மீன்பாடும் தேன்நாட்டில் முகமறியா நட்புகளுடன் ஓர் சந்திப்பு

மட்டக்களப்பு என்றாலே மந்திர தந்திரங்களும் அதன் வழிவந்த பாயொட்டி கதைகளும் தான் எனக்கு வியாக்கியானப்படுத்தியிருந்தன. காரணம் ,நான் பிறந்ததிற்கு ஒருபோதுமே மட்டக்களப்பு சென்றதில்லை. எனது அப்பா மட்டகளப்பிலும் ,அம்பாறையிலும், பொத்துவிலிலும் பிரதம தபாலதிபராக வேலை செய்திருந்தாலும் அப்பொழுது நான் சிறுவனாக இருந்ததால் என்னால் அங்கு போகமுடியவில்லை. மட்டக்களப்பு செல்லவேண்டும் என்ற எனது கனவு கனவாகிப் போய்விடுமோ என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இந்தக்கோடை விடுமுறை என்கனவை நனவாக்கியது. பிரான்சில் நின்றபொழுதே இந்த சந்திப்புகளுக்கான முன்னெடுப்புகளை செய்திருந்தேன். நண்பர்கள் றியாஸ் குரானா, முகமட் இம்மட், மற்றும் மைக்கல் கொலின் ஆகியோர் இலக்கிய சந்திப்புகளை நெறிப்படுத்தினார்கள்.
பருத்திதுறையில் இருந்து கல்முனைக்கு பஸ் இருந்தாலும் நேரத்தை மிச்சப்படுத்த வவுனியா சென்று அங்கிருந்து மட்டக்களப்பு செல்லத் தீர்மானித்தேன் . சிலமணிகளை விழுங்கிய பஸ் காலை 9மணியளவில் வவுனியாவைத்தொட்டது. அங்கிருந்து 10 மணியளவில் பஸ் புறப்பட்டது .பொலநறுவை ஹபறணை ,மின்னேரியா என்று காட்டுபகுதிகளால் பஸ் விரைந்தது. ஹபரணையில் இருந்து இராணுவ பிரசன்னங்கள் அதிகமாகவே இருந்தது .இந்தப் பிரசன்னம் மட்டக்களப்பு வரை நீட்சியாக இருந்தது. வடக்கில் குறைந்த இராணுவ பிரசன்னமும், கிழக்கில் கூடிய இராணுவப் பிரசன்னமும் காணப்பட்டது . இந்த இராணுவ பிரசன்னங்கள் எனது மனதை அலைக்கழித்தது .
நான் வந்த இ.போ.ச பஸ் பின்னேரம் 3 மணியளவில் பஸ் வாழைச்சேனையைத் தொட்டது . என்னை வாழைச்சேனையில் இறக்கி விட்டு பஸ் கல்முனையை நோக்கி விரைந்தது .இங்குதான் எனது நண்பர் முஹமட் இம்மட் இருந்தார் .எனக்கு இதுவரை வாழைச்சேனை என்றால் காகிதாலை கூட்டுத்தாபனமே என்நினைவில் அடையாளப்படுத்தி இருந்தது .நான் முஹமட் இம்மட்டுக்கு நான் வந்த செய்தியை தொலைபேசியில் சொல்லிவிட்டு அவருக்காக காத்திருக்கத் தொடங்கினேன் . எனக்கு முன்பு ஒருமுறை ஆத்தாக்கேட்டில் ஓர் ரோல்ஸ்சை சாப்பிட்டு நல்ல அனுபவம் இருந்ததால் நீண்ட தூரப்பயணத்தின் போது நான் பஸ்ஸில் எதுவுமே சாப்பிடுவதில்லை. இதனால் எனக்கு பசி வயிற்றைக் கிள்ளத்தொடங்கியது. அருகில் இருந்த தேத்தண்ணிக் கடையில் போய் சீனி இல்லாத தேத்தண்ணி சொல்லி விட்டு எனது தொலைபேசியை நோண்டத்தொடங்கினேன். அப்பொழுது எனக்கு முன்பு வந்து இருந்த ஒருவர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார் . அவரது பேச்சுக்கள் பெரும்பாலும் நான் யார் ? எங்கிருந்து வந்தேன் ? என்ன நோக்கத்துக்காக வந்தேன் ? என்பதிலேயே இருந்தது . எனக்கு இலேசாக பயம் எட்டிப்பிடிக்க தொடங்கியதால் அவரது கேள்விக்கான பதில்களை தவிர்க்கத்தொடங்கினேன் .எனது இக்கட்டான நிலமையைப் பார்த்த கடை முதலாளி என்னுடன் கதைத்தவரை கலைத்தார்.என்னுடன் கதைத்தவர் நடைபெற்ற யுத்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று என்னை சமாதானம் செய்தார். அப்பொழுதுதான் எனக்கு நெஞ்சுக்குள் தண்ணீர் வந்தது .சில மணித்துளிகளின் பின்னர் என்னைக் கூட்டிக் கொண்டு செல்ல முஹமட் இம்மட் தனது ஓட்டோவில் வந்திருந்தார். நான் சற்றுமே எதிர்பாராத வகையில் முஹமட் இம்மட் ஏற்பாடுகளை செய்திருந்தார். பசியில் இருந்த எனக்கு அவர்கள் பாரம்பரியப்படி செய்திருந்த புரியாணி சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றது. சிறிது நேர இளைப்பாறலின் பின்னர் நானும் இம்மட்டும் வாழைச்சேனையை சுற்றிப்பார்க்க சென்றோம்.
வாழைச்சேனை என்றால் எனக்கு அங்கு இருக்கும் காகித ஆலை மட்டுமே நினைவில் இருந்தது.அனால் வாழைச்சேனையை சுற்றி நெல் வயல்களே நிரம்பி இருந்தன. அதில் ஓர் நெல்வயலுக்கு இம்மட் என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் இருவரும் நெற்கதிர்களை கைகளால் அழைந்து கொண்டு சென்று கொண்டிருந்தோம்.இளம் நெற்கதிர்களின் பால் வாசம் மூக்கைத்துளைத்தது. நாங்கள் நடந்து வந்த வயல் வரப்பில் அருகே வாய்க்காலில் தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு நெல் வயல்வரப்பில் செருப்புடன் நடந்து செல்வது அந்தரமாக இருந்தது. இம்மட்டும் நானும் சிறுது நேர நடையின் பின்னர் ஓர் வாடிவீட்டை அடைந்தோம். அந்த வாடிவீடு ஐந்து மீற்றர் சதுரப்பரப்பளவில் அடக்கமாக இருந்தது. அதன் கூரை தென்னம் ஓலைகளால் வேயப்பட்டு இருந்தது.தகித்த வெய்யிலுக்கு நெல்லு வயலும் அந்த வாடிவீடும் நெல் வயலை வருடிவந்த காற்றும் நன்றாகவே இருந்தது. தூரத்தே இத்திரிஸ் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. இத்திரிஸ் வாழைச்சேனையில் காகம் பதிப்பகத்தை நடாத்தி வருபவர். அவரை பேசவிட்டே கேட்டுக்கொண்டு இருக்கலாம். அவ்வளவுக்கு விடயங்கள் தெரிந்த ஓர் பண்பாளர். மட்டக்களப்பின் பாரம்பரிய நாட்டுக்கூத்துக்கலையில் அதிக ஈடுபாடு கொண்டவர். நாங்கள் மூவரும் பேசிக்கொண்டு இருந்தபொழுது மேலும் இலக்கிய நண்பர்கள் தூரத்தே வயல் வரப்புகளிடியே எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது. என்னைச் சந்திப்பதற்கு இவ்வளவு பேர் தன்னார்வத்துடன் வருக்கின்றார்களா என்று எனக்கு மலைப்பாக இருந்தது. இம்மட் தன்னுடன் கொண்டுவந்த கோரைப்புற்பாய்களை வாடிவீட்டு நிலத்தில் விரித்தார். எல்லோரும் என்னைச்சுற்றி அரை வட்டவடிவில் அமர்ந்து கொண்டார்கள். இம்மட்டும் இத்திரிசும் வந்திருந்த நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். கலந்துரையாடல் ஆரம்பமாகியது. எல்லோரும் புலம் பெயர் இலக்கியத்தின் ஆழுமையை கதைப்பதிலேயே ஆர்வம் காட்டினார்கள். கடந்தவருடம் வெளிவந்த ஆக்காட்டி இலக்கிய சஞ்சிகை அவர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இத்திரிஸ் தேநீர் வைப்பதற்காக அடுப்பை மூட்டினார். பச்சை விறகு எரிந்த மணம் மூக்கைத் தொட்டது கதை ருசியுடன் இத்திரிஸ் தயாரித்த நன்னாரி தேநீரும் ருசி சேர்த்து நேரம் போவதே தெரியாமல் இருந்தது. எங்களைச்சுற்றி நன்றாக இருட்டி தூரத்தே விளக்குகள் கண்சிமிட்டின. நேரமாகி விட்டதை உணர்ந்து நாங்கள் ஒருவர் பின் ஒருவராக நட்சத்திர ஒளியில் வயல் வரப்புகளில் இம்மட்டின் ஓட்டோவை நோக்கி நடந்து கொண்டிருந்தோம் .
நான் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு இம்மட்டுடன் வீடு வந்த பொழுது இரவு பத்து மணியைத் தாண்டியிருந்தது. இம்மட்டின் மனைவி வெள்ளை இடியப்பமும் சம்பலும் சொதியும் செய்து வைத்திருந்தா. அப்பொழுதுதான் எனது மனைவியின் நினைவு வந்தது. பருத்தித்துறைக்கு தொலைபேசி நான் நலமாக வந்து சேர்ந்த செய்தியை மனைவிக்குச் சொன்னேன். நாங்கள் மறுநாள் சந்திக்க வேண்டியவர்களை பற்றிக் கதைத்து விட்டு நான் படுக்கச் சென்றேன். அதிகாலை நான்கு மணியளவில் அருகே இருந்த மசூதியில் காலைத்தொழுகை ஒலிபெருக்கியில் வந்து எனது நித்திரையை குலைத்து விட்டது. வீட்டில் ஒருவரும் எழுந்திருக்கவில்லை குலைந்த நித்திரையை மீண்டும் வசப்படுத்த முனைந்தேன். சிறிது நேரத்தின் பின்னர் எழுந்து குளித்து புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தேன். இம்மட் வெளியே யாருடனோ தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் சொல்லி விட்டு வாழைச்சேனையை மீண்டும் சுற்றிவர வெளியே வந்தேன். அப்பொழுது காலை ஆறுமணியாகி விட்டிருந்தது . வெய்யிலின் கடுமை அந்தக்காலை வேளையிலேயே தொடங்கிவிட்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த அதிகாலையிலேயே வாழைச்சேனை கடைகள் எல்லாம் திறந்து சுறுசுறுப்பாக இருந்தது. சந்தைகள் பரபரப்பாக விற்பனைக்கு தயாராகி கொண்டிருந்தன. சோம்பல் என்ற பேச்சுக்கே அங்கு இடம் காணப்படவில்லை. இந்த இடத்தில் வடக்கை விட கிழக்கு சற்று தூக்கலாகவே எனக்குப்பட்டது. ஏனெனில் இப்பொழுது நான் பார்த்தளவில் காலை ஒன்பதரை மணிக்குப்பிறகே வடக்கு சோம்பல் முறித்துப் பரபரப்பாகின்றது.நான் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே அந்தக்காலை வேளையை அனுபவித்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தேன். இந்த வேளைக்கு ஓர் சூடான கபே குடித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி வழியில் எதிர்ப்பட்ட தேநீர்க்கடைக்குள் நுழைந்து கபேக்கு ஓர்டர் செய்துவிட்டு காத்திருந்தேன் .எனது எண்ணங்கள் இன்று சந்திக்க வேண்டியவர்களை பட்டியலிட்டு அவர்களைச் சுற்றிவந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் கடைப்பெடியன் கொண்டுவந்த கபேயை மெதுவாக ருசிக்கத் தொடங்கினேன். கபேக்கு ஆதரவாக ஓர் சிகரட் தேவைப்பட்டது அதை செயல்ப்படுத்திக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு சுமார் 30 கிலோ மீற்றர் தொலைவில் இருந்தது .காலை எட்டுமணியளவில் இம்மட்டும், நானும், இத்திரிசும், இம்மட்டின் ஓட்டோவில் மட்டக்களப்பிற்கு சென்றோம் . போகும் வழியில் இம்மட் பல இடங்களில் ஓட்டோவை நிறுத்தி இடங்களை அறிமுகப்படித்தியே சென்றார். அதில் முக்கியமானவை ஏறாவூர், செங்கலடி, கிரான், பாசிக்குடா, வந்தாருமூலை போன்றவையாகும். பல தமிழ் பிரதேசங்கள் எப்படி புதிய குடியேற்ரப்பிரதேசங்களாக மாறின என்று விளங்கப்படுத்தினார் இம்மட். பாசிக்குடா பல கதைகளை எனக்குச்சொன்னது .பாசிக்குடா கடல் கரையில் பல தமிழர் காணிகள் அபகரிக்கப்பட்டு நட்சத்திர தங்குவிடுதிகளாக மாறி இருந்தன. பாசிக்குடா கால் கரையில் சிறிது நேரம் இருந்து விட்டு தொடர்ந்து பயணித்தோம் .ஓட்டோ கிரானில் சென்று கொண்டிருந்த பொழுது எங்களை ஓர் கார் இடைமறித்தது.அதில் இருந்து உமா வரதராஜன் இறங்கினார். நான் இதை சற்றுமே எதிர்பார்க்கவில்லை எனது இளைய வயதில் உமா வரதராஜனின் எழுத்துக்களில் மயங்கியவன் நான். மிகவும் எளிமையாக எதுவித பந்தாவும் காட்டாமல் நட்புடன் என்னுடன் கதைத்தார் உமாவரதராஜன். மொத்தத்தில் அவருடனான சந்திப்பு கிரானுக்கு அருகே எக்ஸ்பிரஸ் சந்திப்பாகவே அமைந்தது.
எமது ஓட்டோ வந்தாருமூலையில் இருந்த கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கு மட்டக்களப்பின் பாரம்பரிய கலைகள் சம்பந்தமான பொருட்காட்சி இடம்பெற்றது. இந்தப் பொருட்க்காட்சியை காகம் பதிப்பகம் இத்திரிஸ் நடாத்திக்கொண்டிருந்தார். பல்கலை கழகத்தில் நான் போன பொழுது என் மனதில் பல நினைவுகள் வந்து சென்றன. இந்தப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என்று பலர் காணாமல் போன வரலாறுகளும் உண்டு. பலகலைக்கழக மைதானத்தில் கொட்டகைகள் போட்டு பாரம்பரியக் கலைகள் சம்பந்தமான பல நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. பல பயனுள்ள தகவல்களை அங்கு என்னால் பெற முடிந்தது. கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத்தின் நாட்டாரியல் இசைத்துறைக்கு ஜெயசீலன் பொறுப்பாக உள்ளார். அந்தப் பொருட்காட்சியில் சிறிது நேரம் இருந்து விட்டு மீண்டும் பயணமானோம். மதியம் 12 மணி போல மட்டக்களப்பில் என்னையும் இத்திரிசையும் மகுடம் இலக்கிய சஞ்சிகை பொறுப்பாசிரியர் மைக்கல் கொலின் கைகளில் ஒப்படைத்துவிட்டு இம்மட் எங்களிடம் இருந்து விடைபெற்றார் .
மட்டக்களப்பு மிகவும் பரபரப்பான நகராக இருந்தது. மட்டக்களப்பு வாவியில் இருந்து வந்த சீதளிப்பான காற்று வெக்கையைத் தணித்துக்கொண்டிருந்தது. வாவியின் நடுவே ஒல்லாந்தரின் டச்சுக்கோட்டை கம்பீரமாக அமைந்திருந்தது. மைக்கல் கொலினை முகனூலில் அறிமுகமாகி இருந்தாலும் முதல் சந்திப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்து கொண்டார். ஓர் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்தாலும் பின்னால் ஒளிவட்டங்கள் எதுவும் இன்றி மிகவும் இயல்பாக நட்புடன் என்னுடன் கதைத்தார். அவர் நண்பர்களை சந்திப்பதற்கு ஒழுங்கு செய்திருந்த கட்டிடம் ஓர் மினி இராணுவ முகாமுக்கு அருகில் இருந்தது .உங்களுக்குப் இந்த முகாமால் இடைஞ்சல் இல்லையா என்று கேட்டதற்கு பழகி விட்டது என்ற பதிலே அவரிடமிருந்து வந்தது. எனக்கு உள்ளர உதறல் எடுக்கத்தொடங்கி விட்டது. முகாமின் முன்னால் சென்றிக்கு நின்ற படையினரை பார்க்க எனக்கு வெறுப்பாக இருந்தது. மைக்கல் கொலின் கூட்டிச்சென்ற இடம் ஓர் தனியார் கல்விநிலையத்துக்கு சொந்தமாக இருந்தது. அங்கு ஏறத்தாள எட்டு நண்பர்கள் எனக்காகக் காந்திருந்தனர். பரஸ்பர அறிமுகங்கள் முடிந்தவுடன் கலந்துரையாடல் ஆரம்பமாகியது. அந்தக்கலந்துரையாடலில் பல பயனுள்ள தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். மகுடம் இதழ்களை எனக்கு அன்பளிப்பாக மைக்கல் கொலின் தந்தார். அங்கு ஒரு சில மணித்துளிகளை செலவழித்துவிட்டு மைக்கல் கொலினிடம் நானும் இத்திரிசும் விடைபெற்றோம் .
நேரம் ஒரு மணியைத்தாண்டி விட்டிருந்தது. எனக்கும் இத்திரிசுக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. ஓர் உணவகத்தில் நுழைந்து மதிய உணவை எடுத்தோம். நாங்கள் அங்கிருந்து மீண்டும் மருதமுனைக்கு பஸ் எடுத்தோம். அங்குதான் எனது இறுதி சந்திப்பை றியாஸ் குரானாவுடன் இம்மட் ஏற்பாடு செய்திருந்தார்.போகும் வழியில் காத்தான்குடி வந்தது.காத்தான்குடியில் பஸ் நுழையும்பொழுது எனக்கு ஓர் அரபு தேசத்தினுள் நுழையும் உணர்வே ஏற்பட்டது.அகன்ற வீதியின் நடுவே பேரீச்சம் மரங்கள் பெரிய சாடிகளில் செயற்கையாக வளர்க்கப்பட்டிருந்தன. நான் மட்டக்களப்பில் பார்த்த மக்களைப் போல் இல்லாது இந்த மக்கள் சற்று வித்தியாசமாகக் காணப்பட்டனர். காத்தான்குடி தமிழர் வாழ்வில் பல கசப்பான சம்பவங்களைப் பதிவு செய்த இடமாகும். பல சம்பவங்கள் என் மனதில் தோன்றி மனதை அலைக்கழித்து கொண்டிருந்தன. நேரத்தைப்போக்காட்ட காத்தான்குடி பற்றி இத்திரிசிடம் பேச்சுக்கொடுத்தேன். “இவைகள் எல்லாமே அரசியல் இருப்புகளுக்காக செய்யப்பட்ட வேலைகள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி சனங்கள்” என்றார் இத்திரிஸ்.
ஒருசில மணித்துளிகளை விழுங்கி பின்னேரம் மூன்று மணியளவில் மருதமுனை பள்ளிவாசலுக்கு அருகே எங்களை இறக்கி விட்டு பஸ் தனது பயணத்தைத் தொடர்ந்தது. எமக்காக றியாஸ் குரானா அங்கு காத்திருந்தார். றியாஸ் என்னுடன் முகனூல் ஊடாகவும் ஆக்காட்டி இலக்கிய சஞ்சிகையினூடாகவும் அறிமுகமானவர். முரட்டுத்தோற்றத்தை கொண்டிருந்தாலும் பழகுவதற்கு மிகவும் இனிமையான நண்பர். தோற்றங்களை வைத்து ஒருவரை மட்டுக்கட்ட முடியாது என்பதற்கு ரியாஸ் குரானா ஓர் நல்ல உதாரணம். றியாஸ் மருதமுனை கடற்கரையில் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் அங்கு சென்ற பொழுது ஓர் ஐந்து நண்பர்கள் எமக்காக காத்திருந்தனர். மருதமுனை சுனாமியின் பொழுது அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இன்று அந்தக்கடற்கரை ஏதுமறியாது என்முன்னே தவழ்ந்து கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல நண்பர்களது வருகை கூடிக்கொண்டு சென்றது . பரஸ்பரம் அறிமுகங்ககளை றியாஸ் செய்து வைத்தார். அதில் எனக்கு ஏற்கனவே முகனூல் மூலம் அறிமுகமாயிருந்த இளம் கவிஞர் ஜம்சித் ஸமானும் ஒருவர். நான் அங்கு கவிட்டுப்போட்டிருந்த ஓர் வள்ளத்தின் மீது அமர்ந்து கொண்டேன். என்னைச்சுற்றி எல்லோரும் கடல் மண்ணில் அமர்ந்து கொண்டனர். கடல் காற்று வீசியடிக்க, அலையோசையின் மத்தியில் கலந்துரையாடல் ஆரம்பமானது. எல்லோரும் புலம் பெயர் இலக்கியத்தின் வீச்சுக் குறித்து சிலாகித்துக் கதைத்தனர். பலரின் பார்வையில் இங்கிருந்து வெளிவரும் ஆக்காட்டி இலக்கிய சஞ்சிகையின் தாக்கத்தை என்னால் உணர முடிந்தது. இறுதியாக வெளிவந்த எக்ஸெல் சஞ்சிகையின் தரத்துக்கு நிகராக ஆக்காட்டி வெளி வருவதை அந்த நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். இடையில் றியாஸ் எல்லோருக்குமாக மரவள்ளிக்கிழங்கு சிப்சும், அவித்த மரவள்ளிகிழங்கும் மிளகாய் சம்பலும் வாங்கி வந்தார். அந்த வேளையில் இவை சுவையாக இருந்தது. றியாஸ் குரானா எனக்காக 20 கிலோ மீற்றர் தொலைவில் இருந்த அக்கரைப்பற்றில் இருந்து வந்தது என்மனதை நெகிழ வைத்தது. எமது கலதுரையாடல் முடிய ஏழு மணிக்கு மேலாகி விட்டது. இறுதியில் றியாஸ் எங்களை கல்முனைக்கு அழைத்துவந்து பஸ்ஸில் பருத்தித்துறைக்கு வழியனுப்பி வைத்தார்.இந்த மட்டக்களப்பு பயணம் எனக்கு பல முகமறியா நண்பர்களை அள்ளித்தந்து ,அதேவேளை அவர்களினூடாகவே நான் பல நிஜங்களைத் தரிசித்தேன் மொத்தத்தில் நான் இதுவரை மட்டக்களப்பை பற்றி வைத்திருந்த எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கியது இந்தப் பயணம். அத்துடன் இந்த முகமறியா நண்பர்களின் சந்திப்பிலே எனக்கு ஓர் சிறிய ஏமாற்றம் இருந்தது. மட்டக்களப்பின் அழகு தமிழை ஆசையாக கேட்க வந்த எனக்கு யாருமே என்னுடன் மட்டக்களப்பு தமிழில் கதைக்கவில்லை.
எதுவரைக்காக கோமகன் 

10 ஆனி 2015

http://eathuvarai.net/?p=4744
(Visited 2 times, 1 visits today)