“கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்” – நேர்காணல் யேசுராசா

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
 
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் – நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றிஇருக்கின்றார் . மாற்றுப் பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த திசை வார ஏட்டின் (1989 – 1990)  துணை ஆசிரியராகவும் இருந்தவர்.
 
1975 இல் தொடங்கப்பட்ட அலை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயற்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். 1994 – 1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான கவிதை இதழை வெளியிட்டார். 2003 மார்கழி முதல் தெரிதல் என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார். இதுவரை வெளியாகிய படைப்புகள் , தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் (சிறுகதை, மார்கழி 1974. மார்கழி 1989),அறியப்படாதவர்கள் நினைவாக (கவிதை, 1984),பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்” (கவிதை, 1984, 2003),மரணத்துள் வாழ்வோம்” – (கவிதை, 1985, 1996),காலம் எழுதிய வரிகள்” – (கவிதை, 1994) தூவானம் – (பத்தி, 2001), பனிமழை” – (மொழிபெயர்ப்புக் கவிதைகள், 2002), “பதிவுகள்” (பத்தி, 2003), குறிப்பேட்டிலிருந்து” (கட்டுரைகள் 2007), திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம் (கட்டுரைகள் 2013) நான் தாயகத்தில் நின்றபொழுது ஆக்காட்டி வாசகர்களுக்காக நடத்திய நேரடி நேர்காணல் இது
 
கோமகன்
000000000000000000000
தாயகத்தின் முதுபெரும் பன்முக ஆளுமை கொண்ட உங்களை இளையதலை முறையினருக்கு அறிமுகம் செய்யுங்கள் …..
என்னைப்பற்றிய அடைமொழி சற்று ‘வீங்கி’யுள்ளது எனத் தோன்றுகிறது! யாழ்ப்பாணத்தில்  குருநகர் என்ற கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த  நான், ‘தபாற்கந்தோர்த் தலைவரும் தந்தியாளரும்’ சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். பாடசாலையில் கல்விகற்கும் பருவத்தில்  ஆரம்பித்த வாசிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து, ஓரளவு சிறுகதை, கவிதை, பத்தி, விமர்சனம் போன்றவற்றை  எழுதுவதிலும் மொழியாக்கங்களிலும் ஈடுபட்டேன். திரைப்படம், நாடகம், ஓவியம், பொது அறிவு சார்ந்த  விடயங்களிலும் ஆர்வமுண்டு. அலை, கவிதை, தெரிதல் சிற்றிதழ்ச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளேன். இதுவரை ஏழு நூல்கள் இங்கும் தமிழகத்திலுமாக வெளிவந்துள்ளன. தற்போது முன்னரைப்போல் தீவிரமான செயற்பாடுகள் இல்லை; ஆயினும்,  ‘ஜீவநதி’ இதழிலும் முகநூலிலும்  கொஞ்சம் எழுதிவருகிறேன்.
தாயகத்தில் திரைப்படத்துறையில் உங்கள் பங்கு எப்படியாக இருந்தது?
திரைப்படத் தயாரிப்பு, நடிப்பு என்றெல்லாம் இல்லை. சிறுவயதிலிருந்தே திரைப்படங்களைப்  பார்ப்பதில் ஆர்வம் உண்டு. பின்னர் எனது கொழும்புக் காலத்தில், விமர்சகர் கே.எஸ். சிவகுமாரனின் வழிகாட்டலில் பிறமொழிப் படங்களைப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. கொழும்பு, பேராதனை ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான நல்ல படங்களைப் பார்க்க இயலுமானது. இதன் தொடர்ச்சியாக, 1979 – 1982 காலகட்டத்தில், மதிப்புக்குரிய  ஏ.ஜே. கனகரத்தினாவின் தலைமையின் கீழ் ‘யாழ். திரைப்பட வட்டம்’ என்ற அமைப்பின்மூலம், நல்ல பிறமொழிப் படங்களை யாழ்ப்பாணத்தில் திரையிடுவதில் ஆர்வத்துடன் இயங்கினேன். 1998 – 2006 வரையான ஆண்டுகளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் இரா. சிவச்சந்திரனுடன் இணைந்து, ஒவ்வொரு கிழமையும் பிறமொழிப் படங்களையும் குறிப்பிடத் தகுந்த தமிழ்ப் படங்களையும் விடியோவில் காட்டினோம்; காட்சியைத் தொடர்ந்து கலந்துரையாடலையும் நடத்தினோம். நல்ல திரைப்படங்கள் பற்றி அவ்வப்போது சிற்றிதழ்களில் எழுதியும் வந்துள்ளேன். அவ்வெழுத்துக்கள் ‘திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம்’ என்னும் நூலாக வந்துள்ளன. அண்மைக் காலங்களில் நடைபெறும் இளைஞர்களின் சில குறும்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் எனது மதிப்பீட்டுக் கருத்துக்களை முன்வைத்து,  உரையாடி வருகிறேன். நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதிலும், நல்ல திரைப்பட இரசனையை ஊக்குவிப்பதிலும் கடந்த காலத்தில் செயற்பட்டமை உளத்திருப்தியைத் தருகிறது!
கலை இலக்கியத் துறைகளில் பெரும்பான்மை இனத்தினருடனான உங்கள் தொடர்புகள் எப்படி இருக்கின்றன?
எனது அரசாங்கப் பணி காரணமாக, பதின்மூன்று ஆண்டுகள் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்திருக்கிறேன். சிங்களத் திரைப்படங்கள், நாடகங்கள், ஓவியக் காட்சிகள் என்பவற்றுக்குச் சென்று பார்க்கும் வழக்கம் தொடந்து இருந்தது. சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் இவைபற்றி வருவனவற்றை வாசிக்கும் பழக்கமும் இருந்தது. ‘மல்லிகை’ போன்ற இதழ்களில் சிங்கள இலக்கியப் படைப்புகளைப் படிக்க முடிந்தது. எமது ‘அலை’ இதழிலும் சிங்களக் கவிதைகள், சிறுகதைகளின் மொழியாக்கங்களை வெளியிட்டுள்ளோம். சிங்களத்திலிருந்து மொழியாக்கமாக வரும் நூல்களைச் சேகரித்தும் வாசிக்கிறேன். ஆயினும், சிங்கள இலக்கியக்காரருடன் தொடர்புகள் ஏற்படவில்லை. திருமறைக் கலாமன்றம் 2003 அல்லது 2004 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடத்திய எழுத்தாளர் கலைஞர் சந்திப்பில், சிலருடன் உரையாட முடிந்தது. அண்மையில், ஆனைமடுவையில் செயற்படும் தோதென்ன வெளியீட்டு நிறுவனம், சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீட்டையும், சிறியளவில் எழுத்தாளர் சந்திப்பையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்தது. அங்கு சிங்கள எழுத்தாளர் சிலருடன் கருத்துப் பரிமாற முடிந்தது. முக்கியமாக, தோதென்ன அமைப்பின் அதிபரான சிட்னி மாக்கஸ் டயசுடன் தொடர்பு ஏற்பட்டது; இடைக்கிடை தொலைபேசியிலும் இப்போது அவர் தொடர்பு கொள்கிறார். அவரது சிறுகதைத் தொகுதி  ‘ஊரடங்குச் சட்டம்’ என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது; எனக்குப் பிடித்த தொகுதி அது! அதைக் கட்டாயம் வாசிக்கும்படி நண்பர் பலருக்கும் சொல்லியுள்ளேன்.
எழுத்தாளர்களுடனான தொடர்பு குறைவாயினும், முக்கியமான சிங்களத் திரைப்பட நெறியாளர் பலருடன் அறிமுகம் உள்ளது. பிரசன்ன விதானகே, தர்மசேன பத்திராஜ, தர்மசிறி பண்டாரநாயக்க, அசோக ஹந்தகம, பராக்கிரம நிரியெல்ல, அனோமா ராஜகருண முதலியோரைக் குறிப்பிடலாம். எண்பதாம் ஆண்டளவில் பிரசன்ன விதானகேயுடன் பழக்கம் ஏற்பட்டது; கொழும்பில் ஜேர்மன் கலாசார நிலையம், அலியான்ஸ் பிரான்சேஸ் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் போன்றவற்றில் நடைபெறும் திரைப்பட நிகழ்வுகளுக்குத் தவறாது நானும் கேதாரநாதனும் செல்வோம்; எம்மைப்போல் தவறாது வரும் இன்னொரு இளைஞன் பிரசன்ன விதானகே. அங்கு ஏற்பட்ட பழக்கம் இன்றும் தொடர்கிறது. இன்று அவர் உலகப் புகழ் பெற்ற ஒரு திரைப்பட நெறியாளர்! தர்மசேன பத்திராஜ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிங்களத்துறையில் விரிவுரையாளராக இருந்தார். 1975 அளவில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், ஆனந்த நடராஜா என்னும் பொருளியல்துறை விரிவுரையாளர், தற்செயலாக என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். அவரது ‘அகஸ்கவ்வ’ (ஆகாய கங்கை) என்னை நன்கு கவர்ந்த படம் எனச்சொல்லிக் கதைத்தேன்; தொடர்ந்து சிங்களத் திரையுலகின் முக்கிய படைப்புகளையும் நெறியாளர்களையும் பற்றிச் சொன்னபோது, அவர் ஆச்சரியப்பட்டார். அவர் மிகவும் எளிமையானவர். 1976 ஆம் ஆண்டில் கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் பெற்று வந்து சுண்டிக்குளி தபாற் கந்தோரில் பணியாற்றிய வேளை, அண்மையிலுள்ள வீடொன்றில் பத்திராஜ, சுனில் ஆரியரத்ன ( ‘சருங்கலே’ என்னும் இருமொழிப் படத்தின் நெறியாளர்; சிங்கள மொழித்துறை விரிவுரையாளர்), சுசரித்த கம்லத் (இவரும் சிங்கள மொழித்துறை விரிவுரையாளர்) ஆகியோர்  தங்கி யிருந்தனர். சில நாள்களின் பின்னேரங்களில், மூவரும் தபாற்கந்தோருக்கு வந்து என்னுடன் உரையாடியுள்ளனர். தர்மசிறி பண்டாரநாயக்க பலமுறை யாழ்ப்பாணம் வந்து, நாடகங்களையும் திரைப்பட விழாக்களையும் ஒழுங்குபடுத்தியுள்ளார். எல்லோருடனும் எளிமையாகப் பழகும் மனிதர் அவர்! அவரது நெறியாள்கையில் உருவான  ‘ஹன்ச விலக், ‘பவதுக்க’, ‘பவகர்ம’ ஆகிய முக்கியமான படங்களைப் பார்த்து இரசித்துள்ளேன்; அதேபோல், வசந்த ஒபேசேகரா நெறியாள்கைசெய்த  ‘பலங்ஹற்றியோ’ படத்தின் கதாநாயகனான அவரது நடிப்பும் மனதில் நன்கு பதிந்தவொன்று!
தாயகத்தில் தற்பொழுது ஈழத்துச் சினிமாவின் ஆளுமை காத்திரமானதாக உள்ளதா?
குறும்பட முயற்சிகளில் இளைஞர் பலர் ஈடுபட்டுள்ளனர். ஆசை காரண மாகவே பலரும் ஈடுபடுகின்றனர். வழமையான இந்தியத் தமிழ்த் திரைப்படத் தாக்கங்களுக்கு உட்பட்டவையே பல. முறையான பயிற்சிகளும் இல்லை. ஆயினும், சிலர் வித்தியாசமான முறையில் சிலவற்றை உருவாக்க முயல்கின்றனர். எல்லாவற்றையும் என்னால் பார்க்க இயலவில்லை. பார்க்கக் கிடைத்தவற்றில் மதிசுதா, ஜோசித்தன், ஆனந்த ரமணன், கலிஸ், நெடுந்தீவு முகிலன் முதலியோரின் ஆக்கங்களில் பாராட்டத்தக்க அம்சங்கள் உள்ளன. பல குறும்படங்களில்  காட்சிப்படுத்தும் தன்மை பொதுவில் பாராட்டும்படியாக உள்ளது. கதை, திரைச்சுவடி போன்றவற்றில் – பேசுபொருளின் சரியான பார்வை தொடர்பில், கவனம் தேவை. சிறந்த உலகக் குறும்படங்களைப் பார்க்கும் பழக்கத்தின்மூலம், தமது இரசனையை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ளலாம். அண்மையில், ‘ஆர்ட்டிக்கல் – 14’ என்ற அமைப்பின் குறும்படப் பயிலரங்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது; சிங்களத் திரைத்துறையில் முக்கியமான பலர் பயிற்சி வழங்கினர். இதனால் நல்ல விளைவு களை எதிர்காலத்தில் பார்க்கலாம்! இரண்டொரு முழுநீளப் படங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை நான் பார்க்கவில்லை; ஆனால் கதைச் சுருக்கம் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டவை அவையென உணர்த்துவது, ஏமாற்றத்தையே  தருகிறது.
தாயகத்து இலக்கிய வெளியில், தலித் என்ற சொல்லாடல் அத்தியாவசியம் என்று  கருதுகின்றீர்களா?
தலித் என்ற சொல்லை  இங்கு யாரும் இலக்கிய வெளியில் கையாள்வதில்லை; ஓர் அந்நியச் சொல்லாகவே அது இன்றும் இருக்கிறது. அரசியல்  வெளியில் – அதுவும் வெளியிலிருந்து இங்கு வரும் – சிலர்தான்  அதனை உச்சரிக்கின்றனர். புத்திஜீவிகள் மத்தியிலேயே அருந்தலான இச்சொல், சாதாரண மக்களிடம் எந்தளவுக்கு அறியப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் எளிதில் உணரலாம். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், சிறுபான்மைத் தமிழர் மகாசபை போன்றன பொதுவெளியில் முன்பு இயங்கின ; இன்று மறைந்துவிட்டன; அவற்றுக்கான தேவையும் இன்று அதிகமில்லை. ஆக்காட்டியில் வெளியான யோ. கர்ணனின் நேர்காணல், தெளிவாக இதுபற்றி விளக்குகின்றது; அவரின் பெரும்பாலான கருத்துக்கள் எனக்கும் உடன்பாடானவையே!
இலக்கியத்தில் உண்மைகள் இருக்கலாம் ; ஆனால் உண்மைகள் எல்லாம் இலக்கியங்கள் ஆவதில்லை என்பது பற்றி, உங்கள் கருத்து என்ன?
கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும் என்பன ஏற்றுக்கொள்ளத்தக்கவையே! ஆனால், உண்மைகள் மட்டும் இலக்கியத்துக்குப் போதுமானவை அல்ல. எந்தப் பொருளும், எந்தக் கலை வடிவத்தில் அது வெளிப்படுத்தப்படுகின்றதோ அதற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கவேண்டும்; வடிவச் செழுமை, செய்நேர்த்தி என்பவற்றைப் புறக்கணிக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக, தமக்குப் பிடித்த விடயங்களை (தாம் நம்பும் உண்மை களை) வெளிப்படுத்தும் படைப்புகளை வெறுமனே  போற்றி ஆராதிக்கும் பண்பே, பொதுவில் காணக் கிடைக்கிறது. முற்போக்குவாதிகள், ஆத்மார்த்தம் பேசும் மெய்யுள்வாதிகள், தமிழ்த் தேசியவாதிகள் ஆகிய எல்லோருமே இப்பண்பைக் கொண்டுள்ளனர் எனக் கருதுகிறேன்.
முற்போக்குவாதிகள், ஆத்மார்த்தம் பேசும் மெய்யுள்வாதிகள், தமிழ்த் தேசியவாதிகள் ஆகிய எல்லோருமே இப்பண்பைக் கொண்டுள்ளனர் என்று கூறுகின்றீர்கள் சிறிது விளக்கமாக சொல்வீர்களா? 
மூன்று சாராரும் பொதுவில் தமது கருத்துநிலைகளை வெளிப்படுத்துவனவற்றை ஏற்றுப் பாராட்டுகின்றனர்; கலைக்குறைபாடுகளைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால், தமதல்லாத ஏனைய பிரிவினரின் படைப்புகளில் கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரியும்போது, அவற்றைப் பிரச்சாரம் என்று கூறத் தயங்குவதில்லை! முற்போக்குப் படைப்புகளில்தான் கருத்துப் பிரச்சாரம் உள்ளது என்றே முன்னர் கூறப்பட்டது; ஆயினும், மற்றப் பிரிவுகளிலும் பிரச்சாரப் படைப்புகள் உள்ளன என்பதையே கூறவருகிறேன்.
உங்கள் பார்வையில் ஒரு கவிதைக்கு எது முக்கியம் என்று கருதுகின்றீர்கள்?
ஒரு கவிதை எந்தக் குறிப்பிட்ட வரையறைக்குள்ளும் அடங்காமல், தனித்துவமானதாக இருக்கலாம். ஆனால், உணர்வுரீதியான தொற்றுதலை ஒரு கவிதை என்னுள் நிகழ்த்தவேண்டுமெனக் கருதுகிறேன். மரபுரீதியிலானதா  புதுக்கவிதையா, நேரே சொல்கிறதா பூடகமாகச் சொல்கிறதா, படிமங்கள் நிறைந்ததா அல்லவா, ஒற்றைப் பரிமாணங் கொண்டதா பல்பரிமாணங் கொண்டதா, செம்மொழி யிலானதா மக்கள் மொழியிலானதா என்பதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை.
உங்கள் காலத்தில் முற்போக்கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம், மெய்யுள் இலக்கியம் என்று, இலக்கியப் பொதுவெளி பல்வேறு குழுமங்களாக இருந்தது. இவை இலக்கியத்துறையில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்ததா?
இம்மூன்று குழுமங்களுள்ளும் நான் இல்லை என்பதை முதலில் தெரிவிக்கிறேன்.  மூன்று  பிரிவுகளிலும் குறிப்பிடத்தக்க படைப்புகள் வெளிவந்துள்ளனதான். ஆனாலும், இவை பெரிய “அதிர்வுகளை” இலக்கியத்துறையில் ஏற்படுத்தின எனக் கூறமுடியாது எனவே தோன்றுகிறது. முற்போக்கு இலக்கியப் பிரிவில் கலைக்குறைபாடு மிக்க – பிரச்சாரப் படைப்புகளே அதிகம்; குறைந்த அளவில்தான்  கலைத்துவமான நல்ல படைப்புகள் உள்ளன. அவர்கள் முன்வைத்த ‘சோஷலிச யதார்த்தவாதம்’ பெரும்பாலான படைப்புகளில் காணமுடியாத ஒன்று! 1954 இல் முன்வைக்கப்பட்ட அக்கோட்பாடு பிழையானது என்ற அறிவிப்பை வெளிப்படை யாகச் சொல்லும் நிலைக்கு, 1988 இல், கலாநிதி கா. சிவத்தம்பி வந்தடைந்தார்!
நற்போக்கு இலக்கியம் என்று தனித்தவில் இசைத்த எஸ்.பொ., அக்கோட்பாடு வெறும் ‘லேபல் மாற்றமே’ என்று, தனது ‘நற்போக்கு இலக்கியம்’ நூலில் கூறியுள்ளார். அவரது ஆளுமையை வெளிப்படுத்தும் நல்ல படைப்புகளையும் தந்துள்ளார்.
மெய்யுள் இலக்கியப் போக்குத் தொடரவில்லை. இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம், கலையை அழிக்கும் கலை, வடிவமற்ற வடிவம்(!) என்றெல்லாம் சொல்லப்பட்டது. இன்று எஞ்சியுள்ள மு. பொன்னம்பலமும் மெய்யுள் எழுதுவதாய்த் தெரியவில்லை. கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள்தான் எழுதுகிறார்; சிறுகதை என்ற பெயரில் இடைக்கிடை ‘கட்டுரை’யும் எழுதுகிறார்!
இதைவிடவும் முக்கியமான விடயம், இம்மூன்று பிரிவினரின் எழுத்துக்கள் பொது வாசகனைச் சென்று சேரவேயில்லை. ஆதாரம் தேவையானால், நூலகங்களில் உள்ள பெரும்பாலான ஈழத்துப் படைப்புகள் ( பல நூலகங்களில் ஈழத்து நூல்களே இருப்பதில்லை!) வாசகரால் படிக்கப்படாதவையாக இருப்பதைக் கண்டறியுங்கள். நூல்களும் சிற்றிதழ்களும் 200 – 300 பிரதிகள் மட்டும் அச்சிடப்படும் நிலைக்குக் கீழிறங்கியுள்ளன. பொது வாசகன் பரவலாக உருவாக்கப்பட்டிராமையும் முக்கிய காரணியாகும்! “அதிர்வுகளை” இவற்றிலிருந்தும் மதிப்பிடலாம்.
எதன் அடிப்படையில் முற்போக்கு இலக்கியப் பிரிவில் கலைக்குறைபாடு மிக்க – பிரசாரப் படைப்புகளே அதிகம் என்று சொல்கின்றீர்கள்?
அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சினைகளே இலக்கியத்தில் கையாளப்படவேண்டும்; பிரச்சினைகள் ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வினை வெளிப்படுத்தவேண்டும் என்றும் முற்போக்கினர் வற்புறுத்தினர். எனவே, சூழலினதும் பாத்திரங்களினதும் இயல்பினை மீறிக் கருத்துக்கள் வெளிப்பட்டுப் பிரச்சாரமாகின. ‘படைப்பு’க்களுக்குப் பதிலாக சூத்திரப்பாங்கான ‘தயாரிப்புக்கள்’ பெருகின. அதிலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அனுபவ வெளிப்பாடாக இலக்கியம் இருத்தல் வேண்டும் என்பதற்கும், வடிவரீதியான கலை அம்சங்களுக்கும் அவர்கள் (சிலரைத் தவிர) முக்கியத்துவம் கொடுக்கவில்லை; அவ்வாறு கொடுத்திருந்தால் உணர்வுரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவனவாக அவை மாறியிருக்கும். அரசியல், சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் மொழியாக்கப் படைப்புக்களில், பிரச்சாரமாகத் தாழ்ந்துபோகாத – கலைத்துவமான பலவற்றைக் காண முடிகின்றதே!
 
மெய்யுள் இலக்கியப் போக்குத் தொடரவில்லை என்று சொன்னீர்கள். இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது இருந்ததா?
இக்கருத்துநிலையை முன்வைத்த மு. தளையசிங்கம் மறைந்தபின்னர், மு. பொன்னம்பலம் மெய்யுள் என்ற பெயரில் சிலவற்றை எழுதினார். அவரது குழுவி லுள்ள ஏனையோரான சு. வில்வரத்தினமோ இ. ஜீவகாருண்ணியனோ அதிகம் மெய்யுள்  எழுதியதாகத் தெரியவில்லை. சு. வி. மறைந்துவிட்டார்; ஜீவகாருண்ணி யன்  மௌனமாக உள்ளார்; மு.பொவும் தற்போது மெய்யுள் எழுதுவதில்லை. உண்மையில், மெய்யுள் என்பது இலக்கிய உலகில்  பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கவில்லை. அதனால்தானோ என்னவோ, பின்நவீனத்துவம் என்ற பெயரில் ச. இராகவன் என்பவர் எழுதும் தனிமனித வக்கரிப்புக்களையெல்லாம்  ‘வடிவமற்ற வடிவம்’ (!?) என (மெய்யுளைப் போன்றதென), தற்போது மு. பொ. தூக்கிப் பிடித்தபடி உள்ளார்!
நம்மவர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் நடைபெறும் இலக்கியச் சந்திப்புகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?
சிறு குழு முயற்சியாகத் தொடர்ந்து நடைபெறுவதாக அறிகிறேன்; தமிழ்த் தேசிய எதிர்ப்பு, புலி எதிர்ப்பு  முதன்மை பெறுவதான விமர்சனங்களையும் பார்த்துள்ளேன். ஆயினும், 2001 இல் இலண்டனில் நானும் சு.வில்வரத்தினமும்  நின்றபோது, நோர்வேயில் நடைபெறும் இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டோம். ஓர் அமர்வில் எனது ‘அலை’ சிற்றிதழ் அனுபவங்கள் பற்றியும், இன்னோர் அமர்வில். ‘நிதர்சனம்’ அமைப்பின் குறும்படங்கள் பற்றியும் நான் உரையாற்றினேன் என்பதையும் சொல்லியாகவேண்டும்.  எந்த முயற்சியிலும் ஓரளவு பயனாவது  கிட்டும் என்பதை இங்கும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சிற்றேடுகளிலும் இணைய வெளிகளிலும் பெரிதுபடுத்தப்படும் அளவுக்கு, இலக்கியச் சந்திப்பு நடைபெறும் நாட்டில் –  அயலிலுள்ள தமிழ் மக்களிடம், இதுபற்றிய செய்திகள் பரவலாகச் சென்றடைகின்றனவா தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா என்ற கேள்வியும்  உள்ளது!
புலம்பெயர் கதைசொல்லிகளது ஆக்கங்கள் பெரும்பாலும் ஒப்பாரி வகையான படைப்புகள் என்றவோர் விமர்சனம் உண்டு; இந்த விமர்சனத்தை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
செங்கை ஆழியான் இவ்வாறு  “ஒப்பாரி” எனச் சொல்லியிருப்பதை அறிவேன்; பலவிதங்களிலும் அவரைக் கவனத்தில் கொள்ளவேண்டியதில்லை எனவும் சொல்வேன். தாயக நிகழ்வுகள் ஏற்படுத்தும் அல்லது தாயகம் பிரிந்த வலி உணர்வுகளைப் படைப்புகளில்  வெளிப்படுத்துவதை ஏன் குறையாகக் காணவேண்டும்? அதுவும் ஒருவகை அனுபவ வெளிப்பாடுதானே! படைப்பியல் அம்சங்களின் குறைபாடுகளை வேண்டுமானால் யாரும் விமர்சிக்கலாம். பல்வேறு அகப் புறத் தாக்கங்களினூடாக வெளிப்படும் புலம்பெயர் கதைசொல்லிகள் பலரின் படைப்புகள், புதிய அனுபவங்களைத் தருபவையாகவும் வித்தியாசமானவையாகவும் அமைந்துள்ளன. தாயக அரசியலை வெளிப்படையாகச் சுட்டிப் படைப்புகளில் விமர் சிக்கும் சுதந்திர வெளியும் அங்குதான் உள்ளது!
மலையக தமிழர்களுக்கு  நாம் பாரபட்சங்களை காட்டவில்லை என்று அண்மையில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் இலங்கை அரசு என்றுமே மலையக தமிழர்களை இரண்டாம் பிரஜைகளாகத்தானே பார்த்து வந்திருக்கின்றது?
‘காலச்சுவடு’ இதழில் கருணாகரனுக்கு நான் எழுதிய பதிலையொட்டிக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத் தமிழர்களை முற்றிலும் மலையகத் தமிழர்களுக்கு எதிராகத் தனது கட்டுரையில் அவர் முன்னிறுத்தியதையே,  நான் மறுத்தேன். மற்றும்படி, யாழ்ப்பாணத் தமிழர் பலரால் அவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்பட்டதையோ, மலையகத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலரால் பயன் பெற்றதையோ எப்போதும் நான் ஏற்றுக்கொள்பவன். இலங்கையில் உழைக்கும் பெருந்திரள் மக்களைக்கொண்ட சமூகம் மலையகத் தமிழருடையது. சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளின் மாறிமாறி வரும் அரசாங்கங்கள், மலையகத் தமிழரை –  இலங்கைத் தமிழரைப் போலவே – இரண்டாம்தரப் பிரஜைகளாய்த்தான் கருதுகின்றன. தமது வர்க்க நலன்பேணும் தந்திரத் தொழிற்சங்க சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளால், மலையகத் தமிழர் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும் யதார்த்தம்!
அண்மையில் இலக்கியப் பொதுவெளியில் உங்களுக்கும் கவிஞர் கருணாகரனுக்கும் இடையிலான முரண்கள் புலம்பெயர் இளைய தலைமுறை இலக்கியவாதிகளான எம்மை கவலை கொள்ள வைத்தது. இந்த முரண்களில் உங்கள் பக்கத்து விளக்கம் என்ன ?
பொய்களையும் அவதூறுகளையும் நான் தொடர்ந்து விற்று வருவதாகவும், நாற்பது ஆண்டுகளில் பலரும் என்னை மறுத்து எழுதியுள்ளதாகவும், அவர்தான் தனது முகநூலில் முதலில் குறிப்பிட்டிருந்தார்; நான் அதற்குப் பதில் எழுதவேயில்லை. உண்மையில் இதுவொரு “கோமாளித்தனமான” குற்றச்சாட்டு என்பது எனது கருத்து! 2009 இல் வன்னியிலிருந்து வந்து அவர் யாழ்ப்பாண மருத்துவமனையில் இருந்த சேதி அறிந்து, நானும் மனைவியும் சென்று சந்தித்து ஆறுதல் கூறினோம். 2010 வரை அவருக்கும் எனக்குமிடையில் நெருக்கமான நட்பு இருந்தது; பின்னர் அவரது அரசியல் நிலைப்பாடும் செயற்பாடுகளும் பலரைப்போலவே எனக்கும்  அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்போது இவர் கூறும், நான் “விற்று வருவதான பொய்களுக்கும் அவதூறுகளுக்கும்” இவரால் ஆதாரம் தர முடியாது. 2010 இன் முன்னர் ஒரு சந்தர்ப்பத்திலாவது அவர், என்மீது அதிருப்தியை வெளிக்காட்டியதுமில்லை; கேள்வி எழுப்பியதுமில்லை. மாறாக, அவர் என்னைப் பாராட்டி மொழிந்ததும் எழுதியதும் உண்டு. நாற்பது ஆண்டுகளாகப் பலர் என்னை மறுத்து விமர்சித்து எழுதியதான குறிப்பிலும் தவறுகள் உண்டு. கைலாசபதி, சிவத்தம்பி, டொமினிக்ஜீவா போன்றோரின் கருத்துகளுக்கு நான் எழுத்திலும் பேச்சிலும் எதிர்வினையாற்றியுள்ளேன்; ஆனால், அவர்கள் என்னை விமர்சித்து எழுதியதில்லை. மு.பொ. சி.சிவசேகரம், டானியல் அன்ரனி, சாந்தன், சித்தாந்தன் ஆகியோர் இலக்கியம் – இலக்கிய உலகு பற்றிய எனது கருத்துக்கள் தொடர்பான ( “எனது அவதூறுகள் பொய்கள்” பற்றி அல்ல) தமது கருத்துக்களை எழுதியுள்ளனர்; நான் இவற்றுக்கான எனது கருத்துக்களை அவ்வப்போது எழுத்தில் முன்வைத் திருக்கிறேன். மூன்று ஆண்டுகள் என்னுடன் பழகி, எனது ‘தெரிதல்’ இதழில் தொடர்ந்து எழுதியும்  வேறு பயன்களும் பெற்ற  ச.இராகவன், என்னைப்பற்றிக் கீழ்த்தரமாக – தனது வக்கரிப்புகளைக்கொட்டி – ‘மகுடம்’ இதழில் எழுதியவற்றுக்கும், தெளிவான பதிலை நான் அளித்துள்ளேன். மேலும், கருணாகரன் கூறுவதுபோல் இலக்கியக்காரர் பலர் என்னைவிட்டு நீங்கிச் செல்லவில்லை; மாறாக சந்தர்ப்பவாத, அறம்சார்ந்த நிலைப்பாடு ஏதுமற்ற, சுயநல இலக்கியவாதிகள் – இதழாசிரியர் பலருடனான தொடர்புகளை, நான்தான் நீக்கிக்கொண்டேன். கருணாகரன் உண்மை யைத் தலைகீழாக மாற்றிக் காட்டுகிறார்! தொடரும் அவரது ‘மனச் சிக்கலை’ – அதன் பின்னணியைப் புரிந்துகொள்ள முடிகிறது!
ஈழத்து இலக்கியம் என்பதற்கு ஏதாவது தனிப்பட்ட பண்புகள் இருக்கின்றதா?
உங்களின் இக்கேள்வி  ஆச்சரியமாயிருக்கிறது! நிலத்தாலும் வரலாற்றாலும் வேறு பட்ட வாழ்க்கை முறைகளினாலும் தனித்தன்மை கொண்டவர்களாக ஈழத்தமிழர் இருக்கும்போது, இலக்கிய வெளிப்பாடுகளில் அத்தனித்தன்மைகள் வெளிப்படுவதும் இயல்பானதே! வாழ்க்கைச் சூழல், பேச்சுமொழி, பிரச்சினைகள், யுத்த நெருக்கடி, விடுதலைப் போராட்டம் முதலியவை எல்லாம் இடம்பெறும் ஈழத்து இலக்கியம், தனக்கே உரிய தனித்துவப் பண்புகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது!
விடுதலைப்புலிகள் உச்சம் பெற்ற வேளையில் ஈழத்து இலக்கியம் உங்கள் பார்வையில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தியதா ?
மாறுதலான – கவனத்துக்குரிய முயற்சிகள், எழுத்துத்துறையிலும் பதிப்புத் துறையிலும் நடைபெற்றிருக்கின்றன என்று கூறலாம். அக்காலங்களில், பிரச்சாரத்தை முன்னிறுத்தும் படைப்புக்களும் கலைத்துவமானவையும் கலந்தே வெளிவந்துள்ளன. கலை பண்பாட்டுக் கழகத்துக்கும் ‘வெளிச்சம்’ இதழுக்கும் முக்கியத்துவம் இருக் கிறது. புனைவு இலக்கியம், புனைவுசாரா இலக்கியம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க படைப்புக்கள் வந்துள்ளன. தமிழக இலக்கியப் பரப்பில் இவற்றைக் காணவே முடியாது ; எமது நெருக்கடிமிக்க போராட்டச் சூழலே இவற்றைப் பிறப்பித்தது. பொது இலக்கியவாதிகளின் படைப்புக்களுடன் போராளிகளின் அனுபவ எழுத்துக்களும் வந்துள்ளன. போராளிகளின் கள அனுபவங்களை வெளிப்படுத்துவனவும், மறைந்த தனித்தனிப் போராளிகளைப் பற்றிய எழுத்துக்களும் முற்றிலும் புதிய அனுபவங்களைத் தருபவை; இவ்விதத்தில் மலரவன், மலைமகள், வசந்தன், கப்டன் கஸ்தூரி முதலியோரை உதாரணமாகக் காட்டலாம். போர் உலா, அதிர்ச்சிநோய் நமக்கல்ல, வில்லுக்குளத்துப் பறவை, அம்மாளைக் கும்பிடுகிறானுகள், சமரும் மருத்துவமும் முதலியவற்றை முக்கியமானவையாகக் குறிப்பிடலாம். வேறு கவிதைத் தொகுதி களும், காலவெளி முதலிய சிறுகதைத் தொகுதிகளும் உள்ளன; அவை போன்ற உதிரிப் படைப்புகளும் உள்ளன. EXODUS என்னும் உலகப் புகழ்பெற்ற நூலின் மொழியாக்கம், ‘தாயகம் நோக்கிய பயணம்’ என்னும் பெயரில், இரண்டு பாகங்களாகப் பெரிய அளவில் வெளிவந்துள்ளது; இன்னும் பல மொழியாக்கங்கள் உள்ளன. ‘தமிழ்த் தாய் பதிப்பகம்’ எழுத்தாளரின் படைப்புக்களை நூல் வடிவில் வெளிக்கொண்டு வந்ததுடன், நூலாசிரியருக்கு 5000 ரூபாவையும் 25 பிரதிகளையும் வழங்கி, வெளியீட்டு நிகழ்வை நடத்தியும் ஊக்குவித்தது! ஸ்ரீலங்கா அரசினால் அச்சுச் சாதனங்களுக்குத் தடை போடப்பட்டிருந்த – நெருக்கடியான போர்ச் சூழலில்தான் இம்முயற்சிகள் எல்லாம் நடைபெற்றுள்ளன என்பதையும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
மல்லிகை, சிரித்திரன் போன்ற சஞ்சிகைகள் சனங்களிடம் ஏற்படுத்திய அதிர்வுகள் போன்று, ஏன் இப்பொழுது சிற்றிதழ்களால் அதிர்வை ஏற்படுத்த  முடியவில்லை ?
‘மல்லிகை’ முன்னர்  1000 பிரதிகளும் (5000 பிரதிகளெனச் சில இடங்களில் டொமினிக் ஜீவா குறிப்பிட்டுள்ளது உண்மையல்ல!), சில வருடங்களின் முன் அது வெளிவராமல் நின்றுவிட்டபோது 300 பிரதிகளுமே அச்சிடப்பட்டது ; வழமையான சிற்றிதழ்கள்போல் இதுவும் குறிப்பிட்ட குறுகிய வாசகரையே சென்றடைந்தது. எனவே, சனங்களிடம் (பொது மக்களிடம்) அதிர்வுகளை ஏற்படுத்திய “சங்கதி” பொருத்தமில்லை! ஆனால் சிரித்திரனோ, 9000 பிரதிகள் வரை விற்பனையானது; பொதுசனங்களாலும் புத்திஜீவிகளாலும் விருப்புடன் படிக்கப்பட்டது. அதன் உள்ளடக்கம் சிரிப்பும் சிந்தனையும் இணைந்ததாக அமைந்ததும், நகைச்சுவையான விளக்கச் சித்திரங்களும் இலகுவில் மக்களைக் கவர்ந்தன. சவாரித்தம்பரும், சின்னக்குட்டியும், Mrs டாமோடிரனும், ஓய்யப்பக் கங்காணியும், மைனர் மச்சானும் எமது மனங்களில் இன்னும் வாழ்கின்றனர்! இவற்றுடன் தரமான சிறுகதைகளும் கவிதைகளும் சேர்ந்து இடம்பெற்றன. சிரித்திரன் அதிர்வை ஏற்படுத்தியமையை உணர முடிகிறது.
தற்போது வெளிவரும் சிற்றிதழ்கள் புத்திஜீவி மட்டத்திலேயே அதிர்வை ஏற்படுத்துவது குறைவாக உள்ள நிலையில், சனங்களிடம் அதிர்வை ஏற்படுத்து வதைப் பற்றிப் பார்க்கத் தேவையில்லை; இச்சிற்றிதழ்களின் பலவீனங்களையும் குளறுபடிகளையும் தனியாகத்தான் பார்க்கவேண்டும். பொதுசனங்களிடம் கலை, இலக்கியம்  பற்றிய பரிச்சயத்தை  ஏற்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, நாம் வேறுவிதமான இதழ்களை வெளியிட முயற்சிக்கவேண்டும். தீவிர சிற்றிதழ்களுடன் சமாந்திரமாக,  பொது வாசகரை அணுகும் – அவரிடம் வாசிப்பு ஈர்ப்பினை ஏற்படுத்தும் – நெகிழ்வான இதழ்களும்  வரவேண்டும். அவ்வாறு வரும் சூழலிலேயே, நாம் “அதிர்வுகளைக்” காண இயலுமெனக் கருதுகிறேன்.
கடந்த 30 வருட போராட்ட அரசியலில் தமிழர்களாகிய நாங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலை வந்து விட்டது. ஒன்று பட்ட இலங்கையினுள் எமக்கான தீர்வுகள் சாத்தியம் என எண்ணுகின்றீர்களா?
பிராந்திய – மற்றும் வெளிநாட்டுச் சக்திகளின் உச்சக்கட்ட ஒத்துழைப்புடன், எமது உள்முரண்பாடுகளும் தவறுகளும் சேர்ந்து, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட்டன. தமிழ் மக்களின் இன்றைய ‘உண்மையான தேர்வு’ என்ன என்பதை அறியவேண்டுமானால், தனிநாடு பற்றிய சுதந்திரமான பொது வாக்கெடுப்புத் தேவை. ஆனால், இலங்கை அரசாங்கமோ பிராந்திய – வெளிநாட்டுச் சக்திகளோ இத்தகைய பொது வாக்கெடுப்புக்குச் சம்மதிப்பார்களோ, வெளிப்படுத்தப் படும் முடிவு தமது “தேவை”க்கு மாறானது எனக் காணுமிடத்து அதை அங்கீகரிப்பார்களோ என்பது, சந்தேகமே! கூட்டாட்சி அல்லது சமஷ்டி முறை பொருத்தமான தீர்வாகலாம் எனச் சில தமிழர் தரப்பினர் கருதுகின்றனர். ஆனால், தென்னிலங்கையில் ஆழ வேரோடிக் காணப்படும் பேரினவாத சக்திகளின் செயற் பாடுகள், எவ்வித நம்பிக்கை ஒளிக்கீற்றையும் காட்டுவதாயில்லை!
கோமகன் 
ஆக்காட்டி 
16 ஐப்பசி 2015
(Visited 7 times, 1 visits today)