முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் “முரண்” சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. “எதிர்” வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் “முரண்” ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். “நடு” என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர்.
“முரண்” தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில் கோமகன் அலாதியானவர். அநேக கதைகள் வித்தியாசமான் பேசுபொருட்களோடு கட்டமைப்புக்களையும் தனக்குள் மாற்றியமைத்துக்கொண்டு வெளிவந்திருக்கின்றன. கோமகனின் கதைகள் எப்போதும் வித்தியாசங்களின் வழி புதிர் முனைகளை தேடவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தின் வழி பயணப்படுவதால், பாத்திரப்படைப்பு, அகவயமான மொழி ஆகியவற்றை தவறவிடுவதுண்டு. அதனை ஒருவேளை, தனக்குரிய பாணியாக அவர் தகவமைத்துவைத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், கோமகன் நிச்சயமாக ஒரு சிறந்த கதைசொல்லியாக தனது ஒவ்வொரு கதையிலும் தடம் பதித்திருக்கிறார்.
கோமகனில் நான் எப்போதும் அவதானிப்பதும் அவரிடமே குறையாக கூறுவதும் ஒன்றுதான். இலக்கியம் என்பது இயங்கிக்கொண்டேயிருப்பதுதான். அதற்காக அது எழுதிக்கொண்டேயிருப்பது என்று அர்த்தம் அல்ல. அதுபோல மற்றையவர்களின் படைப்புக்களை வெளிக்கொண்டுவருவதற்கு நெம்புகோலாக இருந்துகொண்டேயிருப்பதுமல்ல. வாசிப்பும் அதன் நெடும்பயணமும்தான் இலக்கியத்தின் பெரும்பலம். “முரண்” ஊடாக தனது சிறகதைகளின் அடுத்த பரிணாமத்தை எட்டுவதற்கு முயற்சித்துள்ள கோமகன், அடுத்தடுத்த படைப்புக்களில் தன்னை மேலும் புடம்போட்டிருப்பார் என்று நம்பிக்கை கொள்கிறேன். அத்தோடு, சிறுவம்புகளையும் கரந்தடிச்சண்டைகளையும் கடந்து அவரை அடுத்த படைப்பில் நாவலாசிரியராக பார்க்கவேண்டும் என்றும் எதிர்பார்த்திருக்கிறோம்.
முரணுக்கு வாழ்த்துக்கள்!
(Visited 17 times, 1 visits today)