“சமகால ஈழத்துப் படைப்புகள்” ஒரு நோக்கு

பத்திரிகை குறிப்பை வைத்து நாவல் / சிறுகதை எழுதலாமா என்ற கேள்விக்கு சர்வதேச எழுத்தாளர்களை எல்லாம் துணைக்கு அழைக்கின்றார் “கானல் தேசம் ” நுலாசிரியர் நடேசன். பத்திரிகை குறிப்பை வைத்து படைப்பை எழுதலாம் தவறில்லை. ஆனால் ஆதாரமான பத்திரிகை குறிப்பை எப்படியாக / எத்தகைய பார்வையில் தனது புனைவினுடாக அந்தப்படைப்புக்கு நூலாசிரியர் மாற்றியமைத்தார் என்பதை வைத்தே அந்தப்படைப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. இதை இன்னும் சற்று விரிவாக்கப் பார்க்கப்போனால் பத்திரிகையை ஆதாரமாக வைத்து எழுதுவதற்கு இலக்கியம் ஒன்றும் மொய் விருந்து அல்ல. மாறாகப் படைப்பு நேர்மையும் புனைவுண்மையும் முதலில் படைப்பாளிக்குள் வரவேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் அரசியலுக்கு ஏற்றவாறு இறக்குமதி செய்துகொண்ட ‘ரொபி’க் கதைகளையெல்லாம் இலக்கியத்துக்குள் கொண்டுவந்து அதனை உமிந்துகொண்டிருப்பது ஏறக்குறைய ஒரு சுயமைதுனம் போன்றதே. அதற்கு பத்திரிகை குறிப்பை ஆதாரமாகப் பிடிப்பது எப்படியென்றால் வைரமுத்து ஒரு முறை கூறியதுபோல ‘குத்துவிளக்கில் சிகரெட் பற்றியதுபோலானது’. எங்கே ஈழத்து படைப்புகள் எல்லாம் இந்தவகையான சட்டகங்களை நோக்கிச் செல்கின்றனவோ என்று அச்சமாக இருக்கின்றது.

ஒரு பிரதிக்கு விமர்சனம் என்று வரும்பொழுது புலி ஆதரவு இலக்கியத்தளம் தனது அரசியல்களுக்கு ஏற்றவாறு தேற்ரங்களையும் நிறுவல்களையும் போடுகின்றது. அதே போல் மாற்றுக்கருத்து இலக்கியத்தளம் தனது அரசியல்களுக்கு ஏற்றவாறு தேற்ரங்களையும் நிறுவல்களையும் போடுகின்றது. இறுதியில் வாசகனுக்கு அயற்சியே ஏற்படுகின்றது. எப்பொழுது இவற்றையெல்லாம் கடந்து இயல்பாக “நடு”வினுடாக பாய்ந்து செல்லும் படைப்புகளின் குறுக்கு வெட்டுகளை பார்க்கப் போகின்றோம் என மனம் அவாவுகின்றது. அதாவது கருணாகரமூர்த்தியின் ‘பெர்லின் இரவுகளை போலவோ’,காலம் செல்வத்தின் ‘ எழுதித்தீரா பக்கங்கள் போலவோ’, கோமகனின் ‘முரண்’ போலவோ, தீரனின் ‘கொல்வதெழுதல்’, ‘நட்டுமை’,’தீரதம்’ போலவோ, சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்’ போலவோ படைப்புகளை படிக்கவே மனம் ஆவலாக இருக்கின்றது.

கோமகன்

17 மாசி 2019

(Visited 15 times, 1 visits today)