சாத்திரியின் பார்வையில் கோமகனின் “தனிக்கதை”

கோமகனின் தனிக்கதை என்கிற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறு கதைகளை உள்ளடக்கி 157 பக்கத்தில் மகிழ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே அதனை எழுதியவரை மட்டும் மனதில் வைத்து விமர்சனங்கள் எழுதித் தள்ளுகின்ற காலகட்டத்தில் நான் படித்துவிட்டு எனது பார்வையை வைக்கிறேன். இந்த சிறுகதைத்தொகுப்பானது பெரும்பாலானவை ஒருவன் தனது சொந்த மண்ணிலிருந்து சொந்த பந்தங்களையும் சொத்துக்களையும் விட்டு ஊரையும் விட்டு வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் எறியப்பட்டு அவன் அங்கே மீண்டும் பதியமாகி அனைத்தையும் இழந்த அகதியாக பதிந்த வலியை தொட்டுச் செல்கிறது. வெளிநாட்டில் அதியுயர் வாசனை திரவியத்தை தடவினாலும் மண்ணின் வாசத்தை சுவாசிக்கத் துடிக்கும் நேசம் .அதுக்காகவே அவர் பெரும்பாலான கதைகளில் கோப்பி குடித்தும் சிகரெட்டை பற்றவைத்து அதன் புகையை ஆழ உள்ளே இழுத்து ஆகாயத்தை நோக்கி விட்டு தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கிறார். சமுக ஆர்வலர்கள் யாராவது சூழல் மாசடைதல் ஓசோனில் ஓட்டை என்று வழக்கு போடாதவரை அவரால் தொடர்ந்து எழுத முடியும் .
புலம்பெயர் வாழ்வின் சிக்கல்களை அதன் வேதனைகளை அவன் யார், கிளி அம்மான், மலர்ந்தும் மலராத, மனிதம் தொலைத்த மனங்கள், ஆகிய கதைகள் சொல்லிச் செல்கின்றன. இதில் கிளியம்மான் என்கிற கதை பிரான்சில் வாழ்ந்த ஒரு முன்னை நாள் போராளியின் உண்மைக்கதை என்பது மட்டுமல்ல அந்தக் கதையின் நாயகன் எனது நண்பனும் கூட. மக்களுக்காக போரடப்போய் யுத்தத்தில் காயமடைந்து அங்கவீனமாகி வெளிநாடு வந்த பின்னரும் தனது சொந்த வாழ்வை தொடர முடியாது மன உளைச்சலுக்கு உள்ளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்ட ஒருவனின் கதை.
தனியாக புலம் பெயர் வாழ்வின் சோகங்களை மட்டும் சொல்லாது வெளிநாடுகளில் தமிழர்கள் தங்களை நிலை நிறுத்தவும் நிதந்தர வதிவிட உரிமையை பெறவும் தகிடுத் தனங்கள் விசாகன். அவன் யார், தோலுரித்துச் செல்கிறது. தமிழன் அனைத்தையும் கைவிட்டு அகதியாகி வெளிநாடுகளில் புதுவாழ்வை பதியமிட்டபோதும் சாதியை மட்டும் கைவிடாது காவிச்சென்று இரத்தத் துணிக்கைகள் போலவே இன்னமும் அவர்களது உடலில் உணர்வுகளோடு அடுத்த தலைமுறைக்கும் கடத்தியுள்ளான் என்பதை மறுக்க முடியாது. கோமகனின் கதைகளும் இந்த சாதியத்தை சாடாமல் பயணிக்கவில்லை. அதில் சின்னட்டி, அவர்கள் அப்படிதான் என்கிற கதைகள் முக்கியமானவை. இதில் சின்னட்டி என்கிற கதையைப் படித்தபோது உண்மையிலேயே ஊரில் நடக்கும் மரணச் சடங்கு ஒன்றிற்கு என்மனதை அழைத்துச் சென்றுவிட்டார் கதாசிரியர்.
அடுத்ததாக ஊர் திரும்புதல். நீண்ட கால வெளிநாட்டு அகதி வாழ்வின் பின்னர் ஊர் திரும்பியதும் தனது ஊரை சுற்றி வந்து பழைய நினைவுகளை மீட்டுகிறான். அவன் படித்த பாடசாலை ஊர் கோவில். முடி திருத்திய கடை குட்டி பாபரிலும். காதலித்து கலியாணம் செய்யமுடியாமல் கை விட்டு விட்டுப் போன முன்னை நாள் காதலியை தேடுதல் பாமினியிலும். வெளிநாட்டில் இருந்தபோதே இறந்து விட்டிருந்த அம்மாவின் தொடுகைக்காக ஏங்கியபடி நோய் வாய்ப்பட்டிருந்த அம்மா வளர்த்த நாயை கருணைக்கொலை செய்தலை றொணியனிலும் அழகாக உணர்வோடு கதைகளாக்கியிருக்கிறார்.
கோமகனின் தனிக்கதையை பொதுக்கதையாக படித்து முடித்த போது, கீதையிலிருந்தோ குரானிலிருந்தோ பைபிளில் இருந்தோ ஒரு வசனத்தை உருவி உதாரணம் காட்டி நகர்த்தாமல் சொந்த வாழ்வை சம்பவங்களை உதாரணங்களாக காட்டி நகர்த்தியதற்கு ஒரு கை தட்டு. ஆனால் எல்லாக் கதைகளையும் படிக்கும் போது எழுபது எண்பது கால உத்திகளே பெரும் பாலும் பயன் படுத்தியிருக்கிறார். அதிக வர்ணனைகளும் ஆலாபனைகளும் உள்ளதாக எனக்குப் படுகின்றது. காலையில் கதிரவன் கண்விழித்தான் என்று கதை தொடங்கினால் காலையில கந்தசாமி கூடத்தான் கண் விழிக்கிறான் அதை விட்டிட்டு விசயத்துக்கு வா … என்கிற இன்றைய இளம் தலை முறையினரின் வாசிப்பையும் கவரக்கூடிய முறையில் கோமகன் இனிவரும் காலங்களில் தனது கதைகளில் புதிய உத்திகளை புகுத்த வேண்டும் என்பது கட்டளையல்ல வேண்டுகோள்.

நன்றி : http://eathuvarai.net/?p=4864

July 09, 2015

(Visited 4 times, 1 visits today)