திரும்பிப் பார்க்கின்றேன் – நடுவுக்கு வயது 03 – பிறப்பு 10 ஆடி 2016

வணக்கம் வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே ! இன்று நடு இணைய சிற்றிதழுக்கு வயது 03. இந்த மூன்று வருட காலப்பகுதியில் நடு தனது இலக்கை அடைந்திருக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் கையில் விட்டு விட்டு நாங்கள் இதுவரையில் எதை விதைத்திருக்கின்றோம் என்பதை மட்டும் பார்க்கலாம் என எண்ணுகின்றேன்.

நடு இணைய சிற்றிதழ் பிறந்த நாளில் இருந்து இன்றுவரை தனது ஒரு முகத்தை மட்டுமே வாசகர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் காட்டி வந்திருக்கின்றது. அதன் மறுபக்கம் சோதனைகளும் வேதனைகளும் எம்மவர் மத்தியில் எழுகின்ற ‘காழ்ப்புணர்வு’ மற்றும் புறங்கூறல்’ போன்றவற்றை எதிர்கொண்டது . ஆரம்பத்தில் தாயகத்தை சேர்ந்த எனதருமைத்தம்பி மதுரன் ரவீந்திரனே இந்த தளத்தை வடிவமைத்து தரவேற்றம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் வகித்து வந்த வேலையினால் எம்மைக் கவனிப்பதில் அவருக்குப் பெரும் நேரச்சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அவர் இல்லாது விட்டால் நடு பிறந்திருக்க முடியாது. அவரை இந்த வேளையில் மிகவும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். நடுவை இயக்குவதில் நாம் தொழில் நுட்பரீதியாக தனித்து விடப்பட்டோம். நடுவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியது. இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு யூ ரியூப் துணையுடன் நடுவின் தளத்தை மறுசீரமைத்து வடிவமைப்பதில் மூர்க்கமாக இறங்கினேன். படிப்படியாக அழகான வடிவமைப்புடன் உங்கள் முன் வலம் வருகின்ற தள வடிவமைப்பின் மூல கர்த்தா அடியேன் தான்.

நடு குழுமத்தில்  யார் யார் எல்லாம் இருக்கின்றார்கள் என்ற  விடயமே ஒரு சிலரைக் கிலி கொள்ளச்செய்தது. இவர்களால் ‘நடுகுழுமம்’ என்ற சொல்லாடலே கேலிக்கும் எள்ளலுக்கும் உரியதாக ஆக்கப்பட்டது. நடு இணைய சிற்றிதழ் ஆரம்பிக்கப் பட்ட பொழுது நானும் எனது நண்பர்களும் எடுத்துக் கொண்ட முடிந்த முடிவுகளுக்கமைய அவற்றையெல்லாம் சட்டை செய்யாது மௌனம் காத்து வந்திருக்கின்றோம். அப்படி சொல்பவர்களை நான் முற்றுமுழுதாக புறந்தள்ளுகின்றேன். ஏனெனில் அவர்களது நோக்கம் நடு இணைய சிற்றிதழ் மீது அவதூறு கிளப்புவது ஒன்று மட்டுமே. இந்த இடத்தில், ஆசிரியர் பீடமே வெளியே வராத வகையில் பிரசுரமான சிற்றிதழ்களை என்னால் சுட்டிட முடியும்.

இது வரையில் 19 இதழ்களை பிரசுரம் செய்த நடு இணைய சிற்றிதழ், பரிசோதனை முயற்சிகளாக :

01 சிறப்பிதழ்களை வெளியிடல்

02 பாரிஸில் ‘கதைப்போம்’ என்ற தலைப்பில் இலக்கிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளல்

போன்றவற்றை மேற்கொண்டது.

பரிசோதனைமுயற்சிகளாக :

01 சினிமா சிறப்பிதழ்
02 கிழக்கிலங்கை சிறப்பிதழ்
03 மலையக சிறப்பிதழ்
04 சிறுகதை சிறப்பிதழ்
05 கவிதை சிறப்பிதழ்
06 தமிழக சிறப்பிதழ்

ஆகிய சிறப்பிதழ்களை வெளியிட்டிருந்தோம். அவை அதன் நோக்கில் வெற்றியடைந்ததா என்பதை வாசககர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.

பாரிஸ் நகரில் எமது அனுசரணையில் இலக்கிய முன்னெடுப்புகளாக ‘கதைப்போம்’ என்ற தலைப்பில் :

01 காலம் சிற்றிதழின் பொன்விழா இதழ் வெளியீடும் கலந்துரையாடல்.
02 லெ முருகபூபதியின் சொல்ல தவறிய கதைகள் நூல் வெளியீடும் பிரான்ஸ் வந்த அவருடனான கலந்துரையாடல்.
03 கோமகனின் முரண் சிறுகதைத்தொகுதி கையளிப்பும் கலந்துரையாடலும்

என்று  மூன்று ‘கதைப்போம்’ நிகழ்வுகளை நடாத்தி இருக்கின்றோம்.

இவைகள் நாங்கள் இந்த மூன்று வருட காலத்தில் செய்தவை. கால நேரங்கள் சரிவருமாகில் நடுவின் ஐந்தாவது வயதில் அதில் வெளியாகிய சிறுகதைகள் சிலவற்றை தொகுப்பாக்கும் எண்ணம் ஒன்று எனக்குண்டு.

இதுவரைகாலமும் நடுவுடன் பயணித்த வாசகர்கள், படைப்பாளிகள், நடுவில் வெளியாகும் சுய ஆக்கங்களை மேலும் உயிர்ப்புறச்செய்த ஓவியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். நடுவின் பலம் பலவீனங்கள் இரண்டையும் எமக்கு எடுத்துச் சொல்லுங்கள். எமது காதுகளை இரவல் தருவதற்கு நாங்கள் என்றுமே தயாராக இருக்கின்றோம். நன்றி .

கோமகன்

பிரதம ஆசிரியர்

நடு குழுமம்

(Visited 11 times, 1 visits today)