நடு சஞ்சிகையின் “கிழக்கிலங்கை சிறப்பிதழ்” பற்றி இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்

தமிழில் வெளியாகும் இணைய இதழ்களில் வெளியாகும் எழுத்துகள் அனைத்தையும் வாசித்து முடிப்பதில்லை. ஆனால் பிரான்சிலிருந்து வரும் நடு இதழின் முக்கால்வாசியை வாசித்துவிடுவதுண்டு. லண்டனிலிருந்து வரும் எதுவரை இதழும் அப்படி வாசிக்கும் இதழ்.

தமிழ் இலக்கியத்தின் உலகப்பரப்பை அறியவிரும்பினால் இவற்றை வாசித்தே ஆகவேண்டும். ஆம் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டிலிருந்து கழண்டுபோய் வெகுகாலமாகிவிட்டது.இப்போது வந்திருக்கும் நடு-வின் விவரங்கள் இங்கே.

00000000000000000000000000000

இதழ் 05 கிழக்கிலங்ககை சிறப்பிதழ். இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள் ஓவியம் கட்டுரை கலைக்கூடம் கவிதை , குறுநாவல். சிறப்புக்கதை சொல்லி, சிறப்புக்கவிதை சொல்லி, சிறுகதை, நூல்விமர்சனம், நேர்காணல், பத்தி, புகைப்படம், மொழிபெயர்ப்பு, விமர்சனம்.

எழுத்தாளர்கள் :

அனார் இசாத் றெஹானா, உமா வரதராஜன், உமையாழ் பெரிந்தேவி, எம் .ஏ . ஷகி, ஏ.நஸ்புள்ளாஹ், கோ நாதன், சாஜீத் அஹமட், சாம்சுடீன் நளீம், ஜிஃப்ரி ஹாஸன், ஜெம்சித் ஸமான், தேவகி கணேஷ், பரீட்சன், றஷ்மி, லறீனா அப்துல் ஹக், லலித கோபன், விஜய் எட்வின், ஸர்மிளா ஸெய்யித்.

நன்றி : பேராசியர் அ ராமசாமி – இந்தியா .

0000000000000000000000000000000000000000000000000

“ஈழத்து இலக்கிய பரப்பில் சிற்றிதழ்களின் பெருக்கம் வாசகர்களுக்கு ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்துவது போல உணரவில்லையா” – என்று இன்று காலை பேசிய நண்பன் கேட்டான். சிற்றிதழ்களில் தரம் தரமின்மை என்ற முடி பிளக்கும் விவாதங்களுக்கு அப்பால், இந்த சிற்றிதழ்கள் தம்மை தகவமைத்துக்கொள்ளும் களமும் பயணிக்கின்ற திசையும் ஆரோக்கியமானதாக உள்ளதா என்ற உறுத்தலின் வெளிப்பாடுதான் அவனுடைய கேள்வியின் அர்த்தமாக இருந்திருக்கும் என்று நம்பினேன். ஏனென்றால், இன்று அத்தகைய நிலையை எடைபோட்டு அளவிடவேண்டிய சூழலில்தான் ஈழத்து இலக்கிய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இது கொஞ்சம் ஆழமாக பேசப்படவேண்டிய விடயம்.

ஊதிக்கட்டப்படுகின்ற பலவண்ண பலூன்களை பாருங்கள். எவ்வளவு அழகானவை. காற்றில் மிதந்து செல்லுகின்ற நீர்குமிழிகளை பாருங்கள். கண்களுக்கு எவ்வளவு கவர்ச்சியானவை. ஆனால் இவையெல்லாம் நிரந்தரமானவையா? நிலைக்கின்ற சக்தி உடையவையா?

இதுபோல இந்த சிற்றிதழ்களின் போக்கும் பரபரப்பான சமகாலத்துக்கு தீனிபோடுகின்ற ஜனரஞ்சக இதழ்களாக மாத்திரம் நிறம் காட்டி மறைந்துவிடுகின்றவையாக அமைந்துவிடக்கூடாது. உறுதியான தளத்தில் அமைக்கப்படவேண்டிய உருப்படியான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தவேண்டும். காலங்கள் தாண்டியும் அவற்றின் அத்திபாரங்களை அசைக்கமுடியாதவாறு இறுக்கமான பிடிமானங்களை வாசகர்களுடன் ஏற்படுத்தவேண்டும். வாசகர்களோடு நெருக்கமாக பேசுகின்ற – அவர்களின் வாழ்வியல் தத்துவங்களை இறுக்கமாக உரையாடுகின்ற – கனதியான விடயங்களை தன்னகத்தே கொண்ட படைப்புக்களையும் அதன் நீட்சியில் மிகப்பெரும் பெறுமானங்களை சமூகத்துக்கு விட்டு செல்லக்கூடிய இலக்கியங்களை ஊடுகடத்துபவையாகவும் அமையவேண்டும். அவற்றுக்கான சிறு முயற்சிகளையாவது மேற்கொள்ளவேண்டும்.

ஈழத்து இலக்கியத்தை மிகச்சாதரணமாக எள்ளிநகையாடுபவர்களும் கிள்ளுக்கீரையாக கைகளுக்கு இடையில் வைத்து நசித்து விளையாடுபவர்களும் இன்றைக்கும்கூட பேராசிரியர் சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களை கடந்துபோகமுடியாது. காரணம் அவர்கள் இந்த சமூகத்தின் திசையறிகருவிகளாக தகவமைத்துக்கொண்டு உருவாக்கிய இறுக்கமான செயற்பாடுகள். முற்போக்கான சிந்தனைசார்ந்த பாதையில் ஈழத்தமிழர்களை முன்நடத்திச்செல்லவும் அறிவியல் ரீதியில் – திறனாய்வுப்பார்வை சார்ந்த ரீதியில் – மார்க்சிய சிந்தனைசார் சிறப்புநிலைகளில் என்று பலதரப்பட்ட பண்பாட்டு, இலக்கியக்கூறுகளை மக்களுக்காக புடம்போட்டு காட்டியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தில் அசைக்கமுடியாத வகிபாகத்தை உருவாக்கினார்கள்.

அவர்களையும் அவர்களின் கருத்துருவாக்கங்களையும் விமர்சிப்பவர்களும் உள்ளார்கள். ஆனால், இங்கு அதுவலல்ல பிரச்சினை. சரியோ பிழையோ, மக்கள் சார்ந்து மக்களோடு பின்னிப்பிணைந்துள்ள கூறுகளை இலக்கியமாக்குவதும் அதற்கான புதிய களத்தை உருவாக்கி அதனை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லக்கூடியளவு காத்திரத்தோடு தொடர்ந்து செயற்படுவதும்தான் அந்தந்த காலத்தின் வீரியமான இலக்கிய செயற்பாடாக இருக்கமுடியும்.

ஜெயமோகன் அறம் என்கிறார். சரி. இருந்துவிட்டு போகட்டும். நம்பிக்கையோடு தான் உருவாக்கி முன்னகரும் அந்த களம் காலம் கடந்த பின்னரும் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பிடிமானம் மிக்கதாக இருந்தால் அது அவருடைய வெற்றி. அதில் அவர் மக்கள்சார்ந்த இலக்கியத்தை எவ்வளவு ஆழமாக எழுதியிருக்கிறார். அவர் கூறுகின்ற அறம் என்பது மக்களின் அகமும் புறமும் சார்ந்து எவ்வளவு பேசியிருக்கிறது என்ற உபாயங்களைத்தான் இங்கு ஈழத்தமிழ் இலக்கியவாதிகள் நோக்கவேண்டும்.

ஜெயமோகன், சிவத்தம்பி, கைலாசபதி எல்லோரும் பிரச்சினையென்றால் வாருங்கள் நேரடியாக சாமியறைக்கே போகலாம். தேவாரம், திருவாசகம், பட்டினத்தார்பாடல் என்று அந்த வரிசைகளை பாருங்கள். அவையெல்லாம் இன்று மக்களோடு மக்களாக ஊறிப்போய் கிடக்கின்றன. காலம் கடந்தும் மக்களை கட்டிவைத்திருக்கின்றன என்றால், அவை மக்களை பாடியிருக்கின்றன என்று அர்த்தம். மக்களோடு மக்களாக நின்று மக்களின் வாழ்வியலை பேசியிருக்கின்றன என்று அர்த்தம். வெறும் ஆன்மீக வழியில் சாம்பிராணி காண்பித்துக்கொண்டு கொண்டுவரப்பட்ட இலக்கியங்கள் அல்ல அவை.

இப்போது ஈழத்து இலக்கியத்துக்கு வருவோம்!

ஈழத்தின் இலக்கிய வீதிகள் வழியாக ‘சின்னத்தம்பி” பிரபுபோல துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடிவருகின்ற சிற்றிதழ்கள் வரிசையில் மேலேகுறிப்பிட்டதுபோன்ற நோக்கங்களை தங்கள் மத்தியில் தகவமைத்துக்கொண்டு வெளிவருபவை எத்தனை? மக்களோடு மக்களாக நின்று மக்களை பாடுகின்ற இலக்கியத்தை குறைந்தபட்சம் எழுதுவதற்கு முயற்சிக்கின்ற இதழ்கள் எத்தனை? அவ்வாறான முயற்சிகளின் வழியாக கடந்த ஐந்துவருடங்களில் எழுதப்பட்ட பொருள்பொதிந்த – விசாலமாக பேசப்பட்ட – ஐந்து கட்டுரைகளை கூறுங்கள் பார்க்கலாம். இலக்கியம் என்பது பேஸ்புக்கில் எத்தனை தரம் share செய்யப்பட்டது என்றும் எத்தனை லைக்கிடப்பட்டது என்பதை முன்னிறுத்தியும் சலங்கை கட்டி ஆடுகின்ற கூத்தல்லவே. அதற்குத்தான் எத்தனையோ மீம்ஸ் இருக்கின்றன. ‘உங்களில் எத்தனைபேருக்கு தெரியும்’ – என்று ஆரம்பிக்கும் ஆயிரம் ஆயிரம் பாசுரங்கள் நிமிடத்துக்கொன்றாக வட்ஸ் அப்பில் குட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றன.

நாங்கள் பேசுவது வேறு! நாங்கள் பேசவேண்டியதும் வேறு!

இங்கு எதுவும் நடைபெறவில்லை என்று குற்றமோ குறையோ கூறவில்லை. அதற்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கவேண்டிய விகிதாசாரம் போதாது. அவ்வளவுதான்.

இவ்வாறான முயற்சிகளில் தொடந்து ஈடுபட்டுவரும் ஈழத்தமிழ் இலக்கிய சிற்றிதழ்கள் வரிசையில்;, பிரான்ஸிலிருந்து வெளிவரும் “நடு” கிழக்கிலங்கை சிறப்பு பதிப்பாக இம்முறை வெளியாகியிருக்கிறது. உள்ளடக்கத்தை உரசிப்பார்த்து கருத்துக்கூறுவதற்கு முன்னர், ஈழத்து இலக்கியம் என்றால் அது யாழ்ப்பாணத்தை முன்வைத்து மாத்திரம் வெளிவருபவை என்ற யாழ். மையவாத ஒளிவட்டங்கள் சிதைக்கபட்டு பொதுநிலைப்படுத்துப்படுகின்ற சிந்தனைமுறைகள் தளைத்துவருவது மகிழ்ச்சியை தருகிறது. அதனை ஏனைய சிற்றிதமிழ்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தொண்டைக்குள் வைத்து திணறிக்கொண்டிருக்கின்போது – ‘நடு” அதனை துணிச்சலாக வெளிக்கொண்டுவந்திருக்கும் முயற்சிக்கு மிகப்பெரிய பாராட்டு.

மேலே பேசிய விடயங்களுடன் ஒப்பிடுகையில் இந்த முயற்சி ஒரு துளி மாத்திரமே. ஆக, சிற்றிதழ்கள்களின் வருகையில் உள்ள கட்டற்ற சுதந்திரத்துக்கு இணையாக அவற்றின் களங்கள் விரிவாக்கப்பட்டு அவை வெவ்வெறு சிந்தனைப்பள்ளிகளின் ஊடாக மக்கள் இலக்கியங்களாக சிருஷ்டிப்பதற்கு உந்துதல் செய்யப்பட்டால் சிறப்பு.

மற்றும்படி, புதியசொல்லுக்கு பின்னால சயந்தன் நிக்கிறார், ஆக்காட்டிக்கு பின்னால ஷோபா நிக்கிறார், நடுவுக்கு பின்னால சாத்திரி நிக்கிறார் என்கின்ற ரேஞ்சில இந்த இதழ்களுக்கு கொம்பு சீவி விடுபவர்கள் குதியம் குத்திக்கொண்டு அப்படியான ஜனரஞ்சக பாதையில் பயணம் செய்தால் – அல்லது அதற்கு இந்த இதழ்களுக்கு எடுபட்டுபோனால் – please move on. எங்களுக்கு விகடனும் குமுதமும் போதும்!

நன்றி : ப. தெய்வீகன் – அவுஸ்திரேலியா.

(Visited 3 times, 1 visits today)