கதைகள் வெறுமனே கதைப்பதற்கு மட்டுமில்லை!-வாசிப்பு அனுபவம்-மதுசுதன் ராஜ்கமல்

புலம்பெயர் வாழ்வின் ஆழ அகலங்களை மிக விரிவாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருக்கும் ஈழ இலக்கிய வரிசையில் முரண் சிறுகதை தொகுப்பு வித்தியாசமானதொரு கூறாக அமைந்திருக்கிறது.வடிவநேர்த்தியிலும் சொல் உத்தியிலும் சில முயற்ச்சிகளை இக்கதைகளில் கோமகன் கையாண்டு பார்த்திருக்கிறார்.அப்படியான முயற்ச்சிகள் எல்லா நேரத்திலும் பலிக்கும் என்று சொல்வதற்கில்லை ஆனால் சில கதைகளில் அது சாத்தியப்பட்டும் இருக்கிறது.நிஜத்தின் புற உருவை புனைவின் வழி பிரதிபலிக்க முயல்வதில்,அகத்தேடல் வாழ்வியல் போராட்டத்தைப் போலவே ஒரு முடிவில்லாத தொடர் போராட்டத்தை போன்றது,அந்த வகையில் சுறுக்கர் இன்னும் கூட பல உத்திகளை கையாளவேண்டும்.பரந்து கிடக்கும் நிலப்பரப்பில் வாழ்வலைச்சலின் கணங்கள் எப்படி ஒவ்வொருவருக்கும் பன்முகப்பட்டதோ அதுபோல எழுத்தும் அதனை வெளிப்படுத்தும் வகைமாதிரிகளும் பன்முகத்தன்மையானது தான்.அந்தவகையில் சுறுக்கர் ஒரு நெகிழ்வான போராளி என்பது நமது அசுவாசமாய் இருக்கிறது.

இத்தொகுப்பின் பதினோரு கதைகளும் புலம்பெயர் வாழ்வை மையமாகக்கொண்டு நகர்பவைதான் எனினும் ஒவ்வொன்றும் அதன் தன்னியல்பில் தன்னிகரான கதைகளாக மிளிர்கிறது.அனேகமாக இத்தொகுப்பின் சில கதைகளை நடு ஆன்லைன் இதழில் அவ்வப்போது படித்திருக்கிற நியாபகங்கள் மீளவந்தாலும்,இத்தொகுப்பின் வழி மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் மேலும் சில புதிய கோணங்களில் சில புதிய தரிசனங்கள் காணக்கிடைப்பதை மறுப்பதற்கில்லை.எழுத்து எல்லா காலத்துக்கும் தன்னைத்தானே செப்பனிட்டுக் கொள்வதில்லை என்றாலும் எழுத்தின் ஆழமும் அவை எழுதப்படும் சூழலும்,காலமுமே கதையை நூற்றாண்டுகள் கடந்தும் புத்துயிர்ப்புடன் இருக்கச்செய்வதாக அமைகிறது.அந்தவகையில் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ‘அகதி மற்றும் மாதுமை’ ஆகிய மிகப்பிரதானமான இரண்டு கதைகளும் கிளாசிக் என்று சொல்லலாம்.

பெரும்பாலன கதைகள் வல்லினம், மலைகள்,ஜீவநதி,எதுவரை,முகடு ஆகிய ஆன்லைன் இதழ்களிலும் இலக்கிய சஞ்சிகைகளிலும் புலத்திலும் இனைய வெளிகளிலுமாக வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.இக்கதைகளின் களங்களும் அவை படரும் வெளிகளும் நுட்பமானவையாக இருப்பதால் தான் முரண்,தகனம்,டிலீப் டிடியே,ஏறுதழுவுதல்,பருப்பு கதைகள் ஒரு புதிய முயற்சிகளாகவும் ஆக்காட்டி,வெடிப்பு,சுந்தரி ஆகியவை வேறுவகை மாதிரிகளாகவும் அமையப்பெற்றிருக்கிறது.ஒரு கதை அதன் வழமையான பாடுகளில் இருந்து முற்றிலுமாக சமன்குலைந்து விதம்விதமான வகைகளில் கோர்க்கப்படுவதுதான் படைப்பாளனுக்கு அழகு.அதுதான் படைப்பு நேர்த்தியும் கூட.

கதைக்களங்கள் அதன் காலங்களை கொண்டு இறந்தகாலத்தின் துயரத்தை,நிகழ்காலத்தில் மீளாய்வதற்கும் அதன்வழி எதிர்காலத்தை கூடுமானவரை குறைந்தபட்ச சுபிட்சத்திற்காகவேனும் தயார் படுத்திக்கொள்வதற்கான சில வழிவகைகளை,காலச்சக்கரம் நிகழ்த்திக்காட்டும் என்றாலும் கூட அதன் நொடிமுட்கள் எல்லாநேரத்திலும் தன்னியல்பு போக்கிலேயும் சுழலுவதில்லை என்பதால்,ஒவ்வொருவரும் அதன் இனம்புரியாத ஏதோவொரு அனுபவத்தை தன்வாசிப்பின் வழி கண்டடைவதற்கான சாத்தியக்கூறுகளைத்தான் புனைவுகள் உருவகப்படுத்தி தரும் என்பதால்,கதைகள் வெறுமனே கதைப்பதற்கு மட்டுமல்ல காலத்தை அதன் முன்னும் பின்னுமான இயல்பின் வழியே புரிந்துகொள்வதற்கும் தான் என்பதை முரண் தொகுப்பு மிககச்சிதமாக சாத்தியப்படுத்தி இருக்கிறது.
#முரண் #கோமகன் #எதிர்வெளியீடு #ஈழம் #புலம்பெயர்_இலக்கியம் #சுறுக்கர்

(Visited 20 times, 1 visits today)