றியாஸ் குரானாவின் இலக்கிய அறம்-கட்டுரை

இன்று றியாஸ் குரானாவின் “ஆளுமை – விருது” தொடர்பான ஒரு கட்டுரை வாசிக்க கிடைத்தது. இந்தக்கட்டுரை என்னைப்போன்றவர்களுக்கும் சரி இலக்கிய அறத்தில் நேர்பார்வை கொண்டவர்களுக்கும் ஒரு சில சங்கதிகளை சூசகமாக எடுத்துச் சொல்கின்றது. இந்தக்கட்டுரையின் பிரதான பேசுபொருள் கவிஞர் சோலைக்கிளி. எனக்குத்தெரிந்து பொதுவெளியில் கவிஞர் சோலைக்கிளிக்கும் றியாஸ் குரானாவுக்கும் இணக்கமான பார்வைகளோ சூழலோ இருந்ததில்லை. இருவருமே வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றவர்கள். இவர்களிடம் இணக்கப்பாடுகள் வருவதென்பது எண்ணிப்பார்க்க முடியாத விடயம். ஆனால் இலக்கியச்செயற்பாட்டில் நேர்மைத்தன்மையும் பண்பட்ட உள்ளமும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இந்தக்கட்டுரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பொதுவெளியில் ஒருவரைப்பற்றி எமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இலக்கியம் தொடர்பாக முக்கியமான விடயங்களின் பொழுது காய்த்தல் உவத்தல் இல்லாத எமது பார்வைகளை ஒருவர் மீது வைக்கின்ற உளப்பாங்கு இப்பொழுது இலக்கியவாதிகளிடம் அருகி வரும் வேளையில் றியாஸ் குரானா போன்ற இளம் வயதுடைய இலக்கிய செயற்பாட்டாளர்களிடம் அது மூர்க்கம் அடைவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. விமர்சனத்துறையில் சரியான பாதைகளை எடுக்காது வெறும் காழ்புணர்விலும் குழுமங்களின் அடிப்படையிலும் பிரதிகளையும் இலக்கிய செயற்பாடுகளையும் தரம்பிரிக்கும் போக்குகளுக்கு சாவு மணி அடிக்க வேண்டிய தேவை ஒன்று இளைய சமூகத்திடம் உள்ளது. அதை பிரதேசங்கள் பாராது நாம் எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையும் ஒன்றுண்டு.
கோமகன்
 
07/07/2018
(Visited 15 times, 1 visits today)