’ என்ற சொல்லாடல் பிரபல எழுத்தாளர்களால் அண்மைக்காலமாக பாவிக்கப்பட்டு வருகின்றது. தாயகத்தில் இப்பொழுது உள்ள சூழல்களில் இந்த சொல்லாடல் அத்தியாவசியம் என்று கருதுகின்றீர்களா?

சாதியம் தொடர்பான விழிப்புணர்வும்,செயற்பாடுகளும் மிக அவசியம். ஆனால், ஈழத்தமிழ்ச்சூழலில் அதிகமும் தவறாக பிரயொகிக்கப்படும் பதங்களில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது என்பதே துயரம். தலித்திய அடையாளங்களுடன் இயங்கும் குழுக்கள் இப்பொழுது புலம்பெயர் தேசங்களில்த்தான் இருக்கின்றன. அவர்கள், வருடத்தின் விடுமுறை சீசனில் தாயகத்திற்கு வந்து, தலித்தியம் தலித்தியம் என ஆலாய்ப்பறக்கிறார்கள். ஒரு மாதம் அங்கலாய்த்து திரிந்துவிட்டு போய்விடுவார்கள். அந்த ஒரு மாதத்திலும், நிச்சாயமம், கன்பொல்லை, மந்துவில் என பல இடங்களிலும் சென்று புகைப்படம் எடுத்து அவர்களின் பேஸ்புக்கில் போடுவார்கள். பிறகு மிகுதி பதினொரு மாதமும் மனைவி, பிள்ளைகளின் படங்களை போடுகிறார்கள். இந்தளவில்த்தான் தாயத்தில் தலித்திய செயற்பாடுகள் உள்ளன.
இவற்றை சொல்வதால், சில புலம்பெயர் தமிழர்கள் நாளையே பேஸ்புக்கில் சாதிமான் என என்னை திட்டுவார்கள். சிலர் கவிதை கூட எழுதி திட்டுவார்கள்.

அவர்களிற்கெல்லாம் நான் சொல்வது, தயவு செய்து யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் என்பதே. இதனர்த்தம், இலங்கையில் சாதிய எற்றத்தாழ்வுகள் இல்லையென்பதல்ல. ஆனால், திண்டாமைக்கொடுமையை எதிர்கொண்ட அதே மனநிலையுடனும், அதே எதிர்ப்பு வடிவத்திலும் தற்போதைய சாதி விவகாரத்தை கையாள முடியாது. அப்படி கையாள முயன்றால் என்ன நடக்கும் என்பதற்கு இரண்டு உதாரணங்களை சொல்லலாம்.

முதலாவது, இலக்கிய சந்திப்பென்ற பெயரில் தலித்திய, மற்றும் அரச ஆதரவு அணிகள் ஒரு நிகழ்வை நடத்த முயன்றார்கள். அதற்கு என்ன நடந்தது? வடக்கிலுள்ள பெரும்பாலான படைப்பாளிகள் பறக்கணிக்க, மகிந்த ராஜபக்சவின் கூட்டத்திற்கு ஆட்களை ஏற்றிஇறக்குவதை போல எற்றி இறக்க வேண்டியதாகிவிட்டது.
ஒருவன் தான் ஒடுக்கப்படுவதாக கூறினால், நாம் அதனை புரிந்து கொள்ள வேண்டும். அதனை யாராலும் நிராகரிக்க முடியாது. ஆனால், இப்பொழுது பெரும்பாலும் சாதியவிவகாரம் ஒரு பக்ரீறியா போலாகிவிட்டது. அது கண்ணிற்கு தெரியாதது. ஆனால் சாதியப்போராளிகள் என சொல்லப்படுபவர்களிடம் இந்த பக்ரீறியை சமாளிக்க மருந்தில்லை. அவர்கள் வைத்தள்ளது, தீண்டாமை கொடுமைக்காலத்தில் உபயோகிக்கப்பட்ட கொட்டன்கள். கொட்டான்களால் பக்ரீறியாவை அழிக்க முடியுமா?

காலத்திற்கு காலம் ஒவ்வொரு இசங்கள், பாஷன்கள் நிலவவதுபோல தமிழ்ச்சூழலிலும்- குறிப்பாக புலம்பெயர் சூழலில்- அது நிலவுகிறதோ என்ற சந்தேகமும் எனக்கு உள்ளது.

இன்னொன்று, அவர்கள் களத்திற்கு வெளியில் உள்ளவர்கள். இதனால் இங்குள்ள யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியதவர்களாக உள்ளனர். தேசியப்பிரச்சனையை புறமொதுக்கிவிட்டு சாதிய பிரச்சனையை முன்னிலைப்படுத்த வேண்டுமென ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் சென்று பாடுபடுகிறார்கள். ஆனால், துரதிஸ்டமென்னவென்றால் அந்த மக்களே இந்தப்பிரச்சனையை வேறுவிதமாக உணரவும், கையாளவும் ஆரம்பித்து விட்டார்கள். பகிரங்கமான சாதிய எதிர்ப்பு போராட்டமொன்றை நீங்கள் நகரத்தில் வையுங்கள். நான் நிச்சயமாக சொல்வேன், அதில் கலந்து கொள்வதில் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்படாதவர்களாகத்தான் இருப்பார்கள். இதனால் அங்கு சாதிய கொடுமை அழிந்து விட்டதென்பதல்ல. இந்த தீண்டாமைக்கொடுமை போராட்ட காலம் மலையேறிவிட்டதென்பதை போராளிகளிற்கு புரிய வைக்கவே சொன்னேன்.

உலகமயமாதல், பல்தேசிய பொருளாதாரம், கல்வி என்பன மனிதர்களின் பெருமளவு அடையாளங்களை அழிக்க, மறைக்க உதவுகிறது. சாதிய விவகாரத்தையும் இந்த நோக்கிலேயே பார்க்க வேண்டும். கல்வி,பொருளாதாரம்தான் இந்த பிரச்சனையை கடக்க மிகச்சிறந்த தீர்வு.
சாதியம் இப்பொழுது வேறு வடிவங்களிற்கு சென்றுவிட்டது. அதனை எதிர்கொள்ள, புரிந்து கொள்ள சாதிய போராளிகளினால் முடியாமல் போய்விட்டது. அதனால்த்தான் அவர்கள் பின்தங்கி, 1960 களை கடந்து வர முடியாமல் நின்றுவிட்டார்கள்.

இன்னொன்று, சாதிய போராட்டக்காரர்களும், தேசிய விடுதலை போராட்டக்காரர்களும் ஆரம்பத்திலேயே இரண்டு வேறுபட்ட சக்திகளாகிவிட்டனர். தேசியவிடுதலை போராட்டசக்திகள் முற்போக்கானவை என சொல்ல முடியாவிட்டாலும், அந்த போராட்டம் முன்னெப்பொழுதுமில்லாத வகையில் சாதிய ஏற்றத்தாழ்வை பெருமளவில் இல்லாமலாக்கியது. இதுதான் சாதிய போராட்டங்காரர்களை களத்தைவிட்டு துரத்தியது.

‘தேசிய விடுதலைப் போராட்டத்தினால் சாதிய ஏற்றத்தாழ்வை இல்லாமல் ஆக்கியது’ என்று குறிப்பிடுகின்றீர்கள். ஆனால், சனங்கள் மத்தியில் இந்த ஏற்றத்தாழ்வுகள் முற்றாக மறையவில்லை என்று தமிழ்க்கவி தனது நாவலான “ஊழிக்காலத்தில்” முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் போன்ற இடங்களில் சாதீய ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான சம்பவங்களைப் பதிந்துள்ளாரே?

சாதிய எற்றத்தாழ்வுகளை சில நாளிலோ சில வருடங்களிலோ சில தசாப்தங்களிலோ முற்றாக களைந்துவிட முடியாது. அதனை படிப்படியாகவே செயலிழக்க செய்ய முடியும்.
முன்னர் ஒரு காலத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிற்கு சிரட்டைகளில்த்தான் தேனீர் கொடுத்தார்கள். சமூகவிடுதலைச் செயற்பாட்டாளர்கள் அதனை மாற்றினார்கள். பின்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில் நிலைமைகள் இன்னும் மாறின. திருமணம் செய்ய மாட்டோம், வீட்டில் வந்து சாப்பிடலாம் என்ற மனநிலைக்கு பெரும்பாலானவர்களை கொண்டு வந்தார்கள். இதெல்லாம் துப்பாக்கி நிழலில் நடந்ததாக இப்பொழுது சொல்லப்படுவதெல்லாம் அபத்தமானவை.

உங்களிற்கு தெரியுமா, விடுதலைப்புலிகள் சமூகவிரோத செயல்களை தடுக்க செயற்பட்டளவு கறாராக சாதிய விவகாரத்தில் நடந்து கொள்ளவில்லை. சமூகத்தின் பெரும் சிக்கலான இந்த பிரச்சனையை எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் கையாள முடியாதென்பதை அவர்கள் தெரிந்திருந்தார்கள். அல்லது, அதனை அறியாமலே அப்படி நடந்து கொண்டிருக்கலாம்.

இந்த விவகாரத்தை அவர்கள் தமது பாணியில் கையாள முயன்றிருந்தால், சாதிமான்கள் மின்சார கம்பத்தில் தொங்க வேண்டியிருந்திருக்கும். அப்படி நடந்ததா? அல்லது கம்பி எண்ண வேண்டியிருந்திரக்கும்? அப்படி நடந்ததா? அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிரதேச பொறுப்பாளர்கள் கறாராக நடந்திருக்கலாமே தவிர, இந்த விடயத்தில் கடுமையான தண்டனை பிரயோகம் செய்வதில்லை, சில நடைமுறைகள்தான் அதனை மாற்றும் என்ற எண்ணமே அவர்களது. அன்ரன் பாலசிங்கம் முதலானவர்களினால்த்தான் இந்த விதமான பார்வை புலிகளிடம் ஏற்பட்டிருக்கமென நினைக்கிறேன். புலிகளின் நடைமுறை எப்படியிருந்ததென்றால், அதனை ஒரு பொருட்டாக கொள்ளாமலிருந்தது. முன்னரே சொன்னதைப் போல, அவர்கள் திட்டமிடாமலேயே, தேசியப்பிரச்சனையை மட்டுமே மையதாக வைத்து பார்க்கும் மனநிலையினடிப்படையில்க்கூட இது நேர்ந்திருக்கலாம். ஆனால், அது சாதிய பார்வையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது.

இதனர்த்தம் ஏற்கனவே சொன்னதைப்போல அங்கு இந்த விவகாரம் அடியோடு ஒழிக்கப்பட்டிருந்ததென்பதல்ல, நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. முக்கியமாக அமைப்பிற்குள் பேசுவதற்கும், செய்வதற்கும் வேறு ஏராளம் வேலைகள் இருந்ததால் இதனை அவ்வளவாக கவனத்தில் கொண்டிருக்கவில்லை. நானறிந்தவரையில் போராளிகளிற்குள் அவ்வாறான பார்வைகள் இருந்ததில்லை. பின்னாளில்த்தான் ஓரிரண்டு சம்பவங்களை கண்டேன். அவை திருமண விவகாரத்தில் நிகழ்ந்தது. அதுவும் அரசியல்த்துறைக்குள்த்தான் நடந்தது.

நீங்கள் சொன்னதைப் போல தமிழ்க்கவி அப்படி எழுதியிருந்திருக்கலாம். அதற்கு வாய்ப்பு உள்ளது. கொலம்பசின் வரைபடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இராணுவப்பிரிவும், அரசியல்பிரிவும் எப்படி வேறுவேறான மனநிலையில் இருந்தன என்பதை கூறியிருக்கிறேன். இந்த வேறுபாட்டை தனியே விடுதலைப்புலிகள் அமைப்புடன் மட்டுப்படுத்தி பார்க்க முடியாதென நினைக்கிறேன். அது மனிதர்களின் தன்மைகளுடன் சம்பந்தமானதென நினைக்கிறேன்.

பெரும்பாலும் அரசியல்த்துறையென்பது ஒரு தஞ்சமடையுமிடமாகத்தான் இருந்தது. வறுமை காரணமாகவும், சமூக அந்தஸ்து, புகழ் விருப்பம் போன்ற பல்வேறு விதமானவர்கள் அங்கு தஞ்சமடைந்திருந்தனர். ஆனால் வழக்கமான தமிழ்மனநிலைப்படி செயற்பட தயாரில்லாதவர்கள். அவர்களிற்கு அரசியல்த்துறை தோதான இடமாக இருந்தது.

அங்கு சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். அங்கிருந்த தமிழ்கவி அவற்றை எழுதியிருக்க வாய்ப்புள்ளதுதான்.

‘கல்வியும் பொருளாதாரமுமே இதற்கு சிறந்த தீர்வு என்றும், வெளிப்படையான சாதிய ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் பிரதேசங்கள் என்றால், இந்த இரண்டு விடயங்களிலும் பின்தங்கிய பகுதிகள்தான். அவர்கள்தான் ஒடுக்கப்பட்டவர்களாக நோக்கப்படுகிறார்கள்’ என்றும் குறிப்பிடுகின்றீர்கள். ஆனால், அண்மையில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர், அவர் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்துக்காகவே அவரது பதவி உயர்வு தடுக்கப்பட்டிருக்கிறதே?

அந்த விவகாரத்தை தனியே சாதிய விவகாரமாக குறுக்க முடியாதென்றுதான் நினைக்கிறேன். அந்த விவகாரம் ஒரு பல்முனைச் சிக்கலான விடயம். ஒரு தமிழனிற்கு மேல் காகம் எச்சமிட்டாலே, அதுவும் சிங்கள காகம் என கூறும் அதிதீவிர தமிழ்தேசியவாதிகளைப்போன்ற, அதிதீவிர சாதிய போராளிகள்தான் இந்த விடயத்தை அப்படியொரு முட்டுச்சந்தை நோக்கி நகர்த்தியிருந்தார்கள்.

அந்தப்பாடசாலையில் கடந்த 16 வருடங்களின் மேலாக இருந்த அதிபர்கள் அனைவருமே ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். இப்பொழுது அநீதி இழைக்கப்பட்டதாக கூறப்படும் அதிபரின் சமூகத்தை சேர்ந்த திருமதி.குட்டித்தம்பி சுமார் 12 வருடங்கள் அந்த பாடசாலையில் அதிபராக இருந்தார்.

இதனைவிட, இன்னொரு விடயமும் உள்ளது. அந்த பாடசாலையில் 85 சதவீதத்திற்குமதிகமாக கல்வி கற்பது, அநீதி அழைக்கப்பட்டதாக கூறப்படும் அதிபரின் சமூகத்தை சேர்ந்தவர்கள். எனினும், அதிபரின் நியமனத்திற்கு எதிராக பாடசாலை சமூகம் ஒரு போராட்டத்தை கூட செய்திருந்தது. இவை சற்று சிந்திக்க வேண்டிய விவகாரங்கள். இந்த பொராட்டங்களின் பின்னணியில் வேறு யாரேனும் இருந்துமிருக்கலாம்.

கல்வித்திணைக்களத்தை சேர்ந்த உயரதிகாரியொருவரின் மனைவி, பருத்தித்துறை மெதடிஸ்தமிசன் பாடசாலையின் அதிபராவதற்காக, சற்று நீண்டகால நோக்கத்தில் அங்கிருந்த திருமதி சேதுராஜா உடுப்பிட்டிக்கு மாற்றப்பட்டதாகவும் ஒரு தகவலுண்டு. இந்த விடயத்தில் நீங்கள் குறிப்பிட்ட அதிபரிற்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

உங்கள் நுல்கள் வெளியாகிய பின்பு, இங்கு புலம் பெயர் நாடுகளில் விமர்சனங்கள் வைக்கும் சிலர், நீங்கள் இறுதி யுத்தத்தின் போது வன்னியில் வாழ்ந்தே இருந்திருக்கவில்லை. யுத்தத்தின் போது நேரடி அனுபவங்கள் எதுவும் இல்லாமலேயே கற்பனையில் புனைவுகளாக இறுதி யுத்தம் பற்றி எழுதுவதாக ஒரு விமர்சனம் உண்டு. இதற்கு என்ன பதில் சொல்ல விரும்புகின்றீர்கள்?

அப்படியா. இதுவரை அப்படியொரு குற்றச்சாட்டை நான் எதிர்கொண்டதேயில்லை. இந்த வகையான குற்றச்சாட்டுக்களிற்கு பதிலளிக்கவோ, அதனை நிரூபிக்க வேண்டுமென்டு மென்றோ நான் விரும்பவில்லை. அதனையும் மீறி, அறிந்து கொள்ள விரும்பும் புலம்பெயர் நண்பர்கள், ஊருக்குவரும்போது, பாதுகாப்பு அமைச்சில் முன்னனுமதி பெற்றுத்தானே வருகிறார்கள். அந்த முன்னனுமதி பெறும் சமயத்தில் பாதகாப்பு அமைச்சிலேயே இந்த பேர்வழி இராணுவ தடுப்புமுகாமில் இருந்தாரா என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மிகச்சமீபகாலத்தில் வெளியான “கொலம்பஸின் வரை படங்கள்” என்ற கதையில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் பற்றிய ஒரு வாசகத்தை, பின்னர் இலங்கைப் புலனாய்வு துறையினர் தங்கள் பிரச்சாரதுக்காக பாவித்ததாக ஒரு செய்தி உலா வந்தது . அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

இலங்கை புலனாய்வாளர்கள் எவ்வளவு இலக்கிய வாசகர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து நாம் உண்மையில் மெய்சிலிர்க்கலாம். அப்படி நடந்ததுதான். பத்திரிகைகளில் அதனை செய்தியாக்கியிருந்தார்கள். சுவரொட்டிகள் தயாரித்து வடக்கு கிழக்கெல்லாம் ஒட்டினார்கள். இப்படியாக இலங்கையெல்லாம் பெயர் தெரியத்தக்க எழுத்தாளராக்க முயற்சித்தார்கள். ஆனால் இப்பொழுதும் என்னால் தாங்க முடியாமல் உள்ளது ஒன்றே ஒன்றுதான். இந்த குறிப்புக்களை கொண்டு பாதகாப்பு அமைச்சு ஒரு செய்தி தயாரித்திருந்தது. அதில் முன்னாள் முக்கியஸ்தர் என குறிப்பிட்டு விட்டார்கள்.

அண்மையில் இலங்கையில் நடந்த இலக்கியச்சந்திப்பு ஏற்பாட்டு குழுவில் ஆரம்பத்தில் நீங்களும் இருந்தீர்கள். பின்னர், அதிலிருந்து விலகிவிட்டீர்கள். அது ஏன், அங்கு என்ன நடந்தது?

உண்மையில் அங்கு என்ன நடந்ததென கூறுவதானால், தாயகத்திலிருந்து தாயகத்தை பார்ப்பதற்கும், வெளியிடங்களிலிருந்து அதனை பார்ப்பதற்குமிடையிலான வேறுபாடுதான் காரணம். அந்த சந்திப்பை நடத்தியவர்கள் இலங்கையில் ஒரு சந்திப்பை நடத்திவிட வேண்டுமென்ற வெறியுடன் இருந்தார்களே தவிர, எப்படி நடத்துவது, எதனை பேசுவது என்பதில் தெளிவாகஇருக்கவில்லை. அந்த குழுவிற்கு இலங்கை யதார்த்தம் குறித்த “வெளிநாட்டு” புரிதல் இருந்தது. தவிரவும், இலக்கிய சந்திப்பு குழுவிற்கிடையிலெல்லாம் நிறைய பிரச்சனையிருந்தது.

அவர்கள் ஒரு குழுவை அமைத்திருந்தார்கள். அந்த குழுவில் ஒன்றில் அரச பிரதிநிதிகள் இருந்தார்கள். அல்லது, தீவிர தமிழ்தேசிய எதிர்ப்பாளர்கள் இருந்தார்கள். இரண்டும் ஒரே அர்த்தமுடைய சொற்கள் அல்ல. நாங்கள் மூவர்தான் அதிலிருந்து வெளியில் இருந்தோம். இதுதான் பிரச்சனை.

மற்றும்படி, அந்த சந்திப்பை நடத்தியவர்கள் சாதிய போராளிகள். ஏற்கனவே சொன்னதைப்போல, பக்ரீறியாக்களை அழிக்க கொட்டான்களுடன் வந்தார்கள். இலக்கிய சந்திப்பிலிருந்து விலகியபோது அது பற்றி விலாவாரியாக எழுதியிருக்கிறேன். ஆரம்பக்கூட்டங்களில், தேசிய இனப்பிரச்சனை என்ற ஒன்றை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவே கூடாதென ஒற்றைக்காலில் நின்றார்கள். தேசிய இனப்பிரச்சனை என்ற ஒன்றை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டுமென்பதற்காகவே, நான் மூன்றுநான்கு வாரங்கள் அவர்களுடன் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. அப்படி மல்லுக்கட்டிய சந்தர்ப்பங்களிலெ்லாம், தேசியமென்பது மாயை, பிற்போக்கானதென்ற விவாதங்களை ஆரம்பித்து விடுவார்கள். எவ்வளவு கொடூரங்களையெல்லாம் சகித்து கொண்டிருந்திருக்கிறேன் என்பதை பாருங்கள். இறுதியில் வேலணையூர் தாஸ், திசேரா, நான் ஆகியோர் வெளியேறினோம்.

இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உங்கள் பார்வை என்ன? தமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டுமென கருதுகிறீர்கள்?

நான் யாருடனும் இன்னும் அப்பம் சாப்பிடவில்லை. யாருடனும் கோப்பியும் அருந்தவில்லை. ஆனால் இலங்கையில் இனங்களிற்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட, புதிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட வேண்டும்.

இப்பொழுது பிரசார கூட்டங்களில் என்ன பெசப்படுகிறது? அபிவிருத்தி, கல்வி, பொருளாதார தன்னிறைவு எதுவுமில்லை. வடக்கும், தமிழர்களும்தான். நாடொன்றை ஆக்கிரமித்து வைத்திருக்கும் இன்னொரு நாட்டினர் பேசுவதைப் போன்று பேசும் போக்கு உருவாகியுள்ளது. தமிழர்களை முன்னிறுத்தி வன்முறை குறித்த பீதி ஊட்டப்படுகிறது. தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒரு கட்சியை ஆதரித்தால் அந்தக்கட்சி தோற்கும் என்றால், இலங்கை ஒன்றுபட்டுவிட்டதாக அல்லது ஒரேநாடு ஒரே மக்கள் என்பதையெல்லாம் நம்பலாமா?

வறுமையிலும், வேலைவாய்ப்பின்றியும் உள்ள மக்களிற்கு என்ன கொடுப்போம் என்பதை யாரும் பேசவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்பதை கொடுப்போமா மாட்டோமா என்பதுதான் பிரச்சனை.
கூட்டமைப்பு என்றாவது தமிழீழம் கேட்டதா? இப்பொழுது வடக்கு கிழக்கையாவது இணைக்கச் சொல்லி கேட்டதா? சுயநிர்ணய உரிமையையாவது கேட்டதா? கூட்டமைப்பு கேட்டதெல்லாம் ஒன்றேயொன்றுதானே. வடக்கு இராணுவ ஆளுனரை நீக்குங்கள்.

இதனை நிறைவேற்றாமல் விட்டதை விடுங்கள். இந்த சின்னச்சின்ன காரியங்களையெல்லாம் நாட்டிற்கு ஆபத்தானதாக சித்தரித்து, முழுக்க முழுக்க இனவாத தேர்தல் வெற்றியொன்றை பெற அரசு முயல்கிறது.
யுத்தத்தில் வெற்றிபெற்றது ஒருபடிதான். அதனை இனங்களிற்கிடையிலான நல்லுறவாக மாற்றும் செயற்திறன் அல்லது ஆர்வம் மகிந்த ராஜபக்சவிடம் இல்லை.

அவர் தனது தேர்தல் வெற்றிக்காக இனங்களிற்கிடையிலான பதற்றத்தை ஏற்படுத்த துணிகிறார் எனில், ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து வருடங்களிற்குமொருமுறை இனங்களிற்கிடையிலான பதற்றம் தோற்றுவிக்கப்படலாம்.

ஆனால் துரதிஸ்டவசமாக, அவர்தான் வெற்றிபெறும் வாய்ப்புள்ளதால், அடுத்த எட்டு வருடங்களிற்கும் பதற்றமான சூழல்தான் காணப்படும்.

‘இனங்களிற்கிடையிலான நல்லுறவாக மாற்றும் செயற்திறன் அல்லது ஆர்வம் மகிந்த ராஜபக்சவிடம் இல்லை’ என்று சொல்கின்றீர்கள். அதேவேளையில் இப்பொழுது இருக்கும் நல்லாட்சியில் அந்த செயலத்திறன் உள்ளதாக எண்ணுகின்றீர்களா ? ஆம் என்றால் அது எப்படியாக இருக்கின்றது?

மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதால் சில வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதற்காக மகிந்தவை மாற்றினால் எல்லாம் சரியென்பது பொருளல்ல. நாம் கலந்துரையாடப் போகிறவர் அதற்கு சரியானவரா இல்லையா என்பதுதான் விடயம். எதிர்காலம் எப்படியிருக்குமென தெரியவில்லை. ஆனால் தமிழர்கள் சிறிது ஆசுவாசமாவது பட்டுள்ளார்கள் அல்லவா?

நல்லாட்சி அரசில் நிகழப் போகும் அரசியல் சாசன மாற்றங்கள் குறித்த உங்கள் பார்வைகள் தான் என்ன?

அரசியலமைப்பு திருத்தம் அவசியமானது. இப்பொழுதுள்ள அரசியலமைப்புடன் நீண்டதூரம் பிரயாணிக்க முடியாதென்பதை சிங்களவர்களில் பெரும்பாலானவர்களும் உணர்ந்து கொண்டுவிட்டனர். அதனால் அரசியலமைப்பு மாற்றம் விரைவில் வரலாம். எனினும், அரசியலமைப்பு திருத்தம் நிகழும்போது இனப்பிரச்சனை தீர்வு ஏற்பட்டுவிடும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

கொலம்பஸின் வரைபடங்களுக்கு பின்னர் உங்கள் எழுத்துக்களில் நீண்ட தேக்கநிலை காணப்படுகின்றது. இதற்கு என்னதான் காரணம்?

நான் தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இலக்கிய முயற்சிகள் இப்பொழுது இல்லை. இன்றைய திகதியில் நான் எழுதாதற்கு காரணம் வேலை நெருக்கடிகள்.

அண்மையில் உருவான தமிழ் மக்கள் பேரவை பற்றிய உங்கள் சிந்தனைப் போக்கு எப்படியாக இருக்கின்றது?

ஆயிரம் பூக்கள் மலர்வதுதானே ஜனநாயகத்திற்கு ஆரோக்கியம். அதனால் யாரும் பதற்றமடைய வேண்டியதில்லை. அரசியலமைப்பு திருத்தம் பற்றிய பகிரங்க உரையாடல்கள் அவசியம். அதனை செய்யப்போவதாக பேரவை அறிவித்துள்ளது. சிவில் சமூகமென்ற பெயரில் இதுவரை அனேமதேயமாக அறிக்கைவிட்டு இயங்கிக் கொண்டிருந்தவர்கள் பகிரங்கமாக பேச ஆரம்பித்துள்ளனர். அது வரவேற்கப்பட
வேண்டியது.

ஆக்காட்டி –பிரான்ஸ்.
16 மார்கழி 2014

(Visited 34 times, 1 visits today)