அழிவின் விளிம்பில் இருக்கும் பவளப்பாறைகள்-கட்டுரை

ஒரு நாட்டின் கடல் வளம் பவளப்பாறைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. உலக மீன் நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப் பாறைகள் குறித்த ஆய்வை நடத்தின

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துகள்: வானிலை மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளும் காரணியாக இருப்பதை மறுக்க முடியாது.

கடலோர பகுதிகள் விரிவாக்கம், அதிக அளவில் நடக்கும் மீன் பிடி தொழில், கடல் மாசுபாடு, கடல் நீர் வெப்பமடைதல், கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்றவையும் பவளப்பாறை அழிவுக்கு முக்கிய காரணங்கள்.

இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டுக்குள் 90 சதவீத பவளப்பாறைகள் அழிந்து விடும். 2050க்கு பிறகு பவளப்பாறைகள் இருந்ததற்கான சுவடு கூட இருக்காது. பவளப்பாறைகளை வாழ்வாதாரமாக கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளது.

கடல் வாழ் உயிரினங்கள் அழிவதால் கடல் மாசுபாடு அதிகரித்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையை மாற்ற பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பாதுகாப்பு செயற்கைகோள் மூலமும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

கடல் மற்றும் பவளப்பாறைகளின் வளத்தை பாதுகாக்க மாற்று வழியாக விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலில் வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதை உணர்வதன் மூலம் பவளப்பாறைகள் மட்டுமின்றி கடல் வளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் பவளப்பாறைகள்:

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாகவும், அதிகமாகவும் உயிர் வாழ பேருதவியாக இருப்பது பவள உயிரிகள் எனப்படும் பவளப்பாறைகள். இவை முழுமையான சுண்ணாம்புக் கற்களால் ஆன ஒரு உயிரினமாக இருந்தாலும் மற்ற நுண்ணுயிரிகளைத்தான் உணவாக உட்கொண்டு வளர்ந்து வருகின்றன. பொதுவாக பவளப் பாறைகளை ஒரு வகையான விலங்கு அல்லது தாவரம் எனவும் சொல்லலாம். இப்பாறைகளில் உள்ள பாலிப்ஸ் என்ற உயிரினம் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும். இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.

கடலில் ஆழமில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும் பவளப் பாறைகள் குழிமெல்லுடலிகள் என்ற வகையை சேர்ந்த உயிரினங்களாகும். இவற்றின் இளம்பருவம் பிளானுலா எனப்படுகிறது.கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து பின்னர் வளர்ச்சியடைந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்து பாலிப் கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் இருக்கும். பாலிப் உயிரினம் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் வெளியேற்றுகின்றன. இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் சிறிய விலங்கின மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.

இவற்றின் இருபாலின உறுப்புக்களும் ஒரே உயிரியில் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கிறது. பாலிப்ஸ் என்ற உயிரி இறந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன. இவை சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மட்டும் 200 வகைகள் இருக்கும் இவற்றை கடினமானவை, மிருதுவானவை என இரு பிரிவுகளாகவும் பிரிக்கலாம்.

கடினமான வகை பவளப் பாறைகளில் மனிதமூளை வடிவம், மான்கொம்பு வடிவம்,மேஜை மற்றும் தட்டு வடிவம் ஆகியனவும் அடங்கும். கடல் விசிறி உயிரினம் மிருதுவான பவளப்பாறை வகையை சேர்ந்தது. இவை பார்ப்பதற்கு செடிகள் அல்லது சிறு கொடிகள் போலவும் நீண்டும் காணப்படும். பவளப் பாறைகளை மையமாக வைத்துத்தான் பலவிதமான வண்ணமீன்கள் கண்களைக் கவரும் வகையில் சுமார் 250க்கு மேற்பட்டவையும்,மெல்லுடலிகள், கணுக்காலிகள் மற்றும் பாசிவகைகள் போன்றவையும் வளர்கின்றன.

இவை தவிர பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது.

வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது,கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன. இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக அடர்ந்து, வளர்ந்து பெரிய மரங்களைப் போன்று காட்சியளித்து ஒரு பெரிய பூஞ்சோலையாகவே காட்சியளிக்கின்றன. கடலுக்கு அடியில் உள்ள பவளப் பாறைகளை வண்ண மீன்களோடு இணைந்து பார்த்து ரசிக்க கண்ணாடிப்படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் கடல் வளங்களை கண்குளிரக் கண்டு ரசிக்க முடியும்.

April 28, 2011

(Visited 1 times, 1 visits today)