வெள்ளி 13 இன் அடுத்த நாள்

நேற்றில் இருந்து மனதுக்கு மிகவும் சோர்வாக இருக்கின்றது. இரவு நித்திரை வரவில்லை. காலை 4 மணிக்கு தொடங்கிய எனது இன்றைய நாள் சற்றுமுன் மாலை 4 மணிக்கே நிறைவுக்கு வந்தது. நான் அதிகாலை தொடரூந்து நிலையத்தடியில் நின்றபொழுது எனது தொடரூந்து சேவை முற்றாக நிறுத்தப்பட்டது. இது ஸ்ரட் து பிரான்ஸ் புகையிரதநிலயத்தை ஊடறுத்து பாரிஸ் செல்லும் தொடரூந்து. என் மனதில் இனம் புரியாத பயஉணர்வு பரவியது. ஏறத்தாழ 60 வருடங்களுக்குப் பின்னர் நாட்டில் வந்த இரண்டாவது அவசரகால நிலைபிரகடனம் அதிகாலை 12 மணியில் இருந்து ஆரம்பமாகியது. மக்களை வெளியில் எங்குமே செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசே கேட்டுக்கொண்டது. வெள்ளி இரவே ஆரம்பமாகும் ஹப்பி அவேர்ஸ் ஒவ்வரு பார்களிலும் அதிகாலை 4 மணிவரை களைகட்டும். நடக்கப்போகும் விபரீதம் தெரியாது பியரிலும் சாப்பாட்டிலும் இருந்த அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? எல்லாமே மனக்கண் முன்னே சுழன்றடித்தன. வேறு வழியில் போய் பாதாள ரெயிலில் ஏறி இருந்தால் ஒரு பெட்டிக்கு நான்கு ஐந்து பேரே இருந்தார்கள். காலை வேளை 6 மணியளவில் போர் வீர்களின் நினைவு ஸ்தூபி இருக்கும் பகுதியான ஆர்க் து ட்ரியோம்ப் மனித நடமாட்டம் இல்லாதது மயான அமைதியாக என்னை வரவேற்றது. காற்றில் உதிர்ந்த பைன் மரத்து இலைகள் சரசரக்க நான் மட்டும் வேலைத்தலத்துக்குத் தனியனாக நடந்து சென்றேன். இதுவும் எனது வாழ்வின் ஓர் அனுபவம் என்று எடுத்துக்கொண்டாலும், இறந்த அப்பாவிகளது உயிர்களுக்கும் , காயப்பட்டவர்களுக்கும் என்னைப்போன்று மனஉளைச்சல் பட்டவர்களுக்கும் இந்த அரசும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களும் என்ன பதிலைத் தரப்போகின்றன? உயிர் நீத்த அனைத்து அப்பாவி மக்களுக்கும்  எனது அஞ்சலிகளையும் காயம்பட்ட மக்களின் துயரிலும் மனதாரப் பங்கு கொள்கின்றேன்.
கோமகன் 
 
14 கார்திகை 2015
(Visited 10 times, 1 visits today)